Saturday, March 30, 2019

நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்திய ஈரோடு நாடாளுமன்ற மதிமுக வேட்பாளர்!

ஈரோடு நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுடன் மொடக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசுகையில்,
நான் ஏற்கனவே எம்.பி.யாக இருந்தபோது தொகுதி முழுக்க பள்ளிக் கட்டடங்கள் உள்பட பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கியிருக்கிறேன்.
ஆனால் அந்த ஒப்பந்தக்காரரைக் கூட நான் பார்த்ததில்லை...
எதையும் எதிர்பார்த்ததில்லை...
என அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அது நூறு சதவீதம் உண்மை என்றபோது, நா தழுதழுத்து மிகுந்த நெகிழ்ச்சியுடன் கண்ணீர் சிந்தி மைக்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் தந்து நீங்கள் பேசுங்கள் என உருகினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வைகோ அவர்கள், உண்மைத் தொண்டனுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது என அவரைப் பாராட்டிப் பேசினார்...
இதுதான் மதிமுகவின் தரம். மக்களே அவரை விட்டுவிடாதீர்கள். உங்கள் தொகுதியை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

Wednesday, March 27, 2019

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் வைகோ!

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 27.03.2019 காலை 9.30 மணி அளவில் சென்னை உயர்நீதிமன்றம் வந்தார்.

Monday, March 18, 2019

தலைவர் வைகோ அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்கள்!

முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர். பாலு ஆ. இராசா ஆகியோர் தலைவரைச் சந்தித்தனர்.

தயாநிதிமாறன் அவர்கள் தலைவர் வைகோ அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். உடன் வடசென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி, மாவட்டச் செயலாளர் சேகர் பாபு, தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் நீலமேகம், சுதர்சனம் ஆகியோர் இருந்தனர். அப்போது தயாநிதி மாறன் அவர்களுக்கு ஈரோட்டுக் காவியம், உரிமைக்குரல், ஸ்டெர்லைட் எதிர்ப்பு அறப்போர்க் களத்தில் வைகோ ஆகிய நூல்களை வழங்கப்பட்டது.

கலிமொழி அவர்களும் தலைவர் வைகோ அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிட பணியாளர் நியமன ஆணையில் தமிழ்மொழி புறக்கணிப்பு - அதிமுக அரசுக்கு வைகோ கண்டனம்!

சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு இடங்களில் துப்புரவு, தோட்ட பராமரிப்பு, பிளம்பர், எலக்ட்ரீசியன் பணிகளுக்கு 54 பேரை நியமனம் செய்ய செய்தி மக்கள் தொடர்புத்துறை தனியாரிடம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள இந்தப் பணிகளுக்கான நிபந்தனைகளை அந்த அறிவிப்பில் அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த கடிதங்கள், ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே இருக்க வேண்டும் என்றும், அவைகள் தமிழில் இருந்தால் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு மொழி பெயர்த்து அளிக்காத டெண்டர் ஆவணங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள ஒப்பந்தத்திற்கான ஆவணம் தமிழ் மொழியில் இருந்தால் நிராகரிக்கப்படும் என அதிமுக அரசு குறிப்பிட்டு இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு இடங்களில் பணியாற்றுவதற்கான ஒப்பந்த ஆவணங்களில்கூட தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது என்பது வெட்கக்கேடு ஆகும்.

அரசின் இந்த அறிவிப்பு திருத்தம் செய்யப்பட்டு, தமிழ் மொழியிலேயே இந்தப் பணிகளுக்கான ஒப்பந்த அறிவிப்புக்கள் அமைந்திடவும், தமிழ் மொழியிலேயே ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உடனடியாக மறு அறிவிப்பு செய்திட வேண்டும்.

தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயரில் கட்சி நடத்தக்கூடிய அண்ணா திமுக ஆட்சியின் தமிழ்மொழி அழிப்பு, தமிழ் மொழி புறக்கணிப்பு ஆகிய அநீதிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் கிளர்ந்து எழுந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 18-03-2019 தெரிவித்துள்ளார்,

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு வைகோவின் பிரச்சார பயண அட்டவணை!

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 2019, வைகோ பிரச்சாரப் பயணம், நாள்தோறும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரை

மார்ச் 22 வெள்ளி
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி

திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், தூத்துக்குடி (பொதுக்கூட்டம்), குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம் (பொதுக்கூட்டம்)
மார்ச் 23 சனி 
கோவில்பட்டி (தூத்துக்குடி தொகுதி)
சாத்தூர், வெம்பக்கோட்டை, (விருதுநகர் தொகுதி) 
இராஜபாளையம் (பொதுக்கூட்டம்) 
(தென்காசி தொகுதி)

மார்ச் 24 ஞாயிறு மாலை 4 மணி முதல் 
பேசுகின்ற இடங்கள்
திருவில்லிபுத்தூர் (தென்காசி தொகுதி)
கல்லுபட்டி, திருமங்கலம் (விருதுநகர் தொகுதி)

மார்ச் 25 திங்கள் 
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி. 
புதுக்கோட்டை, குளத்தூர், கீரனூர், ஸ்ரீரெங்கம், திருச்சி.

மார்ச் 26 செவ்வாய்
வேலூர், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிகள்

மார்ச் 27 புதன் 
வட சென்னை, மத்திய சென்னை, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிகள்

மார்ச் 28 வியாழன்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிகள்

மார்ச் 29 வெள்ளி 
பெரம்பலூர்-சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிகள் 
அரியலூர், குன்னம், பெரம்பலூர், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், டோல்கேட்

மார்ச் 30,31, ஏப்ரல் 1 சனி, ஞாயிறு, திங்கள்
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி

ஏப்ரல் 2 செவ்வாய்
ஸ்ரீ பெரும்புதூர்/காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிகள்
திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல்

ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், திருப்போரூர்
ஏப்ரல் 3 புதன்
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிகள்

ஏப்ரல் 4 வியாழன்
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம்.

ஏப்ரல் 5 வெள்ளி 
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி 
தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி

ஏப்ரல் 6 சனி
இராமநாதபுரம், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிகள்
மானாமதுரை, பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல்

பேசுகின்ற இடங்கள்
பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி

ஏப்ரல் 7 ஞாயிறு
மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை

ஏப்ரல் 8 திங்கள் 
தேனி நாடாளுமன்றத் தொகுதி

ஏப்ரல் 9,10 செவ்வாய் 
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி

ஏப்ரல் 11 புதன் 
திருப்பூர், பொள்ளாச்சி, கோவை நாடாளுமன்றத் தொகுதிகள்

ஏப்ரல் 12 வியாழன்
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி
சத்தியமங்கலம், அன்னூர், அவினாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம்

ஏப்ரல் 13 வெள்ளி
திண்டுக்கல், நிலக்கோட்டை
பழனி,ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வத்தலக்குண்டு.


ஏப்ரல் 14 சனி
தென்காசி நாடாளுமன்றத் தொகுதி
கரிவலம், சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி

ஏப்ரல் 15 ஞாயிறு
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி 
பாவூர்சத்திரம், ஆலங்குளம், திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை.

ஏப்ரல் 16 ஈரோடு

மேற்கண்ட தகவலை மதிமுக தலைமை நிலையம் இன்று 18-03-2019 வெளியிட்டுள்ளது.

நஞ்சைக் கக்கும் விகடன் இணையதளம்!

ஜனநாயகத்தில் ஏடுகளும் ஊடகங்களும் விமர்சனம் செய்வது இயற்கையானது. பல காலகட்டங்களில் உண்மைக்கு மாறாக, என் மீது கடுமையான விமர்சனங்கள், தாக்குதல்களை ஒன்றிரண்டு ஏடுகளும், ஒன்றிரண்டு இணையதளங்களும் செய்தபோது, நான் மிகவும் மனம் உடைந்து சகித்துக் கொண்டேன்.

போராட்டங்களும், சிறைவாசமும் நிறைந்த எனது 55 ஆண்டுக்கால பொது வாழ்க்கையில், காரணம் இன்றி என் மீது கடுமையான வெறுப்பை ஒன்றிரண்டு ஊடகங்கள், இணையதளங்கள் வெளியிடும்போது, அதன் காரணமே எனக்குப் புரியவில்லை.

நேற்றும், இன்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பிரச்சாரம் குறித்துப் பேசுவதற்காக என்னைச் சந்திக்க வந்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை என்னை அன்பாகவும், மதிப்பாகவும் நடத்தி வருகின்றது.

இந்நிலையில், என்னைக் கடுமையாகக் கடந்த காலத்தில் தாக்கிய தி.மு.க.வினர் இன்று என்னைத் தேடி வருகிறார்கள் என்று, நான் தோழர்களிடம் பெருமைப்பட்டுக் கொள்வதாக, அப்பட்டமான பொய்யை, விகடன் இணையதளம் நஞ்சாகக் கக்கி உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையையும், அந்த இயக்கத்தின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும், நான் மிகவும் மதித்து நேசித்து வருகின்றேன். அத்தோழர்கள் மனதில், என் மீது கசப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன், விகடன் இணையதளம் பொய்ச் செய்திகளைப் பரப்புவது, சிறிது காலமாகவே தொடர்ந்து நடந்து வருகின்றது. இதற்காக, கழகத் தோழர்கள் எவரும், பதிலுக்குப் பதில் என்ற முறையில் விகடன் இணையதளத்தின் மீது எந்த விமர்சனத்தையும் வைக்க வேண்டாம் என வைகோ தொண்டர்களுக்கு இன்று 18-03-2019 வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை, வருகின்ற 20.3.2019 புதன்கிழமை அன்று காலை 11 மணிக்கு, கீழ்கண்ட வரைவுக்குழு உறுப்பினர்களால் மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் வெளியிடப்படும்.
தேர்தல் அறிக்கை வரைவுக்குழு:-
1. ஆர்.டி.மாரியப்பன்
2. ஆ.வந்தியத்தேவன்
3. ஆவடி இரா.அந்திரிதாஸ்
4. மணவை தமிழ்மாணிக்கம்
5. எழுத்தாளர் மதுரா

Sunday, March 17, 2019

மனோகர் பாரிக்கர் மறைவுக்கு வைகோ இரங்கல்!

கோவா முதல்வரும், இந்திய பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சருமான மனோகர் பாரிக்கர் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன்.

பலமுறை அவரைச் சந்தித்து இருக்கின்றேன். பழகுதற்கு இனிய பண்பாளர்.

அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் இன்று 17-03-2019 தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையின் அராஜகம், திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச் சுவர் இடிப்பு-வைகோ கடும் கண்டனம்!

திருச்சி புத்தூரில், பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, பெரியார் தொடக்கப் பள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, முதியோர் இல்லம் ஆகிய நிறுவனங்கள் ஐம்பது ஆண்டுகளாக இயங்கிக் கொண்டு வருகின்றன.

தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் நேரடி கவனம் செலுத்தி அந்த வட்டார மக்களுக்கு கல்வி வாய்ப்புக்களை வழங்கும் சீர்மிகு நிறுவனமாக பெரியார் கல்வி வளாகம் திகழ்ந்துகொண்டு இருக்கின்றது.
சிறப்பு மிக்க அந்தக் கல்வி வளாகத்தின் சுற்றுச் சுவர் அன்னை மணியம்மையார் நினைவு நாளான நேற்று நெடுஞ்சாலைத் துறையினரால் அராஜகமாக இடிக்கப்பட்ட செய்தியையும், அதிகாரிகளின் பொறுப்பற்ற கடிதத்தையும், இடித்துத் தூள் தூளாக்கப்பட்ட சுற்றுச் சுவரின் படத்தையும் இன்றைய விடுதலை நாளேட்டில் கண்டு மனம் பதைத்துப்போனேன்.
துடித்துப்போன இதயத்துடன் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த அக்கிரமமான கொடும் செயல் குறித்த மேலும் விவரங்களை கேட்டு அறிந்தேன்.
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் சுற்றுச் சுவர், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான 1.80 மீட்டர் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது என்றும், அதனை அகற்ற வேண்டும் என்றும் திருச்சி உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
அந்தக் கடிதத்தில் பெறுநர் என்பதில் பெரியார் ஸ்கூல், சுந்தர் நகர், சாத்தனூர் என்று இருக்கிறது. அந்தக் கல்வி நிலையம் எவருக்குச் சொந்தமானது, கடிதம் எந்த முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல், பொறியாளர் அலுவலகத்திலிருந்து கடிதம் வந்திருக்கிறது என்றால், அந்த அரசு அலுவலரின் அலட்சியப் போக்கையும், பொறுப்பற்ற தன்மையையும் இது எடுத்துக்காட்டுகிறது. மேலும், அந்த இடத்தின் சர்வே எண்ணையும் தவறாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.
இதனைச் சுட்டிக்காட்டி சர்வேயர் மூலம் நிலத்தை அளந்துகொள்ளலாம். அதற்கு மாறாக தவறாக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் திருச்சி உதவிக் கோட்டப் பொறியாளர் அவர்களுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு அடுத்தும் மற்றொரு கடிதத்தை மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதி அனுப்பி, சரியான அளவுகோளுடன் கூடிய அடிப்படை ஆவணங்களை ஒப்பிட்டு, மீண்டும் அந்த இடத்தை அளக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் அவசர கதியில் திடீரென்று 16.03.2019 அன்று பெரியார் கல்வி நிறுவன வளாகத்தின் சுவர் பொக்லைன் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது.
“அந்தக் கல்வி வளாகத்தின் உள்ளே பெண்கள் விடுதி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம் ஆகியன இயங்கி வருவது தெரிந்தும், கண்மூடித்தனமாக அது இடிக்கப்படுகிறது என்றால், ஒரு சிலரின் கண்ணசைப்பில்தான் இந்தக் கொடும் செயல் நடந்திருக்கிறது என்ற” மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களின் அறிக்கை தமிழக அரசின் தகாத செயலை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
மத்திய பா.ஜ.க. ஆட்சியின் கண் அசைவில் இயங்கிக்கொண்டு இருக்கின்ற தமிழக அதிமுக அரசின் சட்டவிரோதமான இந்த நடவடிக்கையை மறுமலர்ச்சி தி.மு.க., வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்தகாலத்தில் தலைநகர் டெல்லியில், பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது, எத்தகைய அதிர்ச்சியையும், நெஞ்சக் கொதிப்பையும் நான் கொண்டேனோ அதே உணர்வில்தான் இப்போதும் இருக்கிறேன். தமிழக அரசின் அராஜகமான இந்தப் போக்கினைக்கண்டு உலகெங்கும் உள்ள தமிழ் மக்களும், பெரியாரிய உணர்வாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.
சட்டவிரோதமான இந்தச் செயலுக்கு நீதிகேட்டு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நீதி மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் முறையிட்டு வெற்றிவாகை சூடும் என்பதில் ஐயமில்லை.
தந்தை பெரியார் அவர்களாலேயே உருவாக்கப்பட்டு, தந்தை பெரியார் பெயரில் இயங்கி வருகிற கல்வி நிறுவனத்தின் இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக கட்டித் தர வேண்டும். சட்ட விரோதமாகவும், தான்தோன்றித்தனமாகவும், பொறுப்பற்ற வகையிலும் இடித்துத் தள்ளிய அதிமுக அரசின் அதிகாரிகளையும், அவர்களின் பின்னே உள்ள சூதுமதியாளர்களையும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் மீண்டும் வன்மையாகக் கண்டிக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 17-03-2019 தெரிவித்துள்ளார்.

திருமா, வன்னியரசு வைகோவுடன் சந்திப்பு!

விசிக நிர்வாகி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை சந்தித்தார். அது குறித்த அவரது பதிவு கீழே....

மதிமுக தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் வைகோ அவர்களை இன்று 17-03-2019, தலைவர் எழுச்சித்தமிழரோடு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

அதே வாஞ்சையோடு ‘என்னுடைய தம்பி’என்று கட்டி அணைத்துக்கொண்டார்.

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூம் அன்று

வள்ளுவரின் குறள் காட்டி அண்ணன் வைகோ என வன்னியரசு தெரிவித்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் திரு கணேசமுர்த்தி அவர்கள் வைகோ மற்றும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வருங்கால ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் கணேசமுர்த்தி அவர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களையும், கழக முன்னணி நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்து பெற்ற தோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

Friday, March 15, 2019

சிபிஎம் வேட்பாளர்கள் வைகோவுடன் சந்திப்பு!

வருகிற நாடாளுமன்ற தேர்தல் 19 ஏப்ரல் 2019 ல் கோவை நாடாளுமன்றத்தில் போட்டியிடும் நடராஜன் அவர்களும், மதுரை நாடாளுமன்றத்தில் போட்டியிடும் சு. வெங்கடேசன் அவர்களும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களைச் 15-03-2019 அன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Wednesday, March 13, 2019

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வைகோ வாழ்த்து!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 14 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், 38 ஆயிரத்து 176 தனித்தேர்வர்களும் 10 ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.

மேல்நிலைக் கல்வியில் நாம் விரும்பும் வகையான பிரிவுகளை எடுத்துப் படிப்பதற்கு ஏற்றவாறு, பாடங்களைக் கூர்ந்து படித்துத் தேர்வு எழுதிட வேண்டும். உயர்கல்வி பயில்வதற்கு ஆதார சுருதியாக இருக்கும் பத்தாம் வகுப்புத் தேர்வினை. மாணவர்கள் அச்சம் இன்றிக் கவனமாக எழுதி வெற்றி பெற்றிட இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தற்போது கோடை வெயில் தொடங்கி விட்டமையால், எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்; இரவில் அதிக நேரம் கண்விழிக்காமல், நேரத்தை முறைப்படுத்திப் படிக்க வேண்டும்.

இந்தப் பொதுத் தேர்வுக்காக 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளின் அருகில் திருவிழா கொண்டாடுகின்ற குழுவினரோ, இதர அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களோ ஒலிபெருக்கியை சத்தமாக இயக்கிடுவதை முற்றாகத் தவிர்த்திட வேண்டும். அதிர்வேட்டுகள் வெடிக்கக் கூடாது.

மாணவர்கள் தேர்வுக் கூடங்களுக்கு உரிய நேரத்தில் செல்லும் வகையில், பேருந்துகளை முறையாக அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்திட, தமிழக அரசின் போக்குவரத்துத் துறை வழிவகை செய்திட வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும் வகையில் பெற்றோர் அவர்களிடம் ஒவ்வொரு நாளும் பேச வேண்டும். எவ்வித மன அழுத்தமோ, அச்சமோ இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுத அது உதவும். தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு முன்பு, மனதை ஒருநிலைப்படுத்தி வினாத் தாளை நன்கு படித்து அதற்கு உரிய பதிலை எழுதிட வேண்டும்.

இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற இயலாமல் போனாலோ அல்லது தேர்வில் தோல்வியுற்றாலோ மாணவர்கள் மனநிலை பாதிப்பு அடையத் தேவை இல்லை. அடுத்த வாய்ப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவோம் என உறுதி ஏற்றிடும் மனதிடம் பெற்றிட வேண்டும். நம்மை ஆளாக்க அயராது பாடுபடும் பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற இயலவில்லையே எனப் பதற்றம் அடைய வேண்டியது இல்லை. எந்தத் துறையில் சென்றாலும் நாம் உயர முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றவர்களாக வாழ்வதே, பெற்றோருக்கு நாம் செய்யும் கைமாறு என உணர்ந்து தேர்வு எழுதிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 13-03-2019 தெரிவித்துள்ளார்.

Tuesday, March 12, 2019

பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு நிறுவனத்தை முடக்க மத்திய பா.ஜ.க., அரசு சதி - வைகோ குற்றச்சாட்டு!

மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இந்தியா முழுவதும் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 216 பேர் நிரந்தரப் பணியாளர்களாகவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒப்பந்தத் தொகுப்பு ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று இருக்கிறதா? என்று கேட்கத் தூண்டுகிறது.
அதே போன்று தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வரும் தகவல் தொடர்பு அலுவலகங்களளுக்கும், தனியார் கட்டடங்களின் மேல் அமைக்கப்பட்டுள்ள தகவல் பரிமாற்ற உயர் கோபுரத்துக்கான பிப்ரவரி மாத வாடகையும் வழங்கப்படாமல் இருப்பது மத்திய மோடி அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு சான்றாகும்.
பி.எஸ்.என். தகவல் தொடர்புத் துறை பிரைம் டைம் என்று சொல்லப்படுகின்ற வர்த்தக நேரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாமல், அவசரத் தேவைக்குப் பயன்படாமல், தனியார் துறையை ஊக்குவிப்பதற்கு முடக்கி வைக்கப்பட்டு, எப்போதும் மக்களின் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருப்பது கண்கூடு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் பேன்று நடப்பு 2019 ஆம் ஆண்டு அறிக்கையில், தகவல் தொடர்புத்துறை 3,500 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்குவதை உறுதிப்படுத்துகிறது.
இந்திய இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையும், மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்ற பொதுத்துறை தகவல் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நட்டத்தில் இயங்குவது, மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு நிர்வாக ரீதியாக தோற்றுப்போய் உள்ளதை படம்பிடித்துக் காட்டுகிறது.
பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மூலதனம் கொண்ட பி.எஸ்.என்.எல். துறையைச் சிக்கலாக்கி, தனியாரிடம் தாரை வார்க்கவே மோடி அரசு விரும்புகிறது என்பது தெளிவாகிறது.
எனவேதான் தனியார் தகவல்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி தாண்டி, 5ஜி தகவல் பரிவர்த்தகத்துக்கு முன்னேறிக் கொண்டு வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இன்னும் முழுமையாக 4ஜி சேவை வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருவது தனியார் துறையை ஊக்குவிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதுவெள்ளிடை மலை.
நமது வரிப் பணத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கியிலிருந்து லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் வழங்கி தனியார் துறையை ஊக்குவித்து வரும் மத்திய மோடி அரசு, அரசின் தகவல் தொடர்புத் துறையை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று நடைமுறைப்படுத்தாமல், மோடி அரசு அலட்சியப் போக்கோடு செயல்படுவது பி.எஸ்.என்.எல். ஊழியர்களை அவமதிக்கும் செயல் மட்டும் அன்று தொழிளார்களின் விரோதப் போக்கும் ஆகும்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாத குழுக்கள் அதிநவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை 3ஜி தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதால்தான் மும்பை, புல்வாமா போன்ற தாக்குதல்களை முன் அறியாமல் போனது.
எனவே எல்லா நிலைகளிலும் செயல் இழந்து, மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள மோடி தலைமையிலான மக்கள் விரோத, எதேச்சதிகார, காவி பயங்கரவாத பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது மட்டும்தான் ஒரே தீர்வு
பி.எஸ்.என்.எல்.-ஐ மீட்டெடுப்போம்! தொழிலாளர் விரோத மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 12-03-2019 தெரிவித்துள்ளார்.

Monday, March 11, 2019

குலை நடுங்கச் செய்யும் பொள்ளாச்சி கொடூரம்! வைகோ வேதனை!

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்றிராத, நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவங்கள், பொள்ளாச்சி பகுதியில் அரங்கேறி இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவிகளை, வேலைக்குச் செல்லும் இளம் பெண்களை நேரிலும் முகநூலிலும் பழகி நட்பாக நடித்து, காதல் வலையில் ஏமாற்றி வீழ்த்தி, சின்னப்பாளையம் பண்ணை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களைக் கதறக் கதற நாசமாக்கிய மிருக வெறி பிடித்த காமுகர் கூட்டத்தின் அக்கிரமச் செயல்கள், காணொளிகளாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இந்த பயங்கரச் செய்தி, உள்ளத்தை உறைய வைக்கின்றது.

அந்தக் காட்சிகளைக் காண முடியாது. அந்தப் பெண்களின் அலறல் குரலைக் காது கொடுத்துக் கேட்டால், நெஞ்சு வெடித்துவிடும் போல் உள்ளது. நூற்றுக்கணக்கான இளம்பெண்கள், சிறுமிகளை இந்தக் கும்பல் சீரழித்திருக்கலாம் எனத் தெரிகின்றது. இப்பெண்களும், அக்குடும்பத்தினரும், நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று பதறுகின்றார்கள்.
அவர்கள் இதுவரை வாழ்ந்த வந்த பகுதியில் இனி எப்படி அவர்கள் தலைநிமிர்ந்து நடக்க முடியும்? ஐயோ, நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகின்றது.
மிருகங்களை விடக் கொடிய இப்பாவிகளைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும். அதேவேளையில், பாதிக்கப்பட்ட பெண்களை, வெளிப்படையான விசாரணைக்கு ஆளாக்காமல், அவர்களுக்குப் பெரும் தலைக்குனிவு ஏற்படாத வகையில், மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரணை நடைபெற வேண்டும்.
இந்த நாசக்காரர்களைப் பாதுகாக்க, ஆளுங்கட்சியின் கரங்கள் நீளுகின்றன என்ற செய்தி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது. இந்த இழிசெயலில் ஈடுபட்ட குற்றவாளிகள், அவர்களைப் பாதுகாக்க முனைந்தவர்கள், நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் அனைவரும், சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட வேண்டும்; கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.
தக்க நடவடிக்கையை அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாவிடில், அரசியல் கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்கள், பெண் உரிமை இயக்கங்களும் கிளர்ந்து எழுவார்கள். குற்றவாளிகள் தப்ப முடியாது என எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 11-03-2019 தெரிவித்துள்ளார்.

Sunday, March 10, 2019

இளைஞர் எழுச்சி நாள் உலக மகளிர் தின விழாவில் வைகோ உரை!

இளைஞர் எழுச்சி நாள் உலக மகளிர் தினம் ஆகியவற்றை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மக்கள் தலைவர் திராவிட ரத்னா வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இடம்- தங்கசாலை மணிக்கூண்டு அருகில் அரசு அச்சகம் அருகில்
நாள்- 9-3-2019 சனிக்கிழமை மாலை ஆறு மணி

Friday, March 8, 2019

திருச்சியில் மதிமுக மகளிரணி சார்பில் உலக மகளிர் தின விழா!

திருச்சியில் 8-3-2019 மதிமுக மகளிரணி சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும், பொருளாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகளை மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன் தொகுத்து வழங்கினார்.

ஏற்பாடுகளை மதிமுக மகளிரணியினர் செயலாளர் மருத்துவர் ரோஹையா மூலம் செய்திருந்தார்கள்.

Wednesday, March 6, 2019

சென்னையில் கூடிய மதிமுக பொதுக் குழு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு, இன்று 06.03.2019 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா நகர், விஜயஸ்ரீ மகாலில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் எண். 1 :
இந்தியத் துணைக்கண்டத்தில் தனித்துவ அடையாளம் கொண்ட, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம், தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கின்ற சமூக, அரசியல், பொருளாதார மறுமலர்ச்சி, பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும்.
இந்தியத் துணைக்கண்டத்திற்கே வழிகாட்டுகின்ற சமூக நீதித் தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும் திராவிட இயக்கம்தான்.
திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களான டாக்டர் சி. நடேசனார், சர் பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் ஏற்றி வைத்த கொள்கைச் சுடரைப் பாதுகாத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்ற தலைவர்கள் காட்டிய இலட்சியப் பாதையில், திராவிட இயக்கத்தின் இன்னொரு பரிணாமமாகத் திகழ்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 25 ஆண்டுகளாகப் பீடுநடை போட்டு வருகின்றது.
தமிழ் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் காக்கவும், தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், நதிநீர் உரிமைகளை நிலைநாட்டவும், தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் ஏற்பட தமிழ் ஈழம் மலரவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபட்டு வருகின்றது.
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைச் சிதைத்து, சாதி மத வெறியைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்தவும், தமிழகத்தில் கால் ஊன்றவும், திராவிட இயக்கத்திற்கு எதிரான சக்திகள், அண்மைக்காலமாக முனைப்புடன் இயங்கி வருகின்றன.
சனாதனக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தத் துடிக்கும் இந்துத்துவ சக்திகள், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு சமூக, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவும், தமிழ் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைத் தகர்க்கவும் வெறித்தனமான முயற்சியில் இறங்கி உள்ளன.
இத்தகைய இனப் பகைவர்களை முறியடித்து, தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கின்றது.
இந்துத்துவ சனாதனச் சக்திகளை, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வீழ்த்தி புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்காக, திராவிட இயக்கங்களின் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கரம் கோர்த்துள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி வெற்றி வாகை சூடுவதற்கு வீறுகொண்டு பணியாற்றுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு சூளுரை மேற்கொள்கின்றது.
தீர்மானம் எண். 2 :
2014 மே மாதம், நரேந்திர மோடி தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பா.ஜ.க. அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்து, அநீதி இழைத்துள்ளது.
தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி நதிநீர்ப் பங்கீட்டில், நமது மரபு உரிமைகளைப் பறிக்கும் வகையில் கர்நாடக மாநிலத்திற்குத் துணைபோனது; காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்காமல் வஞ்சித்தது. உச்ச நீதிமன்ற உத்திரவும், தமிழக மக்களின் கொந்தளிப்பும் ஏற்படுத்திய அழுத்தங்களால், பெயர் அளவில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தனர்.
அதன்பிறகு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகம் தடுப்பணை 
கட்டுவதற்கு ஆய்வு நடத்த அனுமதி வழங்கியது.

முல்லைப்பெரியாறு அணையைத் தகர்த்து விட்டுப் புதிய அணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வரும் கேரள மாநிலத்திற்கு ஆதரவாக, புதிய அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளித்து இருப்பதும் அநீதி ஆகும்.
பாலாறு, பவானி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டும் அண்டை மாநிலங்களின் திட்டங்களையும் தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கின்றது.
வளம்கொழிக்கும் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்துப் பாதுகாக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்தி பாலைவனமாக்கிட, மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
காவிரிப் படுகையின் பகுதியான நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் சுமார் 57,500 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தி, பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017, ஜூலை 19-ஆம் தேதி தமிழக அரசு மூலம் அறிவிக்கை வெளியிட ஏற்பாடு செய்தது.
தூத்துக்குடியில் பத்து இலட்சம் மக்களின் உயிரோடு விளையாடி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கு, பா.ஜ.க. அரசு, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் அமைதிவழி அறப்போராட்டம் நடத்த பேரணியாகச் சென்றபோது தமிழகக் காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 அப்பாவி மக்களின் படுகொலைக்கு தமிழ்நாட்டின் அதிமுக அரசே குற்றவாளியாகும்.
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வகத்தை நிறுவிட மத்திய அரசு பல வகைகளில் செயல்பட்டு வருகிறது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வாதாடி நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை ஆணை பெற்றிருந்தாலும், அதனை நிறைவேற்றுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைத்து உயர் அழுத்த மின்சாரத்தை எடுத்துச் செல்ல அதானி குழுமம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு தமிழக அரசின் உதவியுடன் அனுமதி அளித்துள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு அலட்சியப்படுத்துகின்றது.
கெயில் எரிவாயு குழாய்களையும், இருகூர்-தேவனகொத்தி பைப்லைன் திட்டத்தின் எண்ணெய் குழாய்களையும், விவசாய நிலங்களில் பதிக்கும் மத்திய அரசின் திட்டத்தால், எண்ணற்ற விவசாயிகள் வாழ்வு பாழாக்கப்படுகின்றது.
சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் “நீட்” நுழைவுத் தேர்வு, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்குப் பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மக்களுக்கு வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாதது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
‘கஜா’ புயலால் பேரழிவுக்கு உள்ளான காவிரிப் படுகை மாவட்டங்களின் மீள் புனரமைப்புக்கு, தமிழக அரசு கோரிய 15 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகையைத் தர மறுத்தது மட்டும் அன்றி, உயிர் இழந்த 89 தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இதயத்தில் ஈரம் இல்லாமல் போனது.
நரேந்திர மோடியின் 52 மாத ஆட்சியில்,
இந்தி, சமஸ்கிருத மொழிகள் திணிப்பு;
வேதக் கல்வி வாரியம் அமைப்பு;
பசுவதை எனும் பெயரால் சிறுபான்மை, தலித் மக்கள் மீது தாக்குதல்கள், 
படுகொலைகள்;
மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை நியமித்தல்;

மாநில உரிமைகளை நசுக்கும் வகையில் ‘நிதி ஆயோக்’ உருவாக்கம்;
நீதித்துறை, பத்திரிகை, ஊடகத்துறை, அரசு நிர்வாகத் துறை 
அனைத்தையும் மிரட்டிப் பணிய வைக்கும் பாசிசப் போக்கு;
நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்த நிலை;
அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதிக்கும் கொடுமை;
மத்திய அரசின் முகவர்களான ஆளுநர்கள் மூலம் மாநிலங்களை ஆட்டிப்
படைக்கும் அதிகார ஆதிக்கம்;
மத்திய அரசுத் துறைச் செயலாளர்களாகக் குடிமைப்பணித் தேர்வு எழுதாத 
வெளியாட்களை நியமிக்க முயற்சி; அதிலும் ஆ.எஸ்.எஸ். 
தொடர்புடையோர் நியமனம்;
கல்வித்துறையைக் காவிமயம் ஆக்குதல்;
மாநிலங்களின் நிதி தன்னாட்சிக்கு வேட்டு வைத்தல்;
மத்திய அரசின் நேரடி ஆதிக்கத்திற்கு ஏதுவாக உயர்கல்வி ஆணையம், 
தேசிய மருத்துவ ஆணையம் அமைத்தல்;
மத்திய ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., புள்ளியியல் துறை 
போன்றவற்றை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் எதேச்சாதிகாரம்;

பொதுத்துறை வங்கிகளில் பல இலட்சம் கோடி ரூபாய் சுருட்டல்;
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல ஆயிரம் கோடி ஊழல்;
ஆர்.எஸ்.எஸ்.,-சங் பரிவார்-சனாதனக் கொள்கைகளை எதிர்த்த சிந்தனையாளர்கள் 
நரேந்திர தபோல்கர், எம்.எம். கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் 
உள்ளிட்டோர் படுகொலை;
சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள் மீது அடக்குமுறை
என சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தியாவின் பன்முகத்தன்மையை, பல்வேறு தேசிய இனங்களின் மொழி, இனப் பண்பாட்டு அடையாளங்களைச் சிதைத்து, ஒற்றை இந்துத்துவ-சனாதன-இந்து ராஷ்டிராவை அமைப்பதற்கு, ஒரே நாடு-ஒரே மொழி-ஒரே மதம்-ஒரே கலாச்சாரம்-ஒரே மாதிரியான கல்வி- ஒரே வரி என்று ஒரு குடையின்கீழ் கொண்டு வருவதற்கு மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகின்றது.
மதத்தின் பெயரால் நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி இரத்தம் குடிக்கும் வகையில் சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீது இந்துத்துவாக் கும்பல் வன்முறைகளை ஏவி வரும் நிலைமை தொடர்கின்றது.
தேசத் தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்துவதும், அவரைக் கொலை செய்த கோட்சேவைக் கொண்டாடி மகிழ்வதும், சங் பரிவார் கூட்டத்தின் வன்மத்தைக் காட்டுகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம், மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு அமைந்ததுதான்.
ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதும், இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவைப் பாதுகாக்கத் துடிப்பதும், தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தியதும் தமிழக மக்களின் நெஞ்சில் பா.ஜ.க. அரசு மூட்டிய என்றும் தணியாத கனல் ஆகும்.
தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் மீது வன்மம் பாராட்டி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வருவது இந்திய ஜனநாயகத்திற்கே பெரும் ஆபத்தாக முடியும்.
எனவே, பா.ஜ.க. ஆட்சியைத் தூக்கி எறியவும், மத்திய அரசுக்கு அடிமைச் சேவகம் புரியும் அ.இ.அ.தி.மு.க. அரசை வீழ்த்தவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான வெற்றிக் கூட்டணியை ஆதரித்து, மகத்தான வரலாற்று மாற்றத்திற்கு வித்திடும் வகையில் வாக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக, புதுச்சேரி வாக்காளப் பெருமக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண்: 3
‘28 ஆண்டுகள் சிறைச்சாலையில் மனதளவில் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கின்ற ஏழு தமிழர்களை விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு எடுக்கலாம்’ என்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் ரஞ்சன் கோகோய் அவர்கள் தலைமையிலான அமர்வு செப்டம்பர் 6 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதன்படி, செப்டம்பர் 9 ஆம் தேதி, தமிழக அரசின் அமைச்சரவை கூடி, ஏழு தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி, அந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துக் கையெழுத்து இட வேண்டிய ஆளுநர், அதற்குப் பதிலாக, அந்தக் கோப்பினை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கருத்துக் கேட்பதற்காக அனுப்பி வைத்தது, அரசியல் சட்டத்திற்கு எதிரானது; உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை அவமதிக்கின்ற செயல் ஆகும்.
அந்தக் கோப்பு டெல்லிக்கு ஆளுநர் அனுப்பினாரா, அல்லது, அவர் தமிழ்நாட்டு அரசுக்குத் திருப்பி அனுப்பி, அதை எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு அனுப்பியதா என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை விடுத்தார்கள். அதற்கு இதுவரை ஆளுநரோ, தமிழக அரசோ எந்த விளக்கமும் தரவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மூன்று தமிழர்களின் தூக்குக் கயிறை அறுத்து எறிந்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், சிறையில் வாடுகின்ற ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, 2018 டிசம்பர் 3 ஆம் நாள், ஆளுநர் மாளிகையை முற்றுகை இட்டு, கழகத்தின் சார்பில் அறப்போர் நடத்தப்பட்டது.
முதல் அமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி எடுத்த முடிவைச் செயல்படுத்தாமல், ஆறு மாதங்களாக இழுத்தடிக்கின்ற, அரசியல் சட்டத்தை மதிக்காமல், தான்தோன்றித் தனமாகச் செயல்பட்டு வருகின்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு இப்பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது; ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண்: 4
தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் நிறுவனம் அமைத்த தாமிர உருக்கு ஆலை எனும் நாசகார நச்சு ஆலையானது நிலம், நிலத்தடி நீர், நிலத்தின் மேல் தேங்கும் நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நஞ்சு ஆக்கி மனித உயிர்களுக்கும், கடல்வாழ் உயிர்களுக்கும், விவசாய விளைநிலங்களுக்கும் பெரும் கேட்டினை, ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையைத் தூத்துக்குடியில் இருந்து அகற்ற வேண்டும் என்று, கடந்த 22 ஆண்டுகளாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் போராடி வந்தார்.
1996 மார்ச் 5 ஆம் நாள், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கிய வைகோ அவர்கள், மக்கள் திரள் போராட்டங்கள், பரப்புரை விழிப்புணர்வு நடைப்பயணம் என 22 ஆண்டுகள் இடைவிடாது களத்தில் நின்றார். மக்கள் மன்றம், சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றத்தில் அயர்வும், சலிப்பும் இன்றித் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வாதாடி வந்தார்.
உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பினர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், வைகோவும் ஆலையை மூடக் கோரி ரிட் மனு தாக்கல் செய்தார்.
1998 நவம்பர் 23-இல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது.
1998 டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் அவர்கள் அமர்வில், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக வைகோ அவர்கள் நீதிமன்றத்தில் வாதாடினார்.
இந்த விசாரணையின்போதுதான், தலைமை நீதிபதி லிபரான் அவர்கள், “வைகோ அவர்களே! உங்கள் நேர்மைக்கும் நாணயத்துக்கும் எவரும் நற்சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை; அனைவரும் அறிவார்கள்,” என்று நீதிமன்றத்திலேயே பாராட்டு தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டதால் 1998 டிசம்பர் 14-இல் அங்கும் வைகோ அவர்கள் வாதாடினார். நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆலை 1999 பிப்ரவரி 23-இல் மீண்டும் திறக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் வைகோ அவர்களின் சட்டப் போராட்டமும் தொடர்ந்தது.
2010-ஆம் ஆண்டு, செப்டம்பர் 28-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிபி தருமராஜ், பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச் சொல்லி தீர்ப்பு அளித்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை ஆணை பெற்றது.
பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு மேல் முறையீட்டுக்குப் போனபோது, இந்த வழக்கு விசாரணையில் சுமார் 40 அமர்வுகளில் தொடர்ந்து இடையறாமல் நேர்நின்று ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்காக சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ் அவர்கள் துணையுடன் வாதாடிய வரலாறு வைகோ அவர்களைத் தவிர வேறு எவருக்கும் இல்லை.
அது மட்டும் அன்றி, தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் நடந்த வழக்கு விசாரணைகளிலும் வைகோ அவர்கள் பங்கேற்று, அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்தார்.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பட்நாயக், கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்து இருந்தாலும் அத்தீர்ப்பில் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடி வரும் வைகோ அவர்களை மிகவும் பாராட்டி இருந்தனர்.
உயர் நீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம், உச்ச நீதிமன்றம் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான சட்டப் போராட்டத்தை வைகோ நடத்தி வந்த நிலையில்தான், 2018 மே 22-ஆம் தேதி இலட்சக்கணக்கான மக்கள் கொந்தளித்து எழுந்து ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணி திரண்டு பேரணியாகச் சென்றனர்.
தமிழக அரசு காவல்துறையை ஏவி காக்கை, குருவிகளைச் சுடுவதைப் போல பொது மக்கள் மீது மூர்க்கத்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்தது.
தூத்துக்குடி படுகொலைகள் நாடெங்கும் மக்களிடையே ஏற்படுத்திய கொந்தளிப்பைக் கண்ட அ.இ.அ.தி.மு.க. அரசு, 2018 மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சார வாரியம் மூலம் ஆணைகளைப் பிறப்பித்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு, 2018 ஜூன் 22-ஆம் தேதி, நீதிபதிகள் சி.பி. செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய ஆணையைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்; அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,” என்று வைகோ சார்பில் வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதாடினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் “தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி ஆலையை மூடுவதற்கு உரிய காரணங்களைத் தெளிவுபடுத்தி அரசின் சார்பாகக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்,” என்று உத்தரவிட்டனர்.
அதன்பின்னர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில், ஆலையைத் திறக்க முறையீடு செய்தது. இது தொடர்பாக ஆய்வு செய்ய தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது.
தருண் அகர்வால் குழு தனது அறிக்கையை, 2018 நவம்பர் 26-ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீதான வாதங்களை முன்வைக்க, டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ அவர்கள் அனுமதி கேட்டபோது தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் அனுமதி அளிக்காமல் அலட்சியப்படுத்தினார்.
ஆனாலும், மக்களுக்கான போராட்டத்தில் இலட்சிய உறுதியுடன் திகழும் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், 2018 டிசம்பர் 10-ஆம் தேதி டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த 22 ஆண்டுகளாகத் தாம் போராடி வருவதை எடுத்துக் காட்டி, தன் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி தர வேண்டும் என்று கடுமையாகப் போராடினார். ஒரு கட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தன் கருத்தைத் தெரிவிக்க அனுமதி அளிக்காவிடில், இந்தத் தீர்ப்பு ஆயத்தில் எதுவும் நடைபெறாது என்று வெளிப்படையாக தீர்ப்பு ஆயத்தின் நீதிபதியைப் பார்த்துக் குரல் எழுப்பினார்.
அதன் பின்னர் வைகோ அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டியதன் அவசியத்தைப் பட்டியல் இட்டு, குறித்த நேரத்தில் தன் வாதங்களை முன் வைத்தார்.
2018 டிசம்பர் 15-ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு அனுமதி அளித்தது.
2019 ஜனவரி 8-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வைகோ அவர்கள், ‘தூத்துக்குடியில் சிந்தப்பட்ட மக்களின் இரத்தம் இங்கே நியாயம் கேட்கின்றது’ என்பதை எடுத்து உரைத்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வில், 2019 ஜனவரி 24-ஆம் தேதி ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அன்று பகல் 12 மணி அளவில் வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழக்கை ஏற்க முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலை குறித்து இன்றே ஆணை பிறப்பிக்கப் போகிறோம் என்றும், ஒருமுறைக்கு நான்கு முறை நீதிபதி நாரிமன் அழுத்தமாகக் கூறினார்.
தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை நீதிபதி ஏற்காத நிலையில், வைகோ அவர்கள், தனது வாதங்களை முன்வைத்துவிட்டு,
“ஜனவரி 8-ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.
ஆனால், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று ஸ்டெர்லைட் தரப்பில் இருந்து எனக்கு எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை; நானாகக் கேள்விப்பட்டுத்தான் வந்தேன்;
ஆலையைத் திறக்குமாறு இன்று தீர்ப்பு அளிக்க வேண்டாம்; செவ்வாய்கிழமை அமர்வில் எங்கள் தரப்பு வாதங்களை முழுமையாகக் கேளுங்கள்”
என்று தெரிவித்தபோது நீதிபதி நாரிமன் அவர்கள், “உங்களுக்கு முறையாகத் தகவல் அனுப்பப்படும்; செவ்வாய்க்கிழமை அமர்வில் உங்கள் வாதங்களை முன்வைக்கலாம்,” என்று அனுமதி அளித்தார். தனக்கு 40 நிமிடங்கள் வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்று வைகோ கூறியதையும் நீதிபதி நாரிமன் ஏற்றுக் கொண்டார்.
பிப்ரவரி 7, 2019 அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பகல் 12 மணி முதல் 12.40 வரை வைகோ அவர்கள், தனது நீண்ட வாதத்தை முன்வைத்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டு காலம் போராடி வருவதை எடுத்துக் காட்டிய வைகோ அவர்கள், தூத்துக்குடி மக்கள் மீது 2018 மே 22-இல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, 13 பேர் படுகொலை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறி உள்ளதையும், தொழில்நுட்ப முரண்பாடுகளையும் பட்டியல் இட்டார். தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தீர்ப்பை ரத்து, செய்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா அமர்வு 2019 பிப்ரவரி 18-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி இல்லை’ என்று திட்டவட்டமாகக் கூறி விட்டது.
ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நெஞ்சைத் தொடும் அளவுக்கு பிப்ரவரி 7-ஆம் தேதி கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 40 நிமிடங்கள் எடுத்துரைத்த வாதங்கள்தான், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டதற்குக் காரணம் என்று பத்திரிகைகளும் ஊடகங்களும் பாராட்டு தெரிவித்தன.
22 ஆண்டு காலம் சோர்வு இன்றிப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றும், நீதிமன்றங்களில் நேர்நின்று வழக்காடியும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறப்பதற்குத் தடை ஆணை பெற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு இதயமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இதில் 3 நூல்களும் வெளியிடப்பட்டன.

மறுமலர்ச்சி திமுக 27 ஆவது பொதுக்குழுவில் வெளியிடப்பட்ட நூல்கள்
1. ஈரோட்டுக் காவியம் என்ற நூலை
கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்
மல்லை சத்யா அவர்கள் வெளியிட 
அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர்
புலவர் செவந்தியப்பன் அவர்கள்
பெற்றுக் கொள்கின்றார்கள்.
2. உரிமைக்குரல் என்ற நூலை
கழகத்தின் பொருளாளர் கணேசமூர்த்தி அவர்கள் வெளியிட
துணைப் பொதுச்செயலாளர் ஏ கே மணி அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.
3. ஸ்டெர்லைட் எதிர்ப்பு அறப் போர்க் களத்தில் வைகோ
என்ற நூலை
கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் வெளியிட
துணைப் பொதுச்செயலாளர்
துரை பாலகிருஷ்ணன் அவர்கள்
பெற்றுக் கொள்கின்றார்கள்