Wednesday, June 14, 2023

சென்னையில் மதிமுக 29-ஆவது பொதுக்குழு கூடுகை!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 29-ஆவது பொதுக்குழு இன்று (14.06.2023) சென்னை, அண்ணா நகர், விஜயஸ்ரீ மகாலில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் எண். 1

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 30-ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்ற இந்த ஆண்டில் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் மிக சிறப்பாக நடந்தேறி இருக்கிறது.

கழகத்தின் 28-ஆவது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி 2022, ஜூன் மாதம் தொடங்கி உறுப்பினர் சேர்ப்புப் பணிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற்றது.

அதன் பின்னர் படிப்படியாக கிளைக் கழகம் தொடங்கி பேரூர், நகரம், ஒன்றியம், மாநகரங்களில் கழகத்தின் அமைப்புத் தேர்தல் எல்லா நிலையிலும் நடந்தேறியது.

அதன் பிறகு மாவட்டக் கழகங்களுக்கு முறையாக தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கழக சட்டத்திட்ட விதிப்படி தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜூன் 1-ஆம் தேதி வேட்பு மனுக்கள் தலைமைக் கழகத்தில் பெறப்பட்டன.

ஜூன் மூன்றாம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்ற பின்னர் தலைமைக் கழக நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையாளர்களால் அறிவிக்கப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிகுந்த 29-ஆவது பொதுக்குழுவில் திராவிட இயக்கத்தில் இன்னொரு வித்தாக விழுந்து விருட்சமாக வளர்ந்திருக்கிற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக ஐந்தாவது முறையாக பொறுப்பேற்று கழகத்தையும் திராவிட இயக்கத்தையும் வழி நடத்துகிற திராவிட இயக்கப்  போர்வாள் இலட்சியத்  தலைவர் வைகோ அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறது.

கழகத்தின் அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆடிட்டர் அர்ஜுனராஜ் அவர்களுக்கும், கழகத்தின் பொருளாளர் பொறுப்பு ஏற்று இருக்கும் பொறியாளர் மு.செந்திலதிபன் அவர்களுக்கும், முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் கழகத்தின் நம்பிக்கை ஒளி துரை வைகோ அவர்களுக்கும், துணைப் பொதுச் செயலாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மல்லை சத்யா, ஆ.கு .மணி, ஆடுதுறை இரா. முருகன், தி.மு. இராஜேந்திரன், டாக்டர் ரொஹையா சேக் முகமது ஆகியோருக்கும்,

புதிதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், தணிக்கை குழு உறுப்பினர்கள் முதலான அனைவருக்கும் இப்பொதுக்குழு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண். 2

கடந்தாண்டு பொதுக்குழுவில் தீர்மானித்தவாறு கழகத்தின் பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் பணிகளை சிறப்பாக நிறைவேற்றி கழகத்தின் அமைப்பு தேர்தல்களை ஜனநாயக முறைப்படி சீரிய முறையில் நடத்தித் தந்திருக்கிற கழகத்தின் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் தலைமை கழகம் நன்றியை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண். 3

திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களான டாக்டர். சி நடேசனார், சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் வழியில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி முப்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாப்பதற்காக திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் பல போராட்டக் களங்களை சந்தித்து வாகை சூடி இருக்கிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களான சமூக நீதி, மொழி உரிமை, இன உரிமை ,பண்பாட்டு உரிமை, மாநில சுயாட்சி உள்ளிட்டவற்றில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மாறா உறுதியுடன் இயங்கி வருகிறது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனித்தன்மையுடன் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தனது இலட்சியப் பயணத்தை உறுதியுடன் மேற்கொள்ளும் என்று கழகப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண். 4

கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் முடிந்து நிர்வாகப் பொறுப்பு ஏற்று இருக்கிற கழகத்தினர் ஒன்றிய, நகர, மாவட்டக் கழக கூட்டங்களை ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கிளைக் கழகங்கள் தோறும் கழகக் கொடியேற்று விழாக்களை ஏற்பாடு செய்து மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 5

தமிழ்நாட்டின் ஆளுநராக திரு ஆர்.என். ரவி பொறுப்பேற்ற காலத்திலிருந்து ஆளுநர் அலுவலகம் ராஜ்பவனில் இருந்து போட்டி அரசு நடத்திக் கொண்டிருக்கிறார்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிற அதிகாரத்தை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆதிக்கம் செய்ய நினைப்பதும், ஒன்றிய அரசை நடத்தும் பாஜகவின் ஊது குழலாக, தமிழ்நாட்டில் சனாதன சக்திகளுக்கு ஊக்கம் தரும் வகையில் செயல்படுவதும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவுகளுக்கு  ஒப்புதல்  தராமல் அதை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசி வருவதும், தமிழ்நாடு அரசு தயாரித்துத் தந்த அறிக்கையில் உள்ள தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களை தவிர்த்துவிட்டு தன் மனம்போன போக்கில் சட்டமன்றத்தில் உரையாற்றுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், இந்துத்துவ கோட்பாட்டை திணிக்கும் வகையிலும் பகிரங்கமாக செயல்பட்டு வரும் ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பில் நீடிப்பதற்கான தகுதியை இழந்து விட்டார்.

எனவே குடியரசுத் தலைவர் அவர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர் .என். ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்களிடத்தில் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண். 6

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாஜக வெல்ல முடியாத அரசியல் சக்தி என்ற மாயத் தோற்றத்தை உடைத்து எறிந்து இருக்கின்றது.

2018 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கர்நாடக மக்கள் பாஜகவை வீழ்த்தினார்கள். மதச்சார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. 

ஆனால், பாஜக குதிரைப் பேரம் நடத்தி, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆளுநர் துணையோடு குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது.

கர்நாடகத்தை காவிமயமாக்கும் நடவடிக்கையில் இறங்கிய ஆர்.எஸ்.எஸ் -இந்துத்துவ சக்திகள், சிறுபான்மை இஸ்லாமியர், கிறிஸ்தவ மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. இஸ்லாமிய மக்களின் பண்பாட்டு உரிமைகளைப் பறித்தன.

இந்துவத்துவ சோதனைச் சாலையாக மாற்றப்பட்ட கர்நாடகாவில், முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்தது.

பாஜகவின் ஏதேச்சதிகார, மதவெறி அரசியலுக்கு கர்நாடக மக்கள் தக்கப் பாடம் புகட்டி இருக்கிறார்கள்.

இந்தியாவில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்துத்துவக் கும்பலை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்பதை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெள்ளிடை மலையாக நிருபித்து இருக்கிறது.

பாசிசத்தை வேரறுக்க கர்நாடகாவில் மக்கள் சக்தி வெகுண்டு எழுந்தது போல, 2024 நாடாளுமன்றத்தேர்தலிலும் இந்தியா முழுவதும்  நடக்கும்.

பா.ஜ.க அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற  மாநில உரிமைக்குப்  போராடி வரும் அரசியல் கட்சிகள், மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 7

கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு டி.கே.சிவகுமார் நீர்ப்பாசனத்துறை தொடர்பான முதல் கலந்தாய்வுக் கூட்டத்திலேயே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டும் பணியை விரைவுப் படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் அனுமதியைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறி உள்ளார்.

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தபோது, மேகேதாட்டு அணை கட்டி, 67.16 டி.எம்.சி. நீரை சேமிக்கவும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தவும், 400 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கவும் ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலானத் திட்டத்தைத் தயாரித்து, ஒன்றிய அரசுக்கு அனுப்பி அனுமதி பெற்றுவிட முனைந்தது.

இந்நிலையில், 2018-இல் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்பு மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற முதல்வர் பொறுப்பில் இருந்த எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் தீவிரமாக முயன்றனர்.

பசவராஜ் பொம்மை கடந்த ஆண்டு கர்நாடக சட்டமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தபோது, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில்தான் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் பொறுப்பு ஏற்றது.

கர்நாடக மாநில துணை முதல்வரான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது, மேகேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி பெங்களூருவிலிருந்து 10.01.2022 இல் நடைபயணம் தொடங்கி, 10 நாட்கள் பல ஊர்கள் வழியாகச் சென்று 19.01.2022 அன்று மேகேதாட்டுவில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.

தற்போது மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன், மேகேதாட்டு அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது.

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகேதாட்டு அணை கட்டும் பணியை தொடங்குவோம்; எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது. உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்த தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 177.25 டி.எம்.சி. நீர், கானல் நீராகவே போய்விடும் ஆபத்துதான் விளையும்.

எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கவே கூடாது. தமிழ்நாட்டின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக்கொள்வதை ஏற்கவே முடியாது.

எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 8

தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன், ஐந்து நட்சத்திர அடையாளத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி  மே28 ஆம் தேதி திறந்து வைத்தார்.

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல், ஆம் ஆத்மி, திமுக, மதிமுக, விசிக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ஏஐஎம்ஐஎம் உட்பட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தானே திறந்து வைக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை ஓரம்கட்டும் முயற்சி. இது அவரை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். இந்த முறையற்ற செயல் குடியரசுத் தலைவர் அலுவலகத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்லாது, அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் செயல் ஆகும்“ என கூறப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் என்பவர் நாட்டின் தலைவர் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கமும் ஆவார். நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, உரையாற்றும் சிறப்பு அதிகாரத்தை அவர் பெற்றிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா சட்டமாக அமலுக்கு வருவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றமே இயங்க முடியாது.

ஆனாலும் குடியரசுத் தலைவர் இல்லாமலேயே புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஒன்றய பா.ஜ.க அரசு திறந்து  வைத்திருக்கிறது.

இந்த கண்ணியமற்ற செயல், குடியரசுத் தலைவரின் உயர் பதவியை அவமதிப்பதோடு, அரசியலமைப்பின் உறுதி மற்றும் உணர்வை மீறுகிறது;
இந்திய நாடு தனது முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவரைக் கொண்டாடுகிற அந்த உணர்வைக் குறைத்து மதிப்பிடுகிறது.

குடியசுத் தலைவரை அல்ல இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதித்து வரும் பா.ஜ.க அரசுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண். 9

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ படிப்பிற்கான இடங்களையும் நீட் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பொதுக்கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்துள்ளதாக கடந்த ஜூன் 2 ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் அரசிதழில் செய்தி வெளியிட்டது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறைகள் ஜி.எம்.இ.ஆர்.- 23 (Graduate Medical Education Regulations) என அழைக்கப்படுகின்றன.

தற்போதைய எந்த விதிகளிலும் விலக்கு இல்லாமல் NEET-UGஇன் தகுதிப் பட்டியல் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு இருக்கும் என்று அரசிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளுக்கு முரணாக எந்த மருத்துவ நிறுவனமும் மருத்துவப் படிப்பிற்கு எந்த ஒரு விண்ணப்பதாரரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்ககம் (Directorate of Medical Education) நடத்திவருகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள் தவிர மீதமுள்ள 85 சதவீத இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் இந்தக் கலந்தாய்வின் மூலமாகவே நிரப்பப்படுகின்றன.

அதேபோல, முதுநிலை மருத்துவப் படிப்பிலும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்கள் தவிர மீதமுள்ள இடங்களை கலந்தாய்வு மூலம் தமிழக அரசே நேரடியாக நிரப்பிவருகிறது.

தமிழக அரசின் கீழ் வராத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

ஆனால், இந்தப் புதிய விதிகளின்படி இனி அனைத்து இடங்களுக்குமான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் நடத்த முடியும்.

மாநில அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடத்துவது கால தாமதத்தையும், மாணவர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகக் கூறி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஒன்றிய அரசு கூறுவதை ஏற்க முடியாது.

நீட் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்திய போது, தேர்வை நடத்தி தரவரிசைப் பட்டியலை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கும். அந்தப் பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாநில இடஒதுக்கீட்டிற்கு ஏற்ப மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். தற்போது கலந்தாய்வையும் நாங்களே நடத்துவோம் என்று கூறியிருப்பது மருத்துவக் கல்வி மீது மாநில அரசுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் ஒழிக்கும் செயல் ஆகும்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பொதுக்கலந்தாய்வு என்பது இட ஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே மருத்துவ படிப்புகளுக்கு ஒன்றிய அரசு பொது கலந்தாய்வு நடத்த முனைவதை கைவிட வேண்டும் என மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 10

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தால் உயிர்  இழப்புகள் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள்  அதிர்ச்சி தருகின்றன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்து எக்கியார் குப்பத்தில் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; அவர்களில் 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த எட்டு பேர் உயிரிழந்தனர்.

முழு மது விலக்கு வேண்டும் என்று நாம் கோரி வரும் நிலையில் இன்னொரு பக்கத்தில் இது போன்ற கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடப்பதும்,அதனால் உயிர்கள் பலி ஆவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது.

அரசு விற்பனை செய்யும் மதுவைப் போன்றே கள்ளச்சாராயப் புட்டிகள் புழக்கத்தில் இருப்பதும்,அதனை கண்டறிந்து தடுக்க வேண்டிய காவல்துறையினரின் அலட்சியத்தாலும் இது போன்ற உயிர் இழப்புகள் நேர்கின்றன.

கள்ளச்சாரயம் விற்பனை செய்வோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதனை தடுக்கத் தவறிய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.

அரசு மதுபான விற்பனை கடைகளை படிப்படியாகக் குறைத்து, முழு மது விலக்கை செயல்படுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 11

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஜூன்- 8 ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறும் போது, பல்கலைகழகங்களின் “பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் சிறப்பு விருந்தினர் ஒருவரை அழைத்து வருவார்.அதன்படி இதற்குமுன் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் துணைவேந்தர்கள் போன்ற கல்வியாளர்களை வைத்துதான் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

தற்போது ஆளுநர் வடஇந்திய பிரபலங்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை வைத்து பட்டமளிப்பு விழா நடத்த விரும்புகிறார். மத்திய அமைச்சர்கள் தேதி தருவதில் தாமதம் ஏற்படுவதால் விழா நடத்தாமல் உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலை.களிலும் யாருக்கும் பட்டம் வழங்கப்படவில்லை. அதாவது 2022-ம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற 9 லட்சத்து 29,142 மாணவர்கள் பட்டம் பெற முடியவில்லை.
இதனால் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடுத்தகட்ட பணி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் அவசியமாகும். தற்போது சான்றிதழ் இல்லாததால் அவர்களும் தவிப்பில் உள்ளனர். எந்த விவகாரத்திலும் தமிழக அரசின் ஆலோசனையை ஆளுநர் பெறுவது கிடையாது. பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருப்பதற்கு ஆளுநரே முழு காரணம்.“ என்று கூறி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் பட்டப் படிப்பு முடிந்து ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற முடியாத நிலையை ஏற்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி.தடை போட்டிருப்பதற்கு  இப்பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் உடனடியாக பட்டமளிப்பு நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 12

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022 செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவுப்படி, அடுத்த மாதம்  அதாவது ஜூலை 1-ஆம் தேதி முதல், மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதாவது, தற்போது 1 யூனிட் கட்டணம் எவ்வளவோ, அதிலிருந்து 4.70 சதவீதம் அளவுக்கு உயர்த்த வாரியம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், அரசு ஜூன் 8-ம் தேதி  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆட்சியின் திறனற்ற மேலாண்மையால், மின் வாரியத்தின் ஒட்டு மொத்த நிதி நிலைமை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. ஒன்றிய அரசு, 2021 நவம்பர் 9-ஆம் தேதி வெளியிட்ட ஆணையின்படி, எரிபொருள் மற்றும் மின்சாரம் கொள்முதல் விலை உயர்வை ஈடுகட்ட, உடனுக்குடன் நுகர்வோரிடம் இருந்து, அதற்கான கட்டணத்தை வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது.

இதன்பின், 2022 டிசம்பரில் பிறப்பித்த உத்தரவில், மின் கட்டணத்தை மாதந்தோறும் உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தது. அதனால், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022 - 23 முதல், 2026 - 27 வரை, ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த, 2022 செப்டம்பர் 9-இல் உத்தரவிட்டது.

இதன்படி, 2022 - 23ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் மாத நிலவரப்படி உள்ள நுகர்வோர் பணவீக்க விகிதம் அல்லது 6 சதவீதம், இதில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தலாம் என ஆணையம் கூறியுள்ளது.

ஆனால், கடந்த ஏப்ரல் மாத நுகர்வோர் பணவீக்க விகிதம், 4.70 சதவீதம் என்ற அளவில் குறைவாக இருந்தது. எனவே, அந்த அளவுக்கு அடுத்த மாதம் முதல், மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

ஆனால், 'ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது, பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டார்.

எனவே, கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டது. குறைந்த அளவில் கட்டணத்தை உயர்த்தும் வகையில்,2022 ஏப்ரல் மாதத்திற்கு பதிலாக, ஆகஸ்ட் மாத நுகர்வோர் பணவீக்க விகிதம் கணக்கில் எடுக்கப்பட்டது.

அதன்படி, கட்டண உயர்வின் அளவு, 4.70 சதவீதத்தில் இருந்து, 2.18 சதவீதமாக குறைக்கப்பட்டது.இந்த குறைந்த உயர்வில் இருந்து, பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில், வீடுகளுக்கு ஏற்படும், 2.18 சதவீத கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றுள்ளது. அதற்கான செலவை, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவால், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.

வேளாண், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறி போன்றவற்றிற்கு வழங்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்டிற்கு, 13 காசு முதல், 21 காசு வரை மிகக் குறைந்த அளவில் மின் கட்டணம் உயர்த்தப்படும்.“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான கட்டணம் உயராது என்பதும் வேளாண்,குடிசை இணப்புகள் ,போன்றவற்றிற்கு சலுகைகள் தொடரும்.கைத்தறி மற்றும் விசைத்தறி நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் தொடரும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஆனால்,  தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 காசு முதல் 21 காசு வரை உயர்த்தப்படும் என்ற அறிவிப்பால் , ஏற்படும் பாதிப்புகளை பெரு நிறுவனங்களால்தான்  ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் ஈடு செய்ய  முடியாது.

எனவே, தொழில் மற்றும் வணிகநிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டண உயர்வையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப்  பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 13

கடந்த ஓராண்டுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.ஆனால் பன்னாட்டு  சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பி.பி.சி.பி. கள் போன்ற நிறுவனங்கள் 20 ஆயிரம் கோடி வரை லாபம் பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 140 டாலருக்கு விற்கப்பட்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக 75 டாலராகக் குறைந்துள்ளது. ஆனாலும் எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை விலையை குறைக்கவில்லை. எனவே ஒன்றிய அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 14

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் ஜூன் 2-ஆம் தேதி மாலை மக்கள் சந்திப்புக்காகச் சென்ற, தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது  சிங்கள அரசின்   புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதுடன், காவலர் சீருடையிலிருந்த மற்றொருவர் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டினார்.

இலங்கை காவல்துறையினர் சாதாரண உடையில் வந்து தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,தான் அடையாள அட்டையை காண்பிக்கக் கோரியதும் தன் மீது தாக்குதல் நடத்த அவர்கள் முயன்றதாக கஜேந்திர குமார் பொன்னம்பலம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜூன் 7-ஆம்  தேதி காலை கொழும்பு- கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் பொன்னம்பலத்தை கைது செய்து அழைத்துச்  சென்றுள்ளனர். இலங்கை அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.

 கஜேந்திர குமார் பொன்னம்பலம், ஈழத் தமிழர்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களின் பெயரன் ஆவார். இவரது தந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான குமார் பொன்னம்பலம் சிங்கள அரசின் சதியால் 2000-ஆம் ஆண்டு, ஜனவரி 5-ஆம் தேதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

தனது பாட்டனார் மற்றும் தந்தை வழியில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்காகவும் இறையாண்மையை மீட்கவும் ஜனநாயக முறையில் இயங்கி வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் சிங்கள அரசால் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று ஈழத் தமிழர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இலங்கையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நிலை என்றால் சாதாரண தமிழ் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் எந்த உத்திரவாதமும் இல்லை என்பது இதன் மூலம் வெளி உலகிற்கு தெரிகிறது.

சிங்கள இராணுவத்தால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008-ஆம் ஆண்டு இறுதிப் பகுதியிலும், 2009-ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையே உறுதிப்படுத்தியது.

ஆனால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்து 14 ஆண்டுகள் ஆன பின்பும் தமிழ் ஈழ மக்களை இலட்சக்கணக்கில்  கொன்று குவித்த இராஜபக்சே கும்பல் இன்னும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கப்பட வில்லை.

தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவ தர்பார் இன்னமும் தொடருகிறது.

தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட நிலங்கள், வீடுகள் சிங்களவர்கள் உடைமையாகி விட்டன. காணாமல் போனவர்களைப் பற்றியும் இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன.

ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய அரசு கண்டும் காணாமல் இலங்கை அரசுக்கு உதவி செய்து வருவது உலகெங்கும் வாழும் தமிழர்களைக் கொந்தளிக்க செய்கிறது.
ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட, பொது வாக்கெடுப்பு ஒன்றை ஈழத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் ஐநா மன்றம் நடத்தி தீர்வு காண வேண்டும் என்று முதன் முதலில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 2011-ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் பெல்ஜியம் தலைநகரம் பிரஸ்ஸல்சில் நடந்த மாநாட்டில் எடுத்துரைத்தார்.

அந்த இலட்சியத்தை நிறைவேற்ற உலகத் தமிழர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண். 15

உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக  பொறுப்பு வகித்தார். இவரால் ஒரு சிறுமி உட்பட  பத்துக்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக உலக சாம்பின்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகத்,  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உட்பட சுமார்  பத்துக்கும் மேற்பட்ட  வீரர் மற்றும் வீராங்கனைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் அவர் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்  பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும்   மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தை தொடங்கிய  நிலையில்  ஏப்ரல் 27ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த மே 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக  செல்ல முயன்றனர்.

அப்போது டெல்லி காவல்துறையால் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நீதி கேட்டு போராட்டம் நடத்திய இந்திய மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

பிரிஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் எனவும்  உலக மல்யுத்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான ரியோ 2016 வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், டோக்கியோ 2020 பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகத் ஆகியோர் காவல்துறையின் அடாவடித்தனத்தைக் கண்டிக்கும் விதமாக, ஒலிம்பிக் மற்றும் உலகப் பதக்கங்களை செவ்வாய்க்கிழமை ஹரித்வாரில் கங்கையில் வீசப் போவதாகக் கூறினர்.

மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச ஹரித்வார் சென்றனர். இந்தத் தகவல் அறிந்ததும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகாத் அங்கு சென்றார். மல்யுத்த வீரர்களிடம் பேசி பதக்கங்களை ஆற்றில் வீசும் முடிவை கைவிடுமாறு வற்புறுத்தினார்.

இதனையடுத்து ஒன்றிய அரசுக்கு 5 நாட்கள் கால அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளார். மேலும் மல்யுத்த வீரர்களிடமிருந்து விருதுகள் மற்றும் பதக்கங்கள் ஆகியவற்றைப்  பெற்றுக்கொண்ட நரேஷ் திகாயத், இவற்றை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

இந்திய நாட்டிற்காக உலக அரங்கில் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வாங்கிக் குவித்த மல்யுத்த  வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யாமல், நீதிக்காகப் போராடி வரும் மல்யுத்த வீரர்களை கைது செய்வதும், அவர்கள் தங்கள் பதக்கங்களை கண்ணீருடன் கங்கையில் வீசி எறிய சென்றதும் மிகுந்த வேதனை அளிக்கிறது.

நான்கு மாத காலத்திற்கும் மேலாக நீதிக்காகப் போராடி வரும் இந்திய மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக இயக்கங்களும்  குரல் எழுப்ப வேண்டும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 16

அரசு பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் அலுவலக பயன்பாட்டில் 100% இந்தி மொழியை பயன்டுத்துவது தொடர்பாக அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அறிக்கைகள் இந்தியில் தான் இருக்க வேண்டும். அவற்றுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் பதில்களும் இந்தியில் தான் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அன்றாடப் பணிகளில் தொடங்கி அலுவலக இதழ் வரை அனைத்தும் இந்தியில் தான் இருக்க வேண்டும் என்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இந்தி திணிப்புக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, அனைத்து மாநில மொழிகளையும் மதிப்பதாக தனது சுற்றறிக்கை குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் விளக்கம் அளித்திருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த  ஒன்பது ஆண்டுகளாக அஞ்சல் துறை,வங்கிகள் ,இரயில்வே உள்ளிட்டப்  பொதுத்துறை நிறுவனங்களில் இந்தி மொழியை திணித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.

ஒன்றிய பா.ஜ.க அரசு இந்தித் திணிப்பு முயற்சிகளை கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 17

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலை  தொடர்ந்து விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக 28.05.2018 அன்று தமிழ் நாடு அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட ஆணையிட்டது. இந்த ஆணையை சென்னை உயர் நீதிமன்றமும் 18.08.2020 அன்று உறுதி செய்தது.

இந்த ஆணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வேதாந்தா நிறுவனம், வழக்கு நிலுவையில் உள்ள காலகட்டத்தில் ஆலையின் பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிகோரி இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தது.

ஆலை பராமரிப்புப் பணிகளின் தேவை குறித்து ஆராய தமிழ் நாடு அரசு அமைத்திருந்த உயர்மட்டக் குழு  ஜூலை 2022ல் அறிக்கை ஒன்றை அரசிடம் தாக்கல் செய்திருந்தது.

இதன்படி 10.04.2023 அன்று ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவும், பசுமைப் பரப்பை சீர்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

தூத்துக்குடி ஆட்சியர் 29.05.2023 அன்று பிறப்பிதுள்ள ஆணையின் படி உச்சநீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஆணைகளை நடைமுறைப் படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட இக்குழுவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் நடைபெறவுள்ள கழிவுகளை நீக்கும் பணிகளைச் செய்வதற்கான முன் அனுபவமுள்ள நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால் வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பர அறிவிப்பில், Expression of Interest (EOI) இன் அடிப்படையில் கட்டிட, கட்டமைப்பு பாதுகாப்பு மதிப்பீட்டாய்வு, ஆலை மற்றும் இயந்திரங்களை பழுது பார்த்தல்/புதுப்பித்தல்/மாற்றுதல், வடிவமைக்கப்பட்ட திறன் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை அடைய ஆலை மற்றும் இயந்திரங்களை இயக்குதல் ஆகியவை அடங்கும்.

ஒப்பந்ததாரர்கள் தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4,000 நபர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதிக திறன் வாய்ந்தவர்கள் முதல் சாதாரண தொழிலாளர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்த, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள உள்ளூர் விற்பனையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது உச்சநீதிமன்ற ஆணையையும் தமிழ்நாடு அரசின் ஆணையையும் அப்பட்டமாக அத்துமீறும் நடவடிக்கையாகும். நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலை தொடங்கப்பட்ட போது  மறுமலர்ச்சி தி.மு.க. தூத்துக்குடியில் 5.3.1996 இல் உண்ணாவிரதம், 12.03.1996 இல் கடையடைப்பு,  1.4.1996 இல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி 1997 இல் திருவைகுண்டம் முதல் தூத்துக்குடி வரை 3 நாட்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடைபயணம், 30.08.1997 இல் 30,000 பேர் கலந்து கொண்ட ஸ்டெர்லைட்முற்றுகை போராட்டம் என்று பல மக்கள் திரள் போராட்டங்களை நடத்தியது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நீதி மன்றங்களில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தானே வாதாடினார். பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கில் வாதாடி 28.09.2010 இல் நச்சு ஆலையை முட வைத்தார்.

மீண்டும் 2013 இல் 100 கோடி ருபாய் அபராதத்துடன் ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து ஒவ்வொரு நிலையிலும் நீதிமன்றத்திலும் பசுமைத்தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடர்ந்து ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதில் வெற்றியை நிலைநாட்டியுள்ளார் தலைவர் வைகோ அவர்கள்.

2018 மே மாதத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து இந்த நச்சு ஆலையை நிரந்தரமாக முடியுள்ளனர். அவர்கள் தியாகம் வீண்போகாது.

வேதாந்த குழுமம் மீண்டும் நச்சு ஆலையை இயக்க முற்படுமானால், 1996 இல் நடைபெற்ற போராட்டங்களை விட இரண்டு மடங்கு உத்வேகத்துடன் மக்களைத் திரட்டி மறுமலர்ச்சி தி.மு.க. போராடும் என்பதை இப்பொதுக்குழு பிரகடனம் செய்கிறது.

தீர்மானம் எண். 18

ஒடிசா மாநிலம், பாலாசோர் மாவட்டம் அருகில் உள்ள பாகாநாகா பஜார் இரயில் நிலையம் அருகே 02.06.2023 அன்று இரவு 7.20 மணிக்கு பெங்களூரு - ஹவுரா விரைவு இரயில், சாலிமர் - சென்னை சென்ட்ரல், கோரமண்டல் விரைவு இரயில் மற்றும் சரக்கு இரயில் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த விபத்துக்கு உள்ளானது.

இந்த இரயில் விபத்து சமீக காலங்களில் நாட்டில் நடந்த மிக மோசமான இரயில் விபத்துகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தும், நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தும் பெரும் துயரை ஏற்படுத்திய இந்த இரயில் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இரயில்வே கட்டமைப்பின் குறைபாடுகள் காரணமாகவும், பொறியியல் துறையின் குறைபாடுகள் காரணமாகவும் 422 முறையும், தண்டவாளத்தை முறையாக பராமரிக்காததால், 171 முறையும், மெக்கானிக்கல் துறையின் குறைபாடு காரணமாக 182 முறையும், லோகோ பைலட்டுகளின் தவறு காரணமாக 154 முறையும் இரயில் தடம் புரண்டதாகவும், ஆபரேட்டிங் துறையின் தவறு காரணமாக 275 முறையும் இரயில் விபத்துகள் நடைபெற்றதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவித்திருப்பது ஒன்றிய அரசின் சீர்கேடுகளை அம்பலப்படுத்துகின்றன.

நாள்தோறும் 2.2 கோடி மக்கள் இரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இரயில்வே துறையை முறையாக பராமரிக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்படுவதும், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அலட்சியப்படுத்துவதும், குறைந்த ஊழியர்களைக் கொண்டு இயங்குவதும், தனியார் துறைக்கு மெல்ல மெல்ல தாரை வார்க்க முயற்சிப்பது போன்ற செயல்பாடுகளால்தான் இத்தகைய கோர விபத்துகள் ஏற்படுகின்றன.

ஒன்றிய அரசின் மிக மிகத் தவறான இந்த மக்கள் விரோதப் போக்கினை கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
14.06.2023

No comments:

Post a Comment