இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!
மனித குலத்தை அதிர்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்தி உள்ள ‘கொரோனா’ தொற்று நோய் சமூகத்தில் பரவி பேரழிவு ஏற்படாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கின்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீன தேசத்தில் கூபேயி மாகாண தலைநகர் ‘உகான்’ நகரில் ‘கொரோனா’ பாதிப்பு கண்டறியப்பட்டது. 2019 டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜனவரி 14, 2020 வரையில் சீனா எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. ஆரம்பத்தில் இதை சீனா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
உகான் நகரில் இருந்த மத்திய மருத்துவ மனையில், கண் மருத்துவர் லி வென்லியாங் பணியாற்றி வந்தார். அவர்தான் ‘சார்ஸ்’ போன்ற ஒரு நோய் பரவத் தொடங்கி இருக்கிறது. அதை சீனா கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தடுக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் சீன அரசாங்கம் மருத்துவர் லி வென்லியாங் எச்சரிக்கையை அலட்சியம் செய்தது மட்டுமின்றி, ‘வதந்தியைப் பரப்புகிறார்’ என்று குற்றம் சுமத்தி, அவரைச் சிறையில் தள்ளியது. பின்னர் நிலைமை கவலைக்குரியதாக மாறியவுடன், மருத்துவர் லி வென்லியாங் கூறியது சரிதான் என்று சீன அரசு அவரது கருத்தை ஏற்றது. உகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி, மக்கள் சாவின் மடியில் விழத் தொடங்கிய பின்னர்தான் சீன அரசு போர்க்கால வேகத்தில் செயல்படத் தொடங்கியது. சீன நாட்டில் மட்டும் சுமார் 80,967 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானார்கள். 3,316 பேரை கொரோனா வைரஸ் காவு வாங்கியது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவும் கூடும்.
கொரோனா வைரஸ் பற்றிய எச்சரிக்கையை முதன் முதலில் விடுத்த சீனாவின் கண் மருத்துவர் லி வென்லியாங், கொரோனா தடுப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, அந்தக் ‘கிருமி’யின் கொடுந்தாக்குதலால் பிப்ரவரி 7 ஆம் தேதி பலியானர். டாக்டர் லி தனது 34 வயதிலேயே உயிர் இழந்துவிட்டார். மக்களுக்காக உயிரையும் தாரை வார்த்துக் கொடுத்த அவரது குடும்பத்தாரிடம் சீன அரசு மன்னிப்புக் கேட்டிருக்கிறது.
இன்று என்ன நிலைமை?
உலக நாடுகள் கொரோனா வைரஸ் பயத்தால் உறைந்து கிடக்கின்றன. நாள்தோறும் உயிர்ப்பலிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. மார்ச் 29 ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் சுமார் மூவாயிரம் பேர் பலி ஆனதாக வந்த செய்திகள் பேரிடியாக உள்ளன. உலக அளவில் மார்ச் 29 ஆம் தேதி வரையில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 9 இலட்சமாக உயர்ந்துவிட்டது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலைகுலைந்த இத்தாலி நாட்டில் மட்டும் மார்ச் 30 ஆம் தேதி நிலவரப்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். சுமார் 93 ஆயிரம் பேர் கொரோனாவில் பீடிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் மட்டும் 6 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் மரணத்தைத் தழுவியுள்ளனர். அங்கும் பாதிக்கப்பட்டு இருப்போர் எண்ணிக்கை 78 ஆயிரத்துக்கும் அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஈரானில் 2 ஆயிரத்து 600க்கும் அதிக மானோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப் பட்டு இருப்போர் எண்ணிக்கையும் 38 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டில் பலி எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐநூறை நெருங்கி விட்ட நிலையில், இன்னும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மொத்த உயிர்ப் பலியில் ஐரோப்பா கண்டத்தில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு உயிர்ப்பலி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில், கொரோனாவுக்குப் பலியானோர் 5116 எனவும், அதிலும் ஏப்ரல் 1 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 884 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க மக்களை மட்டுமல்ல, உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அமெரிக் காவில் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருப்பவர்கள் 2,15,417 பேர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 1 ஆம் தேதி மட்டும் 25 ஆயிரத்து 200 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்து இருக்கின்றனர்.
இவ்வாறு உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா கிருமி பரவிவிட்டது.
மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,965 பேருக்கு இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் நம் நாட்டில் 50 உயிர் களைப் பலிவாங்கி இருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளது அடங்கும்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங் களில், 14 மாவட்டங்களில் கொரோனா நோய் தாக்கியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ், தாக்கம் 2 ஆம் நிலையில்தான் உள்ளது. இது மூன்றாம் நிலைக்கு, அதாவது சமூகப் பரவலாக மாறுமானால், இத்தாலியை விட மோசமான பாதிப்பும் பல்லாயிரக் கணக்கானோர் கொரோனோ தொற்றுக்கு ஆளாவதும், உயிரிழப்பு அதிகரிப்பும் நேர்ந்துவிடும்.
அந்த நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டால் அதிலிருந்து இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு மீண்டு எழுவது என்பது மிகப்பெரிய சவால் நிறைந்த துயர அத்தியாயமாக மாறிவிடும்.
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது எப்படி? இப்போதைக்கு அதற்கு உரிய மருந்து உண்டா?
ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதுதான் இந்த நோய்த் தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் வழியாகும். அதனால்தான் மார்ச் 22 அன்று ஒரு நாள் ‘மக்கள் ஊரடங்கு’ என்று பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார். பின்னர் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு என்று இந்திய அரசு பிரகடனம் செய்தது. தமிழகத்தில் 144 தடை உத்தரவும் அமலுக்கு வந்து உள்ளது.
21 நாட்கள் ஊரடங்கு என்பது ஒட்டு மொத்த இயல்பு வாழ்க்கையையே முடக்கிப் போட்டுவிடும் என்பது உண்மை தான். ஆனால் இதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக உலக நாடுகள் ‘மூன்றாம் உலகப் போரில்’ குதித்து இருக்கும் நிலையில், அதனை வெற்றிகரமாக ஒடுக்குவதற்கு மக்கள் ஒத்துழைப்பு இன்றியமையாத தேவை ஆகும்.
எத்தனையோ எச்சரிக்கைகள் விடுத்த போதிலும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் அச்சமின்றி பொது வெளியில் கூட்டம் கூட்டமாக வரும் காட்சிளை ஊடகங்களில் கண்ணுற்ற போது துணுக்குற்றேன். காவல்துறை மக்கள் மீது பலப்பிரயோகம் செய்யும் நிலைமையும் வருத்தமாக உள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், வாகனம், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், காவல் துறையினர், வருவாய்த்துறை அலுவலர் கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்புப் பணியில் தங்களை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு தங்களையே ‘பணயம்’ வைத்து கொரோனா யுத்தத்தில் களத்தில் நிற்கும் மக்கள் காவலர்களுக்கு நாம் துணையாக இருக்க வேண்டும். துயரமாக ஆகிவிடக்கூடாது என்பதை மக்கள் உணர வேண்டும்.
இதே நிலைமை ஏப்ரல் 14 ஆம் தேதிக்குள் முடிவடையுமா? அல்லது இன்னும் சில வாரங்களுக்குத் தொடருமா? என்பதை எவரும் அறுதியிட்டுக் கூற முடியாது. எப்படி இருந்தாலும் கொரோனா வைரஸ் தாக்கு தலைத் தடுத்து, நம்மையும் நாட்டையும் தற்காத்துக் கொள்ள ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கொரோனாவை ‘கொள்ளை நோய்’ என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.
மனிதகுல வரலாற்றில் கொள்ளை நோய் என்று கண்டறியப்பட்ட ‘பிளேக்’ போலவே ‘கொரோனா வைரஸ்’ தொற்றும் உலக நாடுகளை அச்சத்தில் உறையச் செய்துள்ளது.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா வில் பரவிய கொள்ளை நோயான ‘பிளேக்’ பேரழிவை ஏற்படுத்தியது. கான்ஸ்டான்டி நோபிலைத் தலை நகராகக் கொண்டு பைசான்டைன் பேரரசை ஆட்சி செய்த ரோமப் பேரரசன் ஜஸ்டினியன் காலத்தில் பரவிய அந்த ‘பிளேக்’ நோய், “ஜஸ்டினியன் பிளேக் (Justianian Plague)” என்றே அழைக்கப்படுகிறது. இந்தக் கொள்ளை நோய் உலகில் சுமார் 500 இலட்சம் (5 கோடி) மக்களைப் பலி கொண்டது.
இதைப் போலவே 14 ஆம் நூற்றாண்டில் ‘பிளாக் டெத் (Black Death)’ என்ற ‘பிளேக்’ நோய் சுமார் 500 இலட்சம் அதவாது 5 கோடிக்கும் அதிகமான மக்களைக் காவு வாங்கியது. இப்படி பலியானோர் எண்ணிக்கை ஒட்டு மொத்த ஐரோப்பிய மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கிலாந்தில் கி.பி. 1664-66 ஆம் ஆண்டுகளில் பரவிய ‘த கிரேட் லண்டன் பிளேக் (The Great London Plague)’ மக்களைப் பீடித்த நேரத்தில், லண்டனில் 1666 செப்டம்பர் 2 இல் பரவிய மாபெரும் லண்டன் ‘தீ’ காரணமாக கட்டுக்குள் வந்தது
இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக ஏற்பட்ட மலேரியா, காலரா, இன்புளுயன்சா மற்றும் பிளேக் போன்ற நோய்த் தொற்றுகளால் பம்பாயில் மட்டும் 1 இலட்சத்து 84 ஆயிரம் மக்கள் மடிந்தனர். கடைசியாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் 1994 இல் ‘பிளேக்’ பரவி 56 உயிர்கள் பறிபோயின.
உலக சுகாதார நிறுவனம், 2018 ஆம் ஆண்டு உலகில் பரவி வரும் பத்து நோய்களின் பட்டியலை வெளியிட்டு, உடனடியாக இவற்றைக் கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சிகளைத் துரிதப் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நோய்களின் பரவல் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி இருக் கின்றது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டு இருக்கும் வைரஸ் நோய் பட்டியல் என்ன?
1. நிபா வைரஸ்: பழம் திண்ணி வௌ வால்களிடமிருந்து கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு இந்த நோய்க் கிருமி பரவுகிறது. காய்ச்சல், வாந்தி, தலை வலி அதன் பிறகு மூளையில் வீக்கம் உண்டாவதே அதற்கான அறிகுறி, நிபா தாக்கியவர்களில் 70% பேர் இறந்து உள்ளனர்.
2. ‘ஹெனிபா வைரஸ்’ நோய்கள்: பழம் திண்ணி வௌவால்களிடமிருந்து பரவும் ‘ஹெனிபா வைரஸ்’ ஆஸ்திரேலி யாவில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட ‘ஹென்ரா’ வைரஸ் இதே வகையைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பழம் திண்ணி வௌவால்களிடமிருந்து குதிரைகள் மற்றும் மனிதர்களுக்குப் பரவுகிறது. பிரிஸ்பேன் நகரில் 1994 இல் இது முதன் முதலில் கண்டறியப்பட்டது.
3. கிரிமியன் - காங்கோ ஹெமோரெஜிக் காய்ச்சல்:
இந்தக் ‘குருதிப் போக்குக் காய்ச்சல்’ உண்ணிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. இதில் பாதிக்கப்பட்ட 40% பேர் மரணத்தைத் தழுவுகின்றனர். 1944 இல் கிரீமியாவிலும் பின்னர் காங்கோ நாட்டிலும் இக்கிருமி கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்கா, பால்கன் தீவுகள், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதி களில் இந்த நோய் நிலவுகிறது.
அதிகமான காய்ச்சல், முதுகுவலி, மூட்டு வலி, வயிற்று வலி மற்றும் வாந்தி ஆகியன இதற்கான அறிகுறி ஆகும்.
இந்நோய்த் தாக்குதலுக்கு உள்ளான வரின் ரத்தம் மற்றும் உடல் திரவங்கள் மூலம் இது பிறருக்குப் பரவுகிறது.
4. இபோலா வைரஸ்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள இபோலா நதிக்கரையில் 1976 இல் இந்த வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டதால் இந்தக் கிருமி ‘இபோலா’ என்று பெயர் பெற்றது.
இதுவும் பழம் திண்ணி வௌவால்களிட மிருந்து உண்டாகும் நோய். விலங்கு களைத் தாக்கும் இந்த நோய் விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கும் பரவுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் தோலில் உள்ள காயம், வாய், மூக்கு, ரத்தம், வாந்தி, மலம் மற்றும் உடல் திரவங்கள் ஆகியவை மூலம் இது பிற மனிதர் களுக்குப் பரவுகிறது. சிறுநீர் மற்றும் விந்து ஆகியவற்றிலும் இந்த வைரஸ் இருக்கலாம்.
‘இபோலா’ தாக்குதலுக்கு உள்ளானவர் களில் 50% பேர் இறக்கின்றனர். 2014 முதல் 2016 வரை மேற்கு ஆப்பிரிக் காவில் இந்த நோயின் பரவல் 11 ஆயிரம் பேர் இறப்புக்குக் காரணமானது.
காய்ச்சல் மற்றும் உடல் சோர்வுக்குப் பிறகு, வயிற்றுப் போக்கு, சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்பு, கண்கள், மூக்கு அல்லது வாயில் இருந்து ரத்தக் கசிவு உண்டாக இது வழி வகுக்கும்.
5. மார்பக் வைரஸ்:
இபோலாவுடன் தொடர்புடைய வைரஸ் கிருமி மார்பக் வைரஸ். பாதிக்கப்பட்ட வரின் உடல் திரவம் மூலம் இது பிறரைத் தொற்றிக் கொள்ளும். பழந் திண்ணி வௌவால்கள் மூலமே இந்தக் கிருமியும் பரவுகிறது.
மார்பக் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான வர்கள் 24% முதல் 88% வரை மரணம் அடைகின்றனர்.
அதீத குருதிப் போக்கில், நோய் தாக்கிய எட்டு அல்லது ஒன்பது நாட்களில் மரணம் ஏற்பட்டுவிடும்.
ஜெர்மனியில் உள்ள மார்பக் நகரில் 1967 இல் முதன் முதலாக இது கண்டறியப்பட்டது.
6. சார்ஸ் (SARS)
‘சிவியர் அக்யூட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரம் (SARS)’ என்பது ஒரு வைரஸால் உண்டாகும் மூச்சுக் கோளாறு. சீனாவில் மரநாய்களிடமிருந்து மனிதர் களுக்கு பரவியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2002 முதல் 2004 வரை சார்ஸ் பரவல் இருமுறை நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 8098 பேரில் 774 பேர் இறந்தனர். காற்று, எச்சில் போன்றவை மூலம் இது பரவுகிறது.
7. மெர்ஸ் (MERS)
‘மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரம்’ ஒரு சார்ஸ் வகை நோய். சௌதி அரேபியாவில் 2012 இல் இது கண்டறியப்பட்டது. மெர்ஸ் வைரஸ் தாக்கியவர்களில் 35% பேர் மரணத்தைத் தழுவி உள்ளனர். சார்ஸ் கிருமியைவிட அதிக ஆபத்து மிகுந்த இந்த நோய் அதன் அளவுக்கு பரவுவதில்லை. மெர்ஸ் வைரஸ் கிருமி ஒட்டகங்களிலிருந்து பரவி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
8. ரி~ப்ட் பள்ளத்தாக்குக் காய்ச்சல் (Rift Valley Fever)
இது இரத்தம் குடிக்கும் ஈக்கள் மற்றும் கொசுக்கள் மூலம் கால்நடைகளுக்குப் பரவுகிறது. மனிதர்களையும் தொற்றிக் கொள்ளும் இந்த நோய் தாக்கினால் ரத்த நாளங்கள் பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பால் மரணம் உண்டாகும்.
கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வேளாண் பண்ணையில் இந்தக் காய்ச்சல் 1931 இல் கண்டறியப் பட்டது.
9. ஜிகா வைரஸ்
கொசுக்கள் மூலம் மனிதர்களைத் தொற்றிக் கொள்ளும் ஜிகா வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, தோலில் சொறி உண்டாதல், தசை வலி ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
வயதானவர்களை ஜிகா வைரஸ் தாக்கி னால் கை, கால் செயலிழப்பு ஏற்பட்டு விடும்.
உகாண்டாவில் உள்ள ஜிகா காடுகளில் 1947 இல் செம்முகக் குரங்குகளிடம் இந்தக் கிருமி கண்டறியப்பட்டது.
10. லாசா காய்ச்சல்
லாசா வைரஸ் பாதிப்புக்குள்ளான எலிகளின் மூலம் இக்காய்ச்சல் மனிதர் களைத் தொற்றுகிறது.
ரத்த நாளங்கள் பாதிப்பு அல்லது உறுப்பு செயல் இழப்பால் இக்காய்ச்சல் மனிதர்களைத் தொற்றுகிறது.
ரத்த நாளங்கள் பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பால் 14 நாட் களுக்குள் மரணம் ஏற்படுகிறது. லாசா காய்ச்சல் கண்டவர்களில் 1% க்கும் அதிகமானோர் இறக்கின்றனர். காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவையே இதன் அறிகுறிகள். நைஜீரியாவின் லாசா நகரில் 1969 இல் இந்தக் கிருமி இருப்பது தெரிய வந்தது.
2018 இல் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட 10 வகையான வைரஸ் கிருமிகள் மூலம் உருவாகும் நோய்களைப் பட்டியலிட்டது. தற்போது ‘கோவிட் - 19’ என்னும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலைக் கொள்ளை நோய் என்று பிரகடனம் செய்துள்ளது.
கொரோனா எத்தகைய கொடிய விளைவு களை உருவாக்கும் என்பதற்கு, வளர்ச்சி பெற்ற நாடான அமெரிக்காவில், ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் விஞ்ஞானி ஆன்டனி பவுசி கூறியிருப்பது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழப்பு ஏற்படும் என்று விஞ்ஞானி ஆன்டனி பவுசி கூறி இருப்பது அமெரிக்காவை மட்டுமல்ல, உலக நாடுகளையும் உலுக்கி இருக் கிறது.
லண்டன், இம்பீரியல் காலேஜ் வெளியீடான நேச்சர் (Nature, March 30, 2020) முறையான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாவிடில் உலகம் முழுவதும் மொத்த மக்கள் தொகையில் உயிர் பலி 40 மில்லியனை எட்டிவிடும் என்று எச்சரிக்கை செய்கின்றது.
இந்தியாவில் நிலைமை என்ன ஆகும்?
கோவிட்-19, 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏப்ரல் - மே மாதங்களில் 13 கோடி முதல் 25 கோடி மக்களைக் கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து இருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தமிழ் நாட்டில் 60 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் மக்களை இந்நோய் தாக்கும் ஆபத்து விளையும் என்றும் அதிர்ச்சி தரத்தக்க தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கு மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு என்று உத்தரவு போட்டுள்ளது.
கொரோனா கிருமி தொற்றின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மார்க்கெட், காய்கறி சந்தை, பொதுப் பங்கீட்டுக் கடைகள் என்று கூட்டம் கூட்டமாக ஒன்றாகச் சேர்ந்து உலா வருவது நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கி விடும். வீட்டுக்குள்ளேயே தனித்து இருப்பது ஒன்றுதான் இப்போதைக்கு மக்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆற்று கின்ற அருந்தொண்டு என்பதை உணர வைக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் முயற்சிகளுக்கு கழகக் கண்மணிகள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
சாதாரண எளிய மக்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள், விவசாயத் தொழி லாளர்கள் போன்ற அடித்தட்டு மக்களுக்கு அவர்களின் பசிப்பிணிப் போக்கும் கடமையை அறப்பணி உள்ளம் கொண்டோரை இணைத்துக் கொண்டு நாமும் உதவிட வேண்டும்.
தமிழகத்தின் பல பகுதிகளில் கழகக் கண்மணிகள் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறை, தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருவதை அறிந்து நெஞ்சம் நெகிழ் கிறேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செஞ்சிலுவைச் சங்கம் போல தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை புரியும் என்று நான் பல ஆண்டுகளாகவே கூறி வருகிறேன். அதனை மெய்ப்பிக்கும் வகையில் மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள கழக கண்மணிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறுகின்றேன்.
தமிழ் நாடு முழுவதும் கழகக் கண்மணிகள் இத்தகைய பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நானும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியும் தலா ஒரு கோடி ரூபாயை, கொரோனா பாதிப்பு தடுப்புப் பணிகளுக்காக தமிழக அரசிடம் வழங்கி இருக்கின்றோம்.
ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முற்றுப் பெறுமா? அல்லது தொடருமா? என்பதை யூகிக்க முடியாது. இன்னும் வர இருக்கின்ற நாட்கள் மேலும் சோதனைகள் நிறைந்ததாகக் கூட இருக்கலாம். பொருளாதார வீழ்ச்சி கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எல்லாவற்றையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அரசு உத்தரவுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைவிட, இந்தச் சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்குமானால் இதுபோன்ற சோதனையான காலகட்டத்தில் தனித்து இருப்பது ஒன்றே போதும். இதனைப் பின்பற்றினாலே கொரோனா கிருமி பரவலைத் தடுக்கவும், நாட்டு மக்களின் உயிர் காக்கவும் முடியும்.
கண்மணிகளே, எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்,
வைகோ
-சங்கொலி 10.04.2020
No comments:
Post a Comment