மனித சமூகத்தை அச்சத்தில் உறையச் செய்திருக்கின்ற கொரோனா கிருமியை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாக மடியும் நிலையைக் காணும்போது நெஞ்சம் நடுங்குகிறது. அதுபோன்ற துயரப் பள்ளத்தாக்கில் நமது நாடும் விழுந்துவிடக் கூடாது.
கொரோனாவை வெற்றி காண்பது நம் கைகளில் தான் உள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம்; வீட்டிலேயே தனித்திருப்போம்; கொரோனா தொற்று பரவாமல் மக்களின் உயிரை காப்போம்! என்ற உறுதியை மேற்கொள்ள தமிழக மக்களை அன்புடன் மீண்டும் வேண்டுகிறேன்
இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்,
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளி போனதால், தேர்வு எழுத துடித்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள் துவண்டு விட்டனர்.
துள்ளி விளையாட வேண்டிய இளம் பிஞ்சுகள், ஊரடங்கு உத்தரவால் மன உளைச்சலுக்கு உள்ளாகி முடங்கிக் கிடக்கின்றனர்.
பொதுத்தேர்வு என்ன ஆகுமோ? என்று மாணவர்களின் பெற்றோரும் தவியாய் தவிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களின் கல்வித் திறனை அடுத்தடுத்த 11ஆம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 07-04-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment