விருதுநகர் மாவட்டம் - வத்திறாயிருப்பு வட்டம், மகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் (வயது 45), துபாயில் வேலை பார்த்து வந்தார்.
அவர் மார்ச் 17 ஆம் நாள் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது உடலை இந்தியா அனுப்புவதற்கான முயற்சிகளை அவர் வேலை செய்த நிறுவனம் மேற்கொண்டது. அங்குள்ள தமிழ் அமைப்புகள் உதவிய நிலையிலும், அவரது உடலை இந்தியா கொண்டு வர முடியவில்லை.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்குத் தகவல் தெரிவித்தார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தார். அடுத்த நாளே, தூதரக அதிகாரிகள், துபாயில் உள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, வைகோ அவர்கள் கடிதம் பற்றித் தெரிவித்து, துரைராஜ் உடலை, இந்தியா அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
அதன்படி, இன்று இரவு 10.45 மணிக்கு, எமிரேட்ஸ் வான் ஊர்தி மூலம், துரைராஜ் உடல், சென்னை வான் ஊர்தி நிலையத்திற்கு வந்து சேருகின்றது.
அவரது உடலைப் பெறுவதற்காக, உறவினர்கள் இன்று காலை வத்திறாயிருப்பில் இருந்து சென்னை பயணித்து வருகின்றனர். அவர்கள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் 22-04-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment