எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீது இந்தியைத் திணித்து விட வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக, புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜிப்மர் இயக்குனர் ஒரு சுற்று அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.
ஜிப்மர் அலுவலகக் கோப்புகள் அனைத்தையும், எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்து இருக்கின்றார். மருத்தவம் கற்பிப்பதற்குப் பதிலாக ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி பள்ளிக்கூடம் ஆக்க முயற்சிக்கின்றார்.
எந்த வழியில் நுழைய முயற்சித்தாலும் இந்தியை விரட்டியடித்து தமிழைக் காக்க வேண்டியது தமிழரின் கடமை ஆகும்.
அந்தச் சுற்று அறிக்கையை அவர் உடனே திரும்பப் பெற வேண்டும்; அந்த இயக்குனரை இந்தி பேசும் மாநிலத்திற்குப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற மே 10 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், புதுவை ஜிப்மர் நுழைவாயில் முன்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே. மணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு; எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்ற பாவேந்தர் வாழ்ந்த மண்ணில், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்று, எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்
சென்னை - 8
08.05.2022
No comments:
Post a Comment