Wednesday, November 11, 2020

நவம்பர் 26 பொது வேலை நிறுத்தம்: வெற்றி பெறச் செய்வீர்! வைகோ வேண்டுகோள்!

பாரதிய ஜனதா கட்சி அரசு 2014 இல் பொறுப்புக்கு வந்த பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக தொழிலாளர் வர்க்கம் 150 ஆண்டுகளாக போராடி வெற்றி பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து வருகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்து, மீண்டும் முதலாளித்துவ நுகத்தடியில் தொழிலாளர்களை அடிமைப்படுத்திட திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வருகிறது. 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாகச் சுருக்கி உள்ளது. இனி நிரந்தரத் தொழிலாளர்கள் படிப்படியாக நீக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் வேலைக்கு அழைக்கவும், தேவை இல்லை என்றால் வேலையை விட்டு நீக்கவும் இனி முடியும். மருத்துவ வசதி, விடுப்பு, போனஸ், பணிகொடை உள்ளிட்ட தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகும்.
இரத்தத் துளிகளைத் தாரை வார்த்துக் கொடுத்து, உயிர் பலிகளைத் தந்து உலகத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராடி, எட்டு மணி நேரம் வேலை என்பதைச் சட்டப்பூர்வமாக உறுதி செய்தனர். ஆனால் இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக அதிகரித்துச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் இதனை நடைமுறைப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குகளை முறியடித்து, உரிமைகளை நிலைநாட்ட இந்திய தொழிற்சங்கங்கள் நவம்பர் 26 ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.
வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்துத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 உதவித் தொகை வழங்க வேண்டும்.
ஒரு நபருக்கு மாதம் ஒரு முறை 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும்.
விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும்.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையை உயர்த்தி, நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து, அதில் வழங்கப்படும் குறைந்தபட்சக் கூலியை அதிகரிக்க வேண்டும்.
வங்கி காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். இரயில்வே, பாதுகாப்புத் துறை, தொழிற்சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசுத் துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவதைக் கைவிட வேண்டும்.
அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் உரிய வயது மூப்படையும் முன்பாகவே கட்டாய ஓய்வு தருவதற்கான கொடூரமான அரசு நிர்வாக சுற்றறிக்கைகளைத் திருப்பப் பெற வேண்டும்.
அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப நல நிதியுடன் இணைந்த ஓய்வூதியத்தை (EPS 95) அதிகரித்து மேம்படுத்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நவம்பர் 26 ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தருகிறது.
தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர் உரிமைகளை நசுக்கி வருவதும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை அளிக்காமல் அலட்சியப்படுத்துவதும் தொடர்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்ற முன்வராமல் கிடப்பில் போட்டுள்ளது.
எனவே நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய, மாநில அரசுத் துறைகளின் அனைத்துத் தொழிலாளர்களும், ஊழியர்களும் பேராதரவை வழங்கி வெற்றி பெறச் செய்திட வேண்டும்.
தொழிலாளர் நலன் என்பது நாட்டின் நலனோடு பின்னிப் பிணைந்திருப்பதால், தமிழக மக்களும் இப்பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவை நல்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.11.2020

No comments:

Post a Comment