Friday, May 27, 2022

புதிய அலுவலகம் திறப்பு மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு பங்கேற்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயலாளராக கடந்த வருடம் 2021 அக்டோபர் 20 அன்று மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்களால் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு மார்ச் 23 அன்று நடந்த 27 வது கழகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இன்று தலைமை கழக செயலாளர் அலுவலகம் - தலைமை அலுவலகம் தாயகத்தில் பொதுவுடைமை இயக்கத் தலைவரும், இந்திய அரசியல் வரலாற்றில் மூத்த தலைவரும், நேர்மையின் அடையாளமாகவும், எளிமையின் அடையாளமாகவும் திகழும் பொதுவுடைமை இயக்க தோழர் அய்யா நல்லகண்ணு அவர்களின் திருக்கரங்களால் இன்று 27-05-2022 காலை 10 மணியளவில் தாயகத்தில், குத்துவிளக்கு ஏற்றி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

தலைமை அலுவலகத்தின் ஊழியர்கள் சார்பில் மேலாளர்கள் மோகன்தாஸ், ருத்ரன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் வந்தியத்தேவன், தீர்மான குழு செயலாளர் கவிஞர் மணி வேந்தன், ,வழக்கறிஞர் நன்மாறன், அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரியகுமார், வழக்கறிஞர் செந்தில் செல்வன் ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றினர்.
அப்போது பேசிய தோழர் அய்யா நல்லகண்ணு அவர்கள் தற்போது அரசியலில் நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள். உங்களின் அலுவலகத்தை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்து கவுரவ படுத்தியதற்கு மிக்க நன்றி எனவும் அரசியலில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் நிச்சயம் வருவீர்கள் எனவும் வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.
நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் கே.கழக குமார், வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, டி. சி.ராசேந்திரன், மாவை.மகேந்திரன், மணவை தமிழ் மாணிக்கம், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மல்லிகா தயாளன், பகுதி செயலாளர்கள் எழும்பூர் - தென்றல் நிசார், மயிலாப்பூர் ஆ.சேகர், கொளத்தூர் - ஜி.ஆர்.பி. ஞானம், எம்.ஜி.ஆர்.நகர் - ரவி, ஆலந்தூர் - கத்திப்பாரா ஜே.சின்னவன், சைதாப்பேட்டை எஸ்.வி.குமார், சூளைமேடு - குமார், அம்பத்தூர் - தாமோதரன், மாவட்ட அவைத்தலைவர் க.இளவழகன், மாவட்ட பொருளாளர் துரை குணசேகரன், பெருங்களத்தூர் நாராயணன், மாவட்ட துணை செயலாளர்கள் குரோம்பேட்டை நாசர், ஆலந்தூர் சம்பத், கௌசல்யா ரவி, மாநில அணிகளின் துணை அமைப்பாளர்கள் காட்வின் அஜூ, விக்டர், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.கே.சுரேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.ஹரி, மாவட்ட தொண்டர் அணி ஜஸ்டின்,வழக்கறிஞர் வினோத், மகளிர் அணி நிர்வாகிகள் ஆனந்தி ராமதாஸ், சகாய அரசி, தாஹிரா பானு, பகுதி அவைத்தலைவர் தனபாண்டியன் பகுதி துணைச் செயலாளர் எஸ்.லைனல், மாவட்ட பிரதிநிதி சரவணன், பெருங்களத்தூர் மணிகண்டன், தொண்டர் அணி நிர்வாகி பெருங்குடி பன்னீர் தாஸ், மைக்கேல் ராஜ், ராமதாஸ், புளியந்தோப்பு சாகுல் ஹமீது, விக்னேஷ், மணி, விநாயகம், டேவிட், உட்பட பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், தலைமை கழக ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
27.05.2022

Monday, May 23, 2022

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41 ஆவது நினைவு நாள். வைகோ MP மலரஞ்சலி!

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நாளை (24.05.2022) காலை 9.30 மணியளவில் எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

கழகத் தோழர்கள் திரளாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
23.05.2022

Friday, May 20, 2022

மறக்க முடியாத வைகோவின் அற்பணிப்பு - நக்கீரன் கட்டுரை!

பேரறிவாளன் விடுதலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அர்ப்பணிப்பை கட்டுரையாக தந்துள்ளது நக்கீரன் குழுமம். ஆசிரியர் கோபால் அவர்களுக்கும் மற்றும் நக்கீரன் ஊடக குழு அனைவருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நன்றிகள்.

கர்நாடக பாஜக அரசின் மதவெறி. வைகோ MP கண்டனம்!

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல், உண்மையான வரலாறுகளை மறைத்து, மதவெறிப் பார்வையில் திரித்து எழுதும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் எழுதிக் கொடுப்பதை, கற்பனைப் புராணங்கள் இதிகாசங்களை, வரலாறாகக் கற்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குருகுலக் கல்வியை நிலை நாட்டுகின்ற வகையில் புதிய பாடத்திட்டத்தைக் கற்பிக்க முனைகின்றார்கள்.
செத்துப்போன சமஸ்கிருத மொழியை உயிர்ப்பிக்க 650 கோடி ரூபாய் செலவில் மூன்று பல்கலைக்கழகங்களை நிறுவி இருக்கின்றார்கள்.
அந்த வழியில் கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசு, தன் பங்குக்கு, கர்நாடக மாநில வரலாறைத் திரிக்க முயற்சிக்கின்றது.
ஆங்கில அரசை எதிர்த்துப் போர் புரிந்து வீர வரலாறு படைத்த திப்பு சுல்தான் குறித்த பாடங்களை, ஒன்று முதல் பத்து வரை பள்ளிப் பாடங்களில் இருந்து ஏற்கனவே நீக்கி விட்டார்கள்.
அடுத்து இப்போது, பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரளத்தின் நாராயண குரு ஆகியோரைப் பற்றிய குறிப்புகளை நீக்கி விட்டனர்.
மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவார் பேசியதை பாடமாக ஆக்கி இருக்கின்றார்கள்.
சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், முழுக்க முழுக்க மதச்சார்பு அமைப்புகளைப் பற்றி எழுதி இருக்கின்றார்கள்.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்.
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வன்முறைகளைத் தூண்டி, பிஞ்சுக் குழந்தைகள் மாணவர்கள் மனங்களில், மதவெறியைப் புகுத்த முனைகின்ற கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசின் முயற்சிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இவர்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும், தந்தை பெரியார் நாராயண குரு ஆகியோரின் பெயர்களை, அவர்கள் நிகழ்த்திய சமூக சீர்திருத்த புரட்சியை, வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைத்து விட முடியாது.
வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்
சென்னை - 8
20.05.2022

சென்னை பெசன்ட் நகரில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளாகப் பங்கேற்க வாரீர்! வைகோ MP அழைப்பு!

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில், சிங்களப் பெருந்திரளாகபரினவாதம் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை தாக்குதலில் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்காக நீதி வேண்டி தமிழர்கள் நாம் 13 ஆண்டுகளாக பன்னாட்டுச் சமூகத்திடம் போராடி வருகின்றோம்.

இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம், மே பதினேழு இயக்கம் சென்னையில் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தி வருகிறது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆண்டுதோறும் தவறாது நான் கலந்துகொண்டு, கொல்லபட்ட பாலகன் பாலச்சந்திரன் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள், போராளிகள் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகிறேன்.
தற்போது மெரினா கடற்கரையில் நிகழ்வுகள் நடத்த நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால், இந்த ஆண்டிற்கான நினைவேந்தல் நிகழ்வினை நடத்திக்கொள்ள சென்னை பெசன்ட் நகர் கடற்கரையினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. எனவே, தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வரும் மே 22 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதைப் போல, இந்தாண்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான இதில் கழகத் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக குடும்பத்தினருடன் கலந்துகொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்!
வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்
சென்னை - 8
20.05.2022

Thursday, May 19, 2022

வைகோ MP ஐ நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி!

தண்டனை விதிக்கப்பட்டு, 31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (19.05.2022) காலை 11.30 மணி அளவில், சென்னை அண்ணா நகரில் உள்ள, கழகப் பொதுச்செயலாளர் வைகோ இல்லம் வருகை தந்தனர். வைகோ அவர்களுக்கு நன்றி கூறினர்.

சிறையில் இருந்த நாள்களை நினைவூட்டிய பேரறிவாளன், செய்தியாளர்களிடம் கூறியது:

இந்த விடுதலைக்கு முழுக்க முழுக்க அண்ணன் வைகோ அவர்கள் காரணமாக இருந்தார்கள். அதற்கு நன்றி கூறுவதற்காகத்தான் வந்தோம். நேற்றைக்கே இங்கே வர நினைத்தோம். ஆனால், நேரம் ஆகி விட்டது.

இந்தியாவின் தலைசிறந்த வழக்கு உரைஞர் ராம் ஜெத்மலானி அவர்களை அழைத்து வந்து வாதாடச் செய்தார்கள். அவர், சிறைக்குச் சென்று கைதிகளைப் பார்க்கின்ற வழக்கம் இல்லை. ஆனால், வேலூர் சிறைக்கு வந்து எங்களைப் பார்த்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி, தூக்குத்தண்டனைக்குத் தடை ஆணை பெற்றுக் கொடுத்தார். உச்சநீதிமன்றத்தின் அத்தனை அமர்வுகளிலும் பங்கேற்று வாதாடினார். அவருடைய வாதங்கள்தான், எங்கள் விடுதலைக்கு வழிகாட்டியது; முதன்மைக் காரணம் ஆயிற்று.ஜெத்மலானி அவர்கள் தற்போது உயிரோடு இல்லை. ஆனால், அவர் செய்த உதவியை நாங்கள் என்றைக்கும் மறக்க முடியாது. 

இவ்வாறு, பேரறிவாளன் கூறினார்.

தலைமைக் கழகம் 
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
19.05.2022

Wednesday, May 18, 2022

பேரறிவாளன் விடுதலை: எல்லையற்ற மகிழ்ச்சி! வைகோ MP அறிக்கை!

பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.

மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான நாள் குறித்து அறிவிப்பு வெளியானதைக் கேட்டு அதிர்ந்து போனேன். இந்தியாவின் தலைசிறந்த வழக்கு உரைஞர் ராம் ஜெத்மலானி அவர்களைத் தொடர்பு கொண்டு, சென்னைக்கு அழைத்து வந்து, உயர்நீதிமன்றத்தில் வாதாடச் செய்து, தண்டனையை நிறுத்தி வைத்துத் தடை ஆணை பெற்றோம். 

அதற்குப் பின்னர், உச்சநீதிமன்ற மேல் முறையீட்டின் அனைத்து அமர்வுகளிலும், ராம் ஜெத்மலானி அவர்கள் கலந்து கொண்டு அருமையான வாதங்களை எடுத்து வைத்தார். இந்த வழக்கில், அவருடைய வாதங்கள் முதன்மையானவை. அத்தனை அமர்வுகளிலும், அவருடன் நான் பங்கேற்றேன். 

அதன்பிறகு, தமிழ்நாடு அமைச்சர் அவை தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்யும்படி பரிந்துரை செய்து பல ஆண்டுகள் கடந்தபோதிலும், முந்தைய ஆளுநரும், இன்றைய ஆளுநரும் அந்தக் கோப்பைக் கிடப்பில் போட்டு வைத்து இருந்தது மிகப்பெரிய அநீதி ஆகும்.

எந்தத் தவறும் செய்யாமல், இந்த இளைஞனுடைய இளமைக்கால வாழ்க்கை, சீர்குலைக்கப்பட்டு விட்டது. 31 ஆண்டுகளாக, இந்த ஏழு பேரும் துன்ப இருளில் வாடி வதங்கி விட்டார்கள். இழந்ததை இனி அவர்கள் மீண்டும் பெற முடியாது. 

இப்போது, உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருக்கின்றது; மகிழ்ச்சி. 

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

வைகோ 
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்
சென்னை - 8
18.05.2022

Monday, May 16, 2022

கோவில்பட்டி தொடரி நிலையப் பிரச்சினைகள். தெற்குத் தொடரி பொது மேலாளருக்கு வைகோ, MP., கோரிக்கை!

தென் தமிழ்நாட்டில், கோவில்பட்டி நகரம் ஒரு முதன்மையான வணிக மையம் ஆகும். நூற்பு ஆலைகள், சிறு குறு தொழில்கள், பருத்தி, கடலை மிட்டாய், மிளகாய், வெள்ளரிக்காய் உட்பட எத்தனையோ பொருட்கள் இங்கிருந்து இந்தியா முழுமையும் செல்கின்றன. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இந்தியப் படையிலும், துணைப் படைகளிலும் பணிபுரிகின்றார்கள். கோவில்பட்டி தவிர, விளாத்திகுளம், எட்டையபுரம், ஒட்டப்பிடாரம் பகுதி மக்களும் கோவில்பட்டிக்கு வந்துதான் தொடரிகளில் பயணிக்கின்றார்கள். 

ஒவ்வொரு நாளும், 30 தொடரிகள், கோவில்பட்டி வழியாகச் செல்கின்றன. ஆனால், சில தொடரிகள் இங்கே நிற்பது இல்லை. அனைத்துத் தொடரிகளும், கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். 

கோவில்பட்டி தொடரி நிலையத்தின் தண்டவாளங்களைக் கடந்து மறுபுறம் செல்ல, சுமைகளுடன் நடைப் பாலப் படிக்கட்டுகளில் ஏற முடியாமல், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள்,  சிரமப்படுகின்றார்கள். எனவே, பளுதூக்கியும், நகரும் படிக்கட்டும் அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

இவ்வாறு வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமைக் கழகம் 
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
16.05.2022

பத்திரிகை செய்தி. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி!

முள்ளிவாய்க்கால் போரில் பலியான ஈழத்தமிழர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நாளை 17.05.2022 செவ்வாய்கிழமை மாலை 5.30 மணி அளவில் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா, உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், திருமுருகன் காந்தி, தியாகு, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ஆ.வந்தியத்தேவன், ஆவடி இரா.அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், வழக்கறிஞர் இரா.பிரியகுமார், வழக்கறிஞர் கோ.நன்மாறன், முராத் புகாரி, மல்லிகா தயாளன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராஜேந்திரன், கே.கழக குமார், வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், ஊனை பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தங்கள் ஊடகத்தின் சார்பில், செய்தியாளர்கள்/ ஒளிப்பதிவாளர்களை, நாளை 17.05.2022 செவ்வாய்கிழமை மாலை 5.30 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

தலைமைக் கழகம் 
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
16.05.2022

Sunday, May 15, 2022

ல்ண்டன்‌ ஆம்ஸ்பரியின் துணை மேயராக பொறுப்பேற்றிருக்கும் சாருலதாவுக்கு வைகோ MP வாழ்த்து!

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு அருகில் உள்ள புறநகர் மாநகர் ஆட்சி மன்றம் ஆம்ஸ்பரியின் துணை மேயராக, சென்னையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் சாருலதா தேர்வு பெற்று இருக்கின்றார். 

அவருடன், தலைவர் வைகோ அவர்கள் 
இன்று 14.5.2022 மாலை 5 மணிக்கு அலைபேசியில் பேசினார். 
அவருக்கு தம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 

உங்களுடைய வெற்றி, 
உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளித்து இருக்கின்றது என்றார். 

அதற்கு சாருலதா,

ஐயா, நீங்கள் என்னுடைய ரோல் மாடல். 
தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் நீங்கள் ஆற்றிய உழைப்புக்கு நன்றி. 
உங்களோடு பேசியது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் என்னுடைய பெயர், எங்கள் ஊரின் பெயரை எல்லாம் குறிப்பிட்டது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகின்றது என்றார். 

அப்போது தலைவர் வைகோ அவர்கள், 

நீங்கள் அடுத்து மேயர் ஆக வேண்டும்...
நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற வேண்டும் என்றபோது, 
சாருலதா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். 

ஐயா, நீங்கள் லண்டனுக்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தார். 
தலைவரின் உடல் நலம் விழைந்தார். 

மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்த தலைவர் வைகோ அவர்கள், 
நீங்கள் சென்னைக்கு வரும்போது, என் இல்லத்திற்கு வருகை தர வேண்டும் என சாருலதாவுக்கு அழைப்பு விடுத்தார். 

இந்த உரையாடலுக்கு, லண்டனில் வேலை பார்க்கின்ற ஊற்றுமலை தம்பி முத்துகிருஷ்ணன் ஏற்பாடு செய்தார்.

தலைமைக் கழகம்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்,
சென்னை -600 008
14.05.2022

Saturday, May 14, 2022

பாஞ்சாலங்குறிச்சி ஸ்ரீ சக்கதேவி அம்மன் ஆலய திருவிழா!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, ஆங்கில படைகளுக்கு ஒருபோதும் நாங்கள் அடிபணிந்து போக மாட்டோம் என்று தம் மக்களிடையே வீர உணர்ச்சியை தட்டி எழுப்பிய பாஞ்சை மன்னன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வ திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ சக்கதேவி அன்னை ஆலய திருவிழா தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் நேற்று (13.05.2022) நடைபெற்றது.

தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதியிலிருந்து இளைஞர்கள் தொடர் ஓட்டம் மூலம் அணையா ஜோதியை கொண்டுவந்து சிறப்பு சேர்த்துக் கொண்டு இருந்தனர்.
எழுச்சி நிறைந்து, உணர்ச்சிப் பெருக்கோடு நடைபெற்ற இந்த திருவிழாவில் ஜோதியை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்கும் வாய்ப்பும் நேற்று சிறப்பாக அமைந்தது.
ஆலயத்தின் 66 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் இருந்து அன்னையின் ஆலயம் வரை தொடர் ஓட்டமாக சகோதரர் அய்யாசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில் கோவில்பட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை மற்றும் மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவையினர் சார்பில் கொண்டுவரப்பட்ட ஜோதியை பெற்றுக்கொண்டேன்.
முன்னதாக பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் வரவேற்பு நல்கிய பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மனை தரிசித்து விட்டு சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்த மக்கள் மத்தியில் பாஞ்சை வேந்தர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குன்றாத வீர உணர்ச்சியை பற்றியும், வீரம் மட்டுமே மன்னரின் அடையாளம் அல்ல சமுதாய ஒற்றுமையும் நம் மன்னரின் அடையாளம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் வீரன் சுந்தரலிங்கம், வீரன் வெள்ளையத்தேவன், தானாவதி பிள்ளை போன்றவர்களோடு இணைந்து பரங்கியர் படையை எதிர்கொண்டார் என்ற வரலாற்றை எடுத்துரைத்தேன்.
இன்றைய சூழலில் கல்வி என்பது மிகவும் முக்கியம். குறிப்பாக பெண் கல்வி மிக மிக அவசியம். எனவே அனைவரும் தன் வீட்டு பெண் பிள்ளைகளை கட்டாயம் படிக்க வைப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள் வைத்தேன்.
நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் சிறையில் இருந்த வருடமும் கொரானா கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த வருடமும் தவிர சுமார் 50 ஆண்டுகளாக மன்னர் கட்டபொம்மனின் நினைவு இடமான கயத்தாறுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதைப் போல் நானும் அன்னை சக்கதேவி ஆலயத்திற்கு வருடம்தோறும் வருவதாக உறுதி அளித்தேன்.
மன்னரின் புகழை தமிழகம் மட்டுமல்ல, இந்த தேசம் முழுக்க பரவிக் கிடக்கின்றது. அதன் அடையாளமாகத்தான் நம்முடைய தலைவர் வைகோ அவர்கள் பாரதப் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் இடத்தில் வைத்த வேண்டுகோளின்படி வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு மன்னர் அவர்களை தலைவரால் கவுரவிக்கப்பட்டது.
ஆதவன் இல்லாமல் விடியல் இல்லை..
சுவாசம் இல்லாமல் உயிர் இல்லை..
அலைகள் இல்லாமல் கடல் இல்லை..
உழவன் இல்லாமல் உண்ண உணவு இல்லை…
அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் இல்லாமல் அகிம்சை இல்லை..
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் இல்லாமல் விடுதலை வீர உணர்ச்சி என்பது இல்லை…
வீரபாண்டிய கட்டபொம்மன் தான் வீரத்தின் அடையாளம்..!
வீரபாண்டிய கட்டபொம்மன் தான் தெற்குச் சீமையின் அடையாளம்..!
வீரபாண்டிய கட்டபொம்மன் தான் சமுதாய ஒற்றுமையின் அடையாளம்..!
அழியாத புகழை கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழ் ஓங்குக ! என்று உரையாற்றினேன்.
உடன் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தி.மு. இராசேந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ், அரசு வழக்கறிஞர் சுப்பாராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கமலா யோகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வீரபாண்டி செல்லச்சாமி, பவுன் மாரியப்பன், தூத்துக்குடி மாநகர் செயலாளர் முருகபூபதி, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கணேசன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கேசவ நாராயணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிச்சாமி, விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் மணிராஜ், புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் காளைச்சாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் இக்பால் சின்ன மாரியப்பன், குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால், மதுரை பூப்பாண்டி,தேனி சுருளி மணி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி துணைத் தலைவர் அனல் செல்வராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சிவக்குமார்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் வள்ளிமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலகிருஷ்ணன், வரகனூர் காளிராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொம்மு துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணப்பெருமாள், வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி நிர்வாகிகள் தம்பிகள் சசிகுமார், கே சிவா அப்பு ராஜ், V.P.K. மகேஷ் வழக்கறிஞர் D. விஜய் உள்ளிட்ட சகோதரர்களும் இளைஞர்களும் கழக தோழர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர்.
அருள்மிகு ஸ்ரீ சக்கதேவி அன்னையின் ஆசி அனைவருக்கும் பரவட்டும்
மாமன்னர் கட்டபொம்மனின் புகழ் ஓங்கட்டும்.
நன்றி..
அன்புடன்
துரை வைகோ.
தலைமை கழக செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக.
14.05.2022.

மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை! வைகோ MP அறிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 12 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து, தேர்வு எழுத வந்தனர். தேர்வுமைய கண்காணிப்பாளர் சரஸ்வதி, அந்த மாணவிகளை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளார். ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்றும், அதை அகற்றி விட்டு சீருடையில் தேர்வு எழுதும்படியும் கூறி உள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 6 முஸ்லிம் மாணவிகளும், தாங்கள் அணிந்து வந்த ஹிஜாப்பை அகற்றி விட்டு, சீருடையில் தேர்வு எழுதினர் என்ற தகவலை அறிந்து மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு போராட்டம் நடத்தி உள்ளனர்.
பா.ஜ.க. ஆட்சி நடத்தும் கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அம்மாநிலத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகின்றது. அத்தகைய இந்துத்துவ சனாதன சக்திகளால் துணிச்சல் பெற்றுள்ள ஒருசிலர், தமிழ்நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையுடன் செயல்பட்டு, மதவெறியைத் தூண்ட முயற்சிப்பதைத்தான் உளுந்தூர்பேட்டை நிகழ்வு காட்டுகின்றது.
இந்தியாவிலேயே மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தமிழ்நாட்டு மண்ணில், மதவெறியைத் தூண்ட முயற்சிப்போரை, முளையிலேயே இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும்.
உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முஸ்லிம் மாணவர்களை ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்று உத்தரவிட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது, கல்வித் துறை விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்
சென்னை - 8
13.05.2022

Monday, May 9, 2022

ராஜபக்சேக்களை விரட்ட வேண்டும்! வைகோ MP அறிக்கை!

இலங்கைத் தீவில் சம உரிமை கோரிப் போராடிய ஈழத்தமிழர்கள் மீது போர் தொடுத்து, இலட்சக்கணக்கானவர்களைப் படுகொலை செய்து போரில் வெற்றி பெற்றதாகக் கூறி, சிங்கள மக்கள் இடையே இனவெறியைத் தூண்டி, தேர்தலில் வாக்குகளைப் பெற்று, ஆட்சிப்பொறுப்புக்கு வந்த குடியரசுத் தலைவர் கோத்தபாய ராஜபக்சே, தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தவறான கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகளின் விளைவாக, அந்த நாடு கடுமையான நெருக்கடியில் சிக்கி இருக்கின்றது.

இந்தியப் பெருங்கடலில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த முனைந்த சீனா, ராஜபக்சே சகோதரர்களைப் பயன்படுத்தி, அந்த நாட்டுக்கு உள்ளே கால் பதித்தது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்குப் பெற்றார்கள்; எண்ணெய்க் கிடங்குகள் அமைப்பதற்கு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். பெருந்தொகையைக் கடனாகக் கொடுத்து, படிப்படியாக இலங்கையைத் தன் கட்டுப்பாட்டுக்கு உள்ளே கொண்டு வர சீனா முயற்சிப்பதைப் புரிந்து கொண்ட இந்திய அரசு, தன் பங்குக்கு நிதியை அள்ளிக் கொடுத்து, இலங்கை அரசைத் தங்கள் வயப்படுத்த முனைந்தார்கள். சீனாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைக் கைவிடச் செய்து, எண்ணெய்க் கிடங்குகள் அமைப்பதற்கான உரிமத்தைப் பெற்றார்கள்.
2019 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பொறுப்பு ஏற்ற கோத்தபாய ராஜபக்சே, அயல்நாட்டு உரங்கள் இறக்குமதிக்கு முழுத்தடை விதித்ததால், தேயிலை விளைச்சல் 30 விழுக்காடு குறைந்தது.
பத்து இலட்சத்திற்கும் கூடுதலான ஐரோப்பியப் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்கு வந்து சென்றனர். இலங்கையின் பல தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர விடுதிகளின் மீது, ஈஸ்டர் பண்டிகை நாளில் நடைபெற்ற தாக்குதல்களின் விளைவாக 350 பயணிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுள் பெரும்பான்மையோர் ஐரோப்பியர்கள். அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா முடக்கத்தின் விளைவாக, ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் வருகை முழுமையாக நின்று போனது. எனவே, இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது.
உணவு, எண்ணெய், சமையல் எரிகாற்று போன்ற அன்றாடத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல், மக்கள் பரிதவிக்கின்றார்கள். மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக, மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடங்கி விட்டன; அறுவை மருத்துவம் நிறுத்தப்பட்டு விட்டது. அரசின் செலவுகளைக் குறைப்பதற்காக, பல நாடுகளில் இருக்கின்ற இலங்கைத் தூதரகங்களை மூடி விட்டார்கள்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, கடந்த 3 மாதங்களில் மட்டும், 23000 கோடி ரூபாய் இந்திய அரசு கடன் உதவி அளித்து இருக்கின்றது. கூடுதலாக, பெட்ரோல், டீசல், சமையல் எரிகாற்று உள்பட, சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிற்கு இந்திய அரசு உதவி அளித்து இருக்கின்றது. அதனால், கடந்த சில ஆண்டுகளில் 3 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்குக் காகிதப் பணத்தைக் கூடுதலாக அச்சிட்டு இருக்கின்றார்கள். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கின்ற இலங்கையை மீட்பதற்கு, உலக வங்கி 50000 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார்.
இந்த மாத இறுதிக்குள் அமெரிக்காவுக்கு 7000 கோடியும், 2026 ஆம் ஆண்டுக்குள் 25000 கோடி ரூபாயும் இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும். ஆனால், இலங்கை அரசிடம் பணம் இல்லை. நாடு திவால் ஆகக்கூடிய நிலைமையில் இருக்கின்றது.
இலங்கையில் தனித்தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்; இனப்படுகொலைப் போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்களை, பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் முன்வைத்து, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும்; தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்காக, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, 2014 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது.
இருப்பினும்கூட, இலங்கையின் இன்றைய நிலைமையைக் கருதி, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு உதவிட, தமிழக அரசின் சார்பில், அடிப்படைத் தேவைப் பொருள்களை அனுப்புவது என முடிவு செய்து, பொதுமக்கள் நிதி உதவி அளிக்குமாறு கோரி, முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி அளித்து இருக்கின்றோம்.
இலங்கை மக்களைப் பழி வாங்க வேண்டும்; அவர்கள் பட்டினி கிடந்து சாக வேண்டும் என்பது நமது நமது நோக்கம் அல்ல.
எரிப்பதற்கு விறகு கிடைக்காமல், தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து எரிப்பதாக, நேற்று என்னிடம் கூறினார்கள். கேட்க வேதனையாக இருந்தது.
இலங்கையின் இன்றைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு, ராஜபக்சே சகோதரர்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். அந்தக் கோரிக்கையை முன்வைத்து, நாளுக்குநாள் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டங்களை ஒடுக்குவதற்கு, நெருக்கடி நிலையை அறிவித்த கோத்தபாய அதைத் திரும்பப் பெற்றார். ஆனால், மீண்டும் நேற்று நெருக்கடி நிலையை அறிவித்து இருக்கின்றார். அதற்கு, ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.
ஆட்சிப் பொறுப்பில் இருந்து ராஜபக்சேக்கள் வெளியேறுமாறு, இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன.
எனவே, இலங்கை ஆட்சிப் பொறுப்பில் இருந்து இராஜபக்சே சகோதரர்கள் விலகுவதற்கு, அவர்களை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்
சென்னை - 8
09.05.2022

Sunday, May 8, 2022

புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம். வைகோ MP அறிக்கை!

எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீது இந்தியைத் திணித்து விட வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக, புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜிப்மர் இயக்குனர் ஒரு சுற்று அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.
ஜிப்மர் அலுவலகக் கோப்புகள் அனைத்தையும், எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்து இருக்கின்றார். மருத்தவம் கற்பிப்பதற்குப் பதிலாக ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி பள்ளிக்கூடம் ஆக்க முயற்சிக்கின்றார்.
எந்த வழியில் நுழைய முயற்சித்தாலும் இந்தியை விரட்டியடித்து தமிழைக் காக்க வேண்டியது தமிழரின் கடமை ஆகும்.
அந்தச் சுற்று அறிக்கையை அவர் உடனே திரும்பப் பெற வேண்டும்; அந்த இயக்குனரை இந்தி பேசும் மாநிலத்திற்குப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற மே 10 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், புதுவை ஜிப்மர் நுழைவாயில் முன்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே. மணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு; எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்ற பாவேந்தர் வாழ்ந்த மண்ணில், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்று, எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்
சென்னை - 8
08.05.2022

Saturday, May 7, 2022

ஆளுநர் ரவி அத்து மீறக் கூடாது; ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது! வைகோ MP அறிக்கை!

ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர், எந்தத் தத்துவத்தின் சாயலும் தம் மீது படுவதற்கு இடம் தரக் கூடாது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, அரசு அமைப்புச் சட்டத்தின்படி கடமை ஆற்றாமல், அத்துமீறி செயல்பட்டு வருகின்றார். ஒன்றிய பா.ஜ,க, அரசின் முகவராக ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் குரலை எதிரொலிக்கின்றார்.

நாட்டின் 73 ஆவது குடியரசு நாள் விழாவுக்கு, ஆளுநர் விடுத்த வாழத்துச் செய்தியில், மும்மொழிக்கு ஆதரவான அறிவுறுத்தலை வழங்கினார். மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவை என்றும் சுட்டிக்காட்டினார். உலகப் பொதுமறை திருக்குறளை வேத சட்ட தத்துவத்தினுள் அடைக்க முயன்றார்.
மார்ச் மாதம் கோவையில், தென் மண்டல பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர்,
“கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல; இந்தியா என்ற நாடு 1947 ஆம் ஆண்டு பிறந்தது அல்ல” என்று குறிப்பிட்டார்.
இது ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரின் குரல்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
உதகமண்டலத்தில் ஆளுநர் தன்னிச்சையாகக் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாடு குறித்து, தமிழ்நாடு அரசிடம் தகவல் கூடத் தெரிவிக்கவில்லை. இந்த மாநாட்டில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசினார். இந்தியா ஒரே நாடு; ஒரே குடும்பம் என்று குறிப்பிட்டு, இந்துத்துவ சனாதன சக்திகளின் ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்கிற கோட்பாட்டிற்கு வக்காலத்து வாங்கினார்.
மீண்டும் “ஒரே பாரதம்; உன்னத பாரதம்” என்ற பிரதமர் மோடியின் கருத்தை வலியுறுத்தி, சென்னையில் மீன்வளத்துறை கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி உள்ளார்.
தற்போது, சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆளுநர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்து கடுமையான குற்றச் சாட்டுகளை முன்வைத்து இருக்கின்றார்.
“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு; மனித உரிமை அமைப்பு; மாணவர் இயக்கங்கள் போல் பல முகமூடிகளை அணிந்து கொண்டு இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகச் செயல்படுகிறது. ஆப்கானிஸ்தான், இராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிட ஆட்களை அனுப்புகின்றது. அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே; பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாட்டைச் சீர்குலைப்பதையே நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றது”
என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருப்பது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்க்ள பேசுவது போல இருக்கின்றது.
பொறுப்பு வாய்ந்த ஆளுநர். இவ்வாறு ஒரு சிறுபான்மை அமைப்பின் மீது வலிந்து குற்றஞ் சாட்டுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. சட்டத்திற்கு உட்பட்டு இயங்கி வருகின்ற அமைப்பு ஆகும். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உயிர் இழந்த மக்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மத வேறுபாடு கருதாமல் துணிந்து முன் வந்தவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இளைஞர்கள்தான் என்பதை மக்கள் அறிவார்கள். சென்னை பெருமழை வெள்ளத்தில் மக்கள் தவித்த நேரத்தில் உதவிக் கரம் நீட்டியது அந்த அமைப்புதான்.
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்நோக்கத்துடன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஆபத்தான இயக்கம்; தீவிரவாத இயக்கம் என்று சாயம் பூச முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக ஆளுநர் கூறுவது உண்மையானால், சட்டப்படி நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டிக்க வேண்டியதுதானே? அதற்காகத்தானே ஒன்றிய பா.ஜ.க. அரசு தேசிய விசாரணை முகமை (NIA) எனும் அமைப்புக்கு அபரிதமான அதிகாரங்களை அளித்து இருக்கின்றது.
அது மட்டும் அல்ல; தமிழ்நாட்டில் சமயம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று, இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் தமிழ்நாடு என்ற கருத்தை, பலமுறை பேசி இருக்கின்றார். இந்தியத் தொழில்துறையின் தலைநகரம்தான் தமிழ்நாடே தவிர, ஆளுநர் கருதுவது போல, மதவெறிக்கு இங்கே இடம் இல்லை; வட இந்திய மாநிலங்களைப் போன்ற மதவெறிச் சண்டைகளுக்கு, தமிழ்நாட்டு மக்கள் இடம் தர மாட்டார்கள். இங்கே அனைத்துத் தரப்பு மக்களும், அமைதியாக வாழ்கின்றனர்.
ஆளுநர் ரவி, தொடர்ந்து மாநில அரசின் செயல்பாடுகளுக்குக் குறுக்கே நிற்பதையும், இந்துத்துவக் கோட்பாட்டிற்கு ஆதரவான கருத்துகளை முன்மொழிவதையும், அரசு அமைப்புச் சட்ட நெறிகளைக் காலில் போட்டு மிதிப்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்; தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் தரக் கூடாது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்பது, மாநில அரசின் அதிகாரம் ஆகும். ஆளுநர் தலையிட முயற்சிப்பது அத்துமீறல் ஆகும்.
வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்
சென்னை - 8
07.05.2022

Friday, May 6, 2022

மதிமுக-29 ஆம் ஆண்டு துவக்க விழா!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இலட்சிய இயக்கம் நெருப்பாற்றில் நீந்தி தனது 29 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த நிகழ்ச்சி தலைமைக் கழகம் தாயகத்தில் 06.05.2022 நேற்று காலையில் சிறப்பாக நடைபெற்றது. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினார். அதன்பிறகு, தொண்டர்களின் ஆரவார முழக்கங்களுக்கு இடையே கழகத்தின் வண்ண மணிக்கொடியை தலைவர் வைகோ அவர்கள் உயர்த்தி வைத்து கழகத் தோழர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தமிழ்நாட்டின் உயர்வுக்காகவே தொடர்ந்து போராடி வரும் கழகத்தின் 29 ஆம் ஆண்டு துவக்க விழா எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்வில், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரியகுமார், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன் (மாமன்ற உறுப்பினர்), டி.சி.இராஜேந்திரன், கழககுமார், வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி (மாமன்ற உறுப்பினர்), பூவை மு.பாபு, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழகச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர், அணிகளின் நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பொறுப்புகளை வகிக்கும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தார்கள்.

6-5-2022