தமிழக மக்கள், அகில இந்திய மக்கள் மட்டுமின்றி, உலகமெலாம் வாழுகின்ற மக்களை நடு நடுங்க வைத்துக்கொண்டு இருக்கின்ற கொரோனா தொற்று நோயினால் ஏற்பட்டு இருக்கக்கூடிய விபரீதம் எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை. ஆனால் இந்த நேரத்தில்கூட ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதைப் போல் மத்திய அரசு ஓர வஞ்சகம் செய்யலாமா? என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.
உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார், ஆகிய மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டுக்கு மட்டும் 510 கோடி நிதி ஒதுக்கியிருப்பது நியாயம்தானா?
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 234 பேர் கொரோனா தொற்று நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 621 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 6 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வட இந்திய மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டிற்கு இப்படிப்பட்ட ஓர வஞ்சகம் செய்தது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
கொரோனா தொற்று நோயிலிருந்து தமிழக அரசு மக்களைக் காப்பாற்றுவதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாயும், அதன் பின்னர் 3200 கோடி ரூபாயும் கேட்டிருக்க, வெறும் 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது பாரபட்சமான போக்கு ஆகும். அதுமட்டுமல்ல, நாம் எது செய்தாலும் தமிழக அரசுக்கு எதிர்க்கக் கூடிய திண்மையும் இல்லை, வன்மையும் இல்லை, மனதில் தெம்பும் இல்லை, அடங்கி ஒடுங்கி ஒட்டுப் பூச்சிகளாகக் கிடப்பார்கள். அப்படி ஒரு அரசு அங்கு நடக்கிறது என்ற எண்ணம்தானே காரணமாக இருக்க முடியும்? எனவே மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அது இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் கிடையாது. கொரோனாவைச் சந்திப்பதற்காக அந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என திடீரென்று அதிர்ச்சிகரமான அறிவிப்பை மத்திய அரசு செய்திருக்கிறது.
தொகுதியில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தொகுதியில் கவனிக்கப்படாமல் இருக்கக்கூடிய தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகின்றது. இப்படி அந்த நிதியையும் பறித்துக்கொண்டால், அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பணிகள், அதிலும் தன்னுடைய தொகுதியில் கொரோனா சம்மந்தப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போகும். இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கூறி இருப்பதைப் போல மத்திய அரசு எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 07-04-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment