இன்று உலக மாற்றுத் திறனாளிகள் நாளை முன்னிட்டு, அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
22 ஆண்டுகளுக்கு முன்பு, உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றம் என்ற அமைப்பை நிறுவினேன். சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு, திருப்பதி தேவஸ்தானம் பாலாஜி மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் மூலமாகவும் அறுவை மருத்துவம் செய்து, மருத்துவக் கருவிகளை வழங்கி, மறுவாழ்வுப் பணிகளை மனநிறைவுடன் செய்து வருகின்றேன். மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகளை, மத்திய மாநில அரசுகள் இலவசமாக வழங்கி வருகின்றன. அத்தகளை அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, அவர்களிடம் இருந்து ஏராளமான கருவிகளைப் பெற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி இருக்கின்றேன். இன்றளவும் இடைவிடாது அந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
நாடாளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி இருக்கின்றேன்.
முன்னேறிய மேற்கு உலக நாடுகள், ஜப்பான், கொரியா உள்ளிட்ட வளர்ந்த கிழக்கு நாடுகளில், பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளும் மற்றவர்களைப் போலத் தடை இன்றிச் செல்வதற்கும், பேருந்துகள், தொடரிகளில் பயணிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து இருக்கின்றார்கள். ஆனால், இந்தியாவில் இதுவரை பொது இடங்களில் அவர்களுக்கான கழிப்பு அறை வசதிகள் அறவே கிடையாது. அவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி ஓரங் கட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றார்கள்.
மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லர் அம்மையார், நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் வாழ்ந்து காட்டினார்; வரலாறு படைத்தார். எனவே, மாற்றுத் திறனாளிகள் காலத்தால் கைவிடப்பட்டவர்கள் அல்ல; சாதிக்கப் பிறந்தவர்கள். அவர்களுடைய முன்னேற்றப் பாதையில் இருக்கின்ற தடைக்கற்களை அகற்றிட, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு, அனைத்து உரிமைகளும் பெற்று, இன்புற்று வாழ, இந்த நாளில், அவர்களக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளை, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
03.12.2020
No comments:
Post a Comment