திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டுகோள் விடுத்து, பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகின்றன.
இக்கூட்டங்களில் மக்கள் அணி, அணியாக திரண்டு வந்து தங்கள் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.
தமிழக அரசின் நிர்வாக அலட்சியத்தால் ஊராட்சிப்பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சுகாதாரம், வீடு கட்டும் திட்டங்கள், சாலைப் பணிகள் போன்றவை பாதிக்கப்பட்டு உள்ளன.
திமுக முன்னின்று நடத்தும் கிராம சபை கூட்டங்கள் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருவதை பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
ஊராட்சி சட்ட விதிகளைக் காரணம் காட்டி, கிராமசபைக் கூட்டங்களை நடத்த தடை போடும் எடப்பாடி பழனிசாமி அரசு, சட்டப்படி ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியை பெற்றுத் தரவும், மாநில அரசின் நிதியை வழங்காமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதும் நியாயமா?
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதைத் தடுக்க கடந்த அக்டோபரில் இக்கூட்டங்களை நடத்த தடை போடப்பட்டது.
ஆனால் தடைகளைத் தகர்த்து வெற்றிகரமாக கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
இப்பொழுதும் மக்கள் பெருந்திரள் பங்கேற்புடன் கிராமசபைக் கூட்டங்கள் நடப்பதை தடுக்க அதிமுக அரசால் போடப்படும் தடைகள் நொறுங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
25.12.2020
No comments:
Post a Comment