Wednesday, November 4, 2020

வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் சு.நவநீதகிருஷ்ணன் மறைவு! வைகோ இரங்கல்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினரும், வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான சு.நவநீதகிருஷ்ணன் அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று 04.11.2020 காலை 7 மணி அளவில் இயற்கை எய்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியம், செங்கோட்டை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் வணிகம் நடத்தி வந்தார். கழகம் தொடங்கிய நாளிலிருந்து கடந்த 27 ஆண்டு காலமாக இயக்கத்திற்குப் பெரும் துணையாகப் பணியாற்றினார். வில்லிவாக்கம் பகுதிச் செயலாளராகப் பணியாற்றினார். வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் அவர்களுக்கு பெரிதும் பக்கபலமாகச் செயல்பட்டார்.

கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார். தலைமைக் கழகம் வெளியிடும் ஆணைகளைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தார். எந்த நேரத்திலும் மாறாத புன்னகையுடன் தொண்டர்களை அரவணைத்துச் செல்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.

என்னை உயிரினும் மேலாக நேசித்தார். இப்படி ஒரு துயர முடிவு ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. யாருக்கு யார் ஆறுதல் சொல்ல? அவரது குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்க யாரால் முடியும்?

அவரது மறைவினால் கண்ணீரில் துடி துடிக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழகக் கண்மணிகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலியை வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
04.11.2020

No comments:

Post a Comment