எனது சொந்த ஊராகிய கலிங்கப்பட்டியைச் சேர்ந்த இராஜேந்திர தேவரின் மகன் இரா.செல்வகுமார், இந்திய இராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமண்டில் பீரங்கிகளை இயக்குகிற ஹவில்தாராக அசாம் மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.
ஏப்ரல் 22 ஆம் தேதி அதிகாலையில், தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கைக்காக சென்ற வாகனம், மழை மற்றும் மண் சரிவால் உருண்டு ஆற்றில் விழுந்தது.
சில வீரர்கள் உயிர் தப்பி கரை சேர்ந்தார்கள். செல்வகுமார் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்தத் தகவலை கலிங்கப்பட்டிலிருந்து செல்வகுமார் குடும்பத்தினர் மாலை 5 மணிக்கு எனக்குத் தெரிவித்தனர்.
நான் உடனே இந்திய இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு செல்வகுமாரைக் காப்பாற்றுகிற முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டினேன்.
இராணுவ அமைச்சர் அவர்களும் உடனடியாக அசாமில் உள்ள இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியதை எனக்கு தெரிவித்தார். ஆனால் இன்று காலையில் செல்வகுமார் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் தற்போது இராணுவ மருத்துவமனையில் இருக்கிறது என்ற செய்தியை அமைச்சர் என்னிடம் கூறினார்.
இன்று காலையில் சீனதேசம் சென்ற இராணுவ அமைச்சர் பிற்பகலில் அங்கிருந்து அலைபேசியில் என்னை தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தார். அசாமில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் நானும் பேசினேன்.
செல்வகுமாரின் சடலத்தை திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் அனுப்பி வைப்பதாகவும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பனிரெண்டரை மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து அடையும் என்றும், அங்கிருந்து புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கலிங்கப்பட்டிக்குக் கொண்டுவந்து இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.
செல்வகுமாருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவனை இழந்த அந்த சகோதரிக்கும், தந்தையை இழந்த பிள்ளைகளுக்கும் பெற்றோர், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைக் கூறுவதோடு, 25 ஆம் தேதி காலை செஞ்சி நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டு, இறுதிச் சடங்குகளில் பங்கேற்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 23-04-2018 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment