Monday, January 20, 2020

இலங்கை அரசின் இராணுவ பலத்தை அதிகரிக்க தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை வாரி இறைப்பதா-வைகோ கடும் கண்டனம்!

இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு சென்று தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவைச் சந்தித்து வாழ்த்துக் கூறியது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானதும் தனது முதல் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார்.
தற்போது இந்தியாவின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்குச் சென்று, கோத்தபய ராஜபக்சேவைச் சந்தித்து, இராணுவ உறவுகளை வலுப்படுத்துவது, கடல்சார் பாதுகாப்பு, உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தொழில்நுட்பங்களை அளிக்க இந்தியா உறுதி அளித்துள்ளது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்று ஏடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அஜித் தோவல் - கோத்தபய சந்திப்பு குறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “இலங்கை இராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க இந்தியா ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பதாக அஜித் தோவல் உறுதி அளித்து இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கோத்தபய ராஜபக்சே தனது சுட்டுரைப் பதிவில் “இந்தியாவின் பிரதிநிதி அஜித்தோவலிடம் கடல்சார் மற்றும் மண்டல ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினோம்” என்று கூறியுள்ளார்.
இலங்கையில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குக் காரணமான கோத்தபய ராஜபக்சே பன்னாட்டு நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டிய நபர் ஆவார். அவரை இந்தியாவுக்கு அழைத்து சிவப்புக் கம்பளம் விரித்து தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டிய மத்திய பா.ஜ.க. அரசு, இலங்கை இராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதற்கு ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரிய மாபாதகக் கொடுமை ஆகும்.
இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்களை, அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து கைது செய்து, இலங்கைச் சிறையில் அடைப்பதும், சித்திரவதை செய்து துன்புறுத்துவதும், மீன் பிடிப் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.
கடந்த ஜனவரி 18 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்திலிருந்து 96 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்தியக் கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணிக்கு இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பலில் வந்த சிங்களக் கடற்படையினர் பால்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சுற்றி வளைத்து, நான்கு மீனவர்களையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் தமிழக மீனவர்கள் 4 பேரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோத்தபய ராஜபக்சே அதிபர் பொறுப்பு ஏற்றபிறகு, சிங்களக் கடற்படை எல்லைதாண்டி வந்து, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குவதும், கைது செய்வதும் தொடர் நிகழ்வுகளாக இருக்கின்றன.
இலங்கையில், தமிழர்களின் பூர்வீகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் நிலங்கள், வீடுகள் உள்ளிட்ட உடைமைகளையும் பறித்து, இராணுவம் முகாம் அமைத்து, தமிழர்கள் 24 மணி நேரமும் திறந்தவெளிச் சிறையில் இருப்பதைப் போன்று கட்டுக்காவல் ஏற்படுத்தி இருப்பதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வரும் இந்திய அரசு, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து சிங்களக் கொலைகார அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இச்செயல் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் பா.ஜ.க. அரசு செய்யும் பச்சை துரோகம் ஆகும்.
எனவே இந்திய அரசு, இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க ரூபாய் 355 கோடி நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 20-01-2020 தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் நாசகாரத் திட்டத்தைச் செயற்படுத்துவதை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்-மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்!

காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொது மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், மரக்காணத்திலிருந்து வேளாங்கண்ணி வரையில் 5099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு, தனியார் நிறுவனமான வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. பொதுத்துறை நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு நடத்த கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது.
கடந்த 2019 டிசம்பர் 5-ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் நான் எழுப்பினேன்.
“காவிரி வடிநிலப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எத்தனை ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்திருக்கிறது?
அதற்காக மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகின்றது?
அந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?
அவ்வாறு தோண்டுகின்ற இடம் விளை நிலங்களா? அவ்வாறு இருந்தால் அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படுமா? திட்டம் கைவிடப்படுமா?” என்று கேள்விக் கணைகள் தொடுத்திருந்தேன்.
என்னுடைய கேளிவிகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில்,
“காவிரி வடிநிலப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது.
மொத்த நிலப்பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர். 15 இடங்களுக்குச் சுற்றுப்புறச் சூழல் துறையின் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
15 கிணறுகள் விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும், சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும், அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்தப் பிரச்சினைகள் குறித்து அதற்குரிய அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்படும்; சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும்,” என்று விளக்கம் அளித்தார்.
தற்போது மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொது மக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
காவிரிப் பாசன மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயற்படுத்த முனைவதும், அதற்காக மக்கள் கருத்தைக் கேட்க மாட்டோம் என்று எதேச்சாதிகாரமாக பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளதும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.
தமிழகத்தின் உயிராதாரமான காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாலைவனம் ஆக்கும் முயற்சி தொடர்ந்தால் சுமார் 56 இலட்சம் மக்கள் சொந்த மண்ணிலேயே வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்து விட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமை நடக்கும். தமிழக மக்கள் ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதை ஒருகாலும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பதை மத்திய பா.ஜ.க. அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் உணர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 20-01-2020 தெரிவித்துள்ளார்.

Sunday, January 19, 2020

தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழக்கு தமிழ் முறைப்படி நடத்துக! வைகோ வலியுறுத்தல்!

தஞ்சைத் தரணியில் மாமன்னர் இராசராச சோழன் எழுப்பிய பெருவுடையார் கோவில், ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழரின் பெருமையையும், கட்டிடக் கலையையும் உலகத்திற்குப் பறைசாற்றும் சின்னமாகப் புகழ் பெற்று விளங்குகிறது.
நவீன கட்டிடக்கலை வல்லுநர்களாலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்குத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் அமைப்பு, தமிழர்களின் கட்டிடக்கலைக் கீர்த்தியை விண்முட்டப் பரவச் செய்துள்ளது.
1010-ஆம் ஆண்டு மாமன்னர் இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோவில் 1987-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பன்னாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
2010-ஆம் ஆண்டு, பெருவுடையார் கோவில் எழுப்பிய ஆயிரமாவது ஆண்டு விழா, அப்போதைய முதல்வர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களால் அரசு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1996-ஆம் ஆண்டு, தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.
23 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு 2020, பிப்ரவரி 5-ஆம் நாள் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்துசமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வருகின்றன.
‘தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்’ என்று தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் தஞ்சையில் நடந்தபோது சிவனடியார்கள், சித்தர் வழி அமைப்பினர், சைவ சமய அறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
‘தமிழில் குடமுழுக்கு’ எனும் கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23-ஆம் தேதி தஞ்சையில் மாநாடு நடத்துவது என்று தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு அறிவித்தது. இந்த மாநாடு வெற்றி பெற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் முறைப்படி குடமுழுக்கு எனும் கோரிக்கையைத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் சைவ நெறி, வைணவ நெறி மற்றும் குலத்தெய்வக் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மாமன்னர் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தமிழ் முறைப்படிதான் நடத்தப்பட வேண்டும். ஏனெனில், தஞ்சைப் பெரிய கோவிலின் அமைப்பு முறையும் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி; தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216.
சிவலிங்கத்தின் உயரம் 12 அடி; தமிழ் உயிர் எழுத்துக்கள் 12.
சிவலிங்கப் பீடம் 18 அடி; தமிழ் மெய் எழுத்துக்கள் 18.
சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி;
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247.
இவ்வாறு தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்துள்ள தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழுக்குப் பெருவிழாவைத் தமிழ் முறைப்படி நடத்துவதுதான் சாலப் பொருத்தம் ஆகும். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.

Tuesday, January 14, 2020

பொங்கல் வாழ்த்து - வைகோ!

தன்னை வருத்தி, வியர்வை சிந்தி, உழுது பயிரிட்டு உழவர்கள் விளைவித்துத் தருகின்ற தானியமணிகள்தான், உலகை வாழ்விக்கின்றன. அதனால்தான், வள்ளுவப் பெருந்தகை, சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; உழன்றும் உழவே தலை என்றார்.
அத்தகைய வேளாண் பெருங்குடி மக்கள், தாங்கள் உயிராகப் போற்றும், நிலத்திற்கும், கால்நடைச் செல்வங்களுக்கும், நன்றி பாராட்டுகின்ற வகையில், தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். அவர்கள் மட்டும் அல்ல, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, சாதி, மத எல்லைகள் அனைத்தையும் கடந்து, தமிழர்கள் அனைவரும் கொண்டாடுகின்றார்கள். அரிசியும், சர்க்கரையும் நெய்யும் கலந்து, புதுப்பானையில் இட்டுப் பொங்கி வரும் வேளையில், பொங்கலோ பொங்கல் என்று குலவை இட்டுக் குதூகலித்து, தன் இல்லத்தாருடன் பகிர்ந்து உண்கின்றார்கள்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் சில பகுதிகளில் பெருமழையும், சில பகுதிகளில் வறட்சியுமாகக் கழிந்தது. கையில் இருக்கின்ற பணத்தை முதலீடு செய்து, கடன் வாங்கிய விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. பல இடங்களில் காப்பு ஈட்டுத் தொகைக்குப் பிரிமியம் கட்டியும், ஈட்டுத்தொகை வழங்கப்படவில்லை. மதுவின் பிடியிலும், இலவசங்களின் போதையிலும், தமிழகத்தின் இளைய தலைமுறை பாழாகி வருகின்றது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள், உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு லாபமாகத் தர வேண்டும் என்ற அருமையான திட்டத்தை முன்வைத்தார். அதை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி, நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க முன்வர வேண்டும். புதுவாழ்வு தர வேண்டும்.
எவ்வளவு மனச்சுமைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, நம்பிக்கையோடு தைப்பொங்கலைக் கொண்டாடி வருகின்ற தமிழக மக்களுக்கு, மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க, அனைவரும் உறுதி ஏற்போம்.
தமிழக மக்களுக்குத் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Monday, January 13, 2020

பொங்கல் விடுமுறையில் நாடாளுமன்ற ஆட்சிமொழிக்குழு ஆய்வு நடத்துவதா? வைகோ கண்டனம்!

பொங்கல் திருநாள் என்பது தமிழினத்தின் பண்பாட்டுப் பெருவிழா, அறுவடை நாள், உழவுத் தொழிலுக்கு ஏற்றம் தரும் சூரியனை, இயற்கையை ஆராதித்து நன்றி பாராட்டும் திருவிழா.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் சமூகம் காலம் காலமாக பின்பற்றி வரும் நம்பிக்கை ஆகும். தை முதல் நாள் தொடங்கிடும் பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பாலுடன் தேன்பாகென இனிக்கும் வெல்லம் சேர்த்து, சர்க்கரைப் பொங்கல் வைத்து, மஞ்சள், கரும்புடன் இயற்கை அன்னையை வழிபடும் தமிழர்களின் இல்லந்தோறும் இன்ப வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
உற்றார், உறவினர், நண்பர்களுடன் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கும் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் உழவுத் தொழிலுக்கும், குடியானவர்களுக்கும் துணையாய் இருக்கும் கால்நடைகளுக்கும் விழா எடுத்து நன்றி கூறுவது தமிழர்களின் இரத்தத்தில் கலந்திருக்கும் நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.
தமிழர்களின் பண்பாடு. மரபு உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பொங்கல் விழா கொண்டாடும் ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களில், மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆட்சி மொழிக்குழு தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பொதுத்துறை மற்றும் பிற மத்திய அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு வர இருக்கிறது. எனவே அந்த மூன்று நாட்களும் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயமாக பணிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படடு இருப்பதாக இந்து தமிழ் திசை நாளேட்டில் செய்தி வந்துள்ளது.
இத்தகைய செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.
ஜனவரி 16 பொங்கல் நாள் விடுமுறை அன்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதால், அந்த உரைகளைக் கேட்க 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் மாற்றம் செய்தார்கள்.
தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா பொங்கல் நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுவதை இந்துத்துவ மதவாத சனாதன சக்திகள் விரும்பவில்லை என்பதையே இதுபோன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன.
இந்தித் திணிப்பை எதிர்த்துப் போர்க்கோலம் பூணும் தமிழகத்தில்தான் இந்தி மொழியின் அலுவல் பயன்பாடு பற்றி ஆய்வு நடத்த நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு வருகிறது. அதுவும் பொங்கல் விடுமுறை நாட்களில் என்றால் பா.ஜ.க. அரசின் நோக்கத்தை தமிழக மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பொங்கல் விடுமுறை நாட்களில் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தும் பயணத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் 13-01-2019 தெரிவித்துள்ளார்.

Sunday, January 12, 2020

செய்தியாளர் அன்பழகன் கைதுக்கு வைகோ கண்டனம்!

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்கள், மக்கள் செய்தி மையம் என்ற அரங்கத்தை நடத்தி வந்தார். தமிழக அரசுக்கு விரோதமான செய்திகள் அடங்கிய புத்தகங்கள் அங்கு இடம்பெற்று இருப்பதாகக் கூறி, செய்தி அரங்கத்தை தமிழ்நாடு காவல்துறை காலி செய்ய வைத்தது.

இன்று அதிகாலையில் பத்திரிகையாளர் அன்பழகன் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய பாசிச அடக்குமுறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பத்திரிகையாளர் அன்பழகன் மீது போடப்பட்ட வழக்கை தமிழக காவல்துறை திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 12-01-2019 தெரிவித்துள்ளார்.

Saturday, January 11, 2020

ஓமன் சுல்தான் கபூஸ் மறைவுக்கு வைகோ இரங்கல்!

கடந்த 49 ஆண்டுகளாக ஓமன் நாட்டின் மன்னராகப் பொறுப்பு வகித்த, சுல்தான் கபூஸ் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். இந்தியாவில் படித்தவர், இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா அவர்களின் மாணவர். எனவே, இந்தியாவின் மீது மதிப்பும், இந்தியர்கள் மீது நல்லெண்ணமும் கொண்டவர். அதனால், ஓமன் நாட்டில் இலட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தார். குறிப்பாகத் தமிழர்களும் பெருமளவில் பணி ஆற்றி வருகின்றனர்.

வளைகுடாவில் மட்டும் அல்ல, உலக அமைதிக்காகவும் பாடுபட்டவர். ஓமன் எல்லோருக்கும் நண்பன் எனவே, ஓமனுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்பது இவரது கொள்கை. அதனால், உலகின் சிறந்த மன்னர் ஆட்சி நடைபெறுகின்ற நாடுகளுள் ஒன்று என, ஓமன் நற்பெயர் ஈட்டக் காரணமாக இருந்தார். ஓமன் நாட்டு மக்களின் அன்பையும், பேராதரவையும் பெற்று இருந்தார்.

அவரது மறைவால், ஓமன் நாட்டு மக்கள் பெருந்துயர் அடைந்து உள்ளனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சுல்தான் கபூஸ் அவர்களின் மறைவுக்கு, என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் 11-01-2019 தெரிவித்துள்ளார்.

Thursday, January 9, 2020

மணல் கடத்தல் கொள்ளையர்களின் கொலை வெறி-வைகோ கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில், காவல் துணை ஆய்வாளர் வில்சன், மணல் கடத்தல்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது.
இது முதல் கொலை அல்ல. ஏற்கனவே மணல் கொள்ளையர்கள், அரசு அதிகாரிகள், மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற தன்னார்வத் தொண்டர்களைத் தாக்கியும், லாரியை ஏற்றியும் கொலை செய்து இருக்கின்றார்கள்.
நேற்று மற்றொரு நிகழ்வாக, இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி பேருந்து நிறுத்தம் வழியாக வந்த மணல் கடத்தல் டிராக்டரை மடக்கிய காவல் நிலையம் கொண்டு சென்றனர். வண்டியை ஓட்டி வந்தவர் திடீரெனக் குதித்துத் தப்பி ஓடி விட்டதால். டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. டிராக்டரில் இருந்த ஏட்டு மணிமுத்து டிராக்டருக்குள் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, மணல் கடத்தல் கொள்ளையர்களின் கொலைவெறித் தாக்குதல்கள் பெருகி வருகின்றன. அதன் விளைவாக, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் கவலை தருகின்றது. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்கிறபோது, ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அச்ச உணர்வுடனேயே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.
தமிழகத்தில் அறிமுகம் ஆகி வருகின்ற துப்பாக்கித் தாக்குதல்களை, முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகளுடன், பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
காவல் துணை ஆய்வாளர் வில்சனைக் கொன்றவர்களை உடனே கண்டுபிடித்து, குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும். கூடிய விரைவில் வழக்கை முடித்து, தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான், இத்தகைய குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியும்.
வில்சனை இழந்து வேதனையில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தாரின் துயரத்தில் பங்கேற்கின்றேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஏட்டு மணிமுத்து நலம் விழைகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 09-01-2020 தெரிவித்துள்ளார்.

Wednesday, January 8, 2020

உரிமை காக்க மதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு!

அனைவருக்கும் வேலை வழங்கு, விலைவாசியைக் கட்டுப்படுத்து, குறைந்தபட்ச ஊதியம் வழங்கு, அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கு, இரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்காதே, தொழிலாளர் நலச் சட்டங்களை - தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகளின் ஆதரவுச் சட்டங்களாக மாற்றாதே! விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கொடு, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய் ஆகிய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO) சார்பில் இன்று 2020 ஜனவரி 8  ஆம் நாள் நடைபெற்ற தொழிலாளர்களின் மறியல் போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மறுமலர்ச்சி திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் முகவை இரா.சங்கர், ஈகை சிவா, இராசராச சோழன், ஜெயவேல், கதிரவன், அருண்குமார்,தனசேகர் மற்றும் மாணவரணியினர் மதிமுக மாணவரணி சார்பில் கலந்து கொண்டு கைதானார்கள்.

Monday, January 6, 2020

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை-வைகோ கருத்து!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அரசு தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்று மத்திய பா.ஜ.க. அரசு வழங்கிய பாராட்டுப் பத்திரத்தைத் தமிழக ஆளுநரும் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இன்றைய தமிழ்நாட்டின் நிலை 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றபோது, ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 470 கோடியாக இருந்த கடன், கடந்த நிதி ஆண்டின் முடிவில் மூன்று இலட்சத்து 26 ஆயிரத்து 518 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல் தட்டிக் கழித்ததால், 14-ஆவது நிதிக்குழு ஆணையப் பரிந்துரையின்படி, மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 3000 கோடி ரூபாய் பறிபோனது. அதுபோல மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு 2017-18ஆம் நிதி ஆண்டில் ஒதுக்கிய நிதி, நலத்திட்டங்களுக்குச் செலவழிக்கப்படாமல் ரூபாய் 3676 கோடி திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இதனை மத்திய கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் ஆய்வறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியது. இவை எல்லாம் அ.இ.அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமை என்று ஆளுநர் கூறுகிறாரா?
தமிழகத்தில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு, சுமார் ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர் என்பதை சட்டப் பேரவையிலேயே கடந்த கூட்டத் தொடரின்போது தமிழக அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆளுநர் உரையில் தெரிவித்து இருப்பது கவைக்கு உதவாது.
ஜி.எஸ்.டி. வரி மற்றும் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைகளால் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ஜவுளித்துறை மீள்வதற்கு எந்த அறிவிப்பும் இல்லை.
கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே உயர்தள வழித்தடம், சென்னை - பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டம், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தும் திட்டம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் ஓராண்டு காலத்தில் அதற்காக சிறு துரும்பைக்கூட இந்த அரசு கிள்ளிப் போடவில்லை.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பல்லக்குத் தூக்குவதைப் பெருமையாகக் கருதுகின்ற இந்த அரசு ‘நீட்’ தேர்வுக்கு இதுவரை விலக்கு பெறாதது ஏன்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ என்னும் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவோம் என்று அறிவித்திருப்பது, பொது விநியோக முறையைச் சீர்குலைத்துவிடும். நடப்பு ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 115 மெட்ரிக் டன் என்ற அளவை எட்டும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், உணவு தானிய உற்பத்திக்கு அடித்தளமாக இருக்கும் விவசாயிகளின் பிரச்சினைகளை இந்த அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.
சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசின் நிதிச் சலுகைகளை வலியுறுத்தும் இந்த அரசு, சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக் குறித்து சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
அரசுப் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு வரும் நிலையை மாற்ற முயற்சிக்காத இந்த அரசுதான், கல்வி வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்று கூறுவது சரியல்ல.
ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும், அதனை நிராகரித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றும் தார்மீக உரிமை இருக்கிறதா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை ஆளுநர் உரை முலாம் பூசி மறைக்கப் பார்க்கிறது.
சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரை வழக்கமான சடங்குதானே தவிர, இதனால் மக்களுக்குப் பயன் எதும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 6-1-2020 தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் - ஆசிரியர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் வெறியாட்டம்-வைகோ கடும் கண்டனம்!

புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்துப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த செமஸ்டர் தேர்வுக்கான பதிவு தொடங்கியதால், கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொங்கி எழுந்துள்ள ஜே.என்.யூ. மாணவர்கள், அறப்போராட்டங்களை நடத்த முனைந்தபோது, காவல்துறை அத்துமீறி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. குண்டர்களும், காக்கிச் சட்டைகளுடன் சேர்ந்துகொண்டு மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கினர்.
ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சதீஷ் சந்திர யாதவ் நேற்று மதவாத வெறி கொண்ட வன்முறையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து மாணவர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. குண்டர்கள் பெரிய பெரிய கற்கள், உருட்டுக் கட்டைகள், இரும்புத் தடிகள் கொண்டு பேரணியில் வந்த மாணவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். படுகாயம் அடைந்த 18 மாணவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் ஒய்ஷி கோஷ் உயிருக்குப் போராடி வருகிறார்.
பல்கலைக் கழகத்தில் நுழைந்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் வன்முறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஜே.என்.யூ. மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி.குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 6-1-2020 தெரிவித்துள்ளார்.

Sunday, January 5, 2020

மதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விபரம்!

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதிநிதிகள் விவரம்:
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்
1. கடலூர் மாவட்டம் 22 ஆவது வார்டு - எம்.எஸ்.கந்தசாமி (தொடர்ந்து 4 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.)
2. திண்டுக்கல் மாவட்டம் 9 ஆவது வார்டு - சங்கீதா பழனிசாமி
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்
விருதுநகர் மாவட்டம்
1. அருப்புக்கோட்டை ஒன்றியம் வார்டு எண் 9 - செ.ராதாகிருஷ்ணன்
2. அருப்புக்கோட்டை ஒன்றியம் வார்டு எண் 10 - சு.சீனிவாசன்
3. சாத்தூர் ஒன்றியம் வார்டு எண் 1 - கு.செல்லத்தாய்
4. சாத்தூர் ஒன்றியம் வார்டு எண் 3 - ரா.சூடிக்கொடுத்தாள்
5. சிவகாசி ஒன்றியம் வார்டு எண் 29 - உ.விஜயலட்சுமி
6. விருதுநகர் ஒன்றியம் வார்டு எண் 22 - எஸ்.அழகம்மாள்
7. திருவில்லிபுத்தூர் ஒன்றியம் வார்டு எண் 13 - க.கிருஷ்ணவேணி

தூத்துக்குடி மாவட்டம்
8. கயத்தார் ஒன்றியம் வார்டு எண் 1 - இரா.முத்துலட்சுமி
9. கயத்தார் ஒன்றியம் வார்டு எண் 4 - ரெ.ஜெயச்சந்திரன்
10. புதூர் ஒன்றியம் வார்டு எண் 8 - இரா.பாக்கியலட்சுமி

திருச்சி மாவட்டம்
11. அந்தநல்லூர் ஒன்றியம் வார்டு எண் 4 - ராஜன் பன்னீர்செல்வம்
12. தொட்டியம் ஒன்றியம் வார்டு எண் 16 - எஸ்.சுப்பிரமணி

தஞ்சாவூர் மாவட்டம்
13. திருவிடைமருதூர் ஒன்றியம் வார்டு எண் 4 - ஆடுதுறை இரா.முருகன்
14. ஒரத்தநாடு ஒன்றியம் வார்டு எண் 28 - வீ.சட்டநாதன்

திண்டுக்கல் மாவட்டம்
15. திண்டுக்கல் ஒன்றியம் வார்டு எண் 9 - ரெ.மோகன்
16. குஜிலியம்பாறை ஒன்றியம் வார்டு எண் 10 - ஆ.திருமுருகன்

திருப்பூர் மாவட்டம்
17. அவினாசி ஒன்றியம் வார்டு எண் 1 - சர்மிளா கோவிந்தராஜ்

கோவை மாவட்டம்
18. கிணத்துக்கடவு ஒன்றியம் வார்டு எண் 4 - மஞ்சுளா முருகன்

திருவாரூர் மாவட்டம்
19. குடவாசல் ஒன்றியம் வார்டு எண் 7 - கோ.கோபி

அரியலூர் மாவட்டம்
20. த.பழூர் ஒன்றியம் வார்டு எண் 12 - க.எழிலரசன்

புதுக்கோட்டை மாவட்டம்
21. திருவரங்குளம் ஒன்றியம் வார்டு எண் 11 - செ.விஜயா

நாமக்கல் மாவட்டம்
22. வெண்ணத்தூர் ஒன்றியம் வார்டு எண் 8 - சு.செல்வி

சேலம் மாவட்டம்
23 தலைவாசல் ஒன்றியம் வார்டு எண் 17 - ரா.செந்தமிழ்செல்வி

திருவள்ளூர் மாவட்டம்
24. சோழவரம் ஒன்றியம் வார்டு எண் 12 - ம.கர்ணண்

தேசிய மக்கள் தொகை பதிவேடு கையேட்டில் முஸ்லிம் பண்டிகைகள் நீக்கம்-வைகோ கடும் கண்டனம்!

மத்திய பா.ஜ.க. அரசு, எதேச்சதிகாரப் போக்குடன் நடைமுறைப்படுத்த முனைந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடெங்கும் போராட்டங்கள் எரிமலையென வெடித்துள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்கவும், குடிமக்கள் திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்த பா.ஜ.க. துடிக்கிறது.
இந்திய அரசுக்கு எதிராக உலக அரங்கத்தில் எழுந்துள்ள கண்டனங்களையும் மோடி அரசு பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (சூஞசு) நடத்துவதற்கு உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலம் மற்றும் கிரிகோரியன் மாதங்களுடன் தொடர்புடைய முக்கியமான திருவிழாக்கள் என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது.
அதில் வழக்கமாகக் கொண்டாடப்படும் இந்து மதப் பண்டிகைகள் மற்றும் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி, குருகோவிந்த் சிங் ஜெயந்தி மற்றும் புத்தபூர்னிமா போன்ற சமண, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த பண்டிகைகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் முஸ்லிம் பண்டிகைகளான ரம்ஜான், மிலாடி நபி போன்றவை இடம்பெறவில்லை.
இந்திய நாட்டின் மக்கள் தொகையில், 13 விழுக்காடாக உள்ள கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் பண்டிகைகளை திட்டமிட்டே பாரதிய ஜனதா அரசு மக்கள் தொகைப் பதிவேட்டின் கையேட்டில் புறக்கணித்து இருக்கிறது. இது மோடி அரசின் அப்பட்டமான இந்துத்துவா மதவாத சனாதன மனப்பான்மையைக் காட்டுகிறது.
ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா அடிப்படைக் கொள்கையான இந்துராஷ்டிரத்தைக் கட்டி அமைக்க அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதையும், அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்துவதையும் இந்நாட்டு மக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு கடும் கண்டனத்துக்குரியது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு கையேட்டில் இசுலாமிய பண்டிகைகளையும் உடனடியாகச் சேர்க்க வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி அரசு அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மேற்குவங்காளம், கேரளா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள் தேசிய மக்கள் தொகைத் திட்ட பதிவேடு பணியை மேற்கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளன.
“மக்கள் தொகைச் சட்டம் மற்றும் குடிமக்கள் சட்டம் 2003ன் படி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிகளை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மேற்கொள்வது கட்டாயமாகும். இந்தப் பணிகளைச் செய்ய மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உளளது. மேலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்று மத்திய பா.ஜ.க. மிரட்டல் விடுத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்தந்த தேசிய இனங்களின் உணர்வுகளைத்தான் மாநில அரசுகளின் கருத்துகள் பிரதிபலிக்கின்றன. அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு, பாசிச சர்வாதிகார முறையில் மாநில அரசுகளை மிரட்டுவதும், அரசு ஊழியர்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு மிரட்டல் விடுப்பதும் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
மக்களாட்சிக்கு எதிரான பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்குகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 05-01-2020 தெரிவித்துள்ளார்.

Saturday, January 4, 2020

தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் மறைவு! வைகோ இரங்கல்!

தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் தலைவர் வழக்கறிஞர் அன்புச் சகோதரர் பி.எச்.பாண்டியன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சிறந்த வழக்கறிஞர், சட்டப் பேரவைத் தலைவராக இருந்து அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்தார்.

அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கடந்து புன்முறுவல் தவழும் முகத்துடன் அனைவரிடமும் பேசிப் பழகும் பண்பாளர்.

என்னிடத்தில் மிகுந்த நட்பு கொண்டிருந்தார். நாடாளுமன்ற மக்கள் அவையில் மிகச் சிறப்பாக அவர் பணியாற்றினார்.

இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டியவர். இப்படி திடீரென இயற்கை எய்தியது அறிந்து மிக மிக வேதனைப்படுகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இன்றைய 4-1-2020 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.