Wednesday, April 25, 2018

ஸ்டெர்லைட்டை மூட நாளை மதுரை உயர்நீதிமன்ற கிளை வருகிறார் வைகோ!

மக்களை அழிக்கும் நாசகார தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் வாதாட நாளை 26.04.2018 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வருகை தருகிறார்.

கழக வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தகவல் : கழக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணன் மதுரை சுப்பாராஜ் அவர்கள். தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்: 94437-94751

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

கலிங்கப்பட்டி இராணுவ வீரர் இரா.செல்வகுமார் இறுதி அஞ்சலியில் வைகோ!

கலிங்கப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் இரா.செல்வகுமார் அசாமில் கடமையாற்றும்போது விபத்தில் மரணமடைந்தார். அவரது திரு உடல் இன்று 25-04-2018 காலையில் கலிங்கப்பட்டி வந்தது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் காலை 4:30 மணிக்கே அவரது இல்லம் வந்து காத்திருந்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது உடல் பொது மயானத்தில் இராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, April 24, 2018

வீரமரணமடைந்த இராணுவ வீரர் இரா.செல்வகுமார் குடும்பத்துக்கு வைகோ ஆறுதல்!

கலிங்கப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் இரா.செல்வகுமார் அவர்கள் அசாமில் கடமையாற்றும்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் நேற்று 23-04-2018 மரணமடைந்தார். 

அவரது குடும்பத்தினருக்கு தலைவர் வைகோ அவர்கள் இன்று 24-04-2018 கலிங்கப்பட்டி சென்று நேரில் ஆறுதல் கூறினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை




Monday, April 23, 2018

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மனித சங்கிலி போராட்டத்தில் வைகோ!

கர்நாடகம் தண்ணீர் தராததால், தொடர்ந்த வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று தஞ்சை, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் இன்று 23-04-2018 மாலையில் நடைபெற்றது.

இதில் மதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் மனித சங்கிலிகளாக கைகளை பற்றிக் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், தஞ்சையில் கலந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோசங்களை எழுப்பினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

பொதுவாழ்வில் பொன்விழா கண்ட தலைவர் வைகோ மீது தமிழிசை சௌந்தர்ராஜன் அவதூறு வீசுவதா? அ.கணேசமூர்த்தி கண்டனம்!

ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து 22 ஆண்டுகளாக மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும் போராடி வருவதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாடே அறியும்.

1996 இல் வைகோ தொடர்ந்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு 1997 இல் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் வைகோ அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வாதாடிய போதுதான், அப்போதைய தலைமை நீதிபதி மன்மோகன்சிங் லிபரான் அவர்கள் வைகோவைப் பார்த்து, “உங்கள் நேர்மையை நாடு அறியும்; எவரும் சான்றளிக்கத் தேவை இல்லை” என்று கூறியது மறக்க முடியாதது.

பின்னர் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்தபோது, அந்த வழக்கில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ 32 முறை நேர்நின்று தாமே வாதாடினார். தமிழக அரசும், மாநில சுற்றுச் சூழல் துறையும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதில் துளியும் அக்கறை இன்றி, ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டதால், உச்சநீதின்றம் 2013 ஏப்ரல் மாதம் ஸ்டெர்லைட் ஆலை தொடந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து வைகோ தொடர்ந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது என்பதை எவரும் மறைக்க முடியாது.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் எவ்வாறெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை உச்சநீதிமன்றத்தில் வைகோ அவர்கள் ஆதாரங்களுடன் எடுத்துரைத்ததால்தான், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் ரூ.100 கோடியை அபராதமாகச் செலுத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் பற்றிய செய்தி வெளியானவுடனேயே அதை எதிர்த்து அறிக்கை தந்தது மட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரெட்டியாபுரம் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டக் களத்துக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் நாசகார ஆலையை இழுத்து மூடுவதற்கு மக்கள் மன்றத்தில் எத்தகைய எழுச்சி ஏற்பட வேண்டும் என்று வைகோ விரும்பினாரோ அந்த வகையில் மக்கள் வீறுகொண்டு எழுந்ததற்கு வரவேற்பு அறிக்கையும் கொடுத்தார்.

தேனி மாவட்டத்தைச் சூறையாட மோடி அரசு வலிந்து திணித்து வரும் நியூட்ரினோ ஆய்வகத்தை விரட்டி அடிக்க மக்கள் சக்தியை திரட்டுவதற்கு மார்ச் 31 முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரையில் 225 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்ட வைகோ அவர்கள், ஏப்ரல் 17 முதல் மூன்று நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டார். இதற்காக ஏப்ரல் 28 ஆம் தேதி தூத்துக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.

கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடி வரும் வைகோ அவர்களைச் சந்தித்துப் பேச ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கித் தருமாறு உலகக் கோடீஸ்வரன், ஸ்டெர்லைட் நிறுவனம் நடத்தும் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் பலமுறை வெவ்வேறு வழிகளில் முயன்றபோதும் முடியவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தவர் வைகோ.

கொண்ட கொள்கையில் இம்மியளவும் மாறாமல், ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாமல், எவராலும் நெருங்க முடியாத நேர்மையான தலைவராக பொதுவாழ்வில் பொன்விழா கண்ட தலைவர் வைகோ அவர்களை, நேற்று பெய்த மழையில் முளைத்த காளானான தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பில் இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன், வைகோ வன்முறையாளர், ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் வாங்க வேண்டியதை வாங்கியவர், அவரது பயணத்தை தடை செய்ய வேண்டும் என்று வசைபாடுவதும், அவதூறு செய்வதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தமிழர் நலன், தமிழகத்தின் நலன்களுக்காக இந்திய நாடாளுமன்றத்தில் ஒன்பது பிரதமர்களை எதிர்த்து தனிமனிதராகப் போராடிய வரலாறு வைகோவுக்கு மட்டுமே உண்டு. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாத நெஞ்சுறுதி கொண்ட வைகோவை மிரட்டுவதற்கான துணிச்சல் இந்த உலகத்தில் எவருக்கும் இல்லை என்பதை தமிழிசை புரிந்துகொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற பரப்புரை மேற்கொண்ட வைகோவுக்கு கறுப்புக்கொடி காட்டுவதற்கு பா.ஜ.க.வினர் முயன்றபோது, அதைத் துணிச்சலாக எதிர்கொண்ட தலைவர் வைகோ. ஆனால் பா.ஜ.க.வினர் கறுப்புக்கொடி என்ற பெயரில் திட்டமிட்டு வைகோ மீது கற்களை எறிந்து, வன்முறையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதே போன்றுதான் முதல் நாள் பயணத்தில் குளத்தூரில் பாட்டீலை வீசி தாக்க முற்பட்டனர். பா.ஜ.க.வினரின் இதுபோன்ற வன்முறைச் செயல்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையினரின் அலட்சியப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழக வாழ்வாதாரங்களைக் காப்பதற்கும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் களத்தில் நின்று போராடும் தலைவர் வைகோ அவர்களின் பாதுகாப்புக்கு சிறு ஆபத்து என்றால் தமிழர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கின்றேன். வைகோ அவர்களின் தமிழக வாழ்வாதாரப் பயணத்தில் மேலும் இதுபோன்ற வன்முறைச் சம்பங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொருளாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்கள் தனது அறிக்கையில் இன்று 23-04-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

கலிங்கப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் இரா.செல்வகுமார் அசாமில் கடமையாற்றும்போது விபத்தில் மரணம்! வைகோ அறிக்கை!

எனது சொந்த ஊராகிய கலிங்கப்பட்டியைச் சேர்ந்த இராஜேந்திர தேவரின் மகன் இரா.செல்வகுமார், இந்திய இராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமண்டில் பீரங்கிகளை இயக்குகிற ஹவில்தாராக அசாம் மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி அதிகாலையில், தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கைக்காக சென்ற வாகனம், மழை மற்றும் மண் சரிவால் உருண்டு ஆற்றில் விழுந்தது.

சில வீரர்கள் உயிர் தப்பி கரை சேர்ந்தார்கள். செல்வகுமார் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்தத் தகவலை கலிங்கப்பட்டிலிருந்து செல்வகுமார் குடும்பத்தினர் மாலை 5 மணிக்கு எனக்குத் தெரிவித்தனர்.

நான் உடனே இந்திய இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு செல்வகுமாரைக் காப்பாற்றுகிற முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டினேன்.

இராணுவ அமைச்சர் அவர்களும் உடனடியாக அசாமில் உள்ள இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியதை எனக்கு தெரிவித்தார். ஆனால் இன்று காலையில் செல்வகுமார் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் தற்போது இராணுவ மருத்துவமனையில் இருக்கிறது என்ற செய்தியை அமைச்சர் என்னிடம் கூறினார்.

இன்று காலையில் சீனதேசம் சென்ற இராணுவ அமைச்சர் பிற்பகலில் அங்கிருந்து அலைபேசியில் என்னை தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தார். அசாமில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் நானும் பேசினேன்.

செல்வகுமாரின் சடலத்தை திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் அனுப்பி வைப்பதாகவும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பனிரெண்டரை மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து அடையும் என்றும், அங்கிருந்து புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கலிங்கப்பட்டிக்குக் கொண்டுவந்து இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

செல்வகுமாருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவனை இழந்த அந்த சகோதரிக்கும், தந்தையை இழந்த பிள்ளைகளுக்கும் பெற்றோர், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைக் கூறுவதோடு, 25 ஆம் தேதி காலை செஞ்சி நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டு, இறுதிச் சடங்குகளில் பங்கேற்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 23-04-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Saturday, April 21, 2018

காவிரியில் துரோகம் இழைக்கும் வஞ்சகர் கூட்டம் நடுங்க மனிதச் சங்கிலியில் கரம் கோர்ப்போம்-வைகோ அழைப்பு!

காவிரி நதிநீர் உரிமை மீட்புப் போராட்டத்தில் ஒட்டுமொத்தத் தமிழகமும் பொங்கி எழுந்திருக்கிறது. இந்திய வரலாற்றில் வேறெந்தப் பிரதமரும், எந்த மாநிலத்திலும் சந்திக்காத எதிர்ப்பை ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொண்டார். தமிழர் இல்லம் தோறும் கருப்புக் கொடிகள் பறந்தன. தலைநகர் சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; “பிரதமர் மோடியே திரும்பிச் செல்லுங்கள்” என்று இளைஞர் பட்டாளம் எழுப்பிய இடிமுழக்கம் டெல்லி செங்கோட்டை வரை எதிரொலித்தது. காவிரியில் நமது உரிமை நிலைநாட்டப்படும் வரையில் ஓயாத கடல் அலைகளென தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஏப்ரல் 16 ஆம் தேதி திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏப்ரல் 23 திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் வெற்றிகரமாக நடத்துவதற்கு கடமை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரியில் துரோகம் இழைக்கும் வஞ்சகர் கூட்டம் நடுங்க, உரிமைப் போராட்டக் களத்தில் ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒருசேர அணி திரண்டது என்பதை நிருபிக்க வீதிக்கு வாருங்கள் தமிழர்களே! என்று அழைக்கிறேன். தமிழக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், வர்த்தக பெருமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஏப்ரல் 23 இல் நடைபெறும் மனிதச் சங்கிலியில் கைகோர்த்து அறப்போராட்டத்தை வெற்றி அடையச் செய்யுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 21-04-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

நீதியரசர் ராஜேந்திர சச்சார் மறைவு-வைகோ இரங்கல்!

டில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் நீதியரசர் ராஜேந்திர சச்சார். இவர் நாட்டின் விடுதலைக்காகப் போராடி, காங்கிரஸ் கட்சியில் அரும்பணி ஆற்றி, பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பீம்சேன் சச்சார் அவர்களின் புதல்வர் ஆவார்.

நெருக்கடி நிலை காலத்தில் பீம்சேன் சச்சார் காங்கிரசை விட்டு விலகி, லோகநாயக ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் முழு புரட்சிப் போராட்டத்தில் பங்கேற்கவும் செய்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற பெயரால் மனித உரிமைகளை நசுக்கிய பொடா சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, ராஜேந்திர சச்சார் அவர்களே வாதங்களை முன்வைத்தார்.

ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்க, கொலைகார ராஜபக்சே அரசின் ஈழத்தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து 2010 இல் டப்ளின் விசாரணை மன்றத்தில் இந்தியாவின் சார்பில் நீதிபதியாகப் பணியாற்றினார்.

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குறித்து நான் தயாரித்த ‘ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம்’ என்ற ஆங்கிலக் குறுந்தட்டையும், ஆங்கில நூலையும் என் வேண்டுகோளை ஏற்று தலைநகர் புது டில்லியில் வெளியிட்டுச் சிறப்புச் செய்தார்.

வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அவர்கள் 1945 ஆகஸ்டு 18 இல் தைபே விமான நிலையத்தில் உயிர் இழக்கவில்லை; அதன்பின் அவர் எங்கு சென்றார்? அவரைப் பற்றிய முழு உண்மையையும் நாட்டு மக்கள் அறிந்துகொள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் டில்லியில் தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் நான் நடத்திய கூட்டத்தில் நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

டில்லியில் உள்ள அன்னாரது இல்லத்துக்கு நான் செல்லும்போதெல்லாம் என்னை அன்புடன் வரவேற்று, நமது தமிழர்களின் உணவாகிய இட்டலி, சாம்பார் வடையை எனக்கு பரிமாறச் செய்வார். அந்த மாமனிதர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அவரது மறைவினால் துயரத்தில் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை மிகவும் நேசிக்கும் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் இன்று 21-04-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, April 20, 2018

111 வது வட்டச் செயலாளர் M.தங்கராஜ் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

சென்னை எழும்பூரில், ஆயிரம் விளக்கு பகுதி மதிமுகவின் 111 வது வட்டச் செயலாளர் M.தங்கராஜ் அவர்களின் அருமை புதல்வன் நவீன்குமார்_சாமூண்டீசுவரி திருமண வரவேற்பு நிகழ்வு இன்று 20-04-2018 நடந்தது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு மாலை கொடுத்து மாற்ற செய்து, திருக்குறள் பரிசளித்து வாழ்த்தினார். 

தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார் வைகோ. இதில் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள், கழக முன்னணி தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மக்களை வாழ்த்தினார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஆளுநர் பன்வாரிலால், பதவியில் நீடிப்பது அவமானம்; உடனே விலக வேண்டும் - வைகோ அறிக்கை!

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற ஆறு மாதங்களில் பல்வேறு சர்ச்சைகளின் நாயகராகக் காட்சி தருகின்றார். ஆளுநருக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள அதிகாரத்தை, வானளாவ அதிகாரமாக எடுத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றார். 

‘தமிழ்நாடு அரசின் மற்றொரு தலைமைச் செயலகமாக ராஜ்பவன் செயல்படுகின்றது’ என்று ஏற்கனவே நான் சுட்டிக்காட்டி இருக்கின்றேன். 

தமிழக அரசுப் பணிகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தல், அரசு உயர் அதிகாரிகளுக்கு நேரடி உத்தரவு போடுதல், தொழில் தொடங்குவற்கு ராஜ்பவனை நாடுங்கள் ; நான் ஏற்பாடு செய்வேன் என்று அறிவித்தல் போன்றவை, ஆளுநர் புரோகித்தின் வரம்பு மீறிய செயல்கள் ஆகும்.

வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை, அதிலும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டோரைத் தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நியமித்து வருகின்றார். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசின் முதல்வரைவிட தாம் ஒரு ‘சூப்பர் முதல்வர்’ என்பது போன்று ஆளுநர் புரோகித் தம்மைக் காட்டிக்கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்கு உரியது.

தற்போது அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற உரையாடல் அம்பலம் ஆகி, சந்தனம் மணக்க வேண்டிய கல்வித்துறை, சாக்கடையாக மாறி விட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றது.

புனிதம் நிறைந்ததும், வருங்காலத் தலைமுறையை வார்ப்பிக்கும் மாண்பும் கொண்டதுமான ஆசிரிய அரும்பணிக்குத் தீராத களங்கத்தை, நிர்மலாதேவி போன்றவர்கள் ஏற்படுத்தி உள்ளது அருவருக்கத்தக்கது. கல்விப் பயிர் செழிக்க வேண்டிய சோலையில் இதுபோன்று வளரும் நச்சுச் செடிகளை வேரோடு கிள்ளி எறிய வேண்டும்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது சந்தேகத்தின் நிழல் படிந்துள்ள நிலையில், அவசர அவசரமாக ஆளுநர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டிய தேவை என்ன? அங்கே அவர் நடந்துகொண்ட முறையை பெண் செய்தியாளர்  ஒருவர் கண்டனம் செய்து இருக்கின்றார். ஏற்கனவே தஞ்சையில் நடந்த  ஒரு விழாவில் ஆளுநர் பங்கேற்றபோதும் இதுபோன்று நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் ஐஏஸ் அதிகாரி சந்தானத்தை, ஒரு நபர் விசாரணை ஆணையமாக ஆளுநர் நியமித்தது சட்டமீறல்; அதற்கான அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. அவரே புகார் வளையத்திற்குள் சிக்கி இருக்கும்போது, அவர் ஒரு நபர் விசாரணை ஆணையத்தால் எந்த உண்மையும் வெளிவராது. 

உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவே இந்த ஏற்பாடு. எனவே, இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும்; நேர்மையான விசாரணை நடத்தி,  யாருக்காக அவர் இவ்வாறு செயல்பட்டார் என்ற உண்மையை வெளிக் கொணர வேண்டும்; அந்த நபர்களைக் கைது செய்து குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்.  

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கத்தை மதிக்காமலும், தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்ற, பல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக்கின்ற பன்வாரிலால் புரோகித், தமிழக ஆளுநர் பொறுப்பில் நீடிப்பது மானக்கேடு. அவர் உடனே பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 20-04-2018 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, April 19, 2018

வைகோ மீது தாக்குதல் முயற்சி! திருப்பூர் சு.துரைசாமி கண்டனம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஸ்டெர்லைட் நாசகார ஆலையால் மக்களுக்கு ஏற்படும் கெடுதல்களை விவரித்து சுமார் 22 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் அவர் தொடர்ந்து போராடி வருகின்ற காரணத்தினால்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசாங்கம் அனுமதியை இரத்து செய்தது.


ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு நீதிமன்றத்திற்குச் சென்று இடைக்கால அனுமதியைப் பெற்றார்கள். அதை எதிர்த்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பொதுச்செயலாளர் அவர்கள் 22 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்டெர்லைட் நாசகார ஆலையால் குடிதண்ணீரும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். இரண்டு மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி இருக்கக்கூடிய கிராமத்துப் பெண்கள். மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து மக்களும் போராடி வருவதை இன்றைக்கு நாடே பார்த்துக்கொண்டு இருக்கிறது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் ஆலையின் தீங்கை எடுத்துரைத்தும், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் பிரச்சாரம் செய்து வருகின்றார். நேற்றைக்கு முந்தைய நாள் குளத்தூரில் வைகோ அவர்கள் வேனில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தபோது, சிலருடைய தூண்டுதலின் பேரில் அவரை நோக்கி வீசப்பட்ட பாட்டில், அவருக்கு அருகில் விழுந்து உடைந்தது. இந்த அக்கிரமச் செயலை நடத்த முயன்ற கும்பலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பாட்டிலை வீசி தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனடியாகக் கைது செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக அவைதலைவரும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தனது அறிக்கையில் 19-04-2018 அன்று தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை