Monday, January 6, 2020

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை-வைகோ கருத்து!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அரசு தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்று மத்திய பா.ஜ.க. அரசு வழங்கிய பாராட்டுப் பத்திரத்தைத் தமிழக ஆளுநரும் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இன்றைய தமிழ்நாட்டின் நிலை 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றபோது, ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 470 கோடியாக இருந்த கடன், கடந்த நிதி ஆண்டின் முடிவில் மூன்று இலட்சத்து 26 ஆயிரத்து 518 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல் தட்டிக் கழித்ததால், 14-ஆவது நிதிக்குழு ஆணையப் பரிந்துரையின்படி, மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 3000 கோடி ரூபாய் பறிபோனது. அதுபோல மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு 2017-18ஆம் நிதி ஆண்டில் ஒதுக்கிய நிதி, நலத்திட்டங்களுக்குச் செலவழிக்கப்படாமல் ரூபாய் 3676 கோடி திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இதனை மத்திய கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் ஆய்வறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியது. இவை எல்லாம் அ.இ.அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமை என்று ஆளுநர் கூறுகிறாரா?
தமிழகத்தில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு, சுமார் ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர் என்பதை சட்டப் பேரவையிலேயே கடந்த கூட்டத் தொடரின்போது தமிழக அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆளுநர் உரையில் தெரிவித்து இருப்பது கவைக்கு உதவாது.
ஜி.எஸ்.டி. வரி மற்றும் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைகளால் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ஜவுளித்துறை மீள்வதற்கு எந்த அறிவிப்பும் இல்லை.
கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே உயர்தள வழித்தடம், சென்னை - பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டம், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தும் திட்டம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் ஓராண்டு காலத்தில் அதற்காக சிறு துரும்பைக்கூட இந்த அரசு கிள்ளிப் போடவில்லை.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பல்லக்குத் தூக்குவதைப் பெருமையாகக் கருதுகின்ற இந்த அரசு ‘நீட்’ தேர்வுக்கு இதுவரை விலக்கு பெறாதது ஏன்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ என்னும் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவோம் என்று அறிவித்திருப்பது, பொது விநியோக முறையைச் சீர்குலைத்துவிடும். நடப்பு ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 115 மெட்ரிக் டன் என்ற அளவை எட்டும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், உணவு தானிய உற்பத்திக்கு அடித்தளமாக இருக்கும் விவசாயிகளின் பிரச்சினைகளை இந்த அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.
சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசின் நிதிச் சலுகைகளை வலியுறுத்தும் இந்த அரசு, சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக் குறித்து சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
அரசுப் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு வரும் நிலையை மாற்ற முயற்சிக்காத இந்த அரசுதான், கல்வி வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்று கூறுவது சரியல்ல.
ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும், அதனை நிராகரித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றும் தார்மீக உரிமை இருக்கிறதா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை ஆளுநர் உரை முலாம் பூசி மறைக்கப் பார்க்கிறது.
சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரை வழக்கமான சடங்குதானே தவிர, இதனால் மக்களுக்குப் பயன் எதும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 6-1-2020 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment