Sunday, March 17, 2019

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையின் அராஜகம், திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச் சுவர் இடிப்பு-வைகோ கடும் கண்டனம்!

திருச்சி புத்தூரில், பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, பெரியார் தொடக்கப் பள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, முதியோர் இல்லம் ஆகிய நிறுவனங்கள் ஐம்பது ஆண்டுகளாக இயங்கிக் கொண்டு வருகின்றன.

தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் நேரடி கவனம் செலுத்தி அந்த வட்டார மக்களுக்கு கல்வி வாய்ப்புக்களை வழங்கும் சீர்மிகு நிறுவனமாக பெரியார் கல்வி வளாகம் திகழ்ந்துகொண்டு இருக்கின்றது.
சிறப்பு மிக்க அந்தக் கல்வி வளாகத்தின் சுற்றுச் சுவர் அன்னை மணியம்மையார் நினைவு நாளான நேற்று நெடுஞ்சாலைத் துறையினரால் அராஜகமாக இடிக்கப்பட்ட செய்தியையும், அதிகாரிகளின் பொறுப்பற்ற கடிதத்தையும், இடித்துத் தூள் தூளாக்கப்பட்ட சுற்றுச் சுவரின் படத்தையும் இன்றைய விடுதலை நாளேட்டில் கண்டு மனம் பதைத்துப்போனேன்.
துடித்துப்போன இதயத்துடன் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த அக்கிரமமான கொடும் செயல் குறித்த மேலும் விவரங்களை கேட்டு அறிந்தேன்.
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் சுற்றுச் சுவர், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான 1.80 மீட்டர் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது என்றும், அதனை அகற்ற வேண்டும் என்றும் திருச்சி உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
அந்தக் கடிதத்தில் பெறுநர் என்பதில் பெரியார் ஸ்கூல், சுந்தர் நகர், சாத்தனூர் என்று இருக்கிறது. அந்தக் கல்வி நிலையம் எவருக்குச் சொந்தமானது, கடிதம் எந்த முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல், பொறியாளர் அலுவலகத்திலிருந்து கடிதம் வந்திருக்கிறது என்றால், அந்த அரசு அலுவலரின் அலட்சியப் போக்கையும், பொறுப்பற்ற தன்மையையும் இது எடுத்துக்காட்டுகிறது. மேலும், அந்த இடத்தின் சர்வே எண்ணையும் தவறாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.
இதனைச் சுட்டிக்காட்டி சர்வேயர் மூலம் நிலத்தை அளந்துகொள்ளலாம். அதற்கு மாறாக தவறாக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் திருச்சி உதவிக் கோட்டப் பொறியாளர் அவர்களுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு அடுத்தும் மற்றொரு கடிதத்தை மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதி அனுப்பி, சரியான அளவுகோளுடன் கூடிய அடிப்படை ஆவணங்களை ஒப்பிட்டு, மீண்டும் அந்த இடத்தை அளக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் அவசர கதியில் திடீரென்று 16.03.2019 அன்று பெரியார் கல்வி நிறுவன வளாகத்தின் சுவர் பொக்லைன் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது.
“அந்தக் கல்வி வளாகத்தின் உள்ளே பெண்கள் விடுதி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம் ஆகியன இயங்கி வருவது தெரிந்தும், கண்மூடித்தனமாக அது இடிக்கப்படுகிறது என்றால், ஒரு சிலரின் கண்ணசைப்பில்தான் இந்தக் கொடும் செயல் நடந்திருக்கிறது என்ற” மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களின் அறிக்கை தமிழக அரசின் தகாத செயலை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
மத்திய பா.ஜ.க. ஆட்சியின் கண் அசைவில் இயங்கிக்கொண்டு இருக்கின்ற தமிழக அதிமுக அரசின் சட்டவிரோதமான இந்த நடவடிக்கையை மறுமலர்ச்சி தி.மு.க., வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்தகாலத்தில் தலைநகர் டெல்லியில், பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது, எத்தகைய அதிர்ச்சியையும், நெஞ்சக் கொதிப்பையும் நான் கொண்டேனோ அதே உணர்வில்தான் இப்போதும் இருக்கிறேன். தமிழக அரசின் அராஜகமான இந்தப் போக்கினைக்கண்டு உலகெங்கும் உள்ள தமிழ் மக்களும், பெரியாரிய உணர்வாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.
சட்டவிரோதமான இந்தச் செயலுக்கு நீதிகேட்டு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நீதி மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் முறையிட்டு வெற்றிவாகை சூடும் என்பதில் ஐயமில்லை.
தந்தை பெரியார் அவர்களாலேயே உருவாக்கப்பட்டு, தந்தை பெரியார் பெயரில் இயங்கி வருகிற கல்வி நிறுவனத்தின் இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக கட்டித் தர வேண்டும். சட்ட விரோதமாகவும், தான்தோன்றித்தனமாகவும், பொறுப்பற்ற வகையிலும் இடித்துத் தள்ளிய அதிமுக அரசின் அதிகாரிகளையும், அவர்களின் பின்னே உள்ள சூதுமதியாளர்களையும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் மீண்டும் வன்மையாகக் கண்டிக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 17-03-2019 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment