Saturday, April 18, 2020

உயிர் காக்கும் மருத்துவர்களைக் காப்போம்! வைகோ அறிக்கை!உயிர் காக்கும் மருத்துவர்களைக் காப்போம்! வைகோ அறிக்கை!

கொரோனா எனும் கொடிய கொள்ளை நோயை எதிர்த்து உலகம் முழுவதும் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.


கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், பசி நோக்காமல், கண் துஞ்சாமல் உயிரையே பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் மனித சமூகத்திற்குச் சேவை அளித்து வருகிறார்கள்.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, சத்ருகன் பாஞ்வாணி என்ற மருத்துவர் சிகிச்சைப் பலன் இன்றி ஏப்ரல் 9 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

மேகாலாயா மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிர்ப் பலி ஆனவர், 69 வயது மருத்துவர் என்று அம்மாநில முதல்வர் கன்ராட் சங்மா தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை அளித்து வரும் எட்டு மருத்துவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை கூறி இருக்கிறது.

கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த இரு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இருவருக்கும் சரியான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று புகார் வந்ததும், கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நேற்று (17.04.2020) நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உயிரிழந்த இரண்டு மருத்துவர்கள் உடலை நல்லடக்கம் செய்வதற்குக்கூட நவநாகரீக மனித சமூகம் தடைகள் ஏற்படுத்தியுள்ள செய்தி வேதனை தருகிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் முப்பது ஆண்டுகளாக எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணராக சேவை செய்து வந்த மருத்துவர் லெட்சுமி நாராயண் ரெட்டி, கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏப்ரல் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரது உடலை எரியூட்டுவதற்காக சென்னை அம்பத்தூர் மின் மயானத்திற்குக் கொண்டு சென்றபோது, அங்கு உடலை எரியூட்ட அனுமதிக்க மாட்டோம் என்று மக்கள் கூடி நின்று எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார்கள்.

மருத்துவரின் குடும்பம் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டு தவிக்கும் நிலையில், மருத்துவர் லெட்சுமி நாராயண் ரெட்டியின் உடல் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்ய முடியாமல், இறந்த பின்னரும் அவரை அவமதித்து இருக்கின்றது இந்தக் கொடூர சமூகம்.

இதைப் போலவே இன்னொரு துயர நிகழ்வும் நம் நெஞ்சைப் பிளக்கிறது.

நீலகிரி மாவட்டம், தெங்குமரஹாடா எனும் மலை கிராமத்தில் அரசு மருத்துவராக பணியாற்றிய டாக்டர் ஜெயமோகன், கொரோனா சிறப்பு மருத்துவராகவும் பணியாற்றினார். உடல்நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறை எடுத்த அவர், காய்ச்சல் அறிகுறி இருந்ததால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகனின் மரணச் செய்தி கேட்டு துயரம் தாளாமல், மருத்துவர் ஜெயமோகனின் தாய் தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டில் வசிக்கும் தமக்கையும் வரமுடியாத சூழல். ஜெயமோகனின் தந்தையும், நண்பர்களும் அவரது இறுதிச் சடங்கு நடத்த சொந்த ஊரான மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ரேயான் நகரில் ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

கொரோனா தொற்றால் டாக்டர் ஜெயமோகன் இறந்தார் என்று செய்தி பரவியதால், அவரது உடலை ஊருக்குள் எடுத்துவர மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மருத்துவர் ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் இறந்தார் என்ற மருத்துவ அறிக்கையை ஊர் மக்களுக்குக் காட்டிய பிறகுதான், மருத்துவரின் உடல் வீட்டிற்கு கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டு, மின் மயானத்தில் எரியூட்டப்பட்டு உள்ளது.

மனிதநேயம் மரித்துப்போய்விட்ட இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடைபெறக் கூடாது.

மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கொரோனா தடுப்புச் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நலனில் மத்திய - மாநில அரசுள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வ-லியுறுத்துகிறேன் என மதிமுக செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment