Wednesday, July 19, 2023

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைகோ MP உரை!

19.07.2023 மாலை 3 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பிரகலாத் ஜோசி, பியூஸ் கோயல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
தாங்க முடியாத வேதனையோடும், துயரத்தோடும் என் உரையைத் தொடங்குகின்றேன். கடந்த 40 ஆண்டுகளில் 800 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நமது கடல் பகுதியிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் மீனவர்கள் இந்திய நாட்டின் குடிமக்களா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.
அடுத்து, தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தைத் தருகிற பிரச்சினை காவிரிப் பிரச்சினையாகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு இவற்றுக்கெல்லாம் எதிராக மேகேதாட்டுவில் அணை கட்டியே தீர்வோம் என்று கர்நாடக அரசு திமிர்வாதம் செய்கிறது. மத்திய அரசு இதில் வேடிக்கை பார்க்கக் கூடாது.
இன்னொரு பிரச்சினை, ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் ஏற்படுகிற ஆபத்து ஆகும். முதலில், பாபர் மசூதியை இடித்தார்கள். காஷ்மீரத்தை மூன்று துண்டுகளாக மத்திய அரசு ஆக்கிற்று. அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நீக்கிற்று. இப்பொழுது தலைக்குமேல் தொங்குகின்ற கத்தி என்னவென்றால், இந்தியா முழுவதும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாகும். இது அரசியல் சட்டத்திற்கு முரணானது ஆகும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி, பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொது சிவில் சட்டத்திற்கான தனிநபர் மசோதா கொண்டுவந்தார். நாங்கள் கடுமையாக எதிர்த்ததனால், மசோதாவை நிறைவேற்ற முடியாது என்று அஞ்சி பின்வாங்கிப் போனார்கள். இந்த ஆண்டும் அதே மாநிலங்களவை உறுப்பினர் மீண்டும் பொது சிவில் சட்டத்திற்கான மசோதாவை அறிமுகம் செய்ய முயன்றார். நாங்கள் கடுமையாக எதிர்த்ததனால் பின்வாங்கிக் கொண்டார்.
ஆனால் வரும் நாட்களில் பொதுசிவில் சட்ட மசோதாவை எப்படியும் நிறைவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் துடிப்பார்கள். அப்படி நிறைவேற்றப்பட்டால், வகுப்பு மோதல்களுக்கும், இரத்தக் களறிகளுக்கும் வழிவகுக்கும். அதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
19.07.2023

No comments:

Post a Comment