கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
அவரது 50 ஆண்டுகால சட்டசபை வரலாற்றில், நான்கு முறை மாநில அமைச்சராகவும், 2006 - 2011இல் எதிர்க்கட்சித்தலைவராகவும், 2004 - 2006 மற்றும் 2011 - 2016 என இரண்டு முறை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.
எளிமையான வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு, சில மாதங்களுக்கு முன், தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் இன்று அதிகாலை உம்மன் சாண்டி காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது.
உம்மன் சாண்டி அவர்கள் என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவர் முதலமைச்சராக இருந்தபோது, 2004 ஆம் ஆண்டு செண்பகல்லி அணை மற்றும் அமராவதி அணை பிரச்சினை குறித்து குறித்துப் பேசுவதற்காக அவரைச் சந்தித்தேன். மீண்டும் 2015 இல், நியூட்ரினோ திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவருடன் விவாதிப்பதற்காக கொச்சின் சென்றிருந்தேன். அப்போது கேரள உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் சென்னிதாலா அவர்களும் உடன் இருந்தார். கொச்சினிலிருந்து நான் திருவனந்தபுரம் திரும்பும்போது, கேரள காவல்துறையினரின் பாதுகாப்போடு என்னை வழியனுப்பி வைத்தார்.
சிறந்த பண்பாளரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
18.07.2023
No comments:
Post a Comment