கொரோனா பரிசோதனைகளை அதிக அளவில் மேற்கொண்டால்தான், வைரஸ் பரவல் குறித்த உண்மை நிலையை முழுமையாக அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் துரித பரிசோதனைக் கருவிகளை (Rapid Test Kits) சீனாவிலிருந்து மத்திய அரசு இறக்குமதி செய்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் துரித பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு பரிசோதனை நடத்தப்பட்டதில், கொரோனா சோதனை முடிவுகள் 5.4 விழுக்காடு மட்டுமே துல்லியமாக இருக்கிறது. இக்கருவிகள் தரமற்றவை என ராஜஸ்தான் மாநில அரசு புகார் தெரிவித்தது.
‘பி.சி.ஆர்.’ பரிசோதனையில் முறையில் ‘பாசிடிவ்’ என்று முடிவு வந்த 168 நோயாளிகளுக்கு துரித பரிசோதனைக் கருவியையக் கொண்டு சோதனை செய்ததில், ‘நெகடிவ்’ என்ற முடிவு வந்ததால், அதன் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. இதனையடுத்து ஏப்ரல் 21 ஆம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துரித பரிசோதனைக் கருவிகளை இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் பயன்படுத்தத் தடை விதித்தது.
ஏப்ரல் 23 ஆம் தேதி, ஐ.சி.எம்.ஆர். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு பிறபொருள் எதிரி (ANTI BODY) உருவாவதைக் கண்டறியவே துரித பரிசோதனைக் கருவி பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவைக் கண்காணிக்க மட்டுமே இவற்றைப் பயன்படுத்தலாம். கொரோனாவைக் கண்டறிய ‘பி.சி.ஆர்.’ சோதனை அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் நேற்று, “சீனாவின் வோன்~போ நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ‘ரேபிட் டெஸ்ட்’ கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம்” என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
இந்நிலையில்தான், ஷான் பயோடெக் எனும் நிறுவனம் மூலம் ரூ.600 விலையில், 50 ஆயிரம் துரித பரிசோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கி இருக்கிறது. ஐ.சி.எம்.ஆர். உரிமம் பெறாத ஷான் பயோடெக் நிறுவனம், டெல்லி மெட்ரிக்ஸ் லேப்ஸ் எனும் நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்ஸை கொள்முதல் செய்து, அதனை தமிழக அரசுக்கு விற்பனை செய்திருக்கிறது.
ஆனால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துரித பரிசோதனைக் கருவியின் அடக்க விலை, இறக்குமதி வரி மற்றும் கூடுதல் செலவு உட்பட 245 ரூபாய்தான் என்பது டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கின் மூலம் அம்பலமாகி உள்ளது.
ரேர் மெட்டாபாலிக் லை~ப் சயின்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கும், மெட்ரிக்ஸ் லேப்ஸ் என்ற நிறுவனத்திற்கும் இடையிலான ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான வழக்கில்தான் இந்த உண்மை வெளிப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “ஒரு கிட் 245 ரூபாய்க்கு வாங்கும் பட்சத்தில் 400 ரூபாய்க்கு விற்பது, விற்பனையாளருக்குப் போதுமானதைவிட அதிகமான லாபம்தான். நாடு முழுவதும் அவசர சோதனைகளுக்காக குறிப்பாக உலகளாவிய தொற்று நோயின் தற்போதைய அசாதாரணமான சூழ்நிலையில், பொதுநலன் என்பது தனியார் லாபத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி. உட்பட ஒரு ரேபிட் டெஸ்ட் கிட் 400 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி அரசு, தனியார் முகவாண்மை மூலம் ரூ.245க்கு அல்லது டெல்லி உயர்நீதிமன்றம் கூறியவாறு 400 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட வேண்டிய துரித பரிசோதனைக் கருவிகளை, 600 ரூபாய்க்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்தது ஏன்?
கொரோனா கொள்ளை நோயால் நாளுக்கு நாள் மக்களின் துயரம் அதிகரித்துக்கொண்டு வரும் சூழலில், அரசுக் கருவூலத்திற்கு இழப்பை ஏற்படுத்துவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
கொரோனா பேரிடரால் அச்சமும், எதிர்கால வாழ்க்கை குறித்தும் மக்கள் கவலை கொண்டு தவிக்கின்ற நிலையில், ‘எல்லாம் நாங்களே’ என்று முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் இதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 28-04-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment