இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தின் முப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்குக் களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள்.
வையத்து மாந்தர் எல்லாம் மகிழ்ந்திடும் இந்த ஈகைத் திருநாள், மனிதநேயத்தின் மகத்துவத்தையும், ஈதல் இசைபட வாழ்தல் என்பதையே வாழ்வின் ஊதியம் என்ற உன்னதத்தையும் உரைத்திடும் பொன்னாள் ஆகும்.
ஏழை, எளியோரின் துன்ப துயரம் நீங்க, அவர்களுக்கு ஈத்து உவக்கும் இன்பத்தை எல்லோரும் பெறுவோம் என்னும் நன்னெறி துலங்க வாழ்வோம்.
எல்லையற்ற நிலப்பரப்பை ஆட்சி செய்தபோதிலும், ஓர் ஏழையைப் போலவே வாழ்க்கைச் சூழலை வகுத்துக் கொண்டு வாழ்ந்த அண்ணல் பெருமானால் நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை என்ற அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி நேர்மையுடனும், தூய்மையுடனும் செயல்படுவோம் என்று நானிலத்திற்கு அறிவிக்கும் நாள் இந்த நாள்.
இந்த இனிய நன்னாளில், சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்
சென்னை - 8
02.05.2022
No comments:
Post a Comment