Saturday, April 30, 2022

மே 1 தொழிலாளர்கள் நாள்: வைகோ MP வாழ்த்து!

மே 1. தொழிலாளர்களின் உரிமைத் திருநாளாக, உலகம் முழுமையும் தொழிலாளர் சமூகம் கொண்டாடி மகிழ்கின்றது.

சந்தையில் ஆடு, மாடுகளை விற்பது போல, பல நூற்றாண்டுகளாக, அமெரிக்கச் சந்தைகளில், மனிதர்களை விலைக்கு வாங்கிச் சென்று, கொட்டகைகளில் அடைத்து வைத்து, நேரம் காலம் பார்க்காமல் வேலை வாங்கினர். அடித்து உதைத்துச் சித்திரவதை செய்தனர். அடிமைகள் மனிதர்கள் அல்ல... அவர்கள், முதலாளிகளின் உடைமைப் பொருளாகவே கருதப்படுவார்கள் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆபிரகாம் லிங்கன் தலைமையில், அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்து மணி நேர வேலை என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தினர். அதே காலகட்டத்தில், அமெரிக்கத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, 8 மணி நேர வேலை என்ற முழக்கத்தை முன்வைத்தது. 1886 மே 1 அன்று, நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. நாடு முழுமையும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். 1886 மே 3 ஆம் நாள், ஒரு நிறுவனத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அதைக் கண்டித்து, மே 4 அன்று, சிகாகோ நகரின் வைக்கோல் சந்தை (Hey Market) சதுக்கத்தில் திரண்டு, எட்டு மணி நேர வேலை என உரிமைக்குரல் எழுப்பினர்.
அவர்கள் மீது, காவலர்களின் குண்டாந்தடிகள் பாய்ந்தன; துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்தக் கலவரத்தில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், ஏழு பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு பேர் தூக்கில் இடப்பட்டனர். அதன்பிறகு, தொழிலாளர்களின் உரிமைக்குரல் ஐரோப்பிய நாடுகளில் எதிரொலித்தது; உலகம் முழுமையும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
1889 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் பாரிஸ் நகரில் நடைபெற்ற தொழிலாளர்கள் மாநாட்டில், மே 1 ஆம் நாளை, உலகத் தொழிலாளர்கள் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்தார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றவுடன், மே 1 ஆம் நாளை, தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். கோவை சிதம்பரம் பூங்காவில், மே நாள் விழாவை சிறப்பாக நடத்தினார்.
நான் அமெரிக்கா சென்று இருந்தபோது, வைக்கோல் சந்தை சதுக்கத்திற்குச் சென்று, தூக்கில் இடப்பட்ட தொழிலாளத் தோழர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி இருக்கின்றேன். 1990 ஆம் ஆண்டு, மே நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் அவையில் முன்வைத்துப் பேசினேன். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சென்று, பிரதமர் வி.பி.சிங் அவர்களைச் சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினோம். அதை அவர் ஏற்றுக்கொண்டு, மே நாளை, அனைத்து இந்திய அளவில் அரசு விடுமுறை நாளாக அறிவித்தார்.
அந்த நாளைக் கொண்டாடுகின்ற தொழிலாளர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
30.04.2022

Friday, April 29, 2022

ஒழுங்கு நடவடிக்கை. தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட. கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
29.04.2022

Thursday, April 28, 2022

ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுக! வைகோ MP அறிக்கை!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பிய, பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள்,

கெடல் எங்கே தமிழர் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க.
கடல் போலும் எழுக... கடல் முழக்கம் போல் கழறிடுக.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கநாதம் முழக்கியவர்.
நல்லுயிர் செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்
கல்வியில் என்னை வெல்ல நினைப்பதும் ஏன்? ஏன்?ஏன்?
என்றெல்லாம் கேட்டு, தமிழர்களுக்கு உணர்ச்சி ஊட்டி எழுச்சி பெறச் செய்தவர்.
அந்த எழுச்சியின் விளைவுதான், தமிழகத்தில் இன்று நாம் காணும் மறுமலர்ச்சி.
தமிழ் இயக்கம் என்கின்ற நூலில், பாவேந்தர் அவர்கள் பகர்ந்த வைர வரிகளாக, இன்றைக்கும் நம் நெஞ்சில் உணர்ச்சி ஊட்டக் கூடியதாக அமைந்த சொற்கள் ஒவ்வொன்றும், தமிழுக்குப் பாவேந்தர் சூட்டிய மணி ஆரம் ஆகவும், தமிழர் எழுச்சிக்கு அவர் இட்ட வித்து ஆகவும் அமைந்து உள்ளது.
பாவேந்தர் பாரதி தாசன் அவர்களுடைய பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, எதிர்பாராத முத்தம் இப்படி எண்ணற்ற காவியங்கள், என்றென்றும் நின்று நிலவி, தமிழர்க்கு எழுச்சியையும், உணர்ச்சியையும், உள்ளக் கிளர்ச்சியையும், தந்து கொண்டே இருக்கும்.
தந்தை பெரியார் அவர்களால், சிந்தை இனிக்கும் செந்தமிழ்க் கவிஞராகப் பாவேந்தர் போற்றப்பட்டார்.
ஏ தாழ்ந்த தமிழகமே என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டம் அளிப்பு விழாவில் பேசிய பேரறிஞர் அண்ணா அவர்கள், பாவேந்தர் வரிகளாலேயே, தமிழகத்தை எழுச்சி பெறச் செய்வதற்கான கருத்துகளைத் தந்தார்.
பாவேந்தர், அனைத்து நிலைகளிலும் இந்தியை எதிர்த்தார். அந்த உணர்வோடுதான், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்.. நீ தேடி வந்த பேடி இருக்கும் நாடு இது அல்ல என்று முழங்கினார்.
பாவேந்தர் தம் வாழ்நாள் எல்லாம் தமிழுக்காகப் போராடினார். அவரது பிறந்த நாளை, தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று, அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வில், ஆசிரியர் வீரமணி அவர்கள், அருமையான கோரிக்கையை, முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்பு வைத்தார்.
யாரும் கேட்காமலேயே, தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் ஆகவும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் ஆகவும் அறிவித்து, அரசு ஊழியர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து வரலாறு படைத்த முதல்வர் அவர்கள், ஆசிரியர் வீரமணி அவர்களின் கோரிக்கையை ஏற்று, பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளைக் கொண்டாடுவதும், அந்த எழுச்சியின் அடிப்படையில், எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்... இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்று உறுதி பூணுவதும், காலத்தின் கட்டாயமாக உள்ளது.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.04.2022

Wednesday, April 27, 2022

களிமேடு தேர்த் திருவிழா விபத்து! வைகோ MP இரங்கல்!

தஞ்சாவூர் அருகில் களிமேடு அப்பர்சாமி திருமடத்தின் தேர்த் திருவிழாவில், மின்சாரம் பாய்ந்து, 12 பேர் இறந்தனர். 15 பேர் படுகாயம்; அவர்களுள் 4 பேரின் நிலைமை கவலைக்கு இடமாக இருப்பதாக வந்திருக்கின்ற செய்திகள், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்துகின்றது.

தேர் வந்த வழியில் புதிய சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதனால், சாலை சற்றே உயர்ந்து இருப்பதையும், தேரின் உயரம், மின் கம்பங்களின் உயரத்தையும் சரியாகக் கணிக்கத் தவறி விட்டனர். தேர்ச்சக்கரங்கள் உருளுவதற்கு ஏதுவாக தண்ணீர் ஊற்றி இருக்கின்றார்கள். ஒரு இடத்தில் சற்றே தேங்கி நின்ற தண்ணீரில் சக்கரங்கள் நழுவி, மின் கம்பத்தின் மீது சாய்ந்தது, ஜென் செட் வெடித்துச் சிதறியதால், இந்த அளவிற்கு கடுமையான விபத்து நிகழ்ந்து இருப்பதாகத் தெரிகின்றது.
அண்மையில் மதுரையில் நடைபெற்று முடிந்த கள்ளழகர் திருவிழாவில், பல இலட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் இறந்தார்கள், பலர் காயம் அடைந்தார்கள், பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கின்றது.
மதுரையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில், பல்லாயிரக்கணக்கானவர்கள்நெருக்கியடித்துக் கொண்டு, வடம் பிடித்து இழுத்துச் சென்றதைப் பார்த்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. அந்த இடத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
இரண்டு ஆண்டுகள் கொரோனா முடக்கத்திற்குப் பிறகு நடக்கின்ற இத்தகைய திருவிழாக்களில், கொரோனா கட்டுப்பாடுகள் எதனையும் மக்கள் பின்பற்றவில்லை. ஏற்கனவே பல ஊர்களில் தேர்கள் சரிந்து பலர் இறந்திருக்கின்றார்கள், பலர் உடல் உறுப்புகளை இழந்து இருக்கின்றார்கள்.
எனவே, இன்றைய நிகழ்வை ஒரு பாடமாகக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற கேடுகள் நேராத வண்ணம், தமிழக அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் மக்கள் கூடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
தாஜ்மகாலைப் பார்க்க, ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் பேர் வரையிலும் வந்து கொண்டு இருந்தார்கள். எனவே, உத்தரப் பிரதேச அரசு, இணைய வழி முன்பதிவை அறிமுகம் செய்து, ஒரு நாளைக்கு 40000 பேர்தான்பார்க்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதுபோல, காலத்திற்கு ஏற்ப, ஒரு இடத்தில் இவ்வளவு பேர்தான் கூடலாம் என்பதைக் கணக்கிட்டு, திருவிழாக்களில் பங்கேற்பவர்களுக்கு உச்சவரம்பு வரையறை வகுக்க வேண்டும். தேர்களின் மரச்சக்கரங்கள் பழுது அடைந்த காரணத்தால், கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் பெரும்பாலான தேர்களுக்கு, திருச்சி பெல் நிறுவனத்தார் இரும்புச் சக்கரங்கள் ஆக்கித் தந்தார்கள். அதுபோல, இனி தேர்களை ஆட்கள் இழுப்பதற்குப் பதிலாக, இழுவைப் பொறிகளைக் கொண்டு இழுத்துச் செல்வதற்கு, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
களிமேடு திருவிழாவில் உயிர் இழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அரசு உரிய இழப்பு ஈடு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.04.2022

Tuesday, April 26, 2022

இன எழுச்சியை உருவாக்கியவர் அண்ணன் வைகோ-ஸ்டாலின் பெருமிதம்!

அண்ணன் வைகோ அவர்கள் கால்கள் படாத இடமே தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பே இல்லை. எத்தனையோ நடைபயணங்கள் நடத்தியவர். இன எழுச்சியை உருவாக்கியவர். -தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின்



துணைவேந்தர்கள் தேர்வு: மாநில உரிமையை நிலைநாட்டிய தமிழக முதல்வருக்கு வைகோ பாராட்டு!

சென்னைப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை, மாநில அரசே தேர்வு செய்ய வகை செய்யும் சட்ட முன்வரைவு, தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (25.04.2022) நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. கல்வித் துறையில் மாநில உரிமையை முற்றாகப் பறிக்கும் நோக்கத்தில், தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள நேரத்தில், திமுக அரசு இத்தகைய சட்ட முன்வரைவைக் கொண்டுவந்து இருப்பது வரவேற்கத்தக்கது.

சட்டமன்றத்தில் இந்த முன்வரைவை முன்மொழிந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “மத்திய-மாநில அரசு உறவுகள் குறித்து ஆராய்ந்து, முன்னாள் நீதிபதி பூஞ்ச் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையில், “அரசு அமைப்புச் சட்டத்தில் வழங்கப்படாத துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது” என்று பரிந்துரைத்துள்ளது” என்பதை, மிகச் சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர், மாநிலப் பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருப்பார்; பல்கலைக் கழகங்களின் தலைமைப் பொறுப்பாளர்களாக துணைவேந்தர்கள் செயல்படுகின்றனர்.
இந்தத் துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை மாநில அரசு நியமிக்கும்.
இத்தேர்வுக்குழு, துணைவேந்தர் பொறுப்புக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து, மூன்று பெயர்களை, ஆளுநருக்குப் பரிந்துரைக்கும். ஆளுநர் மாநில அரசுடன் கலந்தாய்வு செய்து, துணைவேந்தரை நியமனம் செய்வார்.
இத்தகைய நடைமுறைகளை மாற்றி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் துணைவேந்தரைத் தெரிவு செய்யும் தேடுதல் குழுவையே நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக்கொண்டார். அதுமட்டும் அன்றி, துணைவேந்தர் பதவி நியமனத்திலும் ஆளுநர் விருப்பம்தான் மேலோங்கியது. மாநில அரசுடன் பெயரளவுக்குக்கூடக் கலந்து ஆலோசிக்காமல், ஆளுநரே துணைவேந்தர்களைத் தேர்வு செய்வது தொடர்ந்தது.
நாடாளுமன்ற மக்கள் ஆட்சி முறையில், மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் முதல்வர்தான் உண்மையான ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
அரசு அமைப்புச் சட்டப்படி, ஆளுநர், மாநில முதல்வர் தலைமையிலான அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் இயங்க முடியும். ஆளுநரின் அதிகாரம் பரந்துபட்டது எனினும், பொதுவாக இவர் தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது என்று, உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி இருக்கின்றது.
மேலும், ஒருவர் ஆளுநராக இருப்பதால்தான் (Ex-Officio) பல்கலைக் கழகங்களின் வேந்தராக உள்ளார்; ஆளுநரே அமைச்சரவையின் அறிவுரையின் பேரில்தான் செயல்பட வேண்டும் என்றால், வேந்தர் பணியும் அமைச்சரவையின் பெயரிலேதான் செயல்பட முடியும்.
பல்கலைக் கழக ‘வேந்தர்’ எனும் பதவி, மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக் கழக சட்ட விதிகளின்படி வழங்கப்பட்டது ஆகும். எனவே, வேந்தர் பதவி அதிகாரத்தை ஆளுநர் தம் உளத்தேர்வின்படி செயல்படுத்த முடியாது.
கடந்த மார்ச் மாதம் கோவையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில், தமிழக ஆளுநர் ரவி தனது அதிகார வரம்பை மீறி அரசியல் கருத்துகளைப் பேசியபோது, நான் கண்டனம் தெரிவித்ததுடன், மராட்டிய அரசு கொண்டு வந்த சட்டமுன்வரைவு போல தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரை தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று 13.03.2022 அன்று அறிக்கை கொடுத்து இருந்தேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழு மார்ச் 23 அன்று சென்னையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, “தமிழ்நாடு அரசு, துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் விருப்ப உரிமையைத் தவிர்க்கும் வகையில் சட்டமன்றத்தில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்ட முன்வரைவு மூலம், கல்வித் துறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி இருப்பது பாராட்டுக்கு உரியது.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
26.04.2022

Monday, April 25, 2022

நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டம்!

நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட 21 நாட்கள் தொடர் பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டம் பெரியார் திடலில் இன்று 25.04.2022 நடைபெற்றது.

தமிழர தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழக முதல்வர் - சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், திராயிட இயக்கப் போர்வாள் வைகோ ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்துத்துவக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்க சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம்! வைகோ கடும் கண்டனம்!

உலகம் அறிந்த இந்திய வரலாறை, பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்ற நாள் முதல், மதவெறி நோக்கில் திரித்து எழுதுகின்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள், அதற்காக, பள்ளிப்பாடங்களை நீக்கியும், திருத்தியும், மாற்றங்கள் செய்து வருகின்றார்கள்.

அதன் ஒரு கட்டமாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து பனிப்போர் யுகம், ஆப்பிரிக்க - ஆசியாவில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதி மன்றங்களின் வரலாறு, தொழிற் புரட்சி ஆகிய பாடங்களை நீக்கி உள்ளது.
ஃபயஸ் அகமது என்ற உருதுக் கவிஞரின் இரண்டு கவிதைகள், மதம் - வகுப்பு வாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பு அற்ற அரசு என்ற பிரிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இடம் பெற்று இருந்த பாடங்களையும், ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகிய பாடங்களையும் நீக்கி விட்டனர்.
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) பரிந்துரையின்படி, இந்தப் பாடங்கள் வரும் கல்வி ஆண்டு (2022-23) முதல் நீக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்து இருக்கின்றது.
கடந்த கல்வி ஆண்டில், 11 ஆம் வகுப்பு அரசியல் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கூட்டு ஆட்சி, குடி உரிமை, தேசியவாதம் மற்றும் மதச் சார்பு இன்மை போன்ற பாடங்களை நீக்கினார்கள்.
இவ்வாறு பள்ளிப் பாடங்களை நீக்கியதன் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் சிந்தனைப் போக்கு இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கின்றது.
இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டை நிலைநிறுத்தவும், ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே மொழி எனும் ‘இந்து ராஷ்டிரா’ கொள்கைக்கு வலு சேர்க்கவும், வரலாற்று உண்மைகளை மறைத்தும், திரித்தும் பள்ளிப் பாடங்களை மாற்றுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
ஜெர்மனிய ஹிட்லர் அரசும், இத்தாலியின் முசோலினி அரசும் இப்படித்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்வதற்கு, பாடத் திட்டங்களில் பாசிச நச்சுக் கருத்துகளைத் திணித்தார்கள். ஆனால் அந்த அரசுகள், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டன என்பதை மறந்து விடக் கூடாது. அதுபோல, பாஜக அரசின் வரலாற்றுத் திரிபு வேலைகள் வெற்றி பெறாது.
எனவே, வரலாற்றுப் பாடங்களை நீக்குவதையும், இருட்டடிப்புச் செய்வதையும், இந்துத்துவக் கருத்துகளைத் திணிப்பதையும் பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
25.04.2022

Thursday, April 21, 2022

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தொடர் ஜோதி பெற துரைவைகோவுக்கு வேண்டுகோள்!

வருகின்ற 13.05.2022 அன்று
வீரம் விளைகின்ற தீரர்கள் கோட்டமாம் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறவிருக்கும் 

அருள்மிகு.வீர சக்கதேவி ஆலய சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு 
கோவில்பட்டி மாநகரத்திலிருந்து தொடங்குகின்ற 
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தொடா் ஜோதியை

பாஞ்சை பெருவேந்தரின் புகழ் பாடிடும் வகையில் ஒவ்வோராண்டும் இவ் விழாவில் தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து கொண்டுள்ள
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 
இயக்கத் தந்தை,
தலைவர்.வைகோ M.P.அவர்களின் மேல் என்றும் மாறா பற்று கொண்டுள்ள 

"மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை",

"வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை"களின் சார்பாக அமைப்புகளின் நிர்வாகிகள்,
எழுச்சிமிகு இளைஞர்கள்
என ஏராளமானோர் 

இன்றைய தினம் என்னை சந்தித்து வருகின்ற
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தொடர் ஜோதி பெருவிழாவில் கலந்துகொண்டு 
நினைவு ஜோதியினை பெற்றுக் கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என்று கூறி அழைப்பிதழை வழங்கினார்கள்...

விழாவில் உறுதியாக கலந்து கொள்வோம் என்று கூறி இளைஞர்களுடன் புகைப்படங்கள் எடுத்தும், அவர்களது குடும்பச்சூழல், பணிகள் பற்றி அளவளாவி மகிழ்ந்தேன்...

அன்புடன்
துரை வைகோ
தலைமை கழக செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
21.04.2022.

Wednesday, April 20, 2022

தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

1. க.இளவழகன், தென்சென்னை மேற்கு மாவட்ட அவைத் தலைவர்
(முகவரி: 15, பிளவர்ஸ் ரோடு, அரும்பாக்கம், சென்னை - 600 106; அலைபேசி: 98411 - 09995)

2. வழக்கறிஞர் கே.வி.மோகனசுந்தரம், கடலூர் தெற்கு மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்
(முகவரி: 101, மன்னார்குடி தெரு, சிதம்பரம் (அஞ்சல்) - 608 001 கடலூர் மாவட்டம்; அலைபேசி: 99425 - 99823)

3. கோவை பெ. செல்வராஜ், கோவை மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர்
(முகவரி: 2-ஏ, வரதராஜூலு நகர்,  2-ஆவது வீதி, கே.ஆர். புரம், கணபதி  (அஞ்சல்), கோவை - 641 006
அலைபேசி: 98433 - 28331)

4. மதுரை எஸ்.மகபூப்ஜான், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி இணைப் பொதுச்செயலாளர்
(முகவரி: 10, மேலப் பொன்னகரம் நான்காவது தெரு, மதுரை - 625 016; அலைபேசி: 94433 - 75558)

5. வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன், தேர்தல் பணி துணைச் செயலாளர்
முகவரி: 5/112, அகரபெருந்தோட்டம், பெருந்தோட்டம் (அஞ்சல்), சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் - 609 106; அலைபேசி: 94455 - 25001)

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
20.04.2022

தலைமைக் கழக அறிவிப்பு. அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக திரு *பட்டுத்துறை நா.மாரிச்சாமி* (முகவரி: பட்டுத்துறை (அஞ்சல்) மூலனூர் (வழி) திருப்பூர் மாவட்டம் அலைபேசி: 94865 - 19666) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் நியமனம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராக திரு சி.எஸ்.சிமியோன் ராஜ் (முகவரி: மாப்பிள்ளை நாயக்கன்பட்டி & (அஞ்சல்), தஞ்சாவூர் (வட்டம்), தஞ்சாவூர் மாவட்டம் அலைபேசி: 98430 - 71184) அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
20.04.2022

பத்திரிகை உலகின் பேரொளி மனிதநேய சிகரம் சிவந்தி ஆதித்தனாருக்கு வைகோ MP புகழஞ்சலி!

தமிழர் வரலாற்றின் புகழ்மிக்க அங்கமான தினத்தந்தி ஏட்டின் அதிபராக விளங்கிய ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நிறைவுநாளை முன்னிட்டு,  சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ MPஅவர்கள் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்.

தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சைதை ப.சுப்பிரமணி எம்.சி., உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Monday, April 18, 2022

தமிழக மீனவர்களின் உரிமையைக் காக்கத் தவறிய ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை நிலை நாட்ட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம். வைகோ MP அறிவிப்பு!

தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டியதாக கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவதும், நடுக்கடலில் நமது எல்லைக்குள் நுழைந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற் படையினர் கொடூரத் தாக்குதல் நடத்துவதும், இலங்கை கடற் தொழிற் சட்டத்தின் கீழ் நமது மீனவர்களைக் கைது செய்து, அந்நாட்டு சட்டப்படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவதும், பல லட்சக்கணக்கான ரூபாய் தண்டம் விதிப்பதும், மீனவர்களின் படகுகள் மற்றும் மீன் பிடி கருவிகளை பறிமுதல் செய்வதும் நாள்தோறும் ஏடுகளில் செய்தி ஆகிவிட்டன.

இலங்கை அரசின் அத்துமீறலைக் கண்டும் காணாமல் ஒன்றிய பா.ஜ.க அரசு வேடிக்கைப் பார்க்கிறது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணை போன இந்திய அரசு, பன்னாட்டு நீதிமன்ற குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசாங்கத்திற்கு உதவிக் கரம் நீட்டி வருகிறது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கை மக்கள் மீள முடியாத துயரத்தில் தவிக்கிறார்கள்.

கோத்தபய ராஜபக்சே அரசை எதிர்த்து சிங்கள மக்களே கொதித்து எழுந்து தெருக்களில் போராடி வருகின்றனர்.

இதனால் இந்தியாவிடம் நிதி உள்ளிட்ட எல்லா உதவிகளையும் இலங்கை அரசு கேட்டுப் பெற்று வருகிறது.

இந்தியா பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது. மேலும் நிதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வுரியைப் பறித்து, காணிகளை கைப்பற்றி ஆக்கிரமிப்பு செய்து, இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியாகவே வடக்கு, கிழக்குப் பகுதிகளை இன்னமும் சிங்கள இனவாத அரசு கொடுமைக்கு உள்ளாக்கி வருகிறது.

பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள ஈழத்தமிழர்கள் குழந்தைகளுக்கு பால் பவுடர் கூட வாங்க வழியில்லாமல், ஆபத்தான படகுப் பயணம் செய்து தமிழ்நாட்டிற்கு ஏதிலிகளாக வரத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், இந்திய அரசு ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று, கைப்பற்றிய படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை ஒப்படைக்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மறுமலர்ச்சி திமுக சார்பில் ஏப்ரல்-22 ஆம் நாள் மாலை 4 மணி அளவில், இராமேஸ்வரத்தில், தலைமைக் கழகச் செயலாளர்  துரைவைகோ அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் பேட்ரிக் அவர்கள் ஒருங்கிணப்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கழகத் துணைப்பொதுச் செயலாளர் ஆடுதுறை முருகன், சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை மாவட்டச் செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.04.2022

Saturday, April 16, 2022

ஈஸ்டர் வாழ்த்து - வைகோ MP

இருளைக் கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.

மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்ட இயேசு, தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து சபையில் நிறுத்தப்பட்டார். சதிகாரர்களின் காட்டுக் கூச்சலால் வேறு வழி இன்றி, இயேசுவை சிலுவையில் அறையுமாறு ஒப்புக் கொடுத்தான்.

இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, முகத்தில் காரித்துப்பி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்தனர். கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களுக்கு நடுவே, அவரும் சிலுவையில் அறையப்பட்டார்.

‘தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக் கொள்’ என்று நிந்தித்தனர்.

சிலுவையிலே ஆவியை நீத்த இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததையே, இன்று உலகம் கொண்டாடுகிறது.

கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.

இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. தமிழகத்தில் அற்புதமான ஆட்சி அன்புச் சகோதரர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ளது. கூட்டாட்சித் தத்துவம் வெற்றிபெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன இந்துத்துவா சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் இந்தப் புனித வெள்ளிக்கிழமையன்று சபதம் ஏற்போம்.

மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும்; விடியல் உதிக்கும். கொடியவன் ராஜபக்சே கூட்டம் அனைத்துலக நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் எனும் நம்பிக்கையோடு, ஈழத்தமிழரின் துன்பத்தைப் போக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக 
‘தாயகம்’
சென்னை - 8
14.04.2022

Friday, April 15, 2022

அண்ணல் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார் வைகோ MP!

சட்ட மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று ( 14.04.2022) காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை கிழக்கு சு.ஜீவன், வடசென்னை மேற்கு டி.சி.இராஜேந்திரன், தென்சென்னை கிழக்கு கே.கழககுமார், தென்சென்னை மேற்கு சைதை ப.சுப்பிரமணி, செங்கல்பட்டு வடக்கு மா.வை.மகேந்திரன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.04.2022

கெயில் குழாய் எதிர்ப்புப் போராட்டம்;விவசாயி கணேசன் தற்கொலை. வைகோ MP அறிக்கை!

கெயில் நிறுவனம், வேளாண் விளைநிலங்களின் வழியாக, எரிகாற்றுக் குழாய் பதிப்பதற்கு, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெடுஞ்சாலை ஓரமாகப் பதிக்கின்ற வகையில், மாற்று வழிகளில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரி வருகின்றார்கள். எனவே, முந்தைய அண்ணா தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போதைய தி.மு.க. அரசும் அதே நிலைப்பாட்டைத்தான் மேற்கொண்டு இருக்கின்றது. 

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், காரியபள்ளி கிராமத்தில், கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முனைந்துள்ளது. அதை எதிர்த்து அந்தப் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 65 சென்ட் நிலம் வைத்து இருக்கின்ற ஏழை விவசாயி கணேசன் என்பவர், தனது நிலம் முழுமையாகப் பறிபோவதைத் தாங்க முடியாமல், போராட்டம் நடந்து கொண்டு இருக்கின்ற இடத்திற்கு அருகிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, கடும் அதிர்ச்சி அளிக்கின்றது. அவரது உடலை வைத்து, இண்டூர் பேருந்து நிலையத்தின் முன்பு, விவசாயிகள் போராடி வருகின்றார்கள். 

எனவே, விவசாயிகள் நலனைப் பாதுகாப்பதில் தொடர்ந்து அக்கறையுடன், விவசாயிகளுடன் இணைந்து நின்று செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு, இந்தப் பிரச்சினையில், விரைவில் ஒரு முடிவு ஏற்பட வழி வகுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். 

விவசாயி கணேசன் குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பு ஈடு வழங்கிட வேண்டும்; அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.  

கணேசனை இழந்து வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
"தாயகம்"
சென்னை - 8
13.04.2022

Saturday, April 9, 2022

இந்திதான் இந்தியா; அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும். வைகோ MP எச்சரிக்கை!

டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். பல மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியால்தான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிற கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது.

மேலும், “9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அமைச்சரவையின் 70 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக இது அதிகரிக்கச் செய்யும்” என்று அமித்ஷா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழித் திணிப்பை தீவிரப்படுத்த முனைந்து இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றத்திலிருந்து இந்தியைத் திணிப்பதற்கான அரசு ஆணைகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.

ஒன்றிய அரசின் அதிகாரிகள் தமது அதிகாரப்பூர்வ வலைதளங்களில், இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒன்றிய அரசின் கோப்புகள் இந்தி மொழியில் தயாரிக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலர்கள் இந்தியில்தான் கையெழுத்திட வேண்டும்.

வங்கித் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே நடைபெற வேண்டும்.

இந்தி மொழியை தொலைக்காட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்த வேண்டும்.

தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் இடம் பெறும் காட்சிகளின் உரையாடல்கள் இந்தி மொழியில் வாக்கியங்களாக (Sub-title) திரையில் இடம்பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை -2020 இல் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்ற பரிந்துரை,

இதன் உச்சமாக 2019, செப்டம்பர் 14 இல் டெல்லியில் நடந்த இந்தி நாள் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவாக ஒரு மொழி நிச்சயம் தேவை. அதுதான் பன்னாட்டு அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். அப்படி இந்தியாவை இணைக்க இந்தி மொழியால்தான் முடியும். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்தி மொழி மிகப்பெரிய உச்சத்தை அடைந்துவிடும்.” என்று இந்தித் திமிரோடு பேசினார். அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

தற்போதும் அதைப்போல மீண்டும் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்திலும் வலியுறுத்தி இருக்கிறார். இந்தி மொழியால் இந்தியாவை இணைக்க முடியாது. இந்திதான் இந்நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றுமை உணர்வை சிதைத்துவிடும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் உணரவில்லை.

இந்தித் திணிப்புக்கு எதிராக 1938 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் மொழி உரிமைக்காகப் போராடியதை மறந்துவிட வேண்டாம்.

1965 இல் தமிழ் நாட்டில் நடைபெற்ற நான்காவது இந்தி எதிர்ப்புப் போராட்டம், நாட்டையே உலுக்கியதை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு நினைவுபடுத்துகிறேன்.

இந்தியாவின் பன்மொழி, பண்பாடு, மரபு உரிமைகள், தேசிய இனங்களின் தனித்துவமான அடையாளங்கள் சிதைக்கப்பட்டால், ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கி, இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியா மாறிவிடும். அதற்கு பா.ஜ.க. அரசு வழி வகுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.04.2022

Tuesday, April 5, 2022

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து தலைவர் வைகோ அவர்களின் அறிவிப்புக்கு இணங்க, 04.04.2022 நேற்று மாலை 5 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன்.

ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மறுமலர்ச்சி தி.மு.க.வின் அழுத்தமான எதிர்ப்புக் குரலை பதிவு செய்தேன்.

அரசியலுக்கு வந்தபிறகு, நான் அதிகாரப்பூர்வமாக பங்கேற்கும் முதல் போராட்டம் இது..!

துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் ப. சுப்பிரமணி (மாமன்ற உறுப்பினர்), சு. ஜீவன் (மாமன்ற உறுப்பினர்), கே. கழக குமார், டி. சி. இராசேந்திரன், இ.வளையாபதி, மாவை. மகேந்திரன், ஊனை. பார்த்திபன், டி. டி. சி. சேரன், தீர்மான குழு செயலாளர் கவிஞர் மணி வேந்தன், தேர்தல் பணி செயலாளர் ஆவடி. இரா. அந்தரிதாஸ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பூவை மு.பாபு, கே.எம்.ஏ.குணா, உயர்நிலைக் குழு உறுப்பினர் தமிழ்வாணன் குடியரசு, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, ஆவடி மாநகராட்சி துணை மேயர் எஸ்.சூரியகுமார், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்கள் மல்லிகா தயாளன், ராணி செல்வின், சுப்பையா அண்ணாச்சி, திருமதி பிரசன்னா, பகுதி செயலாளர் சூளைமேடு பி.குமார், வட்டச்செயலாளர் தேவராஜ் மற்றும் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகளும், தோழர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

அன்புடன்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
05.04.2022

Sunday, April 3, 2022

கலிங்கப்பட்டி மயானத்தில் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது!

கலிங்கப்பட்டியில் சாதி, மதங்களின் பெயரால் மயானங்கள் தனித்து இல்லாமல் அனைவருக்கும் ஒரே மயானம் தான் நீண்ட நெடுங்காலமாகவே பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்த மயானத்தை சீரமைப்பதற்கு தற்போது பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

முதற்கட்டமாக, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மயானத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இடுகாட்டுக்கு வரும் மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு குடிநீர் குழாய் வசதி செய்யப்படிருக்கிறது. வயதானவர்கள் அமர்வதற்காக, கலிங்கப்பட்டி சமத்துவ மயானத்தில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. 

இன்று காலையில், மயானத்தை சுற்றி நிழல் தரும் வகையில் 60 நாட்டு மரக் கன்றுகளை நட்டு உள்ளோம். மயானங்கள் என்பது, நமது முன்னோர்களை தகனம் செய்யும் நினைவு இடமாக உள்ளது. இதை வெறும் மனிதர்களை எரியூட்டும் அல்லது புதைக்கப்படும் இடமாக மட்டும் கருதாமல் ஒரு சோலைவனமாக மாற்றும் முயற்சியாகவே மேற்கண்ட பணிகளை கலிங்கப்பட்டியில் செய்து உள்ளோம்.

நகரம் அல்லது கிராமம் எதுவென்றாலும் பெரும்பாலான ஊர்களில் மயானம் என்பது மது அருந்தும் இடமாகவோ, அசுத்தம் செய்யும் இடமாகவோ தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எந்தவித பராமரிப்பும் செய்யப்படுவது இல்லை. 

நாம் உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, கலிங்கப்பட்டி மயானத்தை ஒரு முன்மாதிரி இடமாக ஆக்கியுள்ளோம். மற்ற ஊர்களிலும் இப்பணிகள் தொடரும். 

கலிங்கப்பட்டிக்கு என்ன சிறப்பு என்றால், இங்கு இருப்பது சமத்துவ மயானம். சாதிக்கு ஒரு சுடுகாடு இங்கு இல்லை. சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள சிற்றூர்களுக்கு சமீபத்தில் தமிழ்நாடு அரசு வழங்கிய பரிசுத் தொகை ரூபாய் 10 இலட்சத்தை கலிங்கப்பட்டியும் பெற்றுள்ளது. தமிழக அரசின் பரிசுத் தொகையை கலிங்கப்பட்டி பெறுவது இது இரண்டாவது முறை ஆகும்.

சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் வந்துபோகும் ஒரு சோலைவனமாக  கலிங்கப்பட்டி மயானம் மாறி வருகின்றது. இதைப் பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும் சமத்துவ மயானங்கள் உருவாகட்டும்!

கலிங்கப்பட்டி வழிகாட்டுகிறது..!

அன்புடன்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
03.04.2022

தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..!

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநில குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ள அன்புத் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில்  வாழ்த்துகள்! 

அலைபேசி வாயிலாகவும் எனது வாழ்த்துகளை தோழர் அவர்களிடம் தெரிவித்தேன். வலதுசாரி அரசியலுக்கு எதிரான பயணத்தில் இணைந்து பயணிப்போம். 

தங்களின் அரசியல் பணி சிறக்கட்டும்..!

வாழ்த்துகளுடன்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
03.04.2022

சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்க! வைகோ MP அறிக்கை!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

600 சதுரடிக்குக் குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு 25 சதவிகித சொத்துவரி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் புதியதாக இணைந்த பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்படுகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும், 1200 லிருந்து 1800 சதுரடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100 சதவிகிதமும் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒன்றிய அரசின் 15 ஆவது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்படுவதாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த நிதி ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாகவும் தமிழக அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம், பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலையின்மையால் மக்கள் சொல்லொணா வேதனையில் வாழ்க்கையை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு தாறுமாறாக உயர்த்தியதால் மக்கள் மீதான சுமை அதிகரித்து விட்டது.

இந்நிலையில் சொத்துவரி உயர்வும் மக்களை பாதிக்கும்.

எனவே இதனை மறுபரிசீலனை செய்து,சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
03.04.2022

Saturday, April 2, 2022

தமிழக ஊர்க்காவல்துறை: 16 ஆயிரம் வீரர்களை பணி நிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு வைகோ MP கோரிக்கை!

தமிழ்நாட்டின் காவல்துறைக்குத் துணையாக, ஊர்க்காவல் படை வீரர்கள் சுமார் 16000 பேர் பணிபுரிந்து வருகின்றார்கள். இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 560 வீதம் மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு, மாத ஊதியமாக ரூபாய் 2800 மட்டுமே வழங்கப்படுகின்றது.
ஐந்து நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை.
இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏழை எளிய நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இது குறித்த வழக்கில், இவர்களுக்கு மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
அதன்படி, பல மாநிலங்களில் மாதம் முழுவதும் பணி வழங்கி, 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரையிலும் மாத சம்பளம் வழங்கப்படுகின்றது. பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை இரண்டாம் நிலை காவலராக பணி நிரந்தரம் செய்து இருப்பதைப் போன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 16,000 ஊர்க்காவல் படை வீரர்களின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலனை செய்து, நிறைவேற்றித் தர வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
02.04.2022

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாநில உரிமை மீட்புப் பயணம் - இந்தியாவுக்கே வழிகாட்டும்! வைகோ எம்பி வாழ்த்து!

தமிழகத்தில் விழிப்புணர்வை உருவாக்க உள்ள இந்த இலட்சியப் பயணம், அனைத்திந்திய அளவிலும் ஓர் தாக்கத்தை உருவாக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை!
நீட் தேர்வுக்கு, 20க்கும் மேற்பட்ட இளம் தளிர்களை நாம் பலி தந்துவிட்டோம். இதன் பாதிப்பில் நம் இளைஞர்கள் இன்னமும் கண்ணீர் சிந்திடும் அவலம் தொடர்கிறது. இதற்குத் தீர்வு காண வேண்டிய மாநில அரசின் அதிகாரங்கள் ஒவ்வொன்றையும், ஒன்றிய அரசு திட்டமிட்டு கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் நம் இலட்சிய முழக்கம் நடைமுறையில் இல்லவே இல்லை!
இவைகளுக்கெல்லாம் தீர்வுகாண மக்களைத் தயார்படுத்தும் இந்தப் பிரச்சாரப் பயணம் முழுமையான வெற்றி பெறட்டும். தமிழர் தலைவர் ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கும், அவருடன் பயணம் மேற்கொள்ள உள்ள தோழர்களுக்கும் நம் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
02.04.2022

Friday, April 1, 2022

மாநிலங்கள் அவையில் ஓய்வு பெறுகின்ற உறுப்பினர்களுக்கு வைகோ எம்பி பாராட்டு!

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், ஒரு உறுப்பினர், ஆறு ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின், பொறுப்புக் காலம் நிறைவு பெறும். அவ்வாறு இந்த ஆண்டு, 72 உறுப்பினர்கள் விடைபெறுகின்றார்கள். அவர்களுக்கு, பாராட்டு மற்றும் வழி அனுப்பு விழா நேற்று (31.03.2022) நடைபெற்றது. அனைவரும் சேர்ந்து குழு படம் எடுத்துக் கொண்டனர்.

மாநிலங்கள் அவையின் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவர்கள், அவர்களுடைய பணிகளைப் பாராட்டினார். அதன்பிறகு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தினார். கட்சிகளின் தலைவர்கள் பேசினார்கள். அப்பொழுது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை:

இந்த நிகழ்வில் பேசுவதற்கு, எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு, அவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

போராட்டங்களும், இன்னல்களும், மகிழ்ச்சியும் கலந்தது மனித வாழ்க்கை. வெற்றிகளும்,  தோல்விகளும் மாறி மாறி வரும். அந்த வகையில், பொது வாழ்வில் எத்தனையோ போராட்டங்களை எதிர்கொண்டு, இந்த அவைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு வந்து, சிறப்பாகப் பணி ஆற்றிய 72 உறுப்பினர்களுடைய பதவிக்காலம், அடுத்த நான்கு மாதங்களுக்குள் நிறைவு பெறுகின்றது. அவர்களுள் சிலர், மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டு வரலாம்; வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம். ஆனாலும்  அவர்கள், பொதுவாழ்வில் தொடர்ந்து நீடிப்பார்கள். எந்த இடத்தில், என்ன பொறுப்பில் இருந்தாலும், அந்தப் பணியில் அவர்கள் வெற்றி பெற வேண்டும்; நல்ல உடல்நலத்தோடு, மகிழ்ச்சியோடு, அவர்களின் எதிர்காலம் அமைய வேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன்.

இந்த அவையில், நான் நான்காவது முறையாகப் பொறுப்பு வகித்து வருகின்றேன். 1978 ஆம் ஆண்டு, முதன்முறையாகத் தேர்வு பெற்று வந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புபேஷ் குப்தா அவர்களுடைய சிம்ம கர்ஜனை நாள்தோறும் ஒலித்தது. மூத்த தலைவர் என்.ஜி.ரங்கா, ஒரு நாள், ஒரு மணி நேரம் கூட  அவைக்கு வராமல் இருந்தது இல்லை; விருப்பு வெறுப்பு இன்றிப் பேசுவார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த அவையை அலங்கரித்தார்கள்; இந்தியாவின் கவனத்தை ஈர்த்தார்கள். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், முத்திரை பதிக்கின்ற உரைகளை ஆற்றி இருக்கின்றார்.

இந்த உறுப்பினர்கள் பிரிந்து செல்வது, கவலையாக இருக்கின்றது. உங்களில் பலரை நான் மீண்டும் சந்திக்க முடியாமல் போகலாம். ஆனால், இங்கே உங்களுடன் பழகிய நட்பும், நேசமும், என் மனதை விட்டு என்றைக்கும் அகலாது. ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன், ஆர்.எஸ்.பாரதி போன்றோர், அருமையான வாதங்களை எழுப்பி, அற்புதமாக உரை ஆற்றியதை எல்லாம் மறக்க முடியாது.

பதவிக் காலம் முடிந்து விடைபெற்றுச் செல்கின்ற மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் அனைவரும், நீடிய வாழ்நாளும், நிறைந்த உடல்நலமும் பெற்று, அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும், அந்தப் பொறுப்பில் வெற்றி பெற வேண்டும் என நெஞ்சார வாழ்த்துகின்றேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.

முன்னதாக, நேற்று காலை 9 மணி அளவில், நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நடைபெற்ற ஒன்றிய நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக்  (Consultative Committe) கூட்டத்தில் வைகோ பங்கேற்றார். அமைச்சர் மன்சுக்பாய் மாண்டவியா தலைமை வகித்தார்.

அந்தக் கூட்டத்தில், வைகோ ஆற்றிய உரை:

மிகச்சிறந்த பொருளாதார அறிஞர்களுள் ஒருவரான மால்தஸ், உலகின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேதான் இருக்கும்; ஆனால் இயற்கை அதைக் கட்டுப்படுத்தும்; நில அதிர்வுகள், எரிமலைகளின் சீற்றம், புயல் வெள்ளத்தால் நிறையப் பேர் மடிவார்கள்; அத்துடன், கொடிய நோய்களின் தாக்குதல்களால், கோடிக்கணக்கான மக்களை இறப்பதையும் தடுக்க முடியாது என்று சொன்னார். அதை நாம் இப்போது கண்கூடாகப் பார்க்கின்றோம்.

இதுவரை 22 கொள்ளை நோய்கள், கொடிய தாக்குதல்களை நடத்தி இருக்கின்றன; கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைச் சூறையாடி இருக்கின்றன.

2019 ஆம் ஆண்டு, கொவிட் 19 கொரோனா தீ நுண்மி சீனாவில் தோன்றியது; அது, உலகம் முழுமையும் மின்னல் வேகத்தில் பரவியது.

உலக நல்வாழ்வு நிறுவனம், 2022 மார்ச் 23 ஆம் நாள் கொடுத்த அறிக்கையில், 47 கோடியே 28 இலட்சம் பேருக்குக் கொரோனா தொற்று தாக்கியது; 69 இலட்சம் பேர் இறந்து விட்டனர் என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டு இருக்கின்றது.

மார்ச் 24 ஆம் நாள் கணக்குப்படி, அதற்கு முந்தைய நான்கு வாரங்களில், தென்கொரியா, வியட்நாம், ஜெர்மனி, ஃபிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான், இத்தாலி, பிரேசில் ஆகிய நாடுகளில், அதிகமான உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்தியாவில், 4 கோடியே 30 இலட்சத்து 14 ஆயிரத்து 687 பேர், கொரோனா தீ நுண்மியால் பாதிக்கப்பட்னர். இந்தியாவில், 5 இலட்சத்து 14 ஆயிரத்து 672 பேர் இறந்தனர்.

மருத்துவ அறிஞர்கள் குறுகிய காலத்தில் தடுப்பு ஊசியை ஆக்கினார்கள். உலகத்தின் மற்ற நாடுகளை விட, கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில், அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெற்றி பெற்று இருக்கின்றது.

கொரோனா பாதிப்புகள் குறித்து, மாநில வாரியான புள்ளி விவரங்களை, இந்தக் கூட்டத்தில், அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். கொரோனா நான்காம் அலை தாக்குதல் ஏற்படக்கூடும் என, மருத்துவ அறிஞர்கள் எச்சரித்து இருக்கின்றனர். அதை எதிர்கொள்ளத்தக்க நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.

அதன்பிறகு, நேற்று மாலை 7 மணி அளவில், புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில், முதல் அமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களை வைகோ, கணேசமூர்த்தி சந்தித்தனர். ஈழத்தமிழர்கள் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, நியூட்ரினோ திட்டத்தின் கேடுகள் குறித்துப் பேசினர்.

தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

01.04.2022