Monday, November 30, 2020

செத்துப்போன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு? வைகோ எம்பி கண்டனம்!

அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக இந்தியைத் திணித்து வருகின்ற பாஜக மோடி அரசு, அடுத்தகட்டமாக  செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் 25,000 பேர் கூடப் பேசாத ஒரு மொழிக்கு அனைத்து மாநில மொழி வானொலிகள், தொலைக்காட்சிகளிலும் 15 நிமிடங்கள் செய்தி அறிக்கை வாசிக்க வேண்டும் என்ற கட்டளையை மோடி அரசு பிறப்பித்து இருக்கின்றது.

மோடி பிரதமரானது முதல் மன் கி பாத் என்ற பெயரில் முழுக்க இந்தியில் உரை ஆற்றுகின்றார். கொரோனாவுக்குப் பின்பு அண்மைக்காலமாக அவர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் வானொலியிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றார்கள்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற, அனைத்து மாநில சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை முழுமையாக இந்தியில். நேரலையில் ஒலிபரப்பினார்கள். தில்லி நேரு பல்கலைக்கழகத்தில்  விவேகானந்தர் சிலையைத் திறந்து வைத்த விழாவில் பேசப்பட்ட உரைகள் முழுமையாக இந்தியில் நேரலையில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. 

தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ஒலிபரப்பாகி வந்த முதன்மையான நேரங்களில் இந்தி நிகழ்ச்சிகளைக் கட்டாயமாகத் திணித்ததுடன், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சிப்பதற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு, வானொலி, தொலைக்காட்சிகளில் சமஸ்கிருத செய்தி அறிக்கை வாசிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
30.11.2020

Saturday, November 28, 2020

மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுப்பு; தமிழக அரசின் கையறுநிலை! வைகோ கண்டனம்!


கிராமப்புற மற்றும் மலையகப் பகுதிகளில் பணிபுரியும் தமிழக அரசு மருத்துவர்களுக்கு எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளில் 50 விழுக்காடு இடங்கள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததை மத்திய பா.ஜ.க அரசு தட்டிப் பறித்து அதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு என்று சொல்லி தப்பித்தது.

அதைப் போலவே அரசு மருத்துவர்களுக்கு டி.எம். ,எம்.சி.எச் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததை ,இந்திய மருத்துவக் குழுவின் 2000 ஆவது ஆண்டின் விதிகளை காரணம் காட்டி மத்திய பா.ஜ.க அரசு இரத்து செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம்,உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று தீர்ப்பு அளித்தது.
அதன் அடிப்படையில் தமிழக அரசு,உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை ஒன்றை வெளியிட்டது.
இந்த அரசாணையும் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று நவம்பர் 27 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று திட்ட வட்டமாக தெரிவித்து விட்டது..
அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ததை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்று இத்தீர்ப்பை அளித்து இருக்கிறது.
மத்திய பா.ஜ.க அரசின் வஞ்சகத்தால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1922 முதுநிலை மருத்துவ இடங்களிலும், 369 உயர் சிறப்பு மருத்துவ இடங்களிலும் தமிழகத்தில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் முழுமையாக இடம் பெறும் வாய்ப்பு பறி போய் இருக்கிறது.
அகில இந்திய தொகுப்பு முறை என்ற அக்கிரமத்தால் வெளிமாநில மருத்துவர்கள் இந்த இடங்களை அபகரித்துக் கொள்ளும் நிலை திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
அகில இந்திய தொகுப்பு என்பதையே ஒழித்துக்கட்ட வேண்டும்.
உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்விலிருந்து முழு விலக்குப் பெற தமிழக சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டும்.
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில்
உள்ள உயர்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்று (INI-CET) நுழைவுத்தேர்வு ஏஐஎம்எஸ்,ஜிம்மர்,பிஜிஐ சண்டிகர் போன்றவற்றிக்கு பா.ஜ.க அரசு நீட்டிலிருந்து எப்படி விலக்கு அளித்து இருக்கிறதோ அதைப் போன்று உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் விலக்கு பெற எடப்பாடி பழனிசாமி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
மருத்துவக் கல்வியில் தமிழகத்தின் உரிமைகளை பலி கொடுத்து வரும் அதிமுக அரசின் கையறுநிலை கடும் கண்டனத்துக்கு உரியது
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
28.11.2020

Friday, November 27, 2020

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பு ஈடு வழங்குக, வைகோ வலியுறுத்தல்!


வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உருவாகி, நவம்பர் 25 ஆம் தேதி வீசிய நிவர் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ,வேலூர் ,செங்கல்பட்டு,சென்னை மாவட்டங்களில் பெய்த பலத்த மழையாலும், சூறைக்காற்றாலும் மிகுந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் சுமார் 700 ஏக்கர் மணிலா பயிர்கள், 50 ஏக்கர் மரவள்ளிக் கிழங்கு உட்பட 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்அடைந்து உள்ளன. 200 ஏக்கர் வாழைமரங்கள் சரிந்து விட்டன.
விழுப்புரம் மாவட்டத்திலும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின; வாழை மரங்கள் சரிந்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கரும்பு, வாழை மரங்கள் முறிந்து ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மணிலா பயிர்கள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் புயல், மழையில் முற்றாக அழிந்து விட்டன. நூற்றுக்கணக்கான குடிசைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதுடன் வாழை, பப்பாளி மரங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்து விட்டன.
புயல் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து, மின்சாரம் தடைப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாகக் காப்பீட்டுத் தொகை கிடைக்க ஆவன செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், கொரோனா கொடுந்துயரால் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திட முடியாத சூழல் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும்.
நெற்பயிர், வாழை, கரும்பு, பப்பாளி, மணிலா, மரவள்ளி உள்ளிட்ட அனைத்துச் சேதங்களையும் கணக்கிட்டு இழப்பு ஈடு அளிக்க வேண்டும்.
குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும் முழுமையான இழப்பீடு அளிக்க வேண்டும்.
விவசாயிகள் அறுவடை செய்த நெல் ஈரப்பதத்தைக் காரணம் காட்டி, கொள்முதல் செய்வதை நிறுத்தக் கூடாது.
நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளால்தான் மழை வெள்ளச்சேதங்கள் அதிகமாக இருக்கின்றன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு உதவிட மதிமுக தொண்டர்கள் மீட்புப் பணிகளில் முழு மூச்சாகச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
27.11.2020

தமிழ் ஈழம் அமைந்தே தீரும்! மாவீரர் நாளில் வைகோ உறுதி!


நவம்பர் 27. மாவீரர் நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தமது இல்லத்தில் தமிழ் ஈழம் அமையக் களத்தில் உயிர்க் கொடை ஈந்த விடுதலைப்புலிகளுக்கு, வீரவணக்கம் செலுத்தினார். அப்போது அவர் ஆற்றிய உரை....

இந்த நாள், தமிழ் ஈழத் தாயகத்தை மீட்பதற்காக, தாயக விடுதலைக்காகத் தங்கள் உயிர்களை ஈந்த மாவீரர்கள் நினைவைப் போற்றுகின்ற நாள். உலகம் இதுவரை கண்டும், கேட்டும் இராத மாபெரும் விடுதலைப் புரட்சியை நடத்திய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆணையை ஏற்று, அவரைத் தங்கள் நெஞ்சில் உயிராகக் கருதுகின்ற மாவீரர்கள், வீராங்கனைகள், களத்தில் நின்று போராடி, தங்கள் உயிர்களை ஈந்தனர்.

1982 ஆம் ஆண்டு, லெப்டிணன்ட் கர்னல் சங்கர் என்ற சத்தியநாதன், சிங்களப் படைகளின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு, மருத்துவத்திற்காகக் கடல் தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது இங்கே இருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய மடியில் தலை வைத்தவாறு, தாய் தந்தை உறவுகளைப் பற்றி எண்ணாமல், தம்பி, தம்பி என்று தலைவரைப் போற்றி உயிர் துறந்த நாள், இந்த நாள் ஆகும்.
இனி இந்த நாள் மாவீரர் நாளாகப் போற்றப்படும்; அவர்களுடைய தியாகம் நினைவு கூரப்படும்; அவர்கள் சிந்திய செங்குருதியின் மீது ஆணையிட்டு, நமது தாயகக் கனவு நிறைவேறுவதற்காக களத்தில் போராடுவோம் என, வன்னிக் காடுகளுக்கு உள்ளே, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், 1989 நவம்பர் 27 ஆம் நாள் அறிவித்தார்கள். அந்த ஆண்டின் தொடக்கத்தில்தான், பிப்ரவரியில், நான் அங்கே வன்னிக்காடுகளுக்குச் சென்று, தேசியத் தலைவருடனும், விடுதலைப்புலிகளுடனும் இருந்தேன்.
இன்று உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில், ஈழச் சகோதரர்களும், சகோதரிகளும், மாவீரர் நாள் கடைப்பிடிக்கின்றார்கள்.
விடுதலைப்புலிகள்,உலகம் இதுவரை கண்டும் கேட்டும் இராத போரை விடுதலைப்புலிகள் நடத்தினார்கள். ஓயாத அலைகள், அக்கினி அலைகள், யானை இறவுப் போர்க்களங்களில் வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள். ஆனால், அதன்பிறகு, இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட ஏழு அணு ஆயுத வல்லரசுகள் சிங்களப் படைகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கின. தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். அதன் விளைவாக, விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. உயிர்க்கொடை ஈந்த மாவீரர்களின் உடல்களும், எலும்புகளும் அந்த மண்ணில்தான் கலந்து இருக்கின்றன. அவர்கள் சிந்திய செங்குருதி வீண்போகாது. நான் பிரஸ்ஸல்சில் அறிவித்தது போல் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒரு நாள் நடந்தே தீரும். தமிழ் ஈழம் அமைந்தே தீரும்.
இவ்வாறு
வைகோ
அவர்கள் உரை ஆற்றினார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
27.11.2020

தமிழ்நாட்டில் கருத்து உரிமைப் பறிப்பு! வைகோ கண்டனம்!


பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் அவர்கள் ‘வேதவெறி இந்தியா’ குறித்து எழுதிய நூல், தமிழகத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றது.

வேதங்களின் உண்மைத் தன்மையை வெளிச்சம் போட்டுக் கhட்டிய அரிய நூல் அது. சில மாதங்களுக்கு முன்னால், கhவல்துறை தமிழ் களத்திற்கு நேரில் வந்து அது குறித்து விசாரணை மேற்கொண்டது. இப்பொழுது அந்நூலில் உள்ள கருத்துகளுக்கhகக் குற்ற அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்தியக் குற்ற இயல் சட்டப் பிரிவு 153 ( கலகத்தை விளைவிக்கும் உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே ஆத்திரம் ஊட்டுதல்)

பிரிவு 153 A ( a) (b) ( சமயம், இனம், பிறந்த இடம், குடியிருப்பிடம், மொழி முதலியவை கhரணமாக வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் பகைமை / வெறுப்பு வளர்த்தல், ஒற்றுமை இன்மையைத் தோற்றுவித்தல்)

பிரிவு 505 (a) (b) (c) பொதுமக்களுக்கு அச்சம் / பீதியை விளைவிப்பதன் மூலம், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டப் படலாம் என்ற பயம் அல்லது பீதியை விளைவித்தல் மற்றும் ஒரு பிரிவு அல்லது வகுப்பு அல்லது சமூகம் ஆகியவற்றைச் சார்ந்தவர்களை வேறு பிரிவு அல்லது சமூகத்திற்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டும் உள்நோக்கத்துடன் உரை / பேச்சு / அறிக்கை என எதையும் வெளியிடுதல் அல்லது பரப்புதல்)
சனாதனக் கருத்துகளை உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு ஆதரவாக, இத்தகைய சட்டப்பிரிவுகள் வேண்டுமென்றே ஏவப்பட்டுள்ளது.
ஒரு புத்தகத்தில் உள்ள கருத்துகளுக்கhக அதனை எழுதியவர்கள் மீது நியாயமற்ற வகையில் நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல! அரசு அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்து உரிமை மற்றும் பேச்சு உரிமைக்கு எதிரானது இது. எழுத்தாளர்களுடைய உரிமைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளது.
நியாயம் அற்ற வகையில் பொழிலன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கைச் சட்டவழியில் எதிர்கொள்ளலாம் எனினும், கருத்து உரிமைக்கு எதிரான இப்போக்கினை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவர் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
27.11.2020

Wednesday, November 25, 2020

கணிதம், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கான தேசிய தகுதித் தேர்வை மாற்றுத் தேதியில் நடத்துக! வைகோ வலியுறுத்தல்!

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையம் (Council of Scientific and Industrial Research University Grants Commission)  சார்பில், கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு நாளை (26.11.2020)தேசிய தகுதித் தேர்வு ( (CSIR - NET))நடைபெற உள்ளது. 

இந்த ஆண்டிற்கான தேசிய தகுதித் தேர்வை நவம்பர் 19, 21, 26 ஆகிய தேதிகளில் நடத்த இந்திய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்தது. திட்டமிட்டபடி நவம்பர் 19, 21 ஆகியத் தேதிகளில் தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், நிவர் புயல் காரணமாக நாளை நடைபெற உள்ள தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. 

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பேருந்து, இரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. இதன் காரணமாக, உரிய நேரத்தில் மாணவர்கள் தேர்வு மையங்களைச் சென்றடைய முடியாது. 

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணி புரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராக பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித் தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இந்த தேர்வு அமைந்திருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வாக கருத வேண்டியுள்ளது. 

'நிவர்' புயல் காரணமாக, நாளை நடைபெற உள்ள தேசிய தகுதித் தேர்வை தமிழக மாணவர்களால் எழுத இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. 

ஆகவே, தமிழக மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு தேசிய தேர்வு முகமையுடன் கலந்தாலோசித்து உடனடியாக மாற்றுத் தேதியில் தேர்வு நடத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
25.11.2020

Saturday, November 21, 2020

900 கோடி ரூபாய் ஊழல் டெண்டரை இரத்து செய்க! வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி வரும் அ.இ.அ.தி.மு.க., அரசு அந்திமக்காலத்தை நெருங்கிக் கொண்டு இருப்பதால் துறைகள்தோறும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. அந்தப் பட்டியலில் இப்போது இன்னும் ஒரு ஊழலும் இணைந்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ‘அதிவிரைவாகச் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களைக் கண்காணிக்கும் கேமரா’ பொருத்துவதற்கு தமிழகப் போக்குவரத்துத் துறை ஒப்பந்தப் புள்ளிகள் கோரி அறிவிப்பு வெளியிட்டது.

ஒப்பந்ததாரர்களின் ‘டெண்டர்’ பத்து முறைக்கு மேல் திறக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்தபோதே அது ஊழலுக்கு வைக்கப்பட்ட முதல் புள்ளியாகத் தெரிந்தது.

பின்னர் ஒருவழியாக 28.08.2019 அன்று செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தும் பணிக்கான டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்தப் புள்ளிகளைத் திறக்கும் முன்பு நடைபெறும் கூட்டத்தில் மொத்தம் 11 நிறுவனங்கள் பங்கேற்றன.

ஆனால், அதன் பிறகு டெண்டரை முறைப்படி திறக்காமல், ஒப்பந்த விதிமுறைகள், நிபந்தனைகளில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டது. இங்குதான் ஊழல் படலம் தொடங்கியது.

தேசிய நெடுஞ்சாலையில் கேமராக்கள் பொருத்தும் பணிக்கு டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் முன் பணி அனுபவமாக 150 சிஸ்டம்கள் செய்த நிறுவனமாகவும், குறைந்தபட்சம் இதுபோன்ற இரண்டு திட்டப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் பெற்ற நிறுவனமாகவும் இருக்க வேண்டும் என்று இருந்ததை ‘30 சிஸ்டம்கள் அமைத்திருந்தால் போதும்’ என்றும், ‘ஒரேயொரு திட்டத்தை முடித்திருந்தால் போதும்’ என்றும் டெண்டர் நிபந்தனைகளைத் திருத்தியது ஏன்?

முதலில் இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம் கண்காணிப்பு கேமரா பொருத்தும் 200 சிஸ்டம்களை அமைக்க வேண்டும் என்று அறிவித்து விட்டு பின்பு அதை ‘1000 சிஸ்டம்கள்’ என்று எண்ணிக்கை உயர்த்தப்பட்டது ஏன்?

மேலும் 25 கோடி ரூபாய் என்று இருந்த டெண்டர் மதிப்பை 900 கோடி ரூபாய் என்று அதிகரிக்கப்பட்டது ஏன்?

ஆட்சியாளர்களுக்கு அல்லது துறைசார்ந்த அமைச்சருக்கு மிகவும் வேண்டிய நிறுவனத்திற்கு இந்த டெண்டரை அளித்து, அதன்மூலம் பயன் பெறுவதற்குத்தான் டெண்டர் விதிமுறைகள் திருத்தப்பட்டு, திட்ட மதிப்பீடும் உயர்த்தப்பட்டு உள்ளது என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

போக்குவரத்துத் துறையில் ஊழல் முறைகேட்டுக்கு வழிவகுக்கும் தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் டெண்டரை உடனடியாக இரத்து செய்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். அரசு கருவூலத்தைக் கொள்ளையடிக்கும் இதுபோன்ற ஊழல்களுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்க சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
'தாயகம்'
சென்னை - 08
21.11.2020

Friday, November 20, 2020

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய உரிமங்கள் வழங்குவதா? மத்திய மாநில அரசுகளுக்கு வைகோ கண்டனம்!

காவிரிப் படுகை மாவட்டங்களில் சுமார் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயற்படுத்த 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. இத்திட்டங்களுக்காக வேதாந்தா குழுமம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 5 ஆயிரத்து 150 கோடி ரூபாயும் முதலீடு செய்ய இருக்கின்றன.

காவிரிப் படுகையில் மொத்தம் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மேற்கண்ட நிறுவனங்கள் விண்ணப்பித்தன. இதில் முதற்கட்டமாக 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தது. இரண்டாம் கட்டமாக 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு 2019, ஜூனில் விண்ணப்பிக்கப்பட்டன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகை மாவட்டங்களைச் சூறையாடக் கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயற்படுத்தக் கூடாது என்று 2019, ஜூலை 26-ஆம் நாள் மாநிலங்களவையில் கடும் கண்டனம் செய்தேன்.

பின்னர் 2019, டிசம்பர் 5-ஆம் நாள் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் நான் எழுப்பியபோது, அதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார்.

“காவிரி வடிநிலப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க உள்ளது. மொத்த நிலப்பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர் ஆகும். 15 இடங்களுக்குச் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 15 கிணறுகள் விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும், சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும் அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர். அந்தப் பிரச்சினைகள் குறித்து அதற்குரிய அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்படும்; சட்டங்கள். விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும்,” என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

ஆனால், அமைச்சரின் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, மத்திய அரசு 2020, ஜனவரியில் ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொது மக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்து கேட்கத் தேவையில்லை’ என்று உத்தரவு பிறப்பித்தது.

காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் விவசாயிகளும் பொது மக்களும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகக் கொந்தளித்து போராடி வந்தனர். இதன் விளைவாக தமிழக அரசு காவிரிப் படுகைப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, 2020, பிப்ரவரி 20-ஆம் நாள் சட்டமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவை நிறைவேற்றியது. இந்தப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுத் திட்டங்களுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலைகள் அமைக்கவும் தடை விதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்தப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு ரத்து செய்வதற்கு மத்திய அரசிடம் அழுத்தம் தர வேண்டும் என்று நான் 2020, பிப்ரவரி 21-இல் விடுத்த அறிக்கையில் கோரி இருந்தேன். மேலும், காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தி அவற்றில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017, ஜூலை 19-ஆம் நாள் தமிழக அரசு பிறப்பித்த குறிப்பாணை எண். 29 ஏன் ரத்து செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தேன்.

எனது அறிக்கை ஏடுகளில் வெளியான மறுநாள் பிப்ரவரி 22, 2020-இல் தமிழக அரசு கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ. 92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்தது.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு காவிரிப் படுகையை ஒட்டிய ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குப் புதிதாக மீண்டும் உரிமம் வழங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக விளைநிலப் பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க உரிமங்கள் அளிக்கப்படும். வேதாந்தா குழுமம் போன்று பெரு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் ஆபத்து உருவாகும்.

மத்திய அரசு சுற்றுச்சூழல் சட்டங்களில் இதற்காகவே திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. தமிழக அரசு காவிரிப் படுகைப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்த பின்னரும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் புதிய உரிமங்களை அளிப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழக முதல்வர் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனைத்தையும் ரத்து செய்திட அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தமிழக வேளாண் மண்டலத்தை ஹைட்ரோ கார்பன் மீத்தேன் மண்டலமாக்கும் மத்திய அரசு நாசகார திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் கடமையை தமிழக அரசு செய்யத் தவறிவிட்டது. முதுகெலும்பற்ற அரசுதான் தமிழக அரசு என்பதால் கைகட்டி சேவகம் செய்து, மத்திய அரசின் காலடியில் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டது. மத்திய அரசால் ஏற்பட இருக்கும் கேடுகளுக்கு அதிமுக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8 
20.11.2020

மாமல்லபுரம் சிற்பங்களைக் காண சுற்றுலாப் பயணிகளை அனுமதித்திடுக! வைகோ அறிக்கை!

உலகப் புகழ்பெற்ற  மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களைப் பார்ப்பதற்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களின் துன்பங்களை மறந்து இன்பங்களை வரவு வைத்து சென்று கொண்டு இருந்த நிலையில், 2020, மார்ச் மாதம் துவங்கி கண்ணுக்குத் தெரியாத உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் கிருமி மனிதகுலத்தின் மீது நடத்திக் கொண்டு இருக்கும் உயிரியல் யுத்தத்தின் காரணமாக அணு ஆயுத வல்லரசு நாடுகளே தங்களின் குடிமக்களை கொரோனா பலி பீடத்தில் இழந்துள்ள நிலையில் இந்தியா அதில் விதிவிலக்காக இருக்க முடியாது.

உலக நாடுகள் தத்தம் குடிமக்களைப் பாதுகாத்துக் கொள்ள பொது ஊரடங்கு, சமூக விலகல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மூலம் கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொண்டு வருகின்றன.

இதன் காரணமாக மிகப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் முடங்கி விட்டது. சர்வதேச விமானங்கள் இயக்கப்படாத நிலையில், அன்னிய செலவாணிகள் ஈட்டித்தரும் சுற்றுலா தொழில் முழுவதுமாக முடங்கி, மாமல்லபுரம் போன்ற சுற்றுலாவை நம்பி இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள், நூறு சதவீதம் மாற்றுத் தொழில் ஏதும் இல்லாததால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் விதியை நொந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்றின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பொது முடக்கம் தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டு வருகின்றார்கள். ஆறு மாதங்களுக்கு மேலாக வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள், பொது போக்குவரத்து துவங்கி உள்ளதால் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் கொரோனா கொடுமையை மறந்து இன்பத்தை வரவு வைக்க சுற்றுலா செல்லத் துவங்கி ‘கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவர்கோன் கண்ட மல்லை பாரெங்கும் தேடினும் ஊர் ஒன்று இல்லை’ என்ற பாடல் வரிக்கு இலக்கணமாகத் திகழும் பல்லவர் கால சிற்பங்களையும், அழகிய கடற்கரையையும் பார்க்க மாமல்லபுரம் வருகின்றார்கள்.

உள்ளரங்கில் இயங்கும் திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள், மது பார்கள், அரசு மற்றும் தனியார்துறை அலுவலகங்கள் போன்று இல்லாமல் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் திறந்தவெளியில்தான் உள்ளன. ஆனால், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான சின்னங்களைச் சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் பூட்டப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கொரோனா பரவலுக்கான சாத்திய கூறுகள் குறைவு என்பதால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிற்பங்களைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கவும், சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரம் இழந்து வறுமையோடு போராடிக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களின் நலன் கருதியும் மத்திய மாநில அரசுகள் மேலும் கால நீட்டிப்பு செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து உதவிட அன்புடன் வேண்டுகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’ 
சென்னை -8 
20.11.2020.

தாயகத்தில் நீதிக்கட்சியின் 104 ஆம் ஆண்டு தொடக்க விழா!

நீதிக்கட்சியின் 104 ஆவது தொடக்க நாளை முன்னிட்டு 20.11.2020 காலை 11 மணிக்கு தாயகத்தில் நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர்களான டாக்டர் நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கழக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் தலைமையிலும், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென்சென்னை கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கே.கழககுமார், தென்சென்னை மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் ப.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் நீதிக்கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், இலக்கிய அணித் துணைச் செயலாளர் காட்வின் அஜூ, மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர் முகவை இரா.சங்கர், வெளியீட்டு அணித் துணைச் செயலாளர் விக்டர் எபிநேசர், தென்சென்னை மாவட்ட அவைத்தலைவர் க.இளவழகன், பகுதிக் கழகச் செயலாளர்கள் தென்றல் நிசார், சு.செல்வபாண்டியன், பா.டில்லிபாபு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் அப்பன்துரை, வட்டச் செயலாளர் பிரேம், செல்வநாயகம், மனோகரன் முதலானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’ 
சென்னை - 8 
20.11.2020

Thursday, November 19, 2020

மேகேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க முனைவதா? வைகோ கண்டனம்!

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கடந்த ஆகஸ்டு மாதம் மைசூரில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசிடம் இருந்து விரைவில் ஒப்புதல் பெறப்படும். கர்நாடகாவின் பாசனப்பரப்பை அதிகரிப்பதுதான் தமது அரசின் இலட்சியம் என்றும் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 15 இல் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி, மேகேதாட்டு பகுதியில் அணை அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அப்போது இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் குழு அமைத்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை டெல்லியில் சென்று சந்தித்து வலியுறுத்துவோம். மத்திய அரசின் அனுமதியைப் பெற்று உடனடியாக மேகேதாட்டு அணை கட்டுமானப் பணிகளை தொடங்குவோம் என்று அறிவித்தார். அதன்படி பிரதமர் மோடி அவர்களை எடியூரப்பா செப்டம்பர் 18 ஆம் தேதி சந்தித்து, மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கிட மனு அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 18 ஆம் நாள் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி டெல்லியில், மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். அவரோடு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய நிலக்கரித்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், ஜலசக்தித்துறை அமைச்சரிடம் மேகேதாட்டு அணைக்கு ஒப்புதல் தர வலியுறுத்தி இருக்கிறார்.

இவர்களின் சந்திப்புக்கு பின்னர் மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது டுவிட்டர் பதிவில், "கர்நாடக மாநில நீர் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மெகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே தடுப்பு அணை கட்ட திட்டமிட்டுள்ள கர்நாடகா, இதன் மூலம் 67.16 டிஎம்சி நீரை சேமித்து வைத்து, பெங்களூரு நகர குடிநீர் தேவைக்கும், அணை நீரைப் பயன்படுத்தி 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி திட்டத்தை நிறைவேற்றவும் முனைந்துள்ளது.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றம் 2018, பிப்ரவரி 18 இல் அளித்த தீர்ப்பு ஆகியவற்றை உதாசீனப்படுத்தி வரும் கர்நாடக மாநில அரசு, மேகேதாட்டு அணையை கட்டியே தீருவது என்று மத்திய அரசின் அனுமதியைப் பெறுவதற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டப்படுமானால் காவிரிப்படுகை மாவட்டங்களுக்கு சொட்டு நீரைக் கூட காவிரியில் பெற முடியாது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியவாறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சொற்ப நீரான 177.25 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்தைப் பொருத்த வரையில் கானல் நீராகப் போய்விடும்.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கின்றபோது, மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கர்நாடக மாநில நீர் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்று தெரிவித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழகத்திற்கு பச்சைத் துரோகம் இழைக்கும் முயற்சியில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபடக் கூடாது; மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மேகேதாட்டு அணைத் திட்டத்தையே ரத்து செய்திட எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். .

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
'தாயகம்'
சென்னை - 08
19.11.2020

Wednesday, November 18, 2020

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை ரத்து செய்க! வைகோ வலியுறுத்தல்!

மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (NEET) கட்டாயமாக வலிந்து திணித்த மத்திய பா.ஜ.க. அரசு அதற்கு கூறிய காரணம், ‘நாடு முழுவதும் வெவ்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவதால் மாணவர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்படுகிறது என்பதால் அந்தச் சுமையைக் குறைக்கிறோம்’ என்று தெரிவித்தது.

‘நீட்’ தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வரவைக் கிழித்து வீசி எறிந்து விட்டு, ‘நீட்’ கட்டாயம் என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு விடாப்பிடியாக இருக்கின்றது.

அதேபோல மாநில அரசுகள் மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகளில் நடப்பு ஆண்டிலேயே தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரேயடியாக மறுத்து சமூகநீதி கோட்பாட்டிற்கு சமாதி கட்ட முனைந்துள்ளது.

ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 8 எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பிஜிஅய் உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்குத் தனி நுழைவுத் தேர்வு  நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட மருத்துவக் கல்லூரிகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை (Institutes of National Importance - INI) என்று வகைப்படுத்தியுள்ள மத்திய அரசு அவற்றின் மாணவர் சேர்க்கைக்குத் தனி நுழைவுத் தேர்வு என்றும், அந்தந்த மருத்துவ கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்றும் அறிவித்து இருக்கிறது.

மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வைத் திணித்து மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மற்றும் பழங்குடி இன மாணவர்கள், கிராமப்புற பின்னணியில் உள்ள எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து விட்ட பா.ஜ.க. அரசு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்லூரிகளுக்குத் தனியாக நுழைவுத் தேர்வு (Combined Entrance Test - CET) நடத்த முனைவது கண்டனத்துக்கு உரியது.

மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 11 மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்குப் பொதுவான ‘நீட்’ தேர்வு பொருந்தாது; எனவே, தேவை இல்லை என்று முடிவெடுத்துள்ள மத்திய அரசு, மாநிலங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மட்டும் ‘நீட்’ நடத்துவது ஏன்?

மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள் மட்டும்தான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையா? தமிழகத்தில் 355 ஆண்டுகளாக இயங்கி வரும் எம்.எம்.சி., முக்கியத்துவம் அற்றதா? மத்திய பா.ஜ.க. அரசின் அளவுகோல் என்ன?

எனவே, இனி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வையே ரத்து செய்ய வேண்டும்; சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
'தாயகம்'
சென்னை - 08
18.11.2020

Saturday, November 14, 2020

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு! வைகோ கண்டனம்!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை, துணை ஆணையரின் அனுமதி பெற்று நியமித்துக் கொள்ளலாம். ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் கூடக் கற்றுத் தரலாம். 

பள்ளி நேரத்திலேயே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கேந்திரிய வித்யாலயா கல்வி விதி 112 ஆம் பிரிவில் கூறப்பட்டு உள்ளது. 

2013 - 14 ஆம் கல்வி ஆண்டில் இருந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இவை நடைமுறைக்கு வந்து, தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.

தேர்ச்சி பெறுவதற்கு, தமிழ் பாடத்தில் தேர்வு எழுதி மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது இல்லை. இருந்தாலும் தமிழக கேந்திரிய பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்றுத்தர போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கம், கடந்த ஐந்து ஆண்டுகளாக துணை ஆணையருக்குக் கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய்மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்காக பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப்படுவர் என்றும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கம் மத்திய அரசுக்கு இருக்குமானால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் கல்வி விதி 112 ஆம் பிரிவில் மாற்றங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் பாஜக அரசு 2014 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல், மத்திய அரசுப் பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணித்து வருகின்றது. 

மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொண்டு நடத்தப்படும் இப்பள்ளிகளில், தாய்மொழிக் கல்விக்கு இடம் இல்லை என்று புறக்கணிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும். 

குறிப்பாக, தமிழ் மொழியின் மீது பாஜக அரசு காட்டும் வன்மம், தமிழக மக்களுக்குப் புரியாதது அல்ல. இதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் மொழியைக் கற்பிக்கவும், அதற்குத் தேவையான ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் நியமனம் செய்யவும், மற்ற பாடங்களைப் போலவே தமிழ் மொழியையும் பயிற்றுவிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.11.2020

இந்துத்துவ சக்திகளுக்கு அடி பணிந்து பல்கலைக்கழக பாடத்திட்டத்தை மாற்றுவதா? வைகோ கண்டனம்!

நெல்லை  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பிஏ ஆங்கிலம் மற்றும் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு முதல் காமன்வெல்த் இலக்கியங்கள் பாடமாக எழுத்தாளர் அருந்ததி ராய் நூலிலிருந்து சில பகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.

“வாக்கிங் வித் காம்ரேட்“ என்று எழுத்தாளர் அருந்ததி ராய் மத்திய இந்தியாவின் காடுகளிலுள்ள ஆயுதப் போராட்ட குழுவினரைச் சந்தித்த நிகழ்வுகளை விளக்கி பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலாகும். இதிலிருந்துதான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம்பெற செய்திருந்தனர்.

இந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ்ஸின் மாணவர் பிரிவான அகில இந்திய வித்தியார்த்தி பரிசத் துணைவேந்தரிடம் கோரியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம் எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தகத்தை நீக்கிவிட்டு வேறு ஒரு பாடத்தை வைத்துள்ளனர்.

ஆங்கில இலக்கிய உலகின் தலைசிறந்த எழுத்தாளராக திகழும் அருந்ததி ராய் புக்கர் பரிசு பெற்றவர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் ஓங்கி குரல் எழுப்பி வருபவர். இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் பாசிச இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு எதிராக துணிச்சலுடன் கருத்தியல் போரை நடத்தி வருபவர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக பட்டியலின மாணவர் ரோஹித் வெமுலா, ஏ பி வி பி அராஜகத்தால் தற்கொலை செய்து கொண்ட போதும், டெல்லியில் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட போதும், அருந்ததி ராய் வெகுண்டு எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்டோர்  சிறுபான்மையினர்  உரிமைகள்  நசுக்கப்படுவதையும் நாடாளுமன்ற ஜனநாயகம்  கேள்விக்கு உள்ளாக்கப்படுவதையும்  தொடர்ந்து  விமர்சித்து வருகிறார். இந்தியாவை பாசிசத்தின் கொடும் கரங்கள் வளைத்து உள்ளதை உலக நாடுகளின் கவனத்திற்கு தன்னுடைய கட்டுரைகள் மூலம் கொண்டு சென்றவர் என்பதால் அருந்ததிராய் மீது இந்துத்துவ கும்பல் எரிச்சல் உற்று இருக்கிறது.

சனாதன சக்திகளுக்கு அடிபணிந்து பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் புத்தகத்தின் கருத்துக்கள் நீக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் கல்வித் துறையில் காவிகளின் தலையீடு ஆபத்தான போக்கிற்கு வழிகோலும் வகையில் உருவாகி வருவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி அரசு இது  போன்ற சக்திகளை கண்டும் காணாதது போல் இருந்தால் தமிழக மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

*வைகோ*
*பொதுச்செயலாளர்,*
*மறுமலர்ச்சி தி.மு.க.,*
‘தாயகம்’
சென்னை - 8 
13.11.2020.

Wednesday, November 11, 2020

பஹ்ரைன் பிரதமர் மறைவு! வைகோ MP இரங்கல்!

பஹ்ரைன் நாட்டின் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் அமெரிக்க மருத்துவமனையில் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். அந்நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஈசா பின் சல்மான் அல் கலீஃபாவின் சகோதரரான இவர், உலகில் நீண்ட காலம், ஐம்பது ஆண்டுகளாகப் பிரதமர் பொறுப்பு வகித்து இருக்கின்றார். பல நாடுகள் அவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்து இருக்கின்றன.


பல ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைனில் குதைபியா என்ற இடத்தில் தமிழர்கள் தங்கியிருந்த உறைவிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 16 தமிழர்கள் இறந்து போனார்கள். அந்தச் செய்தி கிடைத்த மறுகணமே அந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டார். கனிவான பிரதமர் என்று பஹ்ரைன் வாழ் தமிழர்கள் கொண்டாடும் ஒரு தலைவராக அவர் விளங்கினார்.

2016 ம் ஆண்டு ஒரிசாவில் டனா மஜ்ஹய் என்ற பழங்குடி விவசாயி, இறந்த தன் மனைவியின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு, 12 கிலோமீட்டர் நடந்து சென்று அடக்கம் செய்தார் என்ற செய்தியைக் கேட்டு கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் துடிதுடித்துப் போனார் பஹ்ரைனின் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, அந்தக் குடும்பத்திற்கும் அவரது பிள்ளைகளுக்கும் உதவித் தொகை வழங்கியதோடு, ஒரிசா மாநிலம் மேல்கர் பகுதிக்கு ஒரு மருத்துவ ஊர்தியையும் வழங்கினார்.

2019 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) அவரை சுகாதாரத் துறையில் உலகத் தலைவராக அறிவித்தது . கத்தார் நாட்டின் கடல் எல்லையை மீறியதற்காக பஹ்ரைன் வாழ் தமிழ் மீனவர்கள் சிக்கிச் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.

பஹ்ரைன் நாட்டை ஒரு பன்மைச் சமூக நாடாகக் கட்டி அமைத்தவர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் ஆவார். இந்து மக்கள் வழிபட ஆலயம் , கிருத்துவர்களுக்கு தேவாலயம் என எல்லா மத வழிபாட்டுத் தலங்களையும் உருவாக்கிக் கொடுத்த பெருமைக்கு உரியவர். தமிழர்களை பெரிதும் நேசித்தவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் பஹ்ரைன் தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொள்ளச் சென்று இருந்தபோது, அவரைப் பற்றித் தமிழர்கள் பெருமையாகப் பேசினார்கள். இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு வாழ்வாதாரம் அளித்தவர் மறைந்தார் என்கிற செய்தி பஹ்ரைன் வாழ் தமிழர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.11.2020

நவம்பர் 26 பொது வேலை நிறுத்தம்: வெற்றி பெறச் செய்வீர்! வைகோ வேண்டுகோள்!

பாரதிய ஜனதா கட்சி அரசு 2014 இல் பொறுப்புக்கு வந்த பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக தொழிலாளர் வர்க்கம் 150 ஆண்டுகளாக போராடி வெற்றி பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து வருகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்து, மீண்டும் முதலாளித்துவ நுகத்தடியில் தொழிலாளர்களை அடிமைப்படுத்திட திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வருகிறது. 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாகச் சுருக்கி உள்ளது. இனி நிரந்தரத் தொழிலாளர்கள் படிப்படியாக நீக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் வேலைக்கு அழைக்கவும், தேவை இல்லை என்றால் வேலையை விட்டு நீக்கவும் இனி முடியும். மருத்துவ வசதி, விடுப்பு, போனஸ், பணிகொடை உள்ளிட்ட தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகும்.
இரத்தத் துளிகளைத் தாரை வார்த்துக் கொடுத்து, உயிர் பலிகளைத் தந்து உலகத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராடி, எட்டு மணி நேரம் வேலை என்பதைச் சட்டப்பூர்வமாக உறுதி செய்தனர். ஆனால் இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக அதிகரித்துச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் இதனை நடைமுறைப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குகளை முறியடித்து, உரிமைகளை நிலைநாட்ட இந்திய தொழிற்சங்கங்கள் நவம்பர் 26 ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.
வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்துத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 உதவித் தொகை வழங்க வேண்டும்.
ஒரு நபருக்கு மாதம் ஒரு முறை 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும்.
விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும்.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையை உயர்த்தி, நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து, அதில் வழங்கப்படும் குறைந்தபட்சக் கூலியை அதிகரிக்க வேண்டும்.
வங்கி காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். இரயில்வே, பாதுகாப்புத் துறை, தொழிற்சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசுத் துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவதைக் கைவிட வேண்டும்.
அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் உரிய வயது மூப்படையும் முன்பாகவே கட்டாய ஓய்வு தருவதற்கான கொடூரமான அரசு நிர்வாக சுற்றறிக்கைகளைத் திருப்பப் பெற வேண்டும்.
அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப நல நிதியுடன் இணைந்த ஓய்வூதியத்தை (EPS 95) அதிகரித்து மேம்படுத்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நவம்பர் 26 ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தருகிறது.
தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர் உரிமைகளை நசுக்கி வருவதும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை அளிக்காமல் அலட்சியப்படுத்துவதும் தொடர்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்ற முன்வராமல் கிடப்பில் போட்டுள்ளது.
எனவே நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய, மாநில அரசுத் துறைகளின் அனைத்துத் தொழிலாளர்களும், ஊழியர்களும் பேராதரவை வழங்கி வெற்றி பெறச் செய்திட வேண்டும்.
தொழிலாளர் நலன் என்பது நாட்டின் நலனோடு பின்னிப் பிணைந்திருப்பதால், தமிழக மக்களும் இப்பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவை நல்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.11.2020

Monday, November 9, 2020

செய்தியாளர் மோசஸ் படுகொலை; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு. வைகோ அறிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் செய்தியாக வெளியிட்டதற்காக, தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் என்ற 27 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.

தனக்குக் கொலை மிரட்டல்கள் வந்தபோது, காவல்நிலையத்தில் தெரிவித்து உள்ளார். அவருக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை. எனவே, நேற்று (08-11-2020) இரவு வீட்டில் இருந்த மோசஸை வீட்டுக்கு வெளியே வரவழைத்த ரவுடி கும்பல் ஒன்று, அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

தமிழகத்தில் ஊடகங்களின் செய்தியாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே இந்தப் படுகொலை எடுத்துக் காட்டுகின்றது.

தமிழகம் முழுமையுமே சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. கடந்த மாதம் ஒரே வாரத்தில் மதுரையில் 20 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து படுகொலைச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கைகள் ஓங்கியுள்ளன. பொதுமக்கள் இடையே அச்ச உணர்வு மேலோங்கி இருக்கின்றது. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கின்ற முதல்வர், கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடும் தண்டனை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட மோசஸ் குடும்பத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.11.2020

பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, மின்அஞ்சல் வழியாக எழுதி உள்ள கடிதம். 

தமிழ்நாட்டின் இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதி மீனவர்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியைத் தங்கள் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். 

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படை அத்துமீறி வந்து, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 600 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்றது நூற்றுக்கணக்கானவர்களைப் பிடித்துக்கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைத்தனர். அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு மீன்பிடிப் படகும் 25 முதல் 40 இலட்சம் பெறுமதியானவை. தமிழக மீனவர்கள் கடன் வாங்கி, அதற்காக வட்டி கட்டி வருகின்றார்கள். அந்தப் படகுகள்தான் அவர்களது வாழ்வாதாரம். 

இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைத் தடுக்குமாறு கோரி, 2015,2016 ஆம் ஆண்டுகளில் நான் தொடர்ச்சியாகத் தங்களிடம் பலமுறை கோரிக்கைகள் விடுத்துள்ளேன். ஆனால், பயன் எதுவும் இல்லை. 

இப்போது, 121 படகுகளை உடைத்து நொறுக்க இலங்கை நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எனவே, இந்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, அந்தப் படகுகளை மீட்டுத் தர வேண்டும். அல்லது, அதற்கு இழப்பு ஈட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டும். தாங்கள் இந்தப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். 

இவ்வாறு வைகோ தமது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதே போன்று, அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.11.2020

Sunday, November 8, 2020

ஜோ பைடனுக்கு வைகோ வாழ்த்து!

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 46வது குடியரசுத்தலைவராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தேர்வு  பெற்று இருக்கின்றார்.

7.5 கோடிக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்று வரலாறு படைத்து இருக்கின்றார்.

அவருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் ஜனநாயகக் கட்சி அரசுகள், இந்தியாவுடன் நட்புறவைப் பேணி வளர்த்தனர். அதே நிலைமை இனியும் தொடரும் என்று நம்புகிறேன்.

ஜோ பைடன் தம் 29 ஆவது வயதில் அமெரிக்கச் செனட் சபை உறுப்பினராகத் தேர்வு பெற்றவர். தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றவர். குடியரசுத் துணைத் தலைவராக எட்டு ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். அரசியலில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற பழுத்த அரசியல்வாதி. எனவே அவரது தலைமையை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.

அமெரிக்காவில் இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, டிரம்ப் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகள் இனி தளரும்; மேலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றது.

அதற்கான உறுதிமொழியை, ஜோ பைடன் தனது தேர்தல் பரப்புரையில் வழங்கி இருக்கின்றார்.

அதை அவர் செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

அது மட்டும் அல்ல; இந்தத் தேர்தலில் அமெரிக்காவில் முதன் முறையாக ஒரு பெண், அதுவும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த, தாய் வழியில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ், அமெரிக்கக் குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பு ஏற்கின்றார் என்ற செய்தி உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. அவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
08.11.2020