Sunday, December 13, 2020

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் காத்திருப்புப் போராட்டம் மதிமுக ஆதரவு! வைகோ அறிக்கை!

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி கடந்த நவம்பர் 26 ஆம் தேதியில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் அமைதி வழி அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.
இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்துறையை முற்றிலும் சீர்குலைத்து கோடான கோடி மக்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என போராட்டக் களத்தில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய பாஜக அரசு தெரிவித்துவரும் நிலையில், டிசம்பர் 14 முதல் ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் போராட்டம் என அறப் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல விவசாயிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தீர்மானித்து உள்ளது.
அதன்படி டிசம்பர் 14ஆம் தேதி தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கும், தமிழகமெங்கும் நடைபெறும் போராட்டங்களுக்கும் மதிமுக ஆதரவை வழங்குகிறது.
அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வுரிமைக்காக டெல்லியில் விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதை மனதில் கொண்டு விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழகத்தில் அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
காத்திருப்பு போராட்டங்களில் மறுமலர்ச்சி திமுக விவசாய அணி தோழர்கள் அனைவரும் பங்கேற்று கடமையாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.12.2020

Friday, December 11, 2020

மதிமுக தலைமைக் கழகச் செய்திக் குறிப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் மலைரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அபிர்ஜான் கடந்த 14.10.2020 அன்று சவுதி அரேபியாவில் இறந்து போனார்.

அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு நிறைய ஆவணங்களை ஆயத்தம் செய்ய வேண்டி இருந்தது. மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வளைகுடாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள மதிமுக தோழர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.
அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதியில் உள்ள இந்தியத் தூதருக்கும், வைகோ அவர்கள் மின்அஞ்சல் எழுதி இருந்தார்கள்.
அனைத்துப் பணிகளும் முடிக்க தாமதம் ஏற்பட்டு 56 நாட்களுக்குப் பிறகு 10.12.2020 சனிக்கிழமை காலை அபிர்ஜான் உடல் சென்னை வந்து சேர்ந்தது. நேற்று இரவு 8:00 மணிக்கு குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ரெட் கிராஸ் ஆம்புலன்ஸ் மூலம் அந்த அந்த குடும்பத்தினர் தற்போது வசிக்கின்ற திருச்சிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
கேட்பாரற்றுக் கிடந்த உடலை மீட்டு தாயகம் வரக் காரணமாக இருந்த, வைகோ அவர்களுக்கு, அந்தக் குடும்பத்தினர் நன்றி கூறினர்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.12.2020

இந்திய குடியரசு கட்சி மூத்த தலைவர் சக்திதாசன் மறைவு! வைகோ இரங்கல்!

தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய குடியரசு கட்சியின் தமிழக தலைவருமான என் இதய நேசத்திற்குரிய சக்திதாசன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது.

சமூக நீதிக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் சமரசமில்லாமல் போராடி வந்தவர் தன் போராட்டத்தை நிறுத்திக் கொண்டார்.
சட்டமேதை அம்பேத்கர், ரெட்டமலை சீனிவாசன், தந்தை பெரியார் வழியில் பட்டிதொட்டி பட்டினக் கரை தோறும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வந்தவர். அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றி பௌத்தத்தைத் தழுவியவர்.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எனது வெற்றிக்காக சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நினைவில் வாழும் அண்ணன் தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களுடன் இணைந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர். இன்றைக்கு இருக்கின்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கியவர்.
அவரின் மறைவு இந்திய குடியரசுக் கட்சிக்கு மட்டும் அல்லாமல், தமிழகத்திற்கே பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய குடியரசுக் கட்சினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.12.2020

நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1150 கோடி டெண்டர் ஊழல்: விசுவரூபம் எடுக்கும் வினாக்களுக்கு விடை என்ன? வைகோ அறிக்கை!


தமிழக முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் விடுவதில் நடைபெறும் ஊழல்களை ஆதாரப்பூர்வமாக அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருக்கின்றது.

தஞ்சாவூரில் சாலைப் பணிகளுக்கு ரூ.1150 கோடி மதிப்பீட்டில் கடந்த ஜூலை மாதம் பிபிஎம்சி டெண்டர் (Performance Based Maintance Contract -PBMC) விடப்பட்டபோது, மிகவும் நல்ல நிலையில் உள்ள சாலைகள் பராமரிப்புக்காக இந்த டெண்டரில் சேர்க்கப்பட்டதையும், டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு இந்தப் பணிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளருக்குச் சுட்டிக்காட்டி அறப்போர் இயக்கம் புகார் செய்தது. எனவே அந்த டெண்டர் இரத்து செய்யப்பட்டது.
ஆனால் அதே பிபிஎம்சி டெண்டர் வேறு ஒரு பெயரில் (Area Based Comprehensive Road Improvements Strengthening Maintenance -AB-CRISM) இரண்டு டெண்டராகப் பிரிக்கப்பட்டது.
அதில் ஒன்று 208 கி.மீ. சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு ரூ.656 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, நவம்பர் 18 ஆம் தேதி திறக்கப்பட்டது. இன்னொன்று 254 கி.மீ. சாலை ரூ.494 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, நவம்பர் 19 ஆம் தேதி திறக்கப்பட்டது.
மேற்கண்ட இரு டெண்டர்கள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே அறப்போர் இயக்கம் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “இந்த ஒப்பந்தப் பணிகள் இரண்டு நிறுவனங்களுக்கு (RR Infra construction, JSV) என்று தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்து இருக்கின்றது. இது முறைகேடானது” என்று சுட்டிக்காட்டி இருந்தது.
அதன்பின்னர் டெண்டர் திறக்கப்பட்டு, அதில் இந்த இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு வெளியிட்டது.
ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் இ-டெண்டர் முறை என்பதால், இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் இ-டெண்டர் முறையில் பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளியை அளித்தாலும், குறிப்பிட்ட நிறுவனத்திற்குத்தான் அந்த டெண்டர் என்று முன்கூட்டியே எப்படி முடிவு செய்யப்பட்டது? இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் யார்?
இதுவரை பிபிஎம்சி டெண்டர்களில் ஒரு கிலோ மீட்டருக்கு, ரூபாய் ஒரு கோடி என திட்ட மதிப்பீடு செய்து வந்த நெடுஞ்சாலைத் துறை, ரூ.656 கோடி டெண்டரில் ஒரு கிலோ மீட்டருக்கு 3.15 கோடி என மதிப்பீட்டை உயர்த்தியதும், அதே போல் ரூ.494 கோடி டெண்டரில், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1.95 கோடி என்று மதிப்பீட்டை அதிகரித்ததும் ஏன்?
ஆதாரங்களுடன் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளருக்கு அறப்போர் இயக்கம் புகார் அளித்தும், குறிப்பிட்ட அந்த இரண்டு நிறுவனங்களுக்கு ரூ.1150 கோடி டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பின்னணியில் உள்ள ஊழல் நபர்கள் யார்?
தஞ்சாவூரில், நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரிலும், பராமரிப்பு என்ற பெயரிலும் பட்டியலில் இணைத்து ரூ.1150 கோடிக்கு டெண்டர் விடுவதற்கு காரணமானவர்கள் யார்?
விசுவரூபம் எடுக்கும் இந்த வினாக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில்கூற வேண்டும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.12.2020

Wednesday, December 9, 2020

ஊர் ஆட்சி மன்றங்களுக்கு, தமிழ்நாடு அரசு நிதி தரவில்லை; பணிகள் முடங்கி விட்டன - வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டில் ஊர் ஆட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்கள் பொறுப்பு ஏற்றுப் பத்து மாதங்கள் கடந்து விட்டன. ஊர் ஆட்சி மன்றங்களுக்கு, மாநில நிதிக்குழு மானியம் வழங்கினால்தான், குடிநீர், மின்விளக்குப் பணிகளை மேற்கொள்ளமுடியும்;; ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும்,

ஆனால், பத்து மாதங்கள் ஆகியும், மானிய உதவிகள் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.
அது மட்டும் அல்ல; நடுவண் அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் செய்யப்படும் வேலைகளுக்கு உரிய நிதியினையும் வழங்காமல் காலம் கடத்தி வருவது, மத்திய-மாநில அரசுகள் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.
எனவே, காலம் கடத்தாமல், மாநில நிதிக்குழு மானியத்தையும், மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியினையும் மத்திய மாநில அரசுகள் உடனே வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.12.2020

முதுபெரும் பெரியார் தொண்டர் வே.ஆனைமுத்து உடல்நலக் குறைவு பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரிப்பு!


மார்க்சிய - பெரியாரிய பொதுஉடைமைக் கட்சியின் பொதுச்செயலாளரும், சிந்தனையாளன் திங்கள் இதழின் ஆசிரியரும், 95 வயது நிரம்பிய பெரியார் பெருந்தொண்டருமான வே.ஆனைமுத்து அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசினர் சிறப்பு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து, வே.ஆனைமுத்து அவர்களின் புதல்வர் ஆனை.பன்னீர்செல்வம் அவர்களிடம் பொதுச்செயலாளர் வைகோ விசாரித்தார்.

பெரியவர் வே.ஆனைமுத்து அவர்கள் விரைவில் உடல்நலம் பெற்று, மருத்துவமனையிலிருந்து திரும்பி இயக்கப் பணியாற்ற வேண்டும் என்ற விழைவினை பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
08.12.2020

Sunday, December 6, 2020

வைகோ எம்பியை சந்தித்த விவசாய சங்க பிரதிநிதிகள்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்களை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் வாழ்வாதாரம் சம்பந்தமாக திரு.கி.வே. பொன்னையன் அவர்கள் தலைமையில் இன்று 6-12-2020 மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் சந்தித்தனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வாக்குச்சாவடி முகவர் - பணிக்குழு மண்டலவாரியாக தலைமைக் கழக மேற்பார்வையாளர்கள்!

1. சென்னை மண்டலம்
1. வடசென்னை கிழக்கு மாவட்டம்
2. வடசென்னை மேற்கு மாவட்டம்
3. தென்சென்னை கிழக்கு மாவட்டம்
4. தென்சென்னை மேற்கு மாவட்டம்
5. திருவள்ளூர் மாவட்டம்
6. காஞ்சிபுரம் மாவட்டம்
7. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
8. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
வழக்கறிஞர் ஆவடி இரா. அந்திரிதாஸ் - கழக தேர்தல் பணிச் செயலாளர்
பூங்காநகர் இராமதாஸ் -கழக தேர்தல் பணித் துணைச் செயலாளர்

2. வேலூர் மண்டலம்
1. வேலூர் மாவட்டம்
2. இராணிப்பேட்டை மாவட்டம்  
3. திருப்பத்தூர் மாவட்டம்
4. திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
5. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
வழக்கறிஞர் ஆர். செந்தில்செல்வன் - கழக தேர்தல் பணித் துணைச் செயலாளர்
ஜானகிராஜா - கழக தேர்தல் பணித் துணைச் செயலாளர்

3. விழுப்புரம் மண்டலம்
1. விழுப்புரம் மாவட்டம்
2. கள்ளக்குறிச்சி மாவட்டம்
3. கடலூர் கிழக்கு மாவட்டம்
4. கடலூர் மேற்கு மாவட்டம்
5. கடலூர் தெற்கு மாவட்டம்
வழக்கறிஞர்  பாசறை பாபு - கழக மாணவர் அணித் துணைச் செயலாளர்
என்.எஸ். அழகிரி - கழக கொள்கை விளக்க அணித் துணைச் செயலாளர்

4. திருச்சி மண்டலம்
1. திருச்சி மாநகர் மாவட்டம்
2. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்  
3. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
4. புதுக்கோட்டை மாவட்டம்
5. கரூர் மாவட்டம்
6. அரியலூர்-பெரம்பலூர் மாவட்டம்
பால. சசிகுமார் -கழக மாணவர் அணிச் செயலாளர்
ப.த. ஆசைத்தம்பி -கழக மாணவர் அணித் துணைச் செயலாளர்

5. தஞ்சை மண்டலம்
1. தஞ்சை தெற்கு மாவட்டம்
2. தஞ்சை வடக்கு மாவட்டம்  
3. நாகப்பட்டினம் மாவட்டம்
4. மயிலாடுதுறை மாவட்டம்
5. திருவாரூர் மாவட்டம்
வாரணவாசி கி. ராசேந்திரன் - கழக விவசாய அணித் துணைச் செயலாளர்
எஸ்.ஆர். செந்தில்குமார் - கழக தேர்தல் பணித் துணைச் செயலாளர்


6. சேலம் மண்டலம்
1. சேலம் மத்திய மாவட்டம்
2. சேலம் கிழக்கு மாவட்டம்  
3. சேலம் மேற்கு மாவட்டம்
4. தருமபுரி மாவட்டம்
5. கிருஷ்ணகிரி மாவட்டம்
கோவை மு. கிருஷ்ணசாமி - கழக தீர்மானக்குழு உறுப்பினர்
இள. கோபாலகிருஷ்ணன் - கழக மாணவர் அணித் துணைச் செயலாளர்

7. ஈரோடு மண்டலம்
1. ஈரோடு மாநகர் மாவட்டம்
2. ஈரோடு கிழக்கு மாவட்டம்  
3. ஈரோடு மேற்கு மாவட்டம்
4. திருப்பூர் புறநகர் மாவட்டம்
5. திருப்பூர் மாநகர் மாவட்டம்
6.. நாமக்கல் மாவட்டம்
வே. ஈஸ்வரன் -கழக இளைஞர் அணிச் செயலாளர்
ஆ. சேதுபதி -கழக தேர்தல் பணித் துணைச் செயலாளர்
8. கோவை மண்டலம்
1. கோவை மாநகர் மாவட்டம்
2. கோவை தெற்கு மாவட்டம்  
3. கோவை வடக்கு மாவட்டம்
4. நீலகிரி மாவட்டம்
மு. கார்த்திகேயன் - கழக தேர்தல் பணித் துணைச் செயலாளர்
ஆர். இரத்தினசாமி -கழக இளைஞர் அணித் துணைச் செயலாளர்

9. மதுரை மண்டலம்
1. மதுரை மாநகர் மாவட்டம்
2. மதுரை வடக்கு மாவட்டம்
3. மதுரை தெற்கு மாவட்டம்
4. சிவகங்கை மாவட்டம்
5. இராமநாதபுரம் மாவட்டம்
6. தேனி மாவட்டம்
நக்கீரன் கழக - மீனவர் அணிச் செயலாளர்
கேசவநாராயணன் - கழக தேர்தல் பணித் துணைச் செயலாளர்

10. நெல்லை மண்டலம்
1. நெல்லை மத்திய மாவட்டம்
2. நெல்லை புறநகர் மாவட்டம்
3. தென்காசி மாவட்டம்
4. விருதுநகர் தெற்கு மாவட்டம்
5. விருதுநகர் வடக்கு மாவட்டம்
மு. பாஸ்கரசேதுபதி -கழக தொண்டர் அணிச் செயலாளர்
விஜயகுமார் பாக்கியம் -கழக தேர்தல் பணித் துணைச் செயலாளர்

11. குமரி மண்டலம்
1. தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
2. தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
3. கன்னியாகுமரி மாவட்டம்
ப. கல்லத்தியான் -அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்
சுதா பாலசுப்பிரமணியம் -கழக தேர்தல் பணித் துணைச் செயலாளர்

மேற்கண்டவாறு நியமிக்கப்பட்டுள்ள தலைமைக் கழக மேற்பார்வையாளர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சட்டமன்றத் தொகுதிவாரியாக வாக்குச்சாவடி முகவர் தேர்வு குறித்து உரிய மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் தொடர்புகொண்டு இந்தப் பணிகளை ஒருங்கிணைத்திட வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி முகவர்களைத் தேர்வு செய்திடுமாறு பணிகளை விரைவுபடுத்தி, பட்டியலைத் தலைமைக் கழகத்திற்கும் அனுப்பி வைத்திட ஏற்பாடு செய்திடல் வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
05.12.2020

தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2021 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கை வரைவுக்குழு!

திரு. டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் -கழக ஆட்சிமன்றக்குழுச் செயலாளர்
திரு. ஆ. வந்தியத்தேவன்-கழக அமைப்புச் செயலாளர்
திரு. க. அழகுசுந்தரம்-கழக கொள்கைவிளக்க அணிச் செயலாளர்
திரு. ஆர்.டி. மாரியப்பன்-கழக உயர்நிலைக்குழு உறுப்பினர்
திரு. ஆவடி இரா. அந்திரிதாஸ்-கழக தேர்தல் பணிச் செயலாளர்
திரு. வே. ஈஸ்வரன்-கழக இளைஞர் அணிச் செயலாளர் ஆகியோர் தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2021 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கை வரைவுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
06.12.2020

அம்பேத்கர் நினைவு நாளில் வைகோ எம்பி மலர் மரியாதை!

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, இன்று 6-12-2020 காலை சென்னை கோயம்பேடு எதிரில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டக் கழகச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராஜேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, கே.கழககுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Saturday, December 5, 2020

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று 05.12.2020 காலை, கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் எண். 1
மத்திய பா.ஜ.க. அரசு 2020, செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களான வேளாண் விளைபொருள் வர்த்தகச் சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் போன்றவற்றையும், மின்சார சட்டம் 2020-ஐயும் திரும்பப் பெற வலியுறுத்தி வட இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த வேளாண் சட்டங்களால் வேளாண்மைத் தொழில் முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் சென்று விடும்; விவசாய விளைப்பொருட்களுக்கு விலையைத் தீர்மானிப்பது பெரு நிறுவனங்களாக இருக்கும்; ஒப்பந்த விவசாயத்தால் விவசாயிகள் பல வகையிலும் சுரண்டலுக்கு உள்ளாவார்கள். மின்சாரச் சட்டம், தனியார் துறைக்கு மின் உற்பத்தி - மின் பகிர்மானம் ஆகியவற்றைத் தாரைவார்த்துக் கொடுக்க வகை செய்வதால் இலவச மின்சாரம் பெற்று வரும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்தமாக வேளாண் தொழிலையே நெருக்கடிக்கு உள்ளாக்கும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திதான் விவசாயிகள் போராடுகின்றனர்.
கடந்த நவம்பர் 26, 27 தேதிகளில் உத்திரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லியை நோக்கி அணிவகுத்து சென்றவண்ணம் உள்ளனர்.
இந்திய வரலாறு காணாத மாபெரும் விவசாயிகள் எழுச்சியை மத்திய பா.ஜ.க. அரசு அலட்சியமாக நினைப்பது கண்டனத்துக்கு உரியது. கடந்த 10 நாட்களாக டெல்லியை முற்றுகையிட்டு அமைதியான அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறை ஏவுவதும் தடியடி நடத்துவதும் கண்டிக்கத் தக்கது. “ஆறு மாதங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராடுவோம்,” என்று விவசாயிகள் பிரகடனம் செய்துள்ளனர்.
எனவே, மத்திய பா.ஜ.க. அரசு இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 2
காவிரியின் குறுக்கே ‘மேகேதாட்டு’ என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டுவதற்கு ரூ. 9 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ள கர்நாடக அரசு, இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தீவிரமாக உள்ளது.
மேகேதாட்டு அணையின் மூலம் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு பெங்களூரு நகரக் குடிநீர்த் தேவைக்கும், 400 மெகா வாட் நீர் மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தவும் கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் 2018, பிப்ரவரியில் அளித்த தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக காவிரியின் குறுக்கே தடுப்பு அணை அமைப்பதற்கு கர்நாடக மாநிலம் அடாவடியாகச் செயல்பட்டு வருவதை ஏற்கவே முடியாது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியைக் கோரி உள்ளார். இதனைத் தொடர்ந்து 2020, நவம்பர் 18-ஆம் நாள் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ்ஜர்கி ஹோலி, டெல்லியில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களைச் சந்தித்து மேகேதாட்டு அணை கட்டுமானத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி தர வலியுறுத்தினார். அவரோடு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் சென்று மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடம் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வற்புறுத்தி உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுவதால், எடியூரப்பா மற்றும் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “கர்நாடக மாநில நீர்த் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்போம்,” என்று கூறியுள்ளார். இதன் மூலம் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுமானத் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு இசைவு அளித்திட முன்வந்து இருப்பது தெரிகிறது.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இத்திட்டத்தையே இரத்து செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 3
காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எரிவாயு அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து விவசாயிகளும், பொது மக்களும் போராடி வருகின்றனர். காவிரிப் பாசனப் பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த 2018, அக்டோபரில் மத்திய அரசு வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. இத்திட்டங்களுக்காக வேதாந்தா குழுமம் ரூ. 13,500 கோடியும், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் ரூ. 5,150 கோடியும் முதலீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்தன.
காவிரிப் படுகையில் மொத்தம் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மேற்கண்ட நிறுவனங்கள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தன.
“தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி வடிநிலப் பகுதிகளில் செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களால் வேளாண் தொழிலே கேள்விக்குறி ஆகி விடும்; உணவு உற்பத்தியும் பாதிக்கப்படும்,” என்று நாடாளுமன்றத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 26.07.2019 மற்றும் 05.12.2019 ஆகிய தேதிகளில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.
ஆனால் மத்திய அரசோ 2020 ஜனவரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொது மக்களிடமும் விவசாயிகளிடமும் கருத்து கேட்கத் தேவை இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. இதனால் காவிரிப் பாசனப் பகுதிகளில் விவசாயிகளிடையே ஏற்பட்ட கொந்தளிப்பால், தமிழக அரசு 2020, பிப்ரவரி 20-ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவிரிப் பாசன மாவட்டங்களைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’மாக அறிவித்து சட்ட முன்வரைவு ஒன்றை நிறைவேற்றியது.
அப்போதும் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களின் நிலை என்ன? கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தி ரூ. 92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017, ஜூலை 19-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த குறிப்பு ஆணை எண். 29 ஏன் இரத்து செய்யப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
கழகப் பொதுச் செயலாளர் வைகோவின் அறிக்கையைக் கண்ட பிறகே தமிழக அரசு கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்கும் முடிவைக் கைவிட்டது. ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பற்றி உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்நிலையில்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று தமிழக அரசு அறிவித்து சட்டம் இயற்றிய பின்னர், 2020, நவம்பர் மாதம் மத்திய அரசு, காவிரிப் படுகையை ஒட்டிய ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் புதிதாக மீண்டும் உரிமம் வழங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக விளைநிலப் பகுதிகளிலும் உரிமங்கள் அளிக்கப்படும்.
இதனால் காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களை தமிழக அரசு வெறும் பெயருக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்து சட்டம் இயற்றி இருக்கிறதா? என்று கேள்வி எழுகிறது.
எக்காரணத்தை முன்னிட்டும் காவிரி வடிநிலப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயுத் திட்டங்களுக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 4
தமிழ்நாட்டில் கடந்த 2020, நவம்பர் 25-ஆம் தேதி வீசிய ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பயிர்கள் சேதம் மற்றும் வீடுகள், கால்நடைகள் சேதம் குறித்து முழு வீச்சில் ஆய்வு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
அதேபோன்று டிசம்பர் 1-ஆம் தேதி உருவான ‘புரேவி’ புயலாலும் கனமழையாலும் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்புத் தொகை அளிக்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்ய முடியாமல், கொரோனா பேரிடர் காலத்தில் துயரப்படும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்துள்ள மீனவ மக்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண். 5
இராஜீவ் காந்தி கொலைவழக்கில் சேர்க்கப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியபடி, தமிழக அரசு 2018, செப்டம்பர் 9-ஆம் தேதி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவு எடுக்காமல் இரண்டு ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளார். தமிழக ஆளுநரின் அலட்சியப் போக்கை உச்ச நீதிமன்றமும் நவம்பர் 23-ஆம் தேதி கண்டனம் செய்திருக்கிறது.
தமிழக ஆளுநர், மத்திய பா.ஜ.க. அரசின் கண் அசைவில் செயல்படுவதால் ஏழு தமிழர்கள் விடுதலை பற்றி முடிவு எடுக்காமல் இருப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மத்திய பா.ஜ.க. அரசுடன் ஒட்டி உறவாடும் எடப்பாடி பழனிசாமி அரசு, ஏழு தமிழர் விடுதலையில் நடத்தும் நாடகத்தைத் தமிழக மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர்.
எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக ஆளுநர் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 6
தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.இ.அ.தி.மு.க., அரசு அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் அதன் எல்லாத் துறைகளிலும் எங்கும் ஊழல்; எதிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது.
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற முக்கியத் துறைகளில் ஒப்பந்தப் பணிகள் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் ஒட்டுமொத்த வேலைகளும் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே “பேக்கேஜ்” முறையில் வழங்கப்பட்டு ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. உள்ளாட்சித் துறையில் நடைபெறும் ஊழல் நீதிமன்றம் வரையில் சென்றிருக்கிறது.
போக்குவரத்துத் துறையில் அடுக்கடுக்காக நடைபெறும் ஊழல்கள் சந்தி சிரிக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேக வாகனங்களின் பதிவு எண்களைக் கண்காணிக்க கேமரா பொருத்துவதற்கு விடப்பட்ட டெண்டரில் ஊழல், முறைகேடுகள் அரங்கேறி இருப்பதால் ரூ. 900 கோடி ஊழல் டெண்டரை இரத்து செய்ய வேண்டும் என்று கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கடந்த நவம்பர் 20-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார்.
தற்போது போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் ‘ஆர்.டி.ஓ.’ அலுவலகங்களுக்கு ‘எஃப்.சி’-க்குச் செல்லும் வாகனங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்துதான் ‘ஒளிரும் பட்டை’, ‘வேகக்கட்டுப்பாட்டுக் கருவி’, ‘ஜி.பி.எஸ். கருவி’ போன்றவற்றை வாங்கிப் பொருத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இது குறிப்பிட்ட நிறுவனத்தின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள முறைகேடு, ஊழல் என்று அப்பட்டமாகத் தெரிகிறது.
மோட்டார் வாகனச் சட்டப்படி வாகனத்திற்கு ‘எஃப்.சி.’ செய்வதை ஆய்வு செய்து தகுதிச் சான்று வழங்குவது மோட்டார் வாகன அதிகாரியின் கடமையாகும். இதிலும் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் மூலம் தான் ‘எ~ப்.சி.’ செய்து வாகனங்களுக்குச் சான்று அளிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அத்தனியார் நிறுவனங்களிடம் ‘எஃப்.சி.’ செய்து அவர்கள் தரும் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டுதான் மோட்டார் வாகன அதிகாரி வாகனங்களுக்கு ‘எஃப்.சி.’ சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
சுற்றறிக்கை விடுத்து, வெளிப்படையாகவே ஊழலில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும், ஊழலில் ஊறித் திளைக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண். 7
பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு 17-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மொத்த உற்பத்தியில் 20 விழுக்காடு நைஜீரியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளாவில் அதிகப் பரப்பளவில் பயிரிடப்பட்டாலும் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதற்குக் காரணம் தமிழகத்தில் மரவள்ளியின் உற்பத்தித் திறன் அதிகமாகும்.
தமிழ்நாட்டில் சுமார் 5 இலட்சம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கரூர், சேலம், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெருமளவு பயிரிடப்பட்டு வருகிறது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர் என்பதால் இந்த மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி போன்ற உணவுப் பொருள்களும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் நாமக்கல், சேலம், ஈரோடு பகுதிகளில், ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி ஆலைகள் 400-க்கும் மேற்பட்டவை இயங்கி வந்தன. தற்போது மரவள்ளிக் கிழங்குக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் உற்பத்தியைக் குறைத்து விட்டனர். இதனால் மேற்கண்ட ஆலைகள் இயங்க முடியாமல் 200-ஆகக் குறைந்து விட்டன.
கடந்த வாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை ஒரு டன் ரூ. 7 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனது. ஆனால், இந்த வாரம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் முகவர்கள் ரூ. 4 ஆயிரத்து 500 மட்டுமே தீர்மானித்துள்ளனர். இதனால் உரிய விலை கிடைக்காமல் மரவள்ளிக் கிழங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தமிழக அரசே குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதைப் போலவே விவசாயிகள் உற்பத்தி செய்கிற வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததால் உற்பத்தி அதிகமாகும்போது ஏஜெண்டுகள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் வியர்வை சிந்தி, கடன்பட்டு, இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு சாகுபடி செய்த உணவுப் பயிர்களை சாலைகளில் கொட்டும் அவலம் தொடர்கின்றது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்கள் அனைத்துக்கும் உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி உற்பத்திச் செலவோடு மேலும் 50 விழுக்காடு சேர்த்து விளைபொருட்களுக்கு கொள்முதல் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
05.12.2020

Thursday, December 3, 2020

எஸ்ஆர்எம் & ராஜ் டிவி இல்ல திருமண வரவேற்பில் மணமக்களை வாழ்த்தினார் தலைவர் வைகோ!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள், 03.12.2020 நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் எம்.பி, அவர்களின் பேரன் எஸ்.நிரஞ்சன் - ராஜ் டிவி இயக்குநர் ரகுநாதன் அவர்கள் மகள் டாக்டர் ஆர்.சௌந்தர்யா ஆகியோர் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் ந.முருகன், வேளச்சேரி பகுதி செயலாளர் சு.செல்லப்பாண்டியன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் எஸ்ஆர்எம் வேதநாயகம், பெரம்பலூர் மாவட்டப் பொருளாளர் ஜெயசீலன் உடன் இருந்து மணமக்களை வாழ்த்தினர்.

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சி பெற ஆதரவுக் கரம் நீட்டுவோம்! வைகோ அறிக்கை!


இன்று உலக மாற்றுத் திறனாளிகள் நாளை முன்னிட்டு, அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

22 ஆண்டுகளுக்கு முன்பு, உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றம் என்ற அமைப்பை நிறுவினேன். சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு, திருப்பதி தேவஸ்தானம் பாலாஜி மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் மூலமாகவும் அறுவை மருத்துவம் செய்து, மருத்துவக் கருவிகளை வழங்கி, மறுவாழ்வுப் பணிகளை மனநிறைவுடன் செய்து வருகின்றேன். மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகளை, மத்திய மாநில அரசுகள் இலவசமாக வழங்கி வருகின்றன. அத்தகளை அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, அவர்களிடம் இருந்து ஏராளமான கருவிகளைப் பெற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி இருக்கின்றேன். இன்றளவும் இடைவிடாது அந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
நாடாளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி இருக்கின்றேன்.
முன்னேறிய மேற்கு உலக நாடுகள், ஜப்பான், கொரியா உள்ளிட்ட வளர்ந்த கிழக்கு நாடுகளில், பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளும் மற்றவர்களைப் போலத் தடை இன்றிச் செல்வதற்கும், பேருந்துகள், தொடரிகளில் பயணிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து இருக்கின்றார்கள். ஆனால், இந்தியாவில் இதுவரை பொது இடங்களில் அவர்களுக்கான கழிப்பு அறை வசதிகள் அறவே கிடையாது. அவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி ஓரங் கட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றார்கள்.
மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லர் அம்மையார், நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் வாழ்ந்து காட்டினார்; வரலாறு படைத்தார். எனவே, மாற்றுத் திறனாளிகள் காலத்தால் கைவிடப்பட்டவர்கள் அல்ல; சாதிக்கப் பிறந்தவர்கள். அவர்களுடைய முன்னேற்றப் பாதையில் இருக்கின்ற தடைக்கற்களை அகற்றிட, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு, அனைத்து உரிமைகளும் பெற்று, இன்புற்று வாழ, இந்த நாளில், அவர்களக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளை, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
03.12.2020

Wednesday, December 2, 2020

கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின்கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். வைகோ அறிக்கை!

சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை 2013 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகின்றது. அப்பல்கலைக் கழகத்துடன் இணைந்ததுதான் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும். அவற்றிற்கு, மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையும், 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில்  செயல் பட்டு வருகின்றது. ஆனால், கல்விக் கட்டணம் முன்பு இருந்தபடியே, ரூ 5.44 லட்சம் என அறிவித்து இருக்கின்றார்கள். 

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், சென்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம், பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளை விடச் கூடுதலாக வாங்கிய கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த ஆண்டு கல்விக் கட்டணம் ரூ 4 லட்சம் என மாணவர் சேர்க்கைக் குறிப்பு ஏட்டில் அரசு வெளியிட்டது. ஆனால், அதை ரூ 5.44 லட்சமாக உயர்த்தி, 12.11.2020 அன்று அரசு மீண்டும் அறிவித்துள்ளது.

கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளாக 30.11.2020 என அறிவித்து இருப்பது,  கண்டனத்திற்குரியது. 

அதேபோல், ஈரோடு மாவட்டம், பெருந்துறை மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்தி வருகின்றது. அது தற்பொழுது ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக  செயல்படுகின்றது. அங்கும் கல்விக் கட்டணம் ரூ 3.85 லட்சம் என அறிவித்து இருக்கின்றார்கள். இக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்.

இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும், இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்ற பிறகு, அவை அரசு மருத்துவக் கல்லூரிகளாக செயல்படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில் வாங்குகின்ற கட்டணத்தைத்தான், இந்த இரண்டு கல்லூரிகளிலும் வாங்க வேண்டும். 

அதை விடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலான கட்டணத்தை வசூல் செய்வது  சரி அல்ல.  

தமிழக அரசே, வசதி படைத்தோருக்காக, தனியாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும், ஒரு பல்  மருத்துவக் கல்லூரியையும் நடத்துவது போல் இருக்கின்றது. இது சமூக நீதிக்கும், ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரானது. எனவே, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமான ரூ 13,670 மட்டுமே, இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் வாங்க வேண்டும்.

கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி), அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான ரூ 11,610 மட்டுமே வாங்க வேண்டும்.

இக் கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவம்/ முதுநிலை பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைக்க வேண்டும். கட்டணத்தை கட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் போக்கைக் கைவிட வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விச்  செலவை அரசே ஏற்றது போல், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தொழிற் கல்லூரிகளில் பயிலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிட, தனி நிதியத்தை (முதலமைச்சர் நிவாரண நிதி போல்) அரசு உருவாக்கிட வேண்டும்.

“போஸ்ட் மெட்ரிக்” கல்வி உதவித் தொகையை முறையாக வழங்கிட வேண்டும். அதை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த உதவித் தொகையை பெறுவதற்கான  வருமான வரம்பை ரூ 2 லட்சத்தில் இருந்து, ரூ 8 லட்சமாக உயர்த்த வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளது; அவற்றை சரிபாதியாகக் குறைக்க வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
02.12.2020

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு, உடனே வழங்க வேண்டும். வைகோ கோரிக்கை!

மருத்துவத் துறையில், இந்தியாவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற்று இருக்கின்றது.  உலகின் பல நாடுகளில் இருந்து மருத்துவத்திற்காகத் தமிழகத்தை நாடி வரக் கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கின்றது. 

தமிழ்நாட்டில் 40000 அரசு மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில், 18000 பேர்களே உள்ளனர்.  எனவே, வழக்கமான காலத்திலேயே அவர்களுக்குக் கடுமையான பணி நெருக்கடிகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த எட்டு மாதங்களாக, கொரோனா பெருந்தொற்று நோயை எதிர்கொண்டு போராடுவதில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, அரசு மருத்துவர்கள் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, இரவு பகலாகப் பணி ஆற்றி வருகின்றனர். தலைமை நீதிபதி கூட, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்ந்து நலம் பெற்று இருக்கின்றார். ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்குப் பாதுகாப்பாக, அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.  

ஆனால், இந்தியா முழுமையும் அரசு மருத்துவர்கள் பெறுகின்ற ஊதியத்தை ஒப்பிடுகையில்,மருத்துவத் துறையில், இந்தியாவில் 25 ஆவது இடத்தில் இருக்கின்ற பிகார் மாநில அரசின் மருத்துவர்கள் பெறுகின்ற ஊதியத்தை விட, தமிழக அரசு அரசு மருத்துவர்கள் குறைந்த ஊதியத்தையே பெற்று வருகின்றார்கள் என்பது, அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. 

நடுவண் அரசு மருத்துவர்கள், 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை, மாநில அரசு மருத்துவர்கள் 15 ஆண்டுகள் கழித்துத்தான் பெறுகின்றார்கள்; அவர்கள் 9 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை 17 ஆண்டுகள் கழித்தும், 13 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை, 20 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்றார்கள். இதன் விளைவாக, நடுவண் அரசு மருத்துவர்கள், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ 1,23,000 பெறுகின்றபோது, மாநில அரசு மருத்துவர்கள் 86000 ரூபாய் மட்டுமே பெறுகின்றார்கள். 

எனவே, 14 ஆவது ஆண்டு முதல், பணி ஓய்வு பெறுகின்ற வரையிலும், நடுவண் அரசு மருத்துவர்களை விட மாதந்தோறும் 45000 ரூபாய் குறைவான ஊதியத்தையே பெறுகின்றார்கள். 

23.10.2009 ஆம் நாளிட்ட அரசு ஆணை 354 இன்படி, தற்போது உள்ள 8,15,17,20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை, 5,9,11,12 ஆண்டுகள் முடிந்தவுடன் தருமாறு மருத்துவர்கள் கோரி வருகின்றனர். குறிப்பாக, 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் ஞக்ஷ 4 உயர்வை, 13 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தருமாறு கேட்டு வருகின்றனர். அதன்படி,2017 ஆம் ஆண்டு முதல், தங்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.1,23,000 வழங்கக் கோரி, தமிழக அரசு மருத்துவர்கள் பல போராட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள். 

அவர்களுடைய போராட்டத்தில் நானும் பங்கேற்று ஆதரித்து உரை ஆற்றி இருக்கின்றேன். 

எனவே, 2018 ஆம் ஆண்டு, ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்ய துறை சார்ந்த குழு அமைக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என, அக்குழு பரிந்துரை அளித்தது. அக்குழுவின் பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, விரைந்து முடிவு எடுக்குமாறு, அதே ஆண்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்தது. 

ஓராண்டு கழிந்தும், அரசு அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 2 பெண் மருத்துவர்கள் உட்பட ஐந்து மருத்துவர்கள் சாகும் வரை உணவை மறுத்துப் போராட்டம் நடத்தினர். ஆயினும், மருத்துவர்கள் தங்கள் பணிகளைத் தடை இன்றித் தொடர்ந்து செய்து வந்தனர். 31.10.2019 அன்று, தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை நிறுத்தினர். ஆனால், அதன்பிறகு, 118 அரசு மருத்துவர்கள், நீண்ட தொலைவுக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டனர். 2020 பிப்ரவரி 28 ஆம் நாள், மருத்துவர்கள் பணி இட மாற்றத்தை, சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. ஆயினும், இன்னமும் சில மருத்துவர்களின் பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப்படவில்லை. 

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், மருத்துவர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
02.12.2020

Tuesday, December 1, 2020

பட்டியல், பழங்குடி இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்துவதா? மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ கண்டனம்!

ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக வஞ்சகம் இழைத்து வருகிறது. அதன் ஒரு கூறாக பட்டியல், பழங்குடி இன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை முற்றாக ஒழித்துக் கட்டும் வகையில் செயல்படுகிறது.

எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்புக்குப் பின்னர் கல்லூரிகளில் சேர்ந்து மேல் படிப்பு தொடர்வதற்காக, அண்ணல் அம்பேத்கர் வேண்டுகோளின்படி 1946 இல் ஆங்கிலோயர் ஆட்சிக் காலத்தில் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

நாடு விடுதலை அடைந்த பின்னர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை என்பது சிறுபான்மை இன மாணவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் நீடிக்கப்பட்டது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 2014 ஆம் ஆண்டு மத்தியில் பொறுப்பேற்ற பின்னர் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பதற்கு வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வந்தது.

மத்திய - மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான நிதியைப் பகிர்ந்துகொண்டு வந்த நிலையில், மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததால், தமிழக அரசும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையைக் குறைத்தது.

இத்திட்டத்திற்காக மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய தொகை ரூ.6 ஆயிரம் கோடி, 2019 இல் இத்தொகை பாதியாகக் குறைக்கப்பட்டு, 3 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மத்திய அரசு நிதி வழங்காததால், 14 மாநில அரசுகள் இத்திட்டத்தை அடியோடு நிறுத்திவிட்டன.

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை முற்றாக இரத்து செய்வதற்கு மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது.

இதனால் நாடு முழுவதும் 60 இலட்சம் பட்டியல் இன மற்றும் பழங்குடி இன மாணவர்கள் பள்ளிப் படிப்புக்குப் பின்னர், மேல் படிப்புக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்படுவார்கள் என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சிஅளிக்கிறது.

சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மக்களின் குழந்தைகள் கல்வி பெறும் உரிமையை நசுக்குவதற்கு பா.ஜ.க. அரசு மேற்கொண்டுள்ள முயற்சி கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

பட்டியல், பழங்குடி இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு மத்திய - மாநில அரசுகள் உரிய தொகையை ஒதுக்கீடு செய்து, இத்திட்டம் தொடர்ந்து செயல்பட ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
01.12.2020