அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் இராஜாராம் 2016 மே 26 ஆம் தேதி ஓய்வு பெற்றார். தமிழகத்தின் முக்கியத்துவம் பெற்ற இத்தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு கடந்த 23 மாதங்களாக துணைவேந்தராக எவரும் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது. இதனால் அண்ணா பல்கலைக் கழகப் பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பொறியியல் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு, மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். முக்கிய முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் நிர்வாகப் பணிகள் முடங்கின.
ஆளும் கட்சியினர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அலட்சிப் போக்குடனேயே இருந்தனர்.
துணைவேந்தர் பணி நியமனங்களில் புரையோடிப்போன ஊழல், நாடறிந்த ரகசியம் ஆகும்.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய மூன்றுமுறை தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு, மிகுந்த காலதாமதமாக தற்போது துணைவேந்தர் பொறுப்புக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம்.கே.சூரப்பாவை தமிழக ஆளுநர் நியமித்துள்ளார்.
தமிழகத்தில் தகுதியும், திறமையும், அனுபவமும் வாய்ந்த பேராசிரியர் பெருமக்கள் பலர் விண்ணப்பித்ததை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா அவர்களை அமர்த்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
துணைவேந்தர் பதவிக்கு தகுதிமிக்க கல்வியாளர்களே தமிழகத்தில் இல்லை என்று ஆளுநர் புரோகித் கருதுகிறாரா?
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் பேராசிரியர் சூர்ய நாராயண சாஸ்திரியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேர்வு செய்ததற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்த நியமனத்தை ரத்து செய்துவிட்டு, தேர்வுக்குழு பரிந்துரைத்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் வலியுறுத்தினர்.
ஆனால் ஆளுநர் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஆந்திராவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் சூர்ய நாராயண சாஸ்திரியை நியமனம் செய்தார். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமித்து இருக்கிறார்.
இவற்றை நோக்கும் போது ஆளுநரின் அதிகார ஆதிக்கம் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராகவே இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
அரசியல் சட்ட மரபுகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில், மாநில அரசின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, மோடி அரசின் முகவராக தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் தொடர்ந்து ஆளுநர் செயல்படுவது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகத்திற்குத் துரோகம் இழைத்து வரும் மோடி அரசின் பச்சைத் துரோகத்திற்கு எதிராக தமிழகமே கொந்தளித்துப் போராட்டக் களத்தில் ஈடுபட்டு இருக்கிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமித்து இருப்பதைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், தமிழகத்தில் செயல்படும் பல்கலைக் கழகங்களுக்கு தமிழக கல்வியாளர்களையே துணைவேந்தர் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 06-04-2018 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment