மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 18.12.2020 அன்று சென்னை -வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:-
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅ~து ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டோம்என் பார்க்கும் நிலை
என்று உழவு அதிகாரத்தில் மூன்று பாடல்களைச் சொல்லி,
மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
என்று உழவர் பெருங்குடி மக்களுடைய உன்னதத்தைக் குறளோவியமாகத் தீட்டி, எழில்மிகு வள்ளுவர் கோட்டத்தை அமைத்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய கனவு நனவாகின்ற விதத்தில், வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில், அவரால் திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களுடைய சிலைக்கு அருகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று இருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உண்ணாநிலை அறப்போரின் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் - இன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் - நாளை கோடையில் மலரப் போகின்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய முதலமைச்சர் ஆருயிர்ச் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களே,
தாய்க் கழகத்திலிருந்து எங்களைப் பாராட்டுவதற்கு வந்து அமர்ந்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர் ஆருயிர் அண்ணன் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கங்களாகத் திகழுகின்ற கட்சிகளின் மதிப்புமிக்கத் தலைவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே, அன்புடைய தாய்மார்களே, அருமைப் பெரியோர்களே வீறுகொண்டு வந்திருக்கின்ற வாலிப வேங்கைகளே, ஜனநாயகத்தின் விழிகளாகச் செவிகளாகத் திகழ்கின்ற செய்தியாளர்களே, ஊடக ஒளிப்பதிவாளர்களே சிரம் தாழ்ந்த வணக்கம்.
“எங்களைத் தூக்கிலே தொங்க விடாதீர்கள். தூக்குக் கயிற்றை எங்கள் கழுத்திலே மாட்டாதீர்கள். எங்கள் கண்களில் கட்டப்பட்டு இருக்கின்ற கருப்புத் துணியை அவிழ்த்து விடுங்கள். நாங்கள் மடிகின்ற நேரத்தில் புன்னகை பூத்தவாறு இந்த மண்ணைப் பார்த்தவாறு மடிய விரும்புகின்றோம்.
நாங்கள் புரட்சிக்காரர்கள். நாங்கள் ஆயுதம் ஏந்திகள். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே எங்களை தூக்கிலிடாதீர்கள். எங்களின் மார்பை நோக்கிச் சுடுங்கள். உங்கள் துப்பாக்கி ரவைகள் எங்கள் மார்பை துளைத்துக் கொண்டு செல்லட்டும். எங்கள் பச்சை இரத்தம் இந்த மண்ணில் பரிமாறப்படட்டும்” என்று சொன்ன பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் வழி வந்த வீராதி வீரர்கள் பஞ்சாப் சிங்கங்களின் கர்ஜனையால் டெல்லியே நடுங்கிக் கொண்டு இருக்கக்கூடிய நிலையில், தலைநகர் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் துருட்டோ, “நாம் ஒரு குடும்பம். நமது நண்பர்கள் அங்கே போராடுகின்றார்கள். அவர்களை ஆதரிக்கின்றேன்” என்று கூறினார். இந்திய அரசு ஆட்சேபனை தெரிவித்தது. அதைக் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் நான் ஆதரிக்கின்றேன் என்று கூறினார்.
ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அந்தோணியா கட்டரஸ், “இந்தியாவில் விவசாயிகள் போராடுகின்றார்கள். உரிமைகளுக்காகப் போராடுகின்றார்கள். உரிமைகளுக்காக யார் எங்கே போராடினாலும் அவர்களை ஆதரிக்க வேண்டியது நம்முடைய கடமை” என்று கூறினார்.
இதே நேரத்தில் டெல்லி போராட்டத்தை ஆதரித்து கலிபோர்னியா, சிட்னி, இலண்டன், கனடா நகரங்கள் என உலகத்தின் பல பகுதிகளில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் போராடுகின்றார்கள்.
இந்த டிசம்பர் 18 ஆம் நாள், இந்திய விடுதலை வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஐக்கிய மாகாணத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கசையடி கொடுக்கப்பட்டது. நைனிடால் சிறைச்சாலையில் இருந்த ஆசிய ஜோதி - மனிதருள் மாணிக்கம் பண்டித ஜவஹர்லால் நேரு இந்தச் செய்திகைக் கேள்விப்பட்டு, கசையடியை நிறுத்த வேண்டும் என்று நவம்பர் 1 ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார். நிறுத்தப்படவில்லை. இதனை அறிந்த நேரு, நான் உண்ணாநிலை அறப்போரைத் தொடங்கப் போகின்றேன் என்று மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் தொடங்கிய நாள்தான் 1930 டிசம்பர் 18.
மூன்று நாட்கள் உண்ணாவிரதம் முடிந்தபிறகு பிரிட்டிஷ் அரசு கசையடியை நிறுத்திக் கொண்டது என்பது வரலாறு.
“முதலமைச்சர் அவர்களே ஐந்து மாத காலத்திற்குப் பின்னர் நீங்கள் எங்கே இருக்கப் போகிறீர்கள்?” என்று பாலகிருஷ்ணன் கேட்டார். எதிரே இருந்த மக்கள் நீங்கள் சொன்னீர்கள், “புழலாக இருக்கலாம் அல்லது வேலூராக இருக்கலாம்” என்று.
ஆனால் முதலமைச்சரே ஒப்புக்கொண்டு விட்டார். நமது கூட்டணித் தலைவருக்கு வெற்றி. முதலமைச்சர் இன்றைக்கு என்ன பேசியிருக்கிறார் என்று ‘மாலை முரசு’ ஏட்டில் முதல் பக்கத்தில் வந்திருக்கின்றது. அவர் சொல்கிறார், “நான் மட்டும் முதலமைச்சர் அல்ல, மக்கள் எல்லோரும் முதலமைச்சர்கள்” என்று. ஐந்து மாத காலத்திற்குப் பின்னர் அவர் மக்களில் ஒருவராக இருந்து, நானும் முதலமைச்சர்தான் என்று சொல்லிக்கொள்வதற்கு ஏற்ற விதத்தில், நான் மட்டும் முதலமைச்சர் அல்ல, மக்கள் எல்லோரும் முதலமைச்சர்கள் என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.
மூன்று வேளாண் சட்டங்களை எப்படிக் கொண்டுவந்தார்கள் என்பதை எல்லோரும் விளக்கினார்கள். பேராசிரியர் ஜவாஹிருல்லா அழகாகச் சொன்னார். நெருக்கடி நிலை காலத்தில் கல்வித் துறையும், வனத் துறையும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் விவசாயம் எடுத்துச் செல்லப்படவில்லை. விவசாயம் மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், மாநிலப் பட்டியலில் இன்றும் இருக்கின்றது.
மாநிலப் பட்டியலில் இருக்கின்ற ஒரு பொருள் மீது எப்படி மூன்று சட்டங்களைக் கொண்டுவந்தீர்கள்?
ஐ.ஏ.எஸ். முன்னாள் அதிகாரிகள் 78 பேர் சேர்ந்து மிகத் திட்டவட்டமாக ஒரு அறிக்கை தந்திருக்கின்றார்கள். நாங்கள் அந்தச் சட்டங்களை வரி விடாமல் அலசி ஆராய்ந்து பார்த்தோம். கூட்டாட்சி தத்துவத்தின் குணாதிசயத்தையே குழிதோண்டிப் புதைக்கின்ற விதத்தில் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. கூட்டாட்சிக் கோட்டையின் செங்கல்கள் ஒவ்வொன்றாக உருவப்படுகின்றன. இந்த மூன்று சட்டங்களில் ஒன்று அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 இல் கொண்டுவரப்பட்டது. உருளைக் கிழங்கு, வெங்காயம், கோதுமை, நெல், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் எல்லாம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்தது. இந்தப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தரும் கொள்கை நிலைநாட்டப்பட்டு இருந்தது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின் மூலம் இந்தப் பொருட்கள் எல்லாம் அதிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இன்றைக்கு அவை அத்தியாவசியப் பொருட்கள் கிடையாது. ஆகவே அவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்க வேண்டியதும் இல்லை, அரசாங்கம் கொள்முதல் செய்ய வேண்டியதும் இல்லை.
இந்தக் கொடுமையான சட்டத்தைக் கொண்டுவந்த பா.ஜ.க. அரசுதான், அகில இந்திய அளவில் வேளாண்மை வணிக மண்டலம் என்ற இரண்டாவது சட்டத்தைக் கொண்டுவந்தது. பிற மாநிங்களில் மண்டிகள் என்று அழைக்கப்படுபவற்றை, ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களாக டாக்டர் கலைஞர் அவர்கள் இங்கே உருவாக்கினார்கள். மக்களின் விளை பொருட்களைத் தீர்மானிக்கின்ற சந்தைகளாக உருவாக்கினார். இனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கிடையாது. அதை அகற்றுவதற்காகத்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
வேளாண் உற்பத்திச் செலவு விலைக்கான ஆணையம், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து இருக்கின்ற விவசாய விளைபொருட்கள் பட்டியலிலிருந்து நெல், கோதுமை, சோளம், மக்காச் சோளம், ராகி, பார்லி, கம்பு உள்ளிட்ட எழு வகை உணவு தானியங்கள், ஏழு வகை எண்ணெய் வித்துகள், ஐந்து வகை பயிறு, பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, சணல், தேங்காய் நான்கு வகை வணிகப் பயிர்கள் என மொத்தம் 23 பொருட்களை நீக்கிவிட்டார்கள்.
வேளாண் நில ஒப்பந்த பண்ணைச் சட்டத்தின்படி இதற்கு முன்னர் இருந்த நிலையை மாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களே நேரடியாக வந்து ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். இந்த நிலத்தில், இத்தனை ஏக்கரில், இதுதான் சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு விதையும், உரமும் நாங்கள் தந்துவிடுகிறோம். பொருளை எங்களுக்குத்தான் தர வேண்டும். நாங்கள் நிர்ணயிக்கின்ற விலைக்குத்தான் தர வேண்டும். இதுதான் இந்தச் சட்டத்தில் இருக்கின்றது.
விலை உயர்ந்து இருக்கின்றது என்று விவசாயிகள் அதிக விலைக்கு விற்க முடியாது. ஒரு விவசாயி தன் நிலத்தில் என்ன பயிரிட வேண்டும் என்பதை அவன் தீர்மானிக்க முடியாது. பெரு வணிகர்கள், கொள்ளை லாபக்காரர்கள், அதானி, அம்பானி போன்ற பெரும் வர்த்தக நிறுவனங்கள், பன்னாட்டு பகாசூரக் கம்பெனிகள் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்வார்கள்.
மிகுந்த முன்னெச்சரிக்கையோடும், திட்டத்தோடும் நரேந்திர மோடி செயல்பட்டு இருக்கின்றார். அதன் விளைவாகத்தான் அரியாணா மாநிலத்தில் இரயில்வே துறைக்கு என்று நிலத்தைக் கைப்பற்றி, அடிமாட்டு விலைக்கு அதை அதானி கம்பெனிக்கு விற்றார்கள். இலட்சக்கணக்கான டன் விளைபொருட்களைச் சேமித்து, பதுக்குவதற்காக, விலை ஏற்றத்தை ஏற்படுத்துவதற்காக அந்த இடத்தில் அவன் சேமிப்புக் கிடங்குகளை அமைத்துவிட்டான்.
அதுமட்டுமல்ல, பஞ்சாப் மாநிலத்தில் மோகோ என்கின்ற இடத்தில் 14 சேமிப்புக் கிடங்குகளை அதானி கம்பெனி அமைத்திருக்கின்றான். 8 இலட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் எடையுள்ள விளை பொருட்களை இந்தச் சேமிப்புக் கிடங்குகளில் வைக்க முடியும். இவை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்டுவிட்டன.
விவசாயி பாடுபட்டு என்ன பலன்? கடனிலே பிறந்து, கடன் வாங்கி, கடனிலே வளர்ந்து, கடனிலேயே மடிகின்றான் விவசாயி.
நான் ஒரு விவசாயி என்கின்ற முறையில் பேசுகின்றேன். எனக்கு கலைப்பை பிடித்து உழவும் தெரியும், மாட்டு வண்டி பூட்டி வேகமாகச் செல்லவும் முடியும்.
நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்ததைப் பற்றி டி.ஆர். பாலு அவர்களும், தம்பி சிவா அவர்களும் மிக அழகாக எடுத்துரைத்தார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது என்றால், அதனை எதிர்த்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒருவர் சொன்னாலும், வாக்கெடுப்பு நடத்தித்தான் ஆக வேண்டும்.
மக்களவையின் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பினால், நிலைக்குழுவுக்கு அனுப்புவார்கள். மாநிலங்கள் அவையில் தெரிவுக் குழுவுக்கு அனுப்புவார்கள். இந்த முறை இருந்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதல் முறை இருந்தபோது, தெரிவுக் குழுக்களுக்கு அனுப்புகின்ற மசோதாக்களின் எண்ணிக்கை 60 சதவிகிதமாக இருந்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது அரசில், 71 சதவிகிதம் நிலைக் குழுக்களுக்கும், தெரிவுக் குழுக்களுக்கும் மசோதாக்கள் அனுப்பப்பட்டன.
ஆனால், 2014 இல் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததற்குப் பிறகு, அது 25 சதவிகிதமாகக் குறைந்தது.
இதன் பிறகு இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு மசோதாவைக்கூட நிலைக் குழுவுக்கும், தெரிவுக் குழுவுக்கும் அனுப்பவில்லை. ஆக ஜனநாயகத்தை அழிக்கின்றார்கள்; படுகொலை செய்கின்றார்கள்.
200 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டியத்தில் பிரிட்டிஷ் படையில் இருந்த மகர் ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் போராடி வீரமரணம் அடைந்த 200ஆவது நினைவு நாள் பீமாகோரேகானில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்று மகர் ராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் பங்கேற்றனர். எல்கார் பரிஷத் நடத்திய அந்நிகழ்ச்சியில் இந்துத்துவ சனாதன சக்திகளை கண்டனம் செய்து உரையாற்றிய சிந்தனையாளர்களான கவிஞர் வரவர ராவ், சுதா பரத்வாஜ், கௌதம் நௌலகா போன்ற 80, 85 வயது தாண்டியவர்களை பொய் வழக்கில் கைது செய்து, ஈவு, இரக்கம் இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்.
விவசாயப் போராட்டக் களத்தில் இதுவரை 21 பேர் மடிந்திருக்கிறார்கள். ஆம்! அரவிந்த் கெஜ்ரிவால் ஆண் சிங்கம் அல்லவா? அவர் கிழித்து எறிந்திருக்கிறார். அவரைப் பாராட்டுகின்றேன். I Salute him. இதுவரை 21 பேர் மடிந்திருக்கிறார்கள் என்று அவர்தான் சொல்லி இருக்கிறார். இந்த உண்ணாவிரதப் பந்தலில் இருந்தவாறு 21 பேருக்கும் நாங்கள் வீரவணக்கம் செலுத்துகிறோம்.
பஞ்சாப்-க்கு, அரியாணா-வுக்குப் பக்கபலமாக, உத்திரப்பிரதேசத்திலிருந்து திக்காயத்தின் மகன் பத்து இலட்சம் பேரோடு திரண்டு வருகிறேன் என்று கூறினாராமே, அதைப் போல தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஜிப்ரால்டர் கோட்டையைப் போல தென்னகத்தில் தமிழகம் இருக்கின்றது.
இந்தப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. ஆம்! இருளுக்குப் பின்னால்தானே வெளிச்சம். கரிய இருட்டு வைகறைக்கு கட்டியம் கூறுகிறது என்பதைப் போல, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலைமையில் உதயசூரியன் உதித்து, தேர்தல் களத்தில் வெற்றி பெற்று, தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வந்து, இந்தச் சட்டங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, விவசாயிகளைப் பாதுகாக்கின்ற முதலமைச்சராகத் திகழ்வார்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைக் கொண்டுவந்து, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி, ஏழாயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரைப் போல, உழவர் பெருங்குடி மக்களைக் காப்பார். வெல்க உதயசூரியன்.
No comments:
Post a Comment