கொரோனா காரணமாக ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க, ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு, திரும்பப் பெற்றது. 48.34 இலட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65.26 இலட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 2021 ஆம் ஆண்டு ஜூலை வரை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு ஏப்ரல் 23 ஆம் தேதி அறிவித்தது. இந்நடவடிக்கை இலட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை பாதிக்கும் என்பதால், அகவிலைப்படி உயர்வை எப்போதும்போல அதிகரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
மத்திய பா.ஜ.க. அரசின் ‘அடியொற்றி’ தமிழகத்தில் ஆட்சி புரியும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத்துறை பணியாளர்கள் என சுமார் 12 இலட்சம் பேரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து, விடுப்பு ஊதியம் பெற்று வருகின்றனர். இந்த ஈட்டிய விடுப்பை இரு ஆண்டுகள் எடுக்காதவர்கள் அதைத் தங்களது ஒரு மாத அடிப்படை ஊதியமாக (ஆண்டுக்கு 15 நாள் ஊதியம்) பெற்றுக் கொள்ளலாம்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணை மூலம், ஈட்டிய விடுப்பு ஊதியம் தொடர்பான விண்ணப்பங்களும், நிலுவைத் தொகைத் தொடர்பான கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது. ஏற்கனவே ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் அளித்திட ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால் அவை ரத்து செய்யப்படும். விண்ணப்பதாரரின் விடுப்பு கணக்கில் ஈட்டிய விடுப்பு நாட்களாகச் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை மாதம் வரை நிறுத்தி வைக்கப்படும் எனவும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.9 விழுக்காட்டிலிருந்து, 7.1 விழுக்காடு என்று குறைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மருத்துவத்துறை, வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை பணியாளர்களும் அரசு நிர்வாகத்திற்கு முழு அளவில் ஒத்துழைப்பு நல்கி, அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் ஏதேச்சாதிகாரமாக சரண் விடுப்பை நிறுத்தி வைத்தல், அகவிலைப்படி உயர்வை ரத்து செய்தல், பி.எப். வட்டிக் குறைவு தொடர்பான அரசாணைகள் பிறப்பித்து இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. தமிழக அரசு இத்தகையை அரசாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 28-04-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment