Friday, December 11, 2020

இந்திய குடியரசு கட்சி மூத்த தலைவர் சக்திதாசன் மறைவு! வைகோ இரங்கல்!

தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய குடியரசு கட்சியின் தமிழக தலைவருமான என் இதய நேசத்திற்குரிய சக்திதாசன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது.

சமூக நீதிக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் சமரசமில்லாமல் போராடி வந்தவர் தன் போராட்டத்தை நிறுத்திக் கொண்டார்.
சட்டமேதை அம்பேத்கர், ரெட்டமலை சீனிவாசன், தந்தை பெரியார் வழியில் பட்டிதொட்டி பட்டினக் கரை தோறும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வந்தவர். அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றி பௌத்தத்தைத் தழுவியவர்.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எனது வெற்றிக்காக சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நினைவில் வாழும் அண்ணன் தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களுடன் இணைந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர். இன்றைக்கு இருக்கின்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கியவர்.
அவரின் மறைவு இந்திய குடியரசுக் கட்சிக்கு மட்டும் அல்லாமல், தமிழகத்திற்கே பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய குடியரசுக் கட்சினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.12.2020

No comments:

Post a Comment