தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் +2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மே 5) தொடங்குகின்றது. அதற்காக, தமிழகத்தில் 3081 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 38 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொதுத்தேர்வை 8 இலட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றார்கள்.
அதைப்போல, மே 6 நாளைய தினம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கின்றது.
கொரோனா கொடுந்துயரால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. பள்ளிகளும் திறக்கப்படாமல் இருந்தது. தேர்வுகள் நடைபெறாததால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இந்த ஆண்டு முதல், மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் படிப்படியாக நடைபெறத் தொடங்கியது.
நேரடியாக நடைபெறும் தேர்வுகள் தான் மாணவர்களின் திறன்களை மதிப்பிட உதவும். தமிழக அரசின் தொடர் முயற்சிகளால் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் தேர்வு எழுத உள்ளார்கள்.
தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் பயமோ, பதட்டமோ கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் தேர்வு அறைக்கு செல்ல வேண்டும். கொரோனா ஏற்படுத்தி இருக்கிற மனச் சிக்கல்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.
இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியாவிட்டாலோ அல்லது தேர்வில் தோல்வியுற்றாலோ மாணவர்கள் மனநிலை பாதிப்பு அடையத் தேவை இல்லை. அடுத்த வாய்ப்புகளில் அதிக மதிப்பெண்களை பெறுவோம் என்ற நம்பிக்கையை, மனதிடத்தை பெற்றிட வேண்டும்.
நம்மை ஆளாக்க அயராது பாடுபடும் பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற பதட்டம் அடையத் தேவையில்லை. எந்தத் துறையில் சென்றாலும் நாம் உயர முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றவர்களாக வாழ்வதே பெற்றோருக்கு நாம் செய்யும் கைமாறு என உணர்ந்து தேர்வு எழுதிட வேண்டும். ஆகவே, தன்னம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தேர்வுகளை எழுதி வெற்றிபெற மாணவச் செல்வங்களை வாழ்த்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
'தாயகம்'
சென்னை - 8
05.05.2022
No comments:
Post a Comment