Wednesday, December 2, 2020

கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின்கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். வைகோ அறிக்கை!

சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை 2013 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகின்றது. அப்பல்கலைக் கழகத்துடன் இணைந்ததுதான் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும். அவற்றிற்கு, மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையும், 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில்  செயல் பட்டு வருகின்றது. ஆனால், கல்விக் கட்டணம் முன்பு இருந்தபடியே, ரூ 5.44 லட்சம் என அறிவித்து இருக்கின்றார்கள். 

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், சென்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம், பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளை விடச் கூடுதலாக வாங்கிய கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த ஆண்டு கல்விக் கட்டணம் ரூ 4 லட்சம் என மாணவர் சேர்க்கைக் குறிப்பு ஏட்டில் அரசு வெளியிட்டது. ஆனால், அதை ரூ 5.44 லட்சமாக உயர்த்தி, 12.11.2020 அன்று அரசு மீண்டும் அறிவித்துள்ளது.

கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளாக 30.11.2020 என அறிவித்து இருப்பது,  கண்டனத்திற்குரியது. 

அதேபோல், ஈரோடு மாவட்டம், பெருந்துறை மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்தி வருகின்றது. அது தற்பொழுது ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக  செயல்படுகின்றது. அங்கும் கல்விக் கட்டணம் ரூ 3.85 லட்சம் என அறிவித்து இருக்கின்றார்கள். இக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்.

இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும், இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்ற பிறகு, அவை அரசு மருத்துவக் கல்லூரிகளாக செயல்படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில் வாங்குகின்ற கட்டணத்தைத்தான், இந்த இரண்டு கல்லூரிகளிலும் வாங்க வேண்டும். 

அதை விடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலான கட்டணத்தை வசூல் செய்வது  சரி அல்ல.  

தமிழக அரசே, வசதி படைத்தோருக்காக, தனியாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும், ஒரு பல்  மருத்துவக் கல்லூரியையும் நடத்துவது போல் இருக்கின்றது. இது சமூக நீதிக்கும், ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரானது. எனவே, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமான ரூ 13,670 மட்டுமே, இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் வாங்க வேண்டும்.

கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி), அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான ரூ 11,610 மட்டுமே வாங்க வேண்டும்.

இக் கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவம்/ முதுநிலை பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைக்க வேண்டும். கட்டணத்தை கட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் போக்கைக் கைவிட வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விச்  செலவை அரசே ஏற்றது போல், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தொழிற் கல்லூரிகளில் பயிலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிட, தனி நிதியத்தை (முதலமைச்சர் நிவாரண நிதி போல்) அரசு உருவாக்கிட வேண்டும்.

“போஸ்ட் மெட்ரிக்” கல்வி உதவித் தொகையை முறையாக வழங்கிட வேண்டும். அதை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த உதவித் தொகையை பெறுவதற்கான  வருமான வரம்பை ரூ 2 லட்சத்தில் இருந்து, ரூ 8 லட்சமாக உயர்த்த வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளது; அவற்றை சரிபாதியாகக் குறைக்க வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
02.12.2020

No comments:

Post a Comment