Sunday, April 12, 2020

மலேசியாவில் இறந்த லோகநாதன் உடல் எரியூட்டப்பட்டது - வைகோ அவர்களுக்கு குடும்பத்தார் நன்றி!

காரைக்குடி கீழச்செவல்பட்டிக்காரர் லோகநாதன். மலேசியாவில் பல கோவில்களில் ஐந்து ஆண்டுகள் பூசாரியாகப் பணிபுரிந்தவர்.

அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்தவர், மூன்று மாதங்களுக்கு முன்பு, மீண்டும் மலேசியா சென்றார்.

பினாங்கு முனீஸ்வரர் கோவிலில் பணி செய்து வந்தார். முன்பே அந்தக் கோவிலில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர்தான்.

ஆனால், இந்த முறை, உரிய விசா இல்லாமல் கூடுதல் காலம் தங்கி இருந்ததற்காக, மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நலக்குறைவால் சிறைக்கு உள்ளேயே இறந்து போனார். அவரது உடல், பினாங்கு மருத்துவமனையில் இருந்தது.

கொரோனா காரணமாக, மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூடி இருக்கின்றது.

உரிய சான்றிதழ்கள் இல்லாமல், ஏப்ரல் 30 வரை எதுவும் செய்ய முடியாத நிலை.

லோகநாதனின் உடலை, இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, அங்கேயே எரித்து விடுவது என, அவரது குடும்பத்தார் முடிவு செய்தார்கள்.

லோகநாதனின் சகலர் தண்டபாணி, மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் பூசாரியாகப் பணிபுரிந்து வருகின்றார்.

திரு இராஜாராம் பாண்டியன் மூலமாக இந்தச் செய்தியைக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

சிறைக்குள் அவர் தாக்கப்பட்டாரா என்பது குறித்துத் தலைவர் வைகோ அவர்கள் கேட்டு அறிந்தார்கள்.

லோகநாதன் தாக்கப்படவில்லை. அவருக்கு உடல்நலக்குறைவு இருந்தது. அதற்கான மருந்து மாத்திரைகளைச் சாப்பிடவில்லை. நாங்கள் அவ்வப்போது சிறையில் பார்த்து வந்தோம். தவிர, மலேசியக் காவல்துறையினர் அடிக்கவில்லை என தண்டபாணி தெளிவுபடுத்தினார்.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்.

உரிய சான்றிதழ்களைப் பெறவும், லோகநாதன் உடலைப் பினாங்கிலேயே எரிப்பதற்குமான உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி, இரண்டே நாட்களில் அந்தப் பணிகள் நிறைவு பெற்றன.

பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு உறுதுணையாக இயங்கி வருகின்ற, பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி முன்னின்று ஏற்பாடுகள் செய்தார்.

லோகநாதன் உடல் நேற்று (10.4.2020) மாலை எரியூட்டப்பட்டது.

20 நாள்களாக உடலை எடுக்க முடியாமல் இருந்தோம். இங்கே ஏப்ரல் 30 வரை ஒன்றும் செய்ய முடியாது எனக் கருதினோம்.

வைகோ அவர்கள் முயற்சியால், லோகநாதன் உடலை மருத்துவமனையில் இருந்து பெற முடிந்தது. அவருக்கு எங்கள் நன்றி, என தண்டபாணி மற்றும் ராஜாராம் பாண்டியன், லோகநாதன் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 11-04-2020 தெரிவித்துள்ளது.

வைகோ ஈஸ்டர் வாழ்த்து!

அன்பையும், கருணையையும், தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் மனிதநேயத்தையும் போதித்த இயேசு கிறிஸ்து பிலாத்து சபையில் நிந்தைக்கு ஆளாகி, சிலுவையைச் சுமந்து, கொல்கதாவில் சிலுவையில் அறையப்பட்டார்.
மூன்றாம் நாள் இயேசுநாதர் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக் கிழமை புனித ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததைப் போல, இன்றைக்கு உலகெங்கும் வாழும் மனித சமுதாயத்தைக் கலங்கடித்து, உயிர்களைச் சூறையாடிக்கொண்டிருக்கும் கோவிட்-19 கொரோனா ரைவஸ் கொள்ளை நோயிலிருந்து மனிதகுலம் பாதுகாக்கப்பட தங்களையே அர்ப்பணித்துக்கொண்டு சேவை செய்யும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், மனிதநேயத்தோடு உதவி புரிவோர் அனைவரின் முயற்சிகளும் வெற்றி பெற்று ஈஸ்டர் பண்டிகை அன்று எழுந்த மகிழ்ச்சியைப் போல மனிதகுலம் துயரத்திலிருந்து விடுபடட்டும் என்று ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை கிறிஸ்தவப் பெருமக்களுக்குத் தெரித்துக்கொள்கிறேன் என‌ மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 11-04-2020 தெரிவித்துள்ளார்.

அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலனைக் காக்க வேண்டும் - வைகோ கோரிக்கை!

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation-ILO) உலகின் தற்போதைய பொருளாதாரச் சூழல் பற்றி ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் முறைசாரா தொழிலாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.எல்.ஓ. கூறி இருக்கிறது.

இந்தியாவில் முறைசாரா தொழில்களில் 90 விழுக்காடு பணிபுரியும் 40 கோடி தொழிலாளர்கள் இந்தச் சிக்கலான காலகட்டத்தில் மிக மோசமான வறுமைக்குள் விழுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் ஐ.எல்.ஓ. அறிக்கை எச்சரித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான இந்தக் காலகட்டத்தில், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் பணியிடங்கள் மூடப்பட்டு இருப்பதால், உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் தொழிலாளர்களில் 81 விழுக்காடு பேர், அதாவது 5 இல் 4 பேர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொரோனா காரணமாக சுற்றுலா, விமானப் போக்குவரத்து, உணவகங்கள், விடுதிகள், உற்பத்தித் துறை, ஊடகம், பொழுதுபோக்கு போன்ற துறைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் இரண்டிலுமே தொழிலாளர்களும், வணிகமும் மிக மோசமான சூழலை எதிர் கொண்டிருக்கின்றன என்று பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் கய் ரய்டர் (Guy Ryder) தெரிவித்து இருக்கிறார்.

வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியத் தொழிலாளர்கள் நலன்களையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே கொரோனா கொள்ளை நோய் தடுப்பு காலத்தில் கோடிக்கணக்கான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 10-04-2020 தெரிவித்துள்ளார்.

Thursday, April 9, 2020

கழக மாணவர் அணி நிர்வாகிகளை அலைபேசியில் அழைத்து பாராட்டிய அண்ணன் துரை வைகோ அவர்கள்!

கோவிட் - 19 கொரோனா நுண்ணுயிர் கிருமி தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்..
10.04.2020 தேதியிட்ட, கழக வார ஏடான சங்கொலியில் கொரோனா ஆபத்து குறித்து மிக விரிவாக, மருத்துவ ஆய்வு கட்டுரையை போல ஒரு கடிதத்தை கழக கண்மணிகளுக்கு தலைவர் வைகோ அவர்கள் எழுதி இருந்தார்கள்.
அந்த கடிதத்தில்,
மறுமலர்ச்சி திமுக ஆபத்து காலங்களில் செஞ்சிலுவை சங்கம் போல செயல்படும் என்று நான் ஆடிக்கடி கூறி வருவதை மெய்ப்பிக்கும் வகையில், கழகத் தோழர்கள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு உதவி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது; இது போன்ற காலகட்டங்களில் கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் உதவிட முன்வர வேண்டும் என தலைவர் வைகோ அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.
மார்ச் 21 ஆம் தேதி, மதிமுகம் தொலைக்காட்சியில் காணொளியின் வாயிலாக, தலைவர் வைகோ அவர்களின் புதல்வர்.. நம் வருங்கால நம்பிக்கை அண்ணன் துரை வைகோ அவர்கள் கொரோனா நுண்ணுயிர் கிருமி ஆபத்து குறித்தும், நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், நம்மை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மிக விரிவாக பேசி பல லட்சம் பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனால் ஏற்பட்ட தாக்கத்தினாலும், ஊக்கத்தினாலும் கழகத் தோழர்கள் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றார்கள்.
கழக மாணவர் அணி நிர்வாகிகளும், தொடர்ந்து மக்களுக்கு உதவுகின்ற வகையில் சேவையாற்றி வருகிறார்கள்.
மாணவர் அணி நிர்வாகிகளின் களப்பணிகளை சமூக வலைதளங்களின் வாயிலாக அறிந்து கொண்ட அண்ணன் துரை வைகோ அவர்கள், மாணவர் அணி தோழர்களை அலைபேசியில் அழைத்து பாராட்டினார்.
மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் அண்ணன் திருப்பூர் சு.கோவிந்தராஜன்,
திருவள்ளூர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஆங்காடு சி.சங்கர்,
கரூர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் குளித்தலை பூமிநாதன்,
தஞ்சை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன்,
மாணவர் அணி தம்பி ஆரணி தனசேகரன்..
ஆகியோரை இன்று மாலை அலைபேசியில் அழைத்து அண்ணன் துரை வைகோ அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
உங்களின் பணிகள் அனைத்தையும் கவனித்தேன்.. உங்களால் இயக்கத்திற்கும், தலைவருக்கும் பெருமை என வாழ்த்தினார்.
மக்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிற நீங்களும் மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டும் என தாயின் பரிவுடன் அறிவுரை கூறினார்.
உங்கள் பகுதியில் கொரோனா பாதிப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதையும் கவனமாக கேட்டு தெரிந்து கொண்டார்.
தம்பி ஆரணி தனசேகரனிடம் பேசும் போது, உங்களால் முடிந்த பணிகளை மட்டும் இயக்கத்திற்கு செய்யுங்கள்.. அந்த பணிகள் உங்கள் சக்திக்கு மீறியதாக இருக்க கூடாது.. உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன் என.. தன் ஆறுதல் வார்த்தைகளால் அணைத்துக் கொண்டார்.
தஞ்சை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், தன்னுடைய பகுதியில் தான் மிகுந்த வாக்குகள் வித்தியாசத்தில் வார்டு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட செய்தியை அண்ணன் துரை வைகோ அவர்களிடம் தெரிவித்த போது, 'உங்கள் பணிகளை பார்த்து தான் மக்கள் உங்களை தேர்வு செய்து இருக்கிறார்கள்.. அவர்களுக்கு வழிகாட்டுகிற விதத்தில் பணி ஆற்றுங்கள்' என வாழ்த்து தெரிவித்தார்.
அண்ணன் திருப்பூர் சு.கோவிந்தராஜன் அவர்களிடம் பேசும் போது, மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தி அவரின் பணிகளை பாராட்டினார்.
குளித்தலை பூமிநாதனிடம் பேசும் போது, குளித்தலையில் கொரோனா பாதிப்பு கள நிலவரங்களை கவனமுடன் கேட்டுக் கொண்ட அண்ணன் துரை வைகோ அவர்கள் ... நீங்கள் களத்தில் இருக்கிறீர்கள்.. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார். அவரின் பணிகளை பாராட்டினார்.
அண்ணன் ஆங்காடு சங்கரிடம் பேசும் போது, உங்கள் பணிகளை பார்த்தேன்.. மக்களுக்கு உதவியாக இருக்கிறீர்கள் என பாராட்டினார். அண்ணன் சங்கர் அவர்கள் தெரிவித்த சிறிய கோரிக்கையை, தலைவரின் கவனத்திற்கு அவசியம் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
கழக மாணவர் அணி நிர்வாகிகளின் பணிகளை அண்ணன் துரை வைகோ அவர்கள் பாராட்டியது மிகுந்த நெகிழ்ச்சி அளிக்கிறது.
அண்ணன் துரை வைகோ அவர்களின் பாராட்டை பெற்ற, மாணவர் அணி நிர்வாகிகளின் மகிழ்ச்சியான மனநிலையை வார்த்தைகளால் வெளிப்படுத்தி விட முடியாது. நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு மகிழ்ந்தார்கள்.
அண்ணனின் பாராட்டு, மற்ற கழகத் தோழர்களுக்கும் ஊக்கமாக இருக்கும்.
குறிப்பாக, மாணவர் அணியினர் வரும் நாட்களில் களத்தில் இன்னும் உற்சாகத்துடன் பணி ஆற்றுவார்கள்.
தாயின் உள்ளன்போடு பாராட்டி, மாணவர் அணி நிர்வாகிகளை ஊக்கப்படுத்திய அண்ணன் துரை வைகோ அவர்களுக்கு கழக மாணவர் அணி சார்பில் நெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
பால.சசிகுமார்
மாநில மாணவர் அணிச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக.,

Wednesday, April 8, 2020

ரத்தம் கொடுத்து கர்ப்பிணி பெண் உயிரை காப்பாற்றிய காவலருக்கு வைகோ பாராட்டு!

மங்காத மனிதநேயத்தின் மாண்பு - வைகோ!
இன்றைய 08.04.2020 தினத்தந்தி நாளேட்டில் வந்த செய்தி என் நெஞ்சில் இன்பச் சிலிர்ப்பினை ஏற்படுத்தியது.
மணப்பாறை அருகே உள்ள இரட்டைப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரும், சுலோச்சனா எனும் அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவியும் பிரசவம் பார்ப்பதற்காக மணப்பாறையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். கர்ப்பிணித் தாய்க்கு இரத்தம் செலுத்த வேண்டிய நிலை. ஆனால் அந்தப் பெண்ணின் இரத்த வகையைச் சேர்ந்த இரத்தம் அந்த மருத்துவமனையில் இல்லாததால், சிகிச்சை செய்ய முடியாமல் திரும்பினர். வேதனையில் நடந்துகொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியில் பணியில் இருந்த காவல்துறை இளைஞர், வளநாட்டைச் சேர்ந்த சையது அபுதாகிர் இந்தத் தம்பதியிடம், “என்ன வருத்தமாகச் செல்கிறீர்களே! காரணம் என்ன?” என்று கேட்டார். நிலைமையை விளக்கினர்.
அந்தக் கர்ப்பிணித் தாயின் இரத்த வகையும், தன் இரத்தமும் ஒரே வகைதான் என்பதை உணர்ந்த சையது அபுதாகீர் அவர்களை அழைத்துக்கொண்டு அதே மருத்துவமனைக்குச் சென்று இரத்தம் கொடுத்துள்ளார்.
சுகப்பிரசவம் ஆயிற்று. பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம்.
இந்தச் செய்தி அறிந்தபோது, என் உள்ளத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி. “மதம் என்பது மனிதர்களைப் பிரிக்கும் சுவர் அல்ல - மனிதநேயத்தைத் தழைக்கச் செய்யும் மலர்க்கொடி” என உளம் பூரித்தேன்.
மனிதநேயப் பண்பாளர் திரு சையது அபுதாகீர் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு இதயம் நிறைய வாழ்த்தினேன். திரு. சையது அபுதாகீர் போன்ற மனிதாபிமானச் சிற்பிகளால் மனிதநேயம் தழைப்பது மட்டுமல்ல, அவர் பணியாற்றும் காவல்துறைக்கும் புகழ் மகுடமாகும்.
அந்த இலட்சிய இளைஞர் வாழ்வாங்கு வாழ்க.
இப்படிக்கு
வைகோ
8.04.2020

Tuesday, April 7, 2020

கொரோனா எதிர்ப்பு நிதியை மத்திய அரசு பாரபட்சம் இல்லாமல் வழங்க வேண்டும்! வைகோ அறிக்கை!

தமிழக மக்கள், அகில இந்திய மக்கள் மட்டுமின்றி, உலகமெலாம் வாழுகின்ற மக்களை நடு நடுங்க வைத்துக்கொண்டு இருக்கின்ற கொரோனா தொற்று நோயினால் ஏற்பட்டு இருக்கக்கூடிய விபரீதம் எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை. ஆனால் இந்த நேரத்தில்கூட ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதைப் போல் மத்திய அரசு ஓர வஞ்சகம் செய்யலாமா? என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.
உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார், ஆகிய மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டுக்கு மட்டும் 510 கோடி நிதி ஒதுக்கியிருப்பது நியாயம்தானா?
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 234 பேர் கொரோனா தொற்று நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 621 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 6 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வட இந்திய மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டிற்கு இப்படிப்பட்ட ஓர வஞ்சகம் செய்தது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
கொரோனா தொற்று நோயிலிருந்து தமிழக அரசு மக்களைக் காப்பாற்றுவதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாயும், அதன் பின்னர் 3200 கோடி ரூபாயும் கேட்டிருக்க, வெறும் 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது பாரபட்சமான போக்கு ஆகும். அதுமட்டுமல்ல, நாம் எது செய்தாலும் தமிழக அரசுக்கு எதிர்க்கக் கூடிய திண்மையும் இல்லை, வன்மையும் இல்லை, மனதில் தெம்பும் இல்லை, அடங்கி ஒடுங்கி ஒட்டுப் பூச்சிகளாகக் கிடப்பார்கள். அப்படி ஒரு அரசு அங்கு நடக்கிறது என்ற எண்ணம்தானே காரணமாக இருக்க முடியும்? எனவே மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அது இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் கிடையாது. கொரோனாவைச் சந்திப்பதற்காக அந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என திடீரென்று அதிர்ச்சிகரமான அறிவிப்பை மத்திய அரசு செய்திருக்கிறது.
தொகுதியில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தொகுதியில் கவனிக்கப்படாமல் இருக்கக்கூடிய தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகின்றது. இப்படி அந்த நிதியையும் பறித்துக்கொண்டால், அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பணிகள், அதிலும் தன்னுடைய தொகுதியில் கொரோனா சம்மந்தப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போகும். இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கூறி இருப்பதைப் போல மத்திய அரசு எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 07-04-2020 தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்க! வைகோ அறிக்கை!

மனித சமூகத்தை அச்சத்தில் உறையச் செய்திருக்கின்ற கொரோனா கிருமியை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாக மடியும் நிலையைக் காணும்போது நெஞ்சம் நடுங்குகிறது. அதுபோன்ற துயரப் பள்ளத்தாக்கில் நமது நாடும் விழுந்துவிடக் கூடாது.
கொரோனாவை வெற்றி காண்பது நம் கைகளில் தான் உள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம்; வீட்டிலேயே தனித்திருப்போம்; கொரோனா தொற்று பரவாமல் மக்களின் உயிரை காப்போம்! என்ற உறுதியை மேற்கொள்ள தமிழக மக்களை அன்புடன் மீண்டும் வேண்டுகிறேன்
இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்,
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளி போனதால், தேர்வு எழுத துடித்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள் துவண்டு விட்டனர்.
துள்ளி விளையாட வேண்டிய இளம் பிஞ்சுகள், ஊரடங்கு உத்தரவால் மன உளைச்சலுக்கு உள்ளாகி முடங்கிக் கிடக்கின்றனர்.
பொதுத்தேர்வு என்ன ஆகுமோ? என்று மாணவர்களின் பெற்றோரும் தவியாய் தவிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களின் கல்வித் திறனை அடுத்தடுத்த 11ஆம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 07-04-2020 தெரிவித்துள்ளார்.

தொழில் நிறுவனங்கள் / வேளாண் தொழில் மீட்சிக்கு மத்திய - மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் வைகோ அறிக்கை!

உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா காரணமாக சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இலட்சக் கணக்கான தொழிலாளர்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடப்பதால், தொழிலாளர்களின் வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளானது மட்டுமன்றி, தொழில் முனைவோரும் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கும் நிலைமை உருவாகி வருகிறது.
தமிழகத்தின் தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்டவற்றில் இயங்கும் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. உற்பத்தியான ஜவுளி, பனியன், இஞ்ஜினியரிங் பொருட்களைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன.
வெளிநாட்டுச் சரக்குப் போக்குவரத்து இல்லாததால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன் பெற்றுத்தான் இயங்கி வருகின்றன.
கொரோனா வைரஸ் எதிரொலியாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய - மாநில அரசுகளின் வங்கித்துறை, வரித்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் தொழில் நிறுவனங்களுக்கு எவ்வித நெருக்கடியும் தரக்கூடாது. இத்தகைய தொழில் நிறுவனங்கள் மீண்டு எழும் வரையில், வங்கிக் கடன்களைத் திரும்பச் செலுத்தக் கூடுதல் கால அவகாசம் வழங்க முன்வர வேண்டும். கடன்களுக்கான வட்டியையும் முழுமையாகத் தள்ளுபடி செய்வதுடன், புதிய தொழில் கடன்கள் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். வாழ்வாதாரம் இழந்துள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்குவதற்கு மத்திய- மாநில அரசு உதவிக் கரம் நீட்ட வேண்டும்.
தொழில் துறை போலவே வேளாண்மைத் தொழிலும் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. விவசாயிகளின் வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, எளிமைப்படுத்த வேண்டும். வங்கிகள் வழங்கியுள்ள வேளாண் கடன்கள் அனைத்தையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகள் அளித்துள்ள பயிர்க் கடன், நகைக் கடன் உள்ளிட்டவற்றையும் தள்ளுபடி செய்வதும், புதிய வேளாண் கடன்களை விவசாயிகளுக்கு வழங்குவதும்தான் விவசாயத் தொழில் மீட்சி பெற வழிவகுக்கும்.
விவசாயத் தொழிலாளர்கள் கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபடும் வரையில் உதவித் தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க முன்வர வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 07-04-2020 தெரிவித்துள்ளார்.

Monday, April 6, 2020

வைகோ அவர்களின் நாடாளுமன்ற செயல்பாடுகள் 2020!

அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியத்தை, வட இந்தியாவுக்கு மாற்ற முயற்சிப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது நாடாளுமன்றத்தில் வைகோ (04.02.2020 )
வைகோ கோரிக்கை ஏற்பு!
அமைச்சர் உறுதிமொழி (04.02.2020)

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்கள் அவையில் வைகோ ஆற்றிய உரை (5.2.2020)
இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணத்தைக் குறைத்திடுங்கள்
நாடாளுமன்றத்தில் வைகோ வேண்டுகோள்: அமைச்சர் விளக்கம் (7.2.2020)

கழிப்பு அறைக் கிடங்குகள், கழிவுநீர் அகற்றுதலில்
மனிதர்கள் ஈடுபடுவதைத் தடுக்க
அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
வைகோ கேள்விகளுக்கு அமைச்சர் விளக்கம் (08.02.2020)

வளர்ச்சி இல்லை; வீழ்ச்சிதான்!
வரலாறைத் திரிக்கும் முயற்சிதான்; வன்மையாக எதிர்க்கின்றேன்!
நிதிநிலை அறிக்கை மீது வைகோ உரைத்த கருத்துகள் (10.02.2020)

பொறியியல் கல்வியில்,
வேதியியல், கட்டாயப் பாடமாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும்
நாடாளுமன்றத்தில் வைகோ கோரிக்கை (05.03.2020)

>சமற்கிருத மொழிச் சட்டம்,
ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்து விடும்
மாநிலங்கள் அவையில் வைகோ எச்சரிக்கை (05.03.2020)

தில்லி படுகொலைக்குக் காரணமான சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள்
மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை (12.3.2020)

சமற்கிருத மொழிச் சட்டம், ஏனைய மொழிகள்
அனைத்தையும் அழித்து விடும் மாநிலங்கள் அவையில் வைகோ எச்சரிக்கை
3 புதிய சமற்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்டமுன்வரைவின் மீது, (16.03.2020)

தமிழ்நாட்டில் புதிய ரயில்வே தடங்கள் அமைக்கும் பணிகளுக்கு
ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? வைகோ, சண்முகம் ஆகியோரின் கேள்விகளுக்கு,
அமைச்சர் பியுஸ் கோயல் விளக்கம் (18.03.2020)

பட்டிசேரியில் கேரளம் புதிய அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துங்கள்
மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை (19.3.2020)

குடியரசு நாள் அணிவகுப்பில்,
சில மாநில அரசுகளின் ஊர்திகளுக்கு இடம் தராதது ஏன்?
வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம் கேள்வி எண் 36.

மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க
மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
வைகோ கேள்விகளுக்கு அமைச்சர் விளக்கம் கேள்வி எண். 61

வேளாண் விளைபொருட்களுக்குத் தரப்படுகின்ற
ஆதரவு விலை மற்றும் ஊக்கத் தொகை என்ன?
வைகோ கேள்விகளுக்கு அமைச்சர் விளக்கம் கேள்வி எண் 684
வேலைவாய்ப்புகளைப் பெருக்க
அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
வைகோ கேள்விகளுக்கு, அமைச்சர் விளக்கம் கேள்வி எண் 425

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்குச் சென்றாரா? என்ன பேசினார்?
வைகோ கேள்விகளுக்கு, அமைச்சர் விளக்கம் கேள்வி எண் 534

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க, வைகோ கோரிக்கை!
சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கக் கடிதம் 12.02.2020

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த வைகோ கேள்விகளுக்கு
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எழுத்து மூலம் அளித்துள்ள விளக்கம் கேள்வி எண்: 1081

புதுப்பிக்கத்தக்க விசை ஆக்கம் குறித்த வைகோ கேள்விகளுக்கு
புதுப்பிக்கத் தக்க விசைத்துறை அமைச்சர் எழுத்து மூலம் அளித்துள்ள விளக்கம் கேள்வி எண் 1411

தமிழ்நாட்டில் எத்தனை புதிய வான் ஊர்தி நிலையங்கள்? பெண்கள் பாதுகாப்பு என்ன?
வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம் கேள்வி எண். 1442, கேள்வி எண்: 1443
புதிய போக்குவரத்துக் கொள்கை வரையும் திட்டம் குறித்த வைகோ கேள்விகளுக்கு,
தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
எழுத்து மூலம் அளித்துள்ள விளக்கம் கேள்வி எண் 684

பழமையான ஊர்திகளைப் பாதுகாக்க ஊக்கத்தொகை வழங்கப்படுமா?
வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம் கேள்வி எண்: 1256

உரங்களுக்கான அரசின் மானியக் கொள்கை என்ன?
வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம் கேள்வி எண்: 1804

அயல்நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலாளர்களைப் பாதுகாக்க
அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
வைகோ கேள்விகளுக்கு,
அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்துள்ள விரிவான விளக்கம் கேள்வி எண் 206

இந்தியாவில் நிலப்பத்திரங்கள், எந்த அளவிற்குக் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளது?
வைகோ, சண்முகம் ஆகியோரது கேள்விகளுக்கு, அமைச்சர் அளித்துள்ள விளக்கம் கேள்வி எண் 1905
தமிழ்நாட்டில் புதிய சிஜிஎச்எஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுமா?
நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி
அமைச்சர் விளக்கம் கேள்வி எண் 1357
எரிகாற்றுகளின் பயன்பாடு, குழாய்கள் வழியாக நகர்ப்புறங்களில் வீடுகளுக்கு வழங்குதல் குறித்து
வைகோ கேள்விகள், அமைச்சர் விளக்கம் கேள்வி எண் 2838

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
வைகோ கேள்விகள், அமைச்சர் விளக்கம் கேள்வி எண் 2503

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற செயல்பாடுகள் 2019!



நாடாளுமன்றத்தில் வைகோ முதல் கேள்வி 25.07.2019
மாநிலங்கள் அவையில் வைகோ எச்சரிக்கை இன்று 26.7.2019
மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும்
நியூட்ரினோ திட்டத்தை நிறுத்துங்கள் இன்று (30.07.2019)

இந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா,
வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படும்
மாநிலங்கள் அவையில், கன்னி உரையில் வைகோ 01.08.2019

இந்த நாள் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள்
காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை
நாடாளுமன்றத்தில் வைகோ 05.08.2019

கூடங்குளம் அணுஉலையை அகற்றுக!
மாநிலங்கள் அவை பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை (06.08.2019)

மறைந்த உறுப்பினர்களுக்கு
மாநிலங்கள் அவையில் வைகோ புகழ் ஆரம் இன்று 18.11.2019

வரலாற்றுச் சிறப்புக்கு உரிய நாளில் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி
மாநிலங்கள் அவையில் வைகோ (18.11.2019
ஜலியன்வாலாபாக் அறக்கட்டளை மசோதா
வைகோ ஆற்றிய உரை 19.11.2019
புதிய கல்விக் கொள்கை அல்ல; புதிய புல்டோசர் கொள்கை
மாநிலங்கள் அவையில் வைகோ கடும் தாக்கு 21.11.2019

சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் இருந்து மக்களைக் காத்திடுக
நாடாளுமன்றத்தில் வைகோ கோரிக்கை 22.11.2019
வானூர்திகளில் தமிழ் ஒலிக்கட்டும்
நாடாளுமன்றத்தில் வைகோ கோரிக்கை ஏற்பு 22.11.2019

நாடாளுமன்றத்தில் வைகோ அறிமுகம் செய்த,
சட்ட முன்வரைவு 24.11.2019
உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிடுக!
மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை27.11.2019

அயல்நாட்டுப் பயணங்கள் குறித்து,
பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும்
மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை29.11.2019
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில்
வைகோவின் தனி ஒருவர் தீர்மானம் (Private Member Bill) 30.11.2019

மாநில அரசுகளிடம் இருந்து பறித்துக்கொண்ட அதிகாரங்களைத்
திரும்பத் தருவதற்காக, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துங்கள்
மாநிலங்கள் அவையில் வைகோ கொண்டு வந்த தனி ஒருவர் தீர்மானம்
(Private Member Resolution) 02.12.2019

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அறிவிக்க வேண்டும்!
மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை 04.12.2019

குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை
வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்!
மாநிலங்கள் அவையில் வைகோ 11.12.2019

கீழடி ஆய்வுகள் குறித்து வைகோ கேள்விகளுக்கு,
பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் விளக்கம் கேள்வி எண் 188

வைகோ கேள்விகளும்,
உள்துறை இணை அமைச்சர் அளித்த விளக்கங்களும் கேள்வி எண் 352

தலைமைத் தளபதி என்ற புதிய பொறுப்பை உருவாக்கப் போகின்றீர்களா?
வைகோ கேள்வி அமைச்சர் விளக்கம் கேள்வி எண் 17

ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு,
சிக்கல் இல்லாத வகையில் பணப்பரிமாற்றம் விரைவில் அறிமுகம்
வைகோ கேள்விக்கு நிதி அமைச்சர் விளக்கம் கேள்வி எண் : 246

எல்லைத் தகராறுகள் குறித்து,
பொதுமக்கள் அறிந்து கொள்ள வழி என்ன?
வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம் கேள்வி எண்: 18

தொடரித்துறை பராமரிப்புப் பணிகள் தனியார் மயம் ஆகின்றதா?
வைகோ கேள்விகளும், அமைச்சர் விளக்கமும் கேள்வி எண் 771

விசாரணை சிறைக் கைதிகளின் விடுதலை எப்போது?
வைகோ கேள்விகளும், உள்துறை அமைச்சர் விளக்கமும் கேள்வி எண் 354

எத்தனை இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத்
தோண்டப் போகின்றீர்கள்?
வைகோ கேள்விக்கு அமைச்சர் விளக்கம்! கேள்வி எண்: 1889

தேனி நியூட்ரினோ திட்டம் குறித்து வைகோ கேள்விகளுக்கு
பிரதமர் துறை அமைச்சர் விளக்கம் கேள்வி எண்: 1992

பாடத் திட்டங்களை மாற்றுகின்றீர்களா?
வைகோ கேள்விக்கு அமைச்சர் விளக்கம் கேள்வி எண்: 56

கோத்தபாய இராஜபக்சேவுடன் என்ன பேசினீர்கள்?
வைகோ கேள்விகளுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் கேள்வி எண் 2762

இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி உண்மைதான்!
வைகோ கேள்விக்கு அமைச்சர் ஒப்புதல் கேள்வி எண்: 257

தொடரித்தடம் அமைக்கும் பணிகளை,
குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற இயலாது!
வைகோ கேள்விகளுக்கு, அமைச்சர் பியுஸ் கோயல் விளக்கம்
உடுக்குறி அல்லாத கேள்வி எண்: 2201

சிபிஐ க்கு, தன்னாட்சி அதிகாரம் அளிப்பீர்களா?
பிரதமரிடம் வைகோ கேள்வி
இணை அமைச்சர் அளித்துள்ள விளக்கம் கேள்வி எண் 603

கொரோனா பற்றிய உண்மை நிலை என்ன? வைகோ கேள்வி!



தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் 571 பேர் என்றும், உயிரிழந்தவர்கள் 5 பேர் என்றும் ஏப்ரல் 5 ஆம் தேதி சுகாதாரத்துறை அறிவிப்பின் மூலம் தெரிகிறது. வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் 90,824 பேர், அரசின் தனிமை முகாமில் இருப்பவர்கள் 127 பேர், சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ளவர்கள் 38 இலட்சம் பேர் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் கூறி இருக்கிறார்.

கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள 571 பேரில், 507 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் கூறுகிறார். ஆனால் உண்மை நிலை என்ன?

சீனாவில் கொரோனா கண்டறியப்பட்ட டிசம்பர் மாதத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி, தொழில் நிமித்தமாகச் சென்றோர் மற்றும் சுற்றுலா பயணிகள் இலட்சக்கணக்கானோர் இந்தியாவுக்குத் திரும்பி உள்ளனர். தமிழ்நாட்டிலும் பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பி இருக்கின்றனர். விமான நிலையங்களில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்படுவதற்கு முன்பே இவர்கள் அனைவரும் அவரவர்கள் ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இவர்கள் அனைவரையும் கண்டறிந்து தமிழக அரசின் சுகாதாரத் துறை பரிசோதனை நடத்தியதா? என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டின் மொத்த எட்டு கோடி மக்கள் தொகையில், வெறும் 38 இலட்சம் பேர் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதும், வெறும் 4612 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் தெரிகிறது. இரத்தப் பரிசோதனை ஆய்வகங்களை அதிகரித்து கொரோனா பரிசோதனையை முழு வீச்சுடன் செயல்படுத்தினால்தான் கொரோனா தொற்றுக்கு உள்ளான மக்களின் உண்மையான எண்ணிக்கையை அறிய முடியும்.

கொரோனா தொற்று சென்னை, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, தேனி, கரூர், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவாரூர், சேலம், திருவள்ளூர், விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருப்பத்தூர், கடலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, சிவகங்கை, வேலூர், தஞ்சை, காஞ்சிபுரம், நீலகிரி, திருப்பூர், இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 32 மாவட்டங்களில் பரவி இருப்பதாக தமிழக அரசு கூறி இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் இரண்டாம் நிலையில்தான் உள்ளது. அடுத்த நிலைக்குப் போகவில்லை என்று அரசு தரப்பில் திரும்பத் திரும்பக் கூறுவது மக்களிடையே மேலும் அலட்சியப் போக்கு உருவாகவே வழி வகுக்கும். மார்ச் 25 ஆம் தேதியிலிருந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் கடைப்பிடிக்கும் நிலை இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்தச் சூழலில் கொரோனா தொற்று தீவிரத்தின் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்துவதுதான் அரசின் கடமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகப் பரவலிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்.

துபாய் நாட்டிலிருந்து திரும்பிய இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 71 வயது முதியவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்ரல் 2 ஆம் தேதி வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், மூச்சுத் திணறல் காரணமாக கிசிச்சை பெற்றார் என்று ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதனால் மருத்துவர்கள் அவரது இரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டு, உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இறந்தவரின் உடலை கீழக்கரை எடுத்துச் சென்று, இறுதி மரியாதைக்காக அவரது வீட்டில் வைத்துள்ளனர். தொழிலதிபர் என்பதால் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இறுதிச் சடங்கில் 300 பேர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

எல்லாம் முடிந்த பிறகு, இறந்தவரிடம் எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

தற்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியோர், இறுதிச் சடங்கில் பங்கேற்றோர் அனைவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பார்களோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்யும் முயற்சி நடக்கிறது.

இறந்தவரின் இரத்தப் பரிசோதனை முடிவுகள் வருவதற்குக் காலதாமதம் ஆனது ஏன்? ஆய்வுக்கூட முடிவு வருவதற்கு முன்பு உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது ஏன்?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பாராட்டுக்குரிய வகையில் அர்ப்பணிப்புடன் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் நேரம், காலம் பாராது சேவை புரிந்து வருகின்றனர். ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்ததைப் போன்ற நிகழ்வு இனி தொடராமல் இருக்க தமிழக அரசு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 06-04-2020 தெரிவித்துள்ளார்.

Saturday, April 4, 2020

மதிமுக மாணவர் அணி சார்பில் நிவாரணம்!

கொரோனா நுண்ணுயிர் தொற்றுக்கு எதிராக, அதஞ்சை மாவட்ட மதிமுக மாணவர் அணி சார்பில், வண்ணாரப்பேட்டை ஊராட்சி 6 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், பொதுமக்கள் கொரோனா நுண்ணுயிர் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் கபசூர மூலிகை பொடி, நிலவேம்பு மூலிகை போடி, கிருமிநாசினி சோப்பு ஆகியவை தலா நூறு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
மறுமலர்ச்சி திமுக., ஆபத்து காலங்களில், செஞ்சிலுவை சங்கம் போல செயல்படும் என தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்து கூறி வருவதை மெய்ப்பிக்கிற வகையில்,
தஞ்சை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளரும், வண்ணாரப்பேட்டை ஊராட்சி 6 வது வார்டு உறுப்பினருமான நண்பர் மணிகண்டன் அவர்கள் தனது சொந்த முயற்சியில் மேற்கண்ட பொருட்களை வழங்கி இருக்கிறார்.
தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்திற்கும் பெருமை சேர்க்கிற வகையில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற மாணவர் அணி நிர்வாகிகள் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தலைவரின் விருப்பத்திற்கு இணங்க,
கொரோனா நுண்ணுயிர் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட நம்மால் ஆன பணிகளை தொடர்ந்து செய்வோம். பொதுமக்களுக்கு மதிமுக உதவிகரமாக இருந்து வருகிறது என்கிற செய்தி நாடு முழுவதும் பரவட்டும்.
தஞ்சை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் நண்பர் மணிகண்டன் அவர்களுக்கு கழக மாணவர் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மணிகண்டன் அலைபேசி எண்: 7810092922
அன்புடன்,
பால.சசிகுமார்
மாநில மாணவர் அணிச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக.,

Friday, April 3, 2020

கொரோனா அழிவு எச்சரிக்கை! வைகோ கடிதம்!

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!
மனித குலத்தை அதிர்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்தி உள்ள ‘கொரோனா’ தொற்று நோய் சமூகத்தில் பரவி பேரழிவு ஏற்படாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கின்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீன தேசத்தில் கூபேயி மாகாண தலைநகர் ‘உகான்’ நகரில் ‘கொரோனா’ பாதிப்பு கண்டறியப்பட்டது. 2019 டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜனவரி 14, 2020 வரையில் சீனா எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. ஆரம்பத்தில் இதை சீனா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
உகான் நகரில் இருந்த மத்திய மருத்துவ மனையில், கண் மருத்துவர் லி வென்லியாங் பணியாற்றி வந்தார். அவர்தான் ‘சார்ஸ்’ போன்ற ஒரு நோய் பரவத் தொடங்கி இருக்கிறது. அதை சீனா கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தடுக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் சீன அரசாங்கம் மருத்துவர் லி வென்லியாங் எச்சரிக்கையை அலட்சியம் செய்தது மட்டுமின்றி, ‘வதந்தியைப் பரப்புகிறார்’ என்று குற்றம் சுமத்தி, அவரைச் சிறையில் தள்ளியது. பின்னர் நிலைமை கவலைக்குரியதாக மாறியவுடன், மருத்துவர் லி வென்லியாங் கூறியது சரிதான் என்று சீன அரசு அவரது கருத்தை ஏற்றது. உகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி, மக்கள் சாவின் மடியில் விழத் தொடங்கிய பின்னர்தான் சீன அரசு போர்க்கால வேகத்தில் செயல்படத் தொடங்கியது. சீன நாட்டில் மட்டும் சுமார் 80,967 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானார்கள். 3,316 பேரை கொரோனா வைரஸ் காவு வாங்கியது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவும் கூடும்.
கொரோனா வைரஸ் பற்றிய எச்சரிக்கையை முதன் முதலில் விடுத்த சீனாவின் கண் மருத்துவர் லி வென்லியாங், கொரோனா தடுப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, அந்தக் ‘கிருமி’யின் கொடுந்தாக்குதலால் பிப்ரவரி 7 ஆம் தேதி பலியானர். டாக்டர் லி தனது 34 வயதிலேயே உயிர் இழந்துவிட்டார். மக்களுக்காக உயிரையும் தாரை வார்த்துக் கொடுத்த அவரது குடும்பத்தாரிடம் சீன அரசு மன்னிப்புக் கேட்டிருக்கிறது.
இன்று என்ன நிலைமை?
உலக நாடுகள் கொரோனா வைரஸ் பயத்தால் உறைந்து கிடக்கின்றன. நாள்தோறும் உயிர்ப்பலிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. மார்ச் 29 ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் சுமார் மூவாயிரம் பேர் பலி ஆனதாக வந்த செய்திகள் பேரிடியாக உள்ளன. உலக அளவில் மார்ச் 29 ஆம் தேதி வரையில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 9 இலட்சமாக உயர்ந்துவிட்டது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலைகுலைந்த இத்தாலி நாட்டில் மட்டும் மார்ச் 30 ஆம் தேதி நிலவரப்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். சுமார் 93 ஆயிரம் பேர் கொரோனாவில் பீடிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் மட்டும் 6 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் மரணத்தைத் தழுவியுள்ளனர். அங்கும் பாதிக்கப்பட்டு இருப்போர் எண்ணிக்கை 78 ஆயிரத்துக்கும் அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஈரானில் 2 ஆயிரத்து 600க்கும் அதிக மானோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப் பட்டு இருப்போர் எண்ணிக்கையும் 38 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டில் பலி எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐநூறை நெருங்கி விட்ட நிலையில், இன்னும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மொத்த உயிர்ப் பலியில் ஐரோப்பா கண்டத்தில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு உயிர்ப்பலி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில், கொரோனாவுக்குப் பலியானோர் 5116 எனவும், அதிலும் ஏப்ரல் 1 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 884 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க மக்களை மட்டுமல்ல, உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அமெரிக் காவில் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருப்பவர்கள் 2,15,417 பேர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 1 ஆம் தேதி மட்டும் 25 ஆயிரத்து 200 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்து இருக்கின்றனர்.
இவ்வாறு உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா கிருமி பரவிவிட்டது.
மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,965 பேருக்கு இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் நம் நாட்டில் 50 உயிர் களைப் பலிவாங்கி இருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளது அடங்கும்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங் களில், 14 மாவட்டங்களில் கொரோனா நோய் தாக்கியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ், தாக்கம் 2 ஆம் நிலையில்தான் உள்ளது. இது மூன்றாம் நிலைக்கு, அதாவது சமூகப் பரவலாக மாறுமானால், இத்தாலியை விட மோசமான பாதிப்பும் பல்லாயிரக் கணக்கானோர் கொரோனோ தொற்றுக்கு ஆளாவதும், உயிரிழப்பு அதிகரிப்பும் நேர்ந்துவிடும்.
அந்த நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டால் அதிலிருந்து இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு மீண்டு எழுவது என்பது மிகப்பெரிய சவால் நிறைந்த துயர அத்தியாயமாக மாறிவிடும்.
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது எப்படி? இப்போதைக்கு அதற்கு உரிய மருந்து உண்டா?
ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதுதான் இந்த நோய்த் தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் வழியாகும். அதனால்தான் மார்ச் 22 அன்று ஒரு நாள் ‘மக்கள் ஊரடங்கு’ என்று பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார். பின்னர் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு என்று இந்திய அரசு பிரகடனம் செய்தது. தமிழகத்தில் 144 தடை உத்தரவும் அமலுக்கு வந்து உள்ளது.
21 நாட்கள் ஊரடங்கு என்பது ஒட்டு மொத்த இயல்பு வாழ்க்கையையே முடக்கிப் போட்டுவிடும் என்பது உண்மை தான். ஆனால் இதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக உலக நாடுகள் ‘மூன்றாம் உலகப் போரில்’ குதித்து இருக்கும் நிலையில், அதனை வெற்றிகரமாக ஒடுக்குவதற்கு மக்கள் ஒத்துழைப்பு இன்றியமையாத தேவை ஆகும்.
எத்தனையோ எச்சரிக்கைகள் விடுத்த போதிலும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் அச்சமின்றி பொது வெளியில் கூட்டம் கூட்டமாக வரும் காட்சிளை ஊடகங்களில் கண்ணுற்ற போது துணுக்குற்றேன். காவல்துறை மக்கள் மீது பலப்பிரயோகம் செய்யும் நிலைமையும் வருத்தமாக உள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், வாகனம், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், காவல் துறையினர், வருவாய்த்துறை அலுவலர் கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்புப் பணியில் தங்களை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு தங்களையே ‘பணயம்’ வைத்து கொரோனா யுத்தத்தில் களத்தில் நிற்கும் மக்கள் காவலர்களுக்கு நாம் துணையாக இருக்க வேண்டும். துயரமாக ஆகிவிடக்கூடாது என்பதை மக்கள் உணர வேண்டும்.
இதே நிலைமை ஏப்ரல் 14 ஆம் தேதிக்குள் முடிவடையுமா? அல்லது இன்னும் சில வாரங்களுக்குத் தொடருமா? என்பதை எவரும் அறுதியிட்டுக் கூற முடியாது. எப்படி இருந்தாலும் கொரோனா வைரஸ் தாக்கு தலைத் தடுத்து, நம்மையும் நாட்டையும் தற்காத்துக் கொள்ள ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கொரோனாவை ‘கொள்ளை நோய்’ என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.
மனிதகுல வரலாற்றில் கொள்ளை நோய் என்று கண்டறியப்பட்ட ‘பிளேக்’ போலவே ‘கொரோனா வைரஸ்’ தொற்றும் உலக நாடுகளை அச்சத்தில் உறையச் செய்துள்ளது.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா வில் பரவிய கொள்ளை நோயான ‘பிளேக்’ பேரழிவை ஏற்படுத்தியது. கான்ஸ்டான்டி நோபிலைத் தலை நகராகக் கொண்டு பைசான்டைன் பேரரசை ஆட்சி செய்த ரோமப் பேரரசன் ஜஸ்டினியன் காலத்தில் பரவிய அந்த ‘பிளேக்’ நோய், “ஜஸ்டினியன் பிளேக் (Justianian Plague)” என்றே அழைக்கப்படுகிறது. இந்தக் கொள்ளை நோய் உலகில் சுமார் 500 இலட்சம் (5 கோடி) மக்களைப் பலி கொண்டது.
இதைப் போலவே 14 ஆம் நூற்றாண்டில் ‘பிளாக் டெத் (Black Death)’ என்ற ‘பிளேக்’ நோய் சுமார் 500 இலட்சம் அதவாது 5 கோடிக்கும் அதிகமான மக்களைக் காவு வாங்கியது. இப்படி பலியானோர் எண்ணிக்கை ஒட்டு மொத்த ஐரோப்பிய மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கிலாந்தில் கி.பி. 1664-66 ஆம் ஆண்டுகளில் பரவிய ‘த கிரேட் லண்டன் பிளேக் (The Great London Plague)’ மக்களைப் பீடித்த நேரத்தில், லண்டனில் 1666 செப்டம்பர் 2 இல் பரவிய மாபெரும் லண்டன் ‘தீ’ காரணமாக கட்டுக்குள் வந்தது
இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக ஏற்பட்ட மலேரியா, காலரா, இன்புளுயன்சா மற்றும் பிளேக் போன்ற நோய்த் தொற்றுகளால் பம்பாயில் மட்டும் 1 இலட்சத்து 84 ஆயிரம் மக்கள் மடிந்தனர். கடைசியாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் 1994 இல் ‘பிளேக்’ பரவி 56 உயிர்கள் பறிபோயின.
உலக சுகாதார நிறுவனம், 2018 ஆம் ஆண்டு உலகில் பரவி வரும் பத்து நோய்களின் பட்டியலை வெளியிட்டு, உடனடியாக இவற்றைக் கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சிகளைத் துரிதப் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நோய்களின் பரவல் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி இருக் கின்றது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டு இருக்கும் வைரஸ் நோய் பட்டியல் என்ன?
1. நிபா வைரஸ்: பழம் திண்ணி வௌ வால்களிடமிருந்து கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு இந்த நோய்க் கிருமி பரவுகிறது. காய்ச்சல், வாந்தி, தலை வலி அதன் பிறகு மூளையில் வீக்கம் உண்டாவதே அதற்கான அறிகுறி, நிபா தாக்கியவர்களில் 70% பேர் இறந்து உள்ளனர்.
2. ‘ஹெனிபா வைரஸ்’ நோய்கள்: பழம் திண்ணி வௌவால்களிடமிருந்து பரவும் ‘ஹெனிபா வைரஸ்’ ஆஸ்திரேலி யாவில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட ‘ஹென்ரா’ வைரஸ் இதே வகையைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பழம் திண்ணி வௌவால்களிடமிருந்து குதிரைகள் மற்றும் மனிதர்களுக்குப் பரவுகிறது. பிரிஸ்பேன் நகரில் 1994 இல் இது முதன் முதலில் கண்டறியப்பட்டது.
3. கிரிமியன் - காங்கோ ஹெமோரெஜிக் காய்ச்சல்:
இந்தக் ‘குருதிப் போக்குக் காய்ச்சல்’ உண்ணிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. இதில் பாதிக்கப்பட்ட 40% பேர் மரணத்தைத் தழுவுகின்றனர். 1944 இல் கிரீமியாவிலும் பின்னர் காங்கோ நாட்டிலும் இக்கிருமி கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்கா, பால்கன் தீவுகள், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதி களில் இந்த நோய் நிலவுகிறது.
அதிகமான காய்ச்சல், முதுகுவலி, மூட்டு வலி, வயிற்று வலி மற்றும் வாந்தி ஆகியன இதற்கான அறிகுறி ஆகும்.
இந்நோய்த் தாக்குதலுக்கு உள்ளான வரின் ரத்தம் மற்றும் உடல் திரவங்கள் மூலம் இது பிறருக்குப் பரவுகிறது.
4. இபோலா வைரஸ்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள இபோலா நதிக்கரையில் 1976 இல் இந்த வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டதால் இந்தக் கிருமி ‘இபோலா’ என்று பெயர் பெற்றது.
இதுவும் பழம் திண்ணி வௌவால்களிட மிருந்து உண்டாகும் நோய். விலங்கு களைத் தாக்கும் இந்த நோய் விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கும் பரவுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் தோலில் உள்ள காயம், வாய், மூக்கு, ரத்தம், வாந்தி, மலம் மற்றும் உடல் திரவங்கள் ஆகியவை மூலம் இது பிற மனிதர் களுக்குப் பரவுகிறது. சிறுநீர் மற்றும் விந்து ஆகியவற்றிலும் இந்த வைரஸ் இருக்கலாம்.
‘இபோலா’ தாக்குதலுக்கு உள்ளானவர் களில் 50% பேர் இறக்கின்றனர். 2014 முதல் 2016 வரை மேற்கு ஆப்பிரிக் காவில் இந்த நோயின் பரவல் 11 ஆயிரம் பேர் இறப்புக்குக் காரணமானது.
காய்ச்சல் மற்றும் உடல் சோர்வுக்குப் பிறகு, வயிற்றுப் போக்கு, சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்பு, கண்கள், மூக்கு அல்லது வாயில் இருந்து ரத்தக் கசிவு உண்டாக இது வழி வகுக்கும்.
5. மார்பக் வைரஸ்:
இபோலாவுடன் தொடர்புடைய வைரஸ் கிருமி மார்பக் வைரஸ். பாதிக்கப்பட்ட வரின் உடல் திரவம் மூலம் இது பிறரைத் தொற்றிக் கொள்ளும். பழந் திண்ணி வௌவால்கள் மூலமே இந்தக் கிருமியும் பரவுகிறது.
மார்பக் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான வர்கள் 24% முதல் 88% வரை மரணம் அடைகின்றனர்.
அதீத குருதிப் போக்கில், நோய் தாக்கிய எட்டு அல்லது ஒன்பது நாட்களில் மரணம் ஏற்பட்டுவிடும்.
ஜெர்மனியில் உள்ள மார்பக் நகரில் 1967 இல் முதன் முதலாக இது கண்டறியப்பட்டது.
6. சார்ஸ் (SARS)
‘சிவியர் அக்யூட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரம் (SARS)’ என்பது ஒரு வைரஸால் உண்டாகும் மூச்சுக் கோளாறு. சீனாவில் மரநாய்களிடமிருந்து மனிதர் களுக்கு பரவியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2002 முதல் 2004 வரை சார்ஸ் பரவல் இருமுறை நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 8098 பேரில் 774 பேர் இறந்தனர். காற்று, எச்சில் போன்றவை மூலம் இது பரவுகிறது.
7. மெர்ஸ் (MERS)
‘மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரம்’ ஒரு சார்ஸ் வகை நோய். சௌதி அரேபியாவில் 2012 இல் இது கண்டறியப்பட்டது. மெர்ஸ் வைரஸ் தாக்கியவர்களில் 35% பேர் மரணத்தைத் தழுவி உள்ளனர். சார்ஸ் கிருமியைவிட அதிக ஆபத்து மிகுந்த இந்த நோய் அதன் அளவுக்கு பரவுவதில்லை. மெர்ஸ் வைரஸ் கிருமி ஒட்டகங்களிலிருந்து பரவி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
8. ரி~ப்ட் பள்ளத்தாக்குக் காய்ச்சல் (Rift Valley Fever)
இது இரத்தம் குடிக்கும் ஈக்கள் மற்றும் கொசுக்கள் மூலம் கால்நடைகளுக்குப் பரவுகிறது. மனிதர்களையும் தொற்றிக் கொள்ளும் இந்த நோய் தாக்கினால் ரத்த நாளங்கள் பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பால் மரணம் உண்டாகும்.
கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வேளாண் பண்ணையில் இந்தக் காய்ச்சல் 1931 இல் கண்டறியப் பட்டது.
9. ஜிகா வைரஸ்
கொசுக்கள் மூலம் மனிதர்களைத் தொற்றிக் கொள்ளும் ஜிகா வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, தோலில் சொறி உண்டாதல், தசை வலி ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
வயதானவர்களை ஜிகா வைரஸ் தாக்கி னால் கை, கால் செயலிழப்பு ஏற்பட்டு விடும்.
உகாண்டாவில் உள்ள ஜிகா காடுகளில் 1947 இல் செம்முகக் குரங்குகளிடம் இந்தக் கிருமி கண்டறியப்பட்டது.
10. லாசா காய்ச்சல்
லாசா வைரஸ் பாதிப்புக்குள்ளான எலிகளின் மூலம் இக்காய்ச்சல் மனிதர் களைத் தொற்றுகிறது.
ரத்த நாளங்கள் பாதிப்பு அல்லது உறுப்பு செயல் இழப்பால் இக்காய்ச்சல் மனிதர்களைத் தொற்றுகிறது.
ரத்த நாளங்கள் பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பால் 14 நாட் களுக்குள் மரணம் ஏற்படுகிறது. லாசா காய்ச்சல் கண்டவர்களில் 1% க்கும் அதிகமானோர் இறக்கின்றனர். காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவையே இதன் அறிகுறிகள். நைஜீரியாவின் லாசா நகரில் 1969 இல் இந்தக் கிருமி இருப்பது தெரிய வந்தது.
2018 இல் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட 10 வகையான வைரஸ் கிருமிகள் மூலம் உருவாகும் நோய்களைப் பட்டியலிட்டது. தற்போது ‘கோவிட் - 19’ என்னும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலைக் கொள்ளை நோய் என்று பிரகடனம் செய்துள்ளது.
கொரோனா எத்தகைய கொடிய விளைவு களை உருவாக்கும் என்பதற்கு, வளர்ச்சி பெற்ற நாடான அமெரிக்காவில், ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் விஞ்ஞானி ஆன்டனி பவுசி கூறியிருப்பது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழப்பு ஏற்படும் என்று விஞ்ஞானி ஆன்டனி பவுசி கூறி இருப்பது அமெரிக்காவை மட்டுமல்ல, உலக நாடுகளையும் உலுக்கி இருக் கிறது.
லண்டன், இம்பீரியல் காலேஜ் வெளியீடான நேச்சர் (Nature, March 30, 2020) முறையான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாவிடில் உலகம் முழுவதும் மொத்த மக்கள் தொகையில் உயிர் பலி 40 மில்லியனை எட்டிவிடும் என்று எச்சரிக்கை செய்கின்றது.
இந்தியாவில் நிலைமை என்ன ஆகும்?
கோவிட்-19, 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏப்ரல் - மே மாதங்களில் 13 கோடி முதல் 25 கோடி மக்களைக் கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து இருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தமிழ் நாட்டில் 60 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் மக்களை இந்நோய் தாக்கும் ஆபத்து விளையும் என்றும் அதிர்ச்சி தரத்தக்க தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கு மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு என்று உத்தரவு போட்டுள்ளது.
கொரோனா கிருமி தொற்றின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மார்க்கெட், காய்கறி சந்தை, பொதுப் பங்கீட்டுக் கடைகள் என்று கூட்டம் கூட்டமாக ஒன்றாகச் சேர்ந்து உலா வருவது நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கி விடும். வீட்டுக்குள்ளேயே தனித்து இருப்பது ஒன்றுதான் இப்போதைக்கு மக்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆற்று கின்ற அருந்தொண்டு என்பதை உணர வைக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் முயற்சிகளுக்கு கழகக் கண்மணிகள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
சாதாரண எளிய மக்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள், விவசாயத் தொழி லாளர்கள் போன்ற அடித்தட்டு மக்களுக்கு அவர்களின் பசிப்பிணிப் போக்கும் கடமையை அறப்பணி உள்ளம் கொண்டோரை இணைத்துக் கொண்டு நாமும் உதவிட வேண்டும்.
தமிழகத்தின் பல பகுதிகளில் கழகக் கண்மணிகள் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறை, தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருவதை அறிந்து நெஞ்சம் நெகிழ் கிறேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செஞ்சிலுவைச் சங்கம் போல தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை புரியும் என்று நான் பல ஆண்டுகளாகவே கூறி வருகிறேன். அதனை மெய்ப்பிக்கும் வகையில் மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள கழக கண்மணிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறுகின்றேன்.
தமிழ் நாடு முழுவதும் கழகக் கண்மணிகள் இத்தகைய பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நானும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியும் தலா ஒரு கோடி ரூபாயை, கொரோனா பாதிப்பு தடுப்புப் பணிகளுக்காக தமிழக அரசிடம் வழங்கி இருக்கின்றோம்.
ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முற்றுப் பெறுமா? அல்லது தொடருமா? என்பதை யூகிக்க முடியாது. இன்னும் வர இருக்கின்ற நாட்கள் மேலும் சோதனைகள் நிறைந்ததாகக் கூட இருக்கலாம். பொருளாதார வீழ்ச்சி கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எல்லாவற்றையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அரசு உத்தரவுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைவிட, இந்தச் சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்குமானால் இதுபோன்ற சோதனையான காலகட்டத்தில் தனித்து இருப்பது ஒன்றே போதும். இதனைப் பின்பற்றினாலே கொரோனா கிருமி பரவலைத் தடுக்கவும், நாட்டு மக்களின் உயிர் காக்கவும் முடியும்.
கண்மணிகளே, எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்,
வைகோ
-சங்கொலி 10.04.2020