கேள்வி எண். 402
(அ) நகர்ப்புற ஏழைகளுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் பல்வேறு திட்டங்களின் விவரங்கள் யாவை?
(ஆ) கடந்த ஐந்தாண்டுகளில் திட்டங்களின் கீழ் மாநில வாரியாக, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு?
(இ) நகர்ப்புற வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சித் திட்டம் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா? அப்படியானால், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தனித்தனியாக பயிற்சி பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா?
(ஈ) இந்தக் காலக்கட்டத்தில், மாநில அரசின் ஒத்துழைப்போடு, அரசால் ஒதுக்கப்பட்ட நிதியைக் கண்காணிக்க ஏதேனும் கண்காணிப்புப் நெறிமுறை இருந்ததா?
(உ) அப்படியானால், அத்தகைய கண்காணிப்பு நெறிமுறையின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்கள் என்ன?
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் பதில்:
(அ) முதல் (உ): நகர்ப்புற வளர்ச்சி என்பது மாநிலம் சார்ந்த திட்டம் ஆகும். ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், நகர்ப்புறங்களில் கீழ்க்கண்ட திட்டங்கள் மூலம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உதவுகிறது.
புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (AMRUT- 2.0), ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன், தூய்மை இந்தியா திட்டம் (ஸ்வச் பாரத் மிஷன்- நகர்ப்புற 2.0 (SBM-U 2.0), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா- நகர்ப்புற (PMAY-U), தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NULM), பிரதமரின் தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி (PM SVANidhi) மற்றும் நகர்ப்புற போக்குவரத்து திட்டங்கள்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம், நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வறுமை மற்றும் பாதிப்பை குறைக்க, தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் “தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்” என்ற ஒன்றிய நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துகிறது.
திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளின் மூலம், நகர்ப்புற ஏழைகளுக்கு சந்தை சார்ந்த சான்றிதழ் படிப்புகளை அளித்து, அவர்களுக்கு ஊதிய வேலை அல்லது சுய வேலை வாய்ப்புத் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியுள்ள சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 10,000/- சுழற்சி முறை நிதியாக வழங்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலம் இணைப்புக் கடன்களுக்கு 7 விழுக்காடு வட்டி விகிதத்திற்கு மேல் வட்டி மானியத்தை சுய உதவிக் குழுக்களுக்கு வழங்குகிறது. கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் பெண் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதலாக 3 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில், தனிநபர்கள்/நகர்ப்புற ஏழைகளின் குழுக்களுக்கு அவர்களின் திறன்கள், பயிற்சி மற்றும் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப சுயதொழில் வியாபாரம் / சிறு, குறு நிறுவனங்களை அமைப்பதற்கான நிதி உதவியும் வழங்கப்படுகிறது. தனிநபர் சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் குழு நிறுவனங்களுக்கு, முறையே 2 லட்சம் மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை குறுந்தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. திறமையான சுயஉதவிக் குழுவினர்களில் சிலர் தங்கள் சேமிப்புத் தொகையினால் சொந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ், ஒட்டுமொத்த முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டை மதிப்பாய்வு செய்ய, தேசிய மற்றும் மாநில அளவில் ஆளும் குழு மற்றும் நிர்வாகக் குழு உள்ளது. நகர அளவில், நகராட்சி ஆணையர் தலைமையிலான நிர்வாகக் குழுவால் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நிர்வகிக்கப்படுகிறது.
திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாட்டைக் கண்காணித்து மறுஆய்வு செய்வது தொடர்ச்சியான செயல்முறையாகும். மேலும், மேலதிகாரிகள் கள ஆய்வு மற்றும் கணொலி காட்சி மூலம் கண்காணிக்கிறார்கள். நிதிநிலை மற்றும் பயன்பாடு தொடர்பாக நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் விரிவான வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் (2020-21 முதல் 2022-23 வரை) தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் படி தமிழ்நாட்டில் பயிற்சி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை முறையே 23,748 மற்றும் 23,518 ஆகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (அதாவது 2018-19 முதல் 2022-23 வரை) தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் இந்திய ஒன்றிய அரசால் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட நிதி, 371.21 கோடி ரூபாய் ஆகும்.
‘தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்’
சென்னை - 8
27.07.2023
No comments:
Post a Comment