இவ்வாண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் - தி.மு.கழக செயல் தலைவரின் வேண்டுகோலின்படி தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிஅரசர்கள் அமித்வராய், கன்வில்கர் ஆகிய மூவர் அமர்வு வழங்கிய 465 பக்க தீர்ப்பை நான் வரிவிடாமல் படித்ததனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியினுடைய அமர்வு தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.
காவிரி நடுவர் மன்றத்தினுடைய இறுதித் தீர்ப்பில் பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியத்தைப் போல, காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) அமைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துவிட்டது.
இப்படி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை மேலாண்மை வாரியம்தான் செயல்படுத்தும். புதிய அணைகளை கர்நாடகம் கட்ட முடியாது. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு முறையாக வழங்கப்படும். அணைகளின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படையே மேற்கொள்ளும். மத்திய அரசு இதனைப் புரிந்துகொண்டதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவில்லை.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசில் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றவுடன் நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று எழுத்து மூலம் கோரிக்கை மனு தந்தார்.
தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து, தமிழக காவிரி டெல்டா விவசாயிகளை நிரந்தரமாக நிர்மூலம் செய்யும் குறிக்கோளோடு நரேந்திர மோடியின் யோசனையின்படி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8 தேதிகளில் மத்திய அமைச்சராக உள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்தகுமார் இல்லத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்ட அமைச்சர்கள் அதில் பங்கேற்றனர்.
கர்நாடக அரசு மேகதாட்டு, ராசிமணலில் அணைகள் கட்டிக்கொள்ளலாம் என்றும், வெளிப்படையாக மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி கொடுக்காது என்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அக்கூட்டத்தில் உறுதி அளித்தார்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை நிரந்தரமாக அழிக்கும் படுபாதகத்தை மத்திய அரசு செய்யப் போகிறது என்பதைத் தெரிந்துகொண்ட நான் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கட்சிக் கொடி கட்டாமல் பல நாட்கள் மேகதாட்டு, ராசி மணலில் அணைகளைக் கட்டவிடாமல் தடுப்பதற்கும், மீத்தேன் போன்ற நாசகாரத் திட்டங்களைத் தடுப்பதற்கும் விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டேன்.
பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை வாசித்துக் காட்டினேன். அதில் “காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே இல்லை. ஸ்கீம் - திட்டம் என்றுதான் இருக்கிறது. அப்படி அமையும் திட்டத்தையும் நாடாளுமன்றம் விருப்பம்போல மாற்றிக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.”
நான் அன்று சொன்னதை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்றைக்கு வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். ஸ்கீம் - என்பதற்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பொருள் அல்ல என்று கூறினார். எனவே பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதுதான் நரேந்திர மோடியின் திட்டம். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தீர்ப்பு அந்த எண்ணத்தையே பிரதிபலிக்கிறது.
நிலைமை இப்படி இருக்க, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டும் வகையில் அண்ணா திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் என்ற சதி நாடகத்தை மோடியின் விருப்பப்படி நடத்தினார்கள். இன்றைய மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை ஒருபோதும் அமைக்காது என்பதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
என்னை ஒரு பொருட்டாக மதித்துத் தொடர்ந்து செய்திகள் வெளியிடுகின்ற நான் நேசிக்கின்ற ஓரிரு பத்திரிகைகளில்கூட காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற செய்தி நிருபர்கள் கொடுத்த தவறான தகவலால் பிரசுரம் ஆகியுள்ளது.
திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏப்ரல் 5 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தை, தமிழகம் காக்கும் போராட்டமாகக் கருதி அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக பேருந்து ஓட்டுநர்களும், வணிகப் பெருமக்களும், தொடர்வண்டி ஓட்டுநர்களும் பங்கேற்க வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டு நலனிலும், ஈழத்தமிழர் நலனிலும் அர்ப்பணிப்போடு செயல்படுகிற தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் அண்ணன் வெள்ளையன் அவர்களையும், அதுபோல் சகோதரர் விக்ரமராஜா அவர்களையும் 5 ஆம் தேதி முழு அடைப்பில் பங்கேற்று தமிழகத்தைக் காக்கும் கடமையில் ஈடுபட வேண்டும் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கிற தோழர்கள் ஆத்திர உணர்ச்சிக்கும், வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் தமிழக வரலாறு கண்டிராத அறப்போராட்டமாக நடத்திக் காட்ட பணிவுடன் வேண்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் இன்று 03-04-2018 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment