கெயில் நிறுவனம், வேளாண் விளைநிலங்களின் வழியாக, எரிகாற்றுக் குழாய் பதிப்பதற்கு, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெடுஞ்சாலை ஓரமாகப் பதிக்கின்ற வகையில், மாற்று வழிகளில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரி வருகின்றார்கள். எனவே, முந்தைய அண்ணா தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போதைய தி.மு.க. அரசும் அதே நிலைப்பாட்டைத்தான் மேற்கொண்டு இருக்கின்றது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், காரியபள்ளி கிராமத்தில், கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முனைந்துள்ளது. அதை எதிர்த்து அந்தப் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 65 சென்ட் நிலம் வைத்து இருக்கின்ற ஏழை விவசாயி கணேசன் என்பவர், தனது நிலம் முழுமையாகப் பறிபோவதைத் தாங்க முடியாமல், போராட்டம் நடந்து கொண்டு இருக்கின்ற இடத்திற்கு அருகிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, கடும் அதிர்ச்சி அளிக்கின்றது. அவரது உடலை வைத்து, இண்டூர் பேருந்து நிலையத்தின் முன்பு, விவசாயிகள் போராடி வருகின்றார்கள்.
எனவே, விவசாயிகள் நலனைப் பாதுகாப்பதில் தொடர்ந்து அக்கறையுடன், விவசாயிகளுடன் இணைந்து நின்று செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு, இந்தப் பிரச்சினையில், விரைவில் ஒரு முடிவு ஏற்பட வழி வகுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
விவசாயி கணேசன் குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பு ஈடு வழங்கிட வேண்டும்; அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.
கணேசனை இழந்து வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
"தாயகம்"
சென்னை - 8
13.04.2022
No comments:
Post a Comment