Wednesday, May 23, 2018

தூத்துக்குடி மக்களை மேலும் கொன்று குவிக்கத் துணை இராணுவத்தை அனுப்புவதா? வைகோ கண்டனம்!

தூத்துக்குடியில் காவல்துறை நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர் என்று செய்தி வந்தது. ஆனால், மேலும் சிலரது உடல்கள் பிண அறையில் இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

இன்று பகலில், போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உயிர்களை இழந்த குடும்பத்தினரைத் தமிழகக் காவல்துறை கைது செய்து அச்சுறுத்தி வருகின்றது.

தூத்துக்குடி மாநகரம், சுற்று வட்டாரத்தில் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கும் ஆத்திரத்திற்கும் ஆளாகி இருக்கின்றார்கள்.

இந்நிலையில், மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் ராஜீவ் கௌபா, ‘தூத்துக்குடியில் நிலைமையைச் சமாளிக்கத் தேவையான உதவிகளைச் செய்யத் தயார்; தமிழகத்திற்கு மத்திய துணை இராணுவத்தை அனுப்பத் தயார்’ என்று தமிழக அரசுக்குச் செய்தி அனுப்பிய உடன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துணை இராணுவத்தை அனுப்பி வைக்கக் கோரியுள்ள செய்தி, மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது.

வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நிறுவனம், மத்திய அரசைத் தன்வயப்படுத்தி வைத்து இருப்பதால், ஸ்டெர்லைட் என்கின்ற இந்த நாசகார ஆலைக்காகத் தமிழக மக்களைக் காக்கை குருவிகளைப் போலச் சுட்டுக்கொல்ல, துணை இராணுவத்தை அனுப்ப முனைந்து விட்டது.

இதுவரை போலீசார் நடத்திய கொடூரமான தாக்குதலை விடப் பன்மடங்கு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தத் துணை இராணுவம் தயங்காது.

துணை இராணுவத்தை மத்திய அரசு அனுப்புமானால், அது தமிழ்நாட்டின் மீது ஒரு அந்நிய அரசின் படையெடுப்பாகவே கருதும் நிலை உருவாகும் என எச்சரிக்கின்றேன்.

எக்காரணத்தை முன்னிட்டும் துணை இராணுவத்தைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 23-05-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment