Monday, January 13, 2020

பொங்கல் விடுமுறையில் நாடாளுமன்ற ஆட்சிமொழிக்குழு ஆய்வு நடத்துவதா? வைகோ கண்டனம்!

பொங்கல் திருநாள் என்பது தமிழினத்தின் பண்பாட்டுப் பெருவிழா, அறுவடை நாள், உழவுத் தொழிலுக்கு ஏற்றம் தரும் சூரியனை, இயற்கையை ஆராதித்து நன்றி பாராட்டும் திருவிழா.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் சமூகம் காலம் காலமாக பின்பற்றி வரும் நம்பிக்கை ஆகும். தை முதல் நாள் தொடங்கிடும் பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பாலுடன் தேன்பாகென இனிக்கும் வெல்லம் சேர்த்து, சர்க்கரைப் பொங்கல் வைத்து, மஞ்சள், கரும்புடன் இயற்கை அன்னையை வழிபடும் தமிழர்களின் இல்லந்தோறும் இன்ப வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
உற்றார், உறவினர், நண்பர்களுடன் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கும் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் உழவுத் தொழிலுக்கும், குடியானவர்களுக்கும் துணையாய் இருக்கும் கால்நடைகளுக்கும் விழா எடுத்து நன்றி கூறுவது தமிழர்களின் இரத்தத்தில் கலந்திருக்கும் நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.
தமிழர்களின் பண்பாடு. மரபு உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பொங்கல் விழா கொண்டாடும் ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களில், மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆட்சி மொழிக்குழு தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பொதுத்துறை மற்றும் பிற மத்திய அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு வர இருக்கிறது. எனவே அந்த மூன்று நாட்களும் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயமாக பணிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படடு இருப்பதாக இந்து தமிழ் திசை நாளேட்டில் செய்தி வந்துள்ளது.
இத்தகைய செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.
ஜனவரி 16 பொங்கல் நாள் விடுமுறை அன்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதால், அந்த உரைகளைக் கேட்க 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் மாற்றம் செய்தார்கள்.
தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா பொங்கல் நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுவதை இந்துத்துவ மதவாத சனாதன சக்திகள் விரும்பவில்லை என்பதையே இதுபோன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன.
இந்தித் திணிப்பை எதிர்த்துப் போர்க்கோலம் பூணும் தமிழகத்தில்தான் இந்தி மொழியின் அலுவல் பயன்பாடு பற்றி ஆய்வு நடத்த நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு வருகிறது. அதுவும் பொங்கல் விடுமுறை நாட்களில் என்றால் பா.ஜ.க. அரசின் நோக்கத்தை தமிழக மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பொங்கல் விடுமுறை நாட்களில் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தும் பயணத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் 13-01-2019 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment