Sunday, April 3, 2022

கலிங்கப்பட்டி மயானத்தில் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது!

கலிங்கப்பட்டியில் சாதி, மதங்களின் பெயரால் மயானங்கள் தனித்து இல்லாமல் அனைவருக்கும் ஒரே மயானம் தான் நீண்ட நெடுங்காலமாகவே பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்த மயானத்தை சீரமைப்பதற்கு தற்போது பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

முதற்கட்டமாக, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மயானத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இடுகாட்டுக்கு வரும் மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு குடிநீர் குழாய் வசதி செய்யப்படிருக்கிறது. வயதானவர்கள் அமர்வதற்காக, கலிங்கப்பட்டி சமத்துவ மயானத்தில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. 

இன்று காலையில், மயானத்தை சுற்றி நிழல் தரும் வகையில் 60 நாட்டு மரக் கன்றுகளை நட்டு உள்ளோம். மயானங்கள் என்பது, நமது முன்னோர்களை தகனம் செய்யும் நினைவு இடமாக உள்ளது. இதை வெறும் மனிதர்களை எரியூட்டும் அல்லது புதைக்கப்படும் இடமாக மட்டும் கருதாமல் ஒரு சோலைவனமாக மாற்றும் முயற்சியாகவே மேற்கண்ட பணிகளை கலிங்கப்பட்டியில் செய்து உள்ளோம்.

நகரம் அல்லது கிராமம் எதுவென்றாலும் பெரும்பாலான ஊர்களில் மயானம் என்பது மது அருந்தும் இடமாகவோ, அசுத்தம் செய்யும் இடமாகவோ தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எந்தவித பராமரிப்பும் செய்யப்படுவது இல்லை. 

நாம் உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, கலிங்கப்பட்டி மயானத்தை ஒரு முன்மாதிரி இடமாக ஆக்கியுள்ளோம். மற்ற ஊர்களிலும் இப்பணிகள் தொடரும். 

கலிங்கப்பட்டிக்கு என்ன சிறப்பு என்றால், இங்கு இருப்பது சமத்துவ மயானம். சாதிக்கு ஒரு சுடுகாடு இங்கு இல்லை. சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள சிற்றூர்களுக்கு சமீபத்தில் தமிழ்நாடு அரசு வழங்கிய பரிசுத் தொகை ரூபாய் 10 இலட்சத்தை கலிங்கப்பட்டியும் பெற்றுள்ளது. தமிழக அரசின் பரிசுத் தொகையை கலிங்கப்பட்டி பெறுவது இது இரண்டாவது முறை ஆகும்.

சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் வந்துபோகும் ஒரு சோலைவனமாக  கலிங்கப்பட்டி மயானம் மாறி வருகின்றது. இதைப் பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும் சமத்துவ மயானங்கள் உருவாகட்டும்!

கலிங்கப்பட்டி வழிகாட்டுகிறது..!

அன்புடன்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
03.04.2022

No comments:

Post a Comment