Thursday, June 29, 2023

தியாகி "இடிமழை உதயன்" நினைவு இல்லத்தை திறந்து வைத்தார் வைகோ MP!

திமுகவிலிருந்து தலைவர் வைகோ அவர்களை வெளியேற்ற கூடாது என்று தலைவரின் மேல் உள்ள பாசத்தால் தன்னுயிரை தியாகம் செய்த "இடிமழை" உதயன் அவர்களின் குடும்பத்திற்கு, மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ அவர்களின் முயற்சியால் கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய இல்லத்தை இன்று 29-06-2023 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக கண்மணிகள், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Wednesday, June 28, 2023

மதிமுக பொதுச் செயலாளரை சந்தித்த மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!

தமிழ்நாடு சட்டமன்ற மதிமுக உறுப்பினர்களான புதூர் மு.பூமிநாதன் அவர்களும், கு.சின்னப்பா அவர்களும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்களையும், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அவர்களையும் பெரம்பலூரில் 28-06-2023 அன்று சந்தித்தார்கள்.



தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக திருச்சியில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்தார் முதன்மை செயலாளர் துரை வைகோ!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பொறுப்பில் இருந்து பதவி நீக்கம் செய்யுமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி, ஒரு கோடிக்கு மேலான கையெழுத்து இயக்கம் திருச்சியில் இன்று 28.06.2023 காலை, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார்.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையில் தொடங்கி தெப்பக்குளம், பிஷப்ஷூபர் மேல்நிலைப்பள்ளி வரை நடை பயணமாக கழக தோழர்களோடு நடந்து சென்றும், திருச்சி மாநகர பேருந்தில் பயணித்து பயணிகள், பொதுமக்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரையும் நேரில் சந்தித்து ஆளுநரின் அடவாடித்தனத்தையும், தான் சார்ந்த கட்சியின் சனாதனத்தை பரப்பும் பிரச்சார பிரசங்கியை போல் அத்துமீறி செயல்படுவது குறித்தும் அனைவரிடமும் விளக்கி கையெழுத்தினை பெற்றார்.

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா சேக்முகமது, மாவட்ட செயலாளர்களான வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி.சேரன் உள்ளிட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள் கழக கண்மணிகள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்துக்கு வைகோ MP கண்டனம்!

கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

185 பக்கங்கள் கொண்ட அந்த ஆலோசனை அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு மதச்சார்பின்மை முரண்பட முடியாது. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தது.

இருப்பினும் திருமணம், விவாகரத்து தொடர்பான சட்டங்கள் சிலவற்றை பொதுவானதாக பல்வேறு மதங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் 22 ஆவது சட்ட ஆணையம் ஜூன்-14, 2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துகள் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று ஜூன்-27 ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பாஜக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

“ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும்? அதேபோல் ஒரு தேசம் இரண்டுவிதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது” என்று பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி பேசி உள்ளார்.

உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூறியுள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.

நாட்டின் பன்முக தன்மையை சீர்குலைத்து வரும் ஒன்றிய பாஜக அரசு, மணிப்பூர் பற்றி எரிவதைப் பற்றிக் கவலைப்படாமல், பொது சிவில் சட்டத்தைச் செயற்படுத்த துடிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும்.

இந்த முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.06.2023

வைகோ MP பக்ரீத் வாழ்த்து!

உலக முஸ்லிம்களில் பலர் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்றி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
திரு குர்ஆனில் ஆறு அத்தியாயங்களில், 32 வசனங்களில், குறிப்பாக 24 தலைப்புகளில் ஹஜ் யாத்திரை பேசப்படுகிறது.
இறைவன் இப்ராஹீம் (அலை) தியாகத்தை ஏற்று இஸ்மாயில் (அலை) அவர்களைப் பலியிடுமாறு கட்டளையிட்டார். (திரு குர் ஆன் 37, வசனம் 100-111)
அவ்வசனங்களுக்கேற்ப உலக முஸ்லிம்கள் கொண்டாடிடும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.06.2023

Tuesday, June 27, 2023

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ MP வரவேற்பு!

பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல், உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் இந்தத் தீர்ப்பினை அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் யார் தேர்ச்சிபெற்றிருந்தாலும் கோவில் நிர்வாக அதிகாரிகளே அர்ச்சகரை நியமித்துக்கொள்ளலாம் என்றும், பிறப்பின் அடிப்படையில் பாரபட்சம் இன்றி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும், இதற்காக ஆகமக் கோவில் எது? ஆகமம் அல்லாத கோவில் எது? என்பது குறித்து கண்டறியும் குழு அறிக்கை வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் அவர்களின் இறுதி கோரிக்கையான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அரசு செயல் வடிவம் கொடுத்தது. நீதிமன்ற குறுக்கீடுகள் காரணமாக அந்த முயற்சிக்கு இடையூறு வந்தது. அதன்பின்னர் திராவிட மாடல் அரசு நடத்தும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு மீண்டும் அர்ச்சகர் சட்டத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளது.
இந்தச் சூழலில், தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டத்தக்க இந்தத் தீர்ப்பினை அளித்துள்ளது. அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் படித்து, அரசு நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி இல்லாமல் வேதனையோடு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கின்ற அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை உடனடியாக பணியில் நியமிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.06.2023

Monday, June 26, 2023

மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் மனித படுகொலைகளை கண்டித்து கிருஸ்துவ நல்லெண்ண இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினேன். துரை வைகோ!

கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையே நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மாநில மற்றும் ஒன்றிய பாஜக அரசின் செயலிழந்த நிர்வாகத்தை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத அமைப்புகளை ஒருங்கிணைத்து 26.06.2023 இன்று மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கிருஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பங்கேற்று உரை நிகழ்த்தினேன்.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு இனக்குழுக்கள் இடையே நடைபெறும் கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். இந்தக் கலவரத்தில் சிறுபான்மை மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசும், ஒன்றிய பாஜக அரசும் கலவரத்தை கட்டுப்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. கலவரம் தொடங்கி 26 நாட்கள் கழித்து தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்கு செல்கிறார். பிரதமர் மோடி அவர்கள் மணிப்பூர் கலவரம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன. ஒரு இன அழிப்புக்கு நிகரான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் குறைந்தபட்சம் மனிதநேய உணர்வோடு கூட அந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில மற்றும் ஒன்றிய பாஜக அரசுகள் தவறியுள்ளது. மணிப்பூர் மாநிலமே பற்றி எரியும் நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசுகளை கண்டித்து விரிவாக உரையாற்றினேன்.
இந்நிகழ்வில், தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ச.பீட்டர் அல்போன்ஸ், இந்திய தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் IAS, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் வி.சின்னதுரை MLA, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி MLA, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா MLA, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில துணைத் தலைவர் K.நவாஸ்கனி MP, மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் இ.ஆசீர், செங்கை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் அ.நீதிநாதன், தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜே.ஜார்ஜ் ஸ்டீபன், சிரோ மலபார் திருச்சபைகள் ஆயர் செபாஷ்டின் பொலொளிப்பரம்பில், பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத் தலைவர் K.B.எடிசன், சென்னை மயிலை உயர் மறைமாவட்டம் முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, அட்வெண்ட் திருச்சபைகள் பேராயர் M.G.பகத்சிங், சென்னை சேசு சபை மாநிலத் தலைவர் ஜெபமாலை ராஜா, மாண்போர்ட் சபை தேசிய தலைவர் டாக்டர்.இருதயம், அன்னை அடைக்கல சபை நற்செய்தியாளர் ரேன்சம், MMI சென்னை மாகாண தலைவர் ஆண்டனி ஜெரால்டு, DMI அருட்சகோதரிகள் மாகாண தலைவி L.அருள்சீலி, மறுமலர்ச்சி தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன் MC, சைதை ப.சுப்பிரமணி MC, கே.கழககுமார், மாவை மகேந்திரன், பூவை பாபு மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றார்கள்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
26.06.2023

Sunday, June 25, 2023

பொறியாளர் காந்தி அவர்கள் பொதுவாழ்க்கை பாராட்டு விழாவில் வைகோ MP வாழ்த்துரை!

மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் தந்தை பொறியாளர் காந்தி அவர்களின் 55 ஆண்டு பொதுவாழ்க்கை பாராட்டு விழா 25-06-2023 சென்னையில் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், பொதுவுடமை தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழக தலைவர் வீரமணி ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இதில் பேசிய திருமுருகன் காந்தி அவர்கள், நான் சிறைப்பட்ட காலத்தில் என் குடுபத்தில் வந்து அனைவருக்கும் தைரியம் கொடுத்து தந்தைக்கு நிகராக ஆறுதல் படுத்தியவர் ஐயா வைகோ என பேசினார்.

Thursday, June 22, 2023

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கம். தலைவர்கள் கையொப்பமிட்டு வாழ்த்து!

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்பட்டு வருகின்றார்.
தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், காலதாமதம் செய்வதும் ஆளுநருக்கு வாடிக்கையாகி விட்டது.
கல்லூரி இறுதி ஆண்டை முடித்துவிட்டு பட்டப்படிப்பு சான்றிதழை பெறவேண்டிய மாணவர்களின் எதிர்காலத்தையும், வேலை வாய்ப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களுக்கு நேரம் தராமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருவதால் தங்கள் எதிர்காலம் குறித்த கவலையோடும், கண்ணீரோடும் 9.25 இலட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். கிடைத்த வேலைக்கும் செல்ல முடியாமல், பிடித்த வேலைக்கும் செல்ல முடியாமல் தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றார்கள்.
இதுகுறித்து கேட்டபோது, ஆளுநருக்கு நேரம் இல்லை என ஆளுநர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
திராவிட இயக்கங்களை கொச்சைப்படுத்துவதும், திராவிட மாடல் அரசை குறை சொல்வதுமே ஆளுநரின் அன்றாடப் பணிகளாக இருக்கின்றது.
தனக்கு கிடைத்த மேடைகளை பயன்படுத்தி இந்துத்துவா கருத்துக்களையும், ஆர்.எஸ்.எஸ் மதவாத சித்தாந்தங்களையும் ஆளுநர் பரப்பி வருகின்றார். மதவாத சக்திகளின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் செயல்பட்டு வருகின்றார்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை அப்பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் கேட்டுக் கொள்ளும் வகையில் மறுமலர்ச்சி தி.மு.க 20.06.2023 அன்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை ஏன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை விளக்கி அவர்களிடமிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான கையெழுத்துக்களை பெறும் பணியை மறுமலர்ச்சி தி.மு.க முழு வீச்சில் செய்து வருகின்றது.
பொதுவுடைமை இயக்கத்தின் மிக மூத்த தலைவரும், கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரும், தமிழ்நாட்டின் நலனுக்காக அதிக நாட்கள் சிறையில் வாடிய தலைவருமான ஐயா ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்துள்ளார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சி தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் ஆகியோர் ம.தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தார்கள். நான் நேரில் சென்று அவர்களிடம் கையெழுத்துக்களை பெற்றேன்.
இந்நிகழ்வின்போது, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், கழகப் பொருளாளர் பொறியாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டு ஊடகங்களும், நாளிதழ்களும், வார ஏடுகளும் ம.தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தர வேண்டும். மக்களிடம் விளக்கிச் சொல்ல வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
21.06.2023