Sunday, April 12, 2020

மாநிலங்களுக்கே உரிமை! கடமை தவறிய மத்திய அரசு - வைகோ கடிதம்!

இமைப்பொழுதும் நீங்காது என்
இதயத் துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

இந்தியா ஒரு நாடு அல்ல; டில்லியில் இருந்து கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்துவிட முடியாது என்பதை ‘கொரோனா வைரஸ்’ உணர்த்தி இருக்கிறது. ஏனெனில் கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கியவுடன் மத்திய அரசு, மாநில அரசுகளைத்தான் நாட வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறதே தவிர, மத்திய அரசு இமயம் முதல் குமரி வரை கொரோனா கிருமி தொற்று தடுப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

மாநில அரசுகள்தான் மக்களிடையே நேரடியாக இறங்கிப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளன என்பதுதான் யதார்த்தமான உண்மை.

இந்தியாவில் கொரோனா அறிகுறி தெரிய தொடங் கியதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 22 ஆம் தேதி ஒரு நாள் ‘மக்கள் ஊரடங்கு’ என்று பிரகடனம் செய்தார். அதன்பின்னர் 24 ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர், மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்கள் இந்தியாவில் ஊரடங்கு என்று அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கு அறிவிப்புகளை வெளியிடும் வரையில் எந்த மாநில முதல்வர்களுக்கும் இது குறித்து உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை. மாநில அரசுகளின் கருத்தையும் மத்திய அரசு கேட்கவில்லை.

நவம்பர் 8, 2017 இல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பண மதிப்பு இழப்பு அறிவிப்பு வெளியிட்டதைப் போன்றுதான், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பையும் பிரதமர் அறிவித்தார்.

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கு மக்கள் வீட்டிலேயே தனித்து இருப்பதும், மக்கள் வெளி இடங்களுக்கு செல்வதைத் தடை செய்வதும், அத்தியா வசியத் தேவைகளுக்கு செல்லும்போது மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளி தேவை என்பதையும் அதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதுதான் ஒரே வழி. என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். கொரோனா சமூகப் பரவலைத் தடுப்பதற்கு ஊரடங்கு அவசியம் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

ஆனால் 130 கோடி மக்கள் தொகை  கொண்ட இந்தியாவில் இதுபோன்ற தருணத்தில் முக்கியமான முடிவை மேற்கொள்ளும் போது மத்திய அரசு ஏகபோக அதிகாரம் உடையது போலவும், பேரரசின் மாமன்னர் போன்று பிரதமர் மாநில அரசுகளின் கருத்தறியாமல் அதிரடியாக அறிவிப்புகளைச் செய்வதும் மக்களாட்சிக் கோட்பாடு மற்றும் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானது ஆகும்.

அரசியல் சட்டத்தின் 7ஆவது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப் பட்டியலில் பொது சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு என்பது மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அதே சமயம் மத்திய - மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில், எண் 29 இல் கீழ்க்காணும் விதி இணைக்கப்பட்டிருக்கிறது.

மனிதர், விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதிக்கக் கூடிய தொற்று நோய்கள் அல்லது அழிக்கும் கிருமிகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பரவாமல் தடுத்தல்.

எனவே கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை களை சட்டப்படி மேற்கொள்வதற்கு மத்திய அரசுக்கும் - மாநில அரசுகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்து இருக்கிறது.

மாநில அரசுகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து இது போன்ற கொள்ளை நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா மார்ச் 24 ஆம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, கொரோனா பாதித்தவர்களை அறிந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை இனம் கண்டு, பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும், மாநில - மாவட்ட அளவிலான குழுக்களுடன் விரைவுக் குழுக்களை அமைக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட வர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் இனம் கண்டறிவதுடன், சந்தேகப்படும் நபர் மற்றும் உயர் பாதிப்பில் உள்ளவர் களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தலையாய கடமை எனவும், இதனை மாநில அளவில் சுகாதாரத் துறைச் செயலாளரும், மாவட்ட அளவில் ஆட்சியர்களும் நேரடியாகவும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் சுற்றறிக்கை கூறுகிறது.

கொரோனா சிகிச்சை அளிக்க பிரத்யோக மருத்துவமனைகளை உருவாக்கு வதுடன், நோயாளிகள் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் உறுதி செய்யப் பட வேண்டும். மேற்கண்ட பணிகள் அனைத்தையும் மாநில அரசின் தலைமைச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு, அது தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறையின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டு இருக்கிறது.

மத்திய அரசு ஒரு சுற்றறிக்கை மட்டும் அனுப்பிவிட்டு, கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் கடமையை மட்டும் மேற்கொண்டால் போதும். ஆனால் மாநில அரசுகளுக்குத்தான் முழுப் பொறுப்பும் இருக்கிறது.

ஏப்ரல் 2 ஆம் தேதி காலை 11 மணி அளவில், பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி னார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சவால்கள் மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, பாதிக்கப் பட்டோருக்கான மருத்துவ வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர், மாநில முதல்வர்களுடன் ஆலோசித்துள்ளார்.

ஊரடங்குக் காலம் முடிந்ததும், மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கையைத் தொடங்குவதில் தடுமாற்றம் இல்லாத நிலையை உருவாக்க குறைந்தபட்ச கொள்கையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். வரும் வாரங்கள் கொரோனாவுக்கான சோதனை, கொரோனா பாதித்தவருடன் தொடர் பில் இருந்தவர்கள், தனிமைப் படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதற்குத் தேவையான மருந்துகள், மருத்துவப் பொருள்கள் விநியோகத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியம். கொரோனா நோயாளி களுக்கான மருத்துவ மனைகள், மருத்துவ வசதிகள் இருப்பதை அனைத்து மாநிலங்களுக்கும் உறுதிப் படுத்த வேண்டும்.

மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயுஷ் மருத்துவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமரின் வேண்டுகோள், கொரோனாவை முறியடிப்பதில் மாநில அரசுகளுக்குத்தான் அதிக பொறுப்பும் கடமையும் ஏன் சுமையும் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

ஒரே நாடு; ஒரே வரி என்று மத்திய அரசு ஜி.எஸ்.டி. எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரியை நடைமுறைக்குக் கொண்டு வந்த பின்னர், மாநிலங்களின் நிதி ஆதாரம் குறைந்துவிட்டது. பற்றாக்குறை பட்ஜெட் போடும் நிலையில் உள்ள மாநில அரசுகள் இதுபோன்ற சோதனை மிக்க காலங்களில் மத்திய அரசைச் சார்ந்துதான் இருக்க வேண்டிய சூழல் இருக்கின்றன.

இன்னமும் மாநிலங்கள் கையேந்தி நிற்க வேண்டியவையாகவும், மத்திய அரசு பெரிய மனசு வைத்து அள்ளித் தந்தால்தான் கணிசமான நிதி கிடைக்கும் என்ற நிலைமை நீடிப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும், மாநில கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கும் எதிரானது ஆகும்.

தமிழக அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் கேட்ட நிதி 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஆகும். இதில் முதலில் 9 ஆயிரம் கோடியும், பின்னர் 3200 கோடியும் கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வெறும் 510 கோடி ரூபாய் மட்டும் மத்திய அரசு வழங்க முன் வந்திருக்கிறது.

பிரதமரின் கிஸான் சமான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகள் பயிர் சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்கள் வாங்க வழங்கப்படுகிறது.

தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு அறிக்கை 2012 -13 ன் படி, தமிழகத்தில் 32.44 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் இருந்தன. தற்போது 38 இலட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன, தமிழகத்தில் இதுவரை 38.88 இலட்சம் விவசாய பண்ணைக் குடும்பங்களின் விபரங்கள் திட்டத்திற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிதி, கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள பண்ணைக் குடும்பத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயி களின் ‘ஆதார்’ விபரம், வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப் படுகின்றன.

21 நாள் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் 34.56 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு 692 கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கொரோனாவை எதிர் கொள்ள வெறும் 510 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது “யானைப் பசிக்குச் சோளப் பொரி” ஆகும்.

மத்தியில் குவித்து வைத்திருக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்று வலுவான குரல் முதன் முதலில் தமிழகத்தில் இருந்துதான் பேரறிஞர் அண்ணா அவர்களால் எழுப்பப்பட்டது.

அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன், ‘மாநில சுயாட்சி’க் கொள்கைக்குச் செயல்வடிவம் தருவ தற்கும், மத்திய - மாநில உறவு குறித்துத் தெளிவான கருத்துகளை அறிந்து கொள்வதற்காக முன்னாள் தலைமை நீதிபதி ராஜமன்னார் அவர்கள் தலைமையில், முன்னாள் தலைமை நீதிபதி சந்திரா ரெட்டி, டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழுவை 22.09.1969 இல் அமைத்தார்.

ராஜமன்னார் குழு ஓராண்டு காலத்துக்கு மேல் ஆய்வுகளை மேற்கொண்டு 10.3.1971 அன்று தனது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையை மத்திய அரசின் பார்வைக்கு முதல்வர் கலைஞர் அனுப்பி வைத்தார். ராஜமன்னார் குழு அறிக்கைளைப் பெற்றுக் கொண்டு பிரதமர் இந்திராகாந்தி அவர்கள், முதல்வர் கலைஞருக்கு 22.6.1971 இல் எழுதிய மடலில், “இது குறித்து தமிழ்நாடு அரசின் கருத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974 ஏப்ரல் 16 அன்று மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் கலைஞர் அவர்கள் நீண்ட பேரூரை ஆற்றினார். சட்டமன்றத்தில் விவாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 20, 1974 இல் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில சுயாட்சிச் சுடரை ஏற்றி வைத்து இந்தியாவுக்கு வழிகாட்டியது தமிழ்நாடு. அதனைத் தொடர்ந்துதான் மற்ற மாநிலங்களிலும் மாநில அரசு களுக்கு அதிகாரங்கள் வேண்டும் என்ற குரல் எழுந்ததது.

நாடு விடுதலை பெற்ற காலத்திலிருந்து கடந்த 72 ஆண்டுகளில் இன்னும் முழுமையான கூட்டாட்சி முறை இந்தியாவில் நடைமுறைக்கு வரவில்லை.

2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு நரேந்திர மோடி தலைமையில் அமைந்த பிறகு, மாநிலங்களின் உரிமைகள், அதிகாரங்கள் ஒவ்வொன்றும் பறிக்கப் பட்டுவிட்டன. டில்லி மத்திய அரசின் ‘காலனிகள்’ போன்று மாநிலங்கள் நடத்தப்படுகின்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

‘ஒரே நாடு; ஒரே அரசு’ என்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைச் செயல்படுத்தும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை கள் இருப்பதைப் பார்க்கிறோம்.

வலிமையான மத்திய அரசு இருக்க வேண்டும்; எல்லா அதிகாரங்களும் டில்லியில்தான் குவிந்து கிடக்க வேண்டும் என்று செயல்படுகின்ற பா.ஜ.க. அரசு, கொரோனா கொள்ளை நோய் போன்ற அசாதாரண மான சூழலை எதிர்கொள்ள மாநில அரசுகளைத்தான் நம்பி இருக்க வேண்டும், மத்திய நிர்வாக அமைப்பு எந்த விதத்திலும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்பதை தற்போதைய நிலையில் புரிந்து கொள்ள வேண்டும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவதற்கு ஆறு திங்களுக்கு முன்னால் 21.07.1968 இல் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் நடத்திய மாநில சுயாட்சிக் கருத்தரங்கில் கலந்து கொண்டார். இக் கருத்தரங்கில் பேரறிஞர் அண்ணா அவர்களுடன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் ஆகியோரும் பங்கேற்றனர்.

மாநில சுயாட்சிக் கருத்தரங்கில் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுப்பிய முழக்கத்தை இன்றைக்கு இருக்கின்ற பா.ஜ.க. மத்திய அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது கடமை என்று கருதுகிறேன்.

இதோ அண்ணாவின் முழக்கம்,

“மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில். மத்திய அரசு பலமாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில். ஆனால் இன்று அந்தச் சாம்ராஜ்யங்கள் எங்கே?

சரிந்த சாம்ராஜ்யங்களோடு - இப்போது இருக்கின்ற சாம்ராஜ்யத்தை ஒப்பிடுவதற்கு உள்ளபடியே வருத்தப் படுகிறேன். அந்த சாம்ராஜ்ய வாதிகள் - தமது சாம்ராஜ்யங்களுக்கு அதிகமான வலிவு தேட முயற்சி செய்த ஒவ்வொரு நேரத்திலும் சரிவுதான்.

ஒளரங்கசிப் காலத்தில் இருந்த வலிமை யான மத்திய ஆட்சிக்கு ஒப்பான மத்திய அரசை சரித்திரத்தில் காண முடியாது. ஆனால் அந்தச் சாம்ராஜ்யம் என்ன ஆயிற்று? என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு இருக்கின்ற கவலைகள் எல்லாம் தூக்க முடியாத பாரத்தை மத்திய ஆட்சியினர் விரும்புகிறார்களே என்பதுதான். மத்திய அரசின் வலிவு என்பது, மாநிலங்கள் ஒவ்வொன்றின் தனித்தனி வலிவையும் கூட்டியதால் ஏற்பட்ட மொத்த வலிவுதான் என்றால் வாதத்திற்கு ஏற்றது; அரசியலுக்கு நல்லது; காலத்துக்கு உகந்தது.

ஆனால் மத்திய அரசுதான் எல்லா உரிமைகளையும், பலத்தையும் வைத்திருக்கும் மாநிலங்கள் தத்தித் தத்தி நடக்கும் அதிகாரங்கள்தான் வைத்து இருக்கும் என்றால், எதற்கும் பொருத்தம் உடையது அல்ல.

மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்துக் கொள்வதால், மாநிலங்கள் பலகீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கு என்று புதிய வலிவு எதுவும் ஏற்பட்டுவிடாது.

இன்றைய தினம் மாநில அரசுக்கு உள்ள கவலை என்ன? மக்களுக்கு சோறு போடுவது, வேலை வாய்ப்புத் தருவது, தொழில் நீதியை நிலைநாட்டுவது, சுகாதாரத்தைப் பேணுவது, கல்விச் செல்வத்தை வளர்ப்பது போன்ற எண்ணற்ற வேலையைச் செய்ய வேண்டியது மாநில அரசு.

ஆனால் மத்திய அரசின் வேலை என்ன?

நாடக மேடையிலே வருகிற இராஜா, மந்திரியை அழைத்து, “மந்திரி, நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?” என்று கேட்பானாம்! அதுபோல் மாதம் ஒரு முறை மாநில மந்திரிகளை, மத்திய மந்திரி டில்லியில் கூட்டி, “பள்ளிக் கூடங்களில் கல்வி எப்படி இருக்கிறது? காலரா நோய் தடுக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்பு தான் இருக்கிறதே தவிர, வேறு ஒன்று மில்லை.

மக்களின் சுக துக்கங்களோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல.”

பேரறிஞர் அண்ணா அவர்களின் உரையை இன்றைய மத்திய அரசின் நிலைப்பாட்டுடன் பொருத்திப் பார்த்தால், அண்ணாவின் ‘தீர்க்கத் தரிசனம்’ எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

எனவே மோடி அரசு, ‘கொரோனா’ கொடூரத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்ற மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரங்கள் - உரிமைகளை அளித்து மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்பதை தெளிவுபட உணர வேண்டும்.

கண்மணிகளே, எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்! 

பாசமுடன்,
வைகோ
சங்கொலி, 17.04.2020

No comments:

Post a Comment