Sunday, June 2, 2019

களப்பணி ஆற்றினோம்; வென்றோம்! வைகோ கடிதம்!

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும், இரத்தச் சுழற்சியோடும் கலந்து விட்ட கண்ணின் மணிகளே!
இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாடு தனித்துவமான திராவிட பூமி என்பதை, நாடாளுமன்றத் தேர்தல் இமயம் முதல் குமரி வரை, குஜராத் முதல் வடகிழக்கு எல்லை வரை, வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலும், வடகிழக்கிலும், உள்ள மாநிலங்கள் அறிந்து கொள்கின்ற வாய்ப்பை வழங்கி இருக்கின்றது.
நரேந்திர மோடி எனும் அரசியல் ஆழிப் பேரலை சுருட்டி விழுங்க முடியாத திராவிடக் கோட்டை தமிழ்நாடு என்பதை, நாடும் ஏடும் மீண்டும் ஒருமுறை உணர்ந்து இருக்கின்றன.
வடபுலத்து அரசியல் தலைவர்கள், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், ஆட்சிபீடத்தில் நீண்ட காலம் வீற்றிருந்து செல்வாக்குப் பெற்றவர்கள், அரசியல் ஆய்வாளர்கள் இப்படி ஒவ்வொருவரும் வியப்புக்குறி மேலிட, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைக் கண்டும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் பெற்றிருக்கும் வெற்றியை அறிந்தும் மூக்கின் மேல் விரல் வைக் கின்றார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், வேலூர் தொகுதியைத் தவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையேற்று வழிநடத்திய மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணி 37 இடங்களைக் கைப்பற்றி வாகை சூடி இருக்கின்றது. மொத்தம் பதிவான வாக்குகளுள், மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணி 56.27 விழுக்காடு வாக்குகளைப் பெற்று இருக்கின்றது. தமிழக வாக்காளர்களுள் 2 கோடியே 23 இலட்சத்து 3 ஆயிரத்து 310 (2,23,03,310) பேர், நமது அணிக்கு வாக்கு அளித்து, வரலாற்றுப் புகழ்மிக்க வெற்றியைத் தந்து இருக்கின்றார்கள்.
ஆருயிர்ச் சகோதரர் கணேசமூர்த்தி அவர்கள், ஈரோடு தொகுதியில், 2,10,618 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிக்கனியைப் பறித்து இருக்கின்றார்.
நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், இமாலய வெற்றியை ஈட்டுவதற்கும், அக்கட்சி கடந்த ஓராண்டுக் காலமாக, திட்டமிட்ட தேர்தல் பணிகளைத் துவக்கியது.
பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்புடைய 600 க்கும் மேற்பட்ட பல்வேறு கிளை அமைப்புகள், தொடர்ந்து தீவிரமாகக் களப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. அதனால், இந்தியா முழுமையும் பெருவெற்றி பெற்று இருக்கின்றனர்.
தமிழகத்தில் தங்கள் செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்று, ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புகள் அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டன. ஆளும் அ.தி.மு.க. அரசின் அதிகார பலத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டும், ஊடகங்கள், ஏடுகள், சமூக வலை தளங்கள் இவை அனைத்திலும் மேலா திக்கம் செலுத்தியும், மிகப்பெரிய கூட்டணி என்ற பிம்பத்தைக் கட்டி எழுப்பியும், இவை அனைத்தையும் விட தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் இன்னொரு கிளை அலுவலகம் போலச் செயல்பட வைத்துக் கொண்டும் படுதோல்வியைச் சந்தித்து இருக்கின்றன.
காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து வந்த சனாதன-மதவாத சக்தியைத் தமிழகத்திற்குள் ஊடுருவ முடியாமல் தடுத்து நிறுத்திய பெருமை, மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை ஏற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர், ஆருயிர்ச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்.
ஆருயிர் அண்ணன், தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களது மறைவுக்குப் பின்னர், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தன் தோள் மீது சுமந்தது மட்டும் அன்றி, தமிழ்நாட்டின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்கும் வரலாற்றுக் கடமை யையும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
இந்திய அரசியல் அரங்கில், பாரதிய ஜனதா கட்சி, மிகப்பெரிய அரசியல் சக்தியாக விஸ்வரூபம் எடுத்து நின்று தேர்தல் களத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க. அரசின் அதிகார பலத்தைச் சேர்த்துக்கொண்டு, இன்னும் சில கட்சிகளின் ஆதரவைத் தன் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்திக் கொண்டும், நாடாளுமன்றத் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொண்டது.
ஆனால், தி.மு.கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொழு திலேயே மதவாத சக்திகள் தமிழகத்தில் கால் ஊன்ற அனுமதிக்க மாட்டோம் என்று சண்டமாருதம் செய்து, கொள்கை அடிப்படையில் சனாதன சக்திகளை எதிர்க்கின்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, மிகத் துணிவாகக் களமாடினார் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
மத்திய, மாநில அரசுகளை நடத்துகின்ற பா.ஜ.க.வும்., அ.இ.அ.தி.மு.க.வும், மலைபோலக் குவிக்கப்பட்டு இருந்த ஊழல் பணத்தைத் தமிழ்நாட்டின் வீதியெங்கும் வாரி இறைத்தனர். வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு, வீட்டுக்கு வீடு முறை வைத்துப் பணம் வழங்கு கின்ற வேலையை ஆளுங்கட்சி மேற் கொண்டது.
தமிழகத் தேர்தல் ஆணையம், கையில் லாத ஊமையன் போல் வேடிக்கை பார்த்தது. காவல்துறை ஆளும் கட்சி யினரின் அக்கிரமங்களைத் தடுக்க முனையாமல் துணை போனது. இவற்றை எல்லாம் புறந்தள்ளி, தனது தேர்தல் பரப்புரை வியூகத்தை வகுத்துக் கொண்டு, தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருந்தார் மு.க.ஸ்டாலின்.
தமிழக மக்கள் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்டு, புதிய வரலாறை எழுதத் தொடங்கி விட்டார்கள் என்பதைத்தான், தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 22 தொகுதி களுக்கு நடந்த இடைத்தேர்தலிலும், 13 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிக்கொடியை நாட்டி உள்ளது. ஆளும் கட்சியின் அதிகார அத்துமீறல்களால், 9 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்று இருக் கின்றார்கள். எடப்பாடி ஆட்சி, தற்காலிக மாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால், தார்மீக அடிப்படையில், எடப்பாடி அரசு நீடிக்க எந்த உரிமையும் இல்லை என்பதை, நாடாளுமன்றத் தேர்தல் தீர்ப்பின் மூலம் மக்கள் தெளிவுபடுத்தி விட்டனர். அதனால்தான், எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும் என்று நான் கருத்துக் கூறினேன்.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றியைப் போல, பிற மாநிலங் களிலும், குறிப்பாக வட மாநிலங் களிலும் பா.ஜ.க.வை எதிர்த்துக் களம் கண்ட காங்கிரஸ் கட்சியும், பிற மாநிலக் கட்சிகளும் வெற்றி பெற முடியாதது ஏன் என்கின்ற கேள்வி, அரசியல் அரங்கை உலுக்குகின்றது.
ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், திருமதி சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தொலைநோக்குப் பார்வை யுடன், காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாள ராக அறிவித்தார்.
மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு, இந்தியா முழுவதும் பா.ஜ.க. அலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட மாநிலக் கட்சிகளால் வழிமொழியப்பட்டு இருந்தால், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வேறு திசையில் பயணித்து இருக்கும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரே வேட் பாளர் நிறுத்தப்பட்டு இருந்தால், கள நிலவரங்கள் மாறி இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலில் வகுத்த வியூகம், பா.ஜ.க.வின் வெற்றிக்கு வழி அமைத்து விட்டது. நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரத்தை, பா.ஜ.க, மிகச் சரியாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது.
தேசியவாதம் (Nationalism), இந்துத் துவா (Hindutva), ஊழல் எதிர்ப்பு (Anti Corruption) ஆகிய இந்த மூன்றை மட்டுமே, நரேந்திர மோடி தனது பரப்புரைகளில் மிகப் பெரிய அளவில் முன்வைத்தார். பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது பாலகோட்டில் இந்தியப் படைகள் நடத்திய தாக்கு தலை, தனது தேர்தல் பிரச்சாரத் திற்குப் பயன்படுத்திக் கொண்டார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், தீவிர வாதிகளின் தற்கொலைத் தாக்குதலால், இந்தியப் படை வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டதை, தமது பரப்புரையில் மிக உருக்கமாக முன்வைத்து, வாக்கு வேட்டை ஆடினார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு மாறாக, பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும், இந்தியப் படை வீரர்களின் உயிர்த் தியாகத்தையும், பாலகோட் தாக்குதலையும் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்துவதைத் தட்டிக் கேட்க வேண்டிய தேர்தல் ஆணையம், அவர்கள் பேசியதில் விதி மீறல் இல்லை என்று நற்சான்றுப் பத்திரம் அளித்தது. தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகள், ஒருதலைப்பட்சமானது என்று, எதிர்க்கட்சிகள் புகார் கூறியதைப் போலவே, தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் எஸ்.ஒய். குரேஷியும் கண்டனம் செய்தார்.
நம் நெஞ்சில் வாழும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், 1999 இல் கார்கில் போரில், பாகிஸ்தானை முறியடித்து வாகை சூடியவராக, ஹரியானா மாநிலத்திற்குச் சென்றார். அங்கே நடந்த பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில், அவர் பேச இருக்கின்ற மேடையின் பின்னால் அமைக்கப்பட்டு இருந்த பதாகையில், முப்படைத் தளபதிகளுடன் வாஜ்பாய் இருக்கின்ற படத்தைப் பெரிதாக வைத்து இருந்தனர்.
அந்த மேடையை உற்று நோக்கிய வாஜ்பாய், முப்படைத் தளபதிகளின் படங்கள் இருந்த பதாகையை அகற்றினால்தான் மேடையில் ஏறுவேன் என உறுதியாகக் கூறி விட்டார். அந்தப் பதாகையை அகற்றிய பின்னர்தான், அந்தப் பொதுக்கூட்டத்தில் உரை ஆற்றினார். நாட்டின் பாதுகாப்புக்காக இரத்தம் சிந்திய இராணுவ வீரர்களின் தியாகத்தை மதித்துப் போற்ற வேண்டுமே தவிர, அரசியல் கட்சிகளின் விளம்பரத்திற்குப் பயன்படுத்தக்கூடாது என்று, தன் கட்சியினருக்கு அறிவுரை கூறினார்.
இத்தகைய பண்பு நலன்தான், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை, அரசியல் எல்லைக்கோடுகளைக் கடந்து, அனை வராலும் மதிக்கத்தக்க மாமனிதராக உயர்த்தியது. வரலாற்றில் புகழோடு வாழ்கின்றார்.
ஆனால், வாஜ்பாய் அவர்களிடம் உள்ள பண்பை, நரேந்திர மோடியிடம் எதிர் பார்க்க முடியுமா?
வாக்கு அரசியலுக்கு எவையெல்லாம் பயன்படுமோ, அவை அனைத்தையும் மோடி, அமித்ஷா பயன்படுத்திக் கொண்டனர். வடபுலத்தில், முற்பட்ட சமூகங்கள், பா.ஜ.க.வின் அடித்தளமாக இருக்கின்றன. அந்த ஆதரவுத் தளத்தைத் தக்க வைத்துக் கொள் வதற்கும், மற்றும் சில சமூகங்களின் ஆதரவைப் பெறுவதற்கும், உயர்சாதி ஏழைகளுக்கு அரசு வேலைவாய்ப்புகள், கல்வியில், 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திருத்தத்தை மோடி அரசு கொண்டு வந்தது.
சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தை ஏற்று, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் பட்ட 124 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. மார்க்சிஸ்ட் கட்சியும் ஆதரித்தது. அதன் பயனை, நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க. அறுவடை செய்தது. சமூக நீதிக்கு எதிரான இந்தத் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தது தமிழகம் மட்டும்தான். எனவேதான், பா.ஜ.க. கூட்டணி இங்கே மண்ணைக் கவ்வியது.
தமிழகத்தைப் பாதுகாக்கும் முன்னோடிக் காவல்படையாக, திராவிட இயக்கம், அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளில் சமரசம் இன்றிப் போராடினால்தான், இந்த மண்ணில் இனத் துரோக சக்திகள் தலை தூக்க முடியாமல் நிரந்தரமாகத் தோற்கடிக்கப் படும்.
எனவே, திராவிட இயக்கக் கொள்கைப் பாசறைகளைப் பலப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும், அனைத்துத் திராவிட இயக்கங்களுக்கும் இருக் கின்றது என்பதை, மனதில் நிறுத்திச் செயலாற்ற வேண்டும்.
ஜனநாயகத்தில் தோற்கடிக்கப்பட முடியாத சக்தி என ஒன்று எப்போதும் இருந்தது இல்லை. உலக வரலாற்றில் எங்கும் காணவும் முடியாது. சர்வாதி காரிகளே வீழ்த்தப்பட்டு இருக் கின்றார்கள் என்பதுதான் வரலாறு கூறுகின்ற பாடம்.
எனவே, பாரதிய ஜனதா கட்சி வெல்லவே முடியாத பகாசுர சக்தி என்று, எவரும் கவலைப்படத் தேவை இல்லை. ஒற்றை ஆட்சி, ஒரு துருவ ஆட்சி என்பது நீடிக்குமானால், அதற்கு முதல் பலி ஜனநாயகம்தான். அதன் பின்னர் ஏற்படுவது ஜனநாயகப் புரட்சி.
1925 இல், ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, ஏன் அதற்கு முன்பே இந்து மகா சபா கருக்கொண்ட பொழுதில் இருந்து, இந்தியாவை இந்து நாடாக ஆக்க வேண்டும்; ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே பழக்க வழக்கம், ஒரே ஆட்சி என்பதை நிலை நிறுத்தி, இந்து ராஷ்டிரக் கனவை அவர்கள் சுமந்து கொண்டு இருக் கின்றார்கள்.
இந்திய வரலாற்றில், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்துத்துவ சனதாக சக்திகள் அசுர பலத்தைப் பெறத் தொடங்கி, இன்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் காவிக் கொடியைப் பறக்க விட்டு இருக்கின்றார்கள்.
பா.ஜ.க.வின் கோட்பாடுகள், இந்தி யாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான வையே; பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களை மறுக்கும் இந்துத் துவ சனாதனக் கூட்டம், அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலாதிக்கம் செய்வதும், பண்பாட்டுப் படை எடுப்பைத் தீவிரப் படுத்துவதும் இனிமேல் வேகம் எடுக்கும்.
ஏனெனில், மதவாதம் அல்லவா அவர் களின் அடிப்படை சித்தாந்தமாக வேர் விட்டு மரமாக வளர்ந்து நிற்கின்றது.
இந்துத்துவ சக்திகள் பலம் பெறுவதை முறியடிக்க வேண்டுமானால், அதற்கு வழிகாட்டக்கூடிய கலங்கரை விளக்க மாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்றி வைத்த “மாநில சுயாட்சி” என்ற சுடர்தான் இருக்கின்றது.
பல தேசிய இனங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற மாநிலக் கட்சிகள், ஒரே அணியாகத் திரண்டு, இந்தியாவின் அரசியலை, கூட்டு ஆட்சித் தத்துவத்தை நோக்கி நகர்த்து வதன் மூலமாகத்தான், பா.ஜ.க.வின் ஒரு துருவ ஆதிக்கத்தை உடைக்க முடியும்.
மாநிலக் கட்சிகளின் கூட்டு அமைப்பை உருவாக்கி, மாநில சுயாட்சி கோட் பாட்டை வலுவாக எடுத்துச் செல்லு கின்ற பொறுப்பை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னின்று ஏற்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்து வோம். அறிஞர் அண்ணாவின் இலட்சிய தீபமாம் மாநில சுயாட்சி கோரிக்கைக்காகவே, அண்ணன் பிறந்த காஞ்சியில் 1999 இல் மாநாடு கண்ட இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.க.
ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகையில், ‘தி.மு.க. அரசு 1974 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறை வேற்றியது; அதற்குத் தம்பி வைகோ வெள்ளி விழா கொண்டாடுகின்றார்’ என்று இதயம் திறந்து பாராட்டுரை வழங்கினார்.
எனவே, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பிற மாநில அரசியல் கட்சிகளுடன் இணைந்து, மாநில சுயாட்சி முழக்கத்தை வலிமையாக முன்னெடுக்கும் கடமையை, எதிர்வரும் காலங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொள்ளும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, தமிழகத்தைச் சூறையாடிய பா.ஜ.க. அரசு, இன்றும் மிகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பீடம் ஏறி இருப்பது, தமிழ்நாட்டுக்கு விடப்பட்டு இருக்கின்ற எச்சரிக்கை மணி என்றே நான் கருதுகின்றேன்.
தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான திட்டங்களான, 
காவிரி பாசனப் பரப்பில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம், 
தேனி நியூட்ரினோ ஆய்வகம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, 
சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை, 
கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம், 
விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைத்து, 
உயர் அழுத்த மின்சாரம் வழங்கும் திட்டம், 
புதிய கல்விக் கொள்கை, பல்கலைக் கழகங்களை ஒழித்துவிட்டு உயர் கல்வித் துறையை தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டம், 
சமூக நீதிக்குக் குழி தோண்டிய நீட் தேர்வை, பொறியியல் கல்விக்கும் நீடிக்கும் திட்டம், சமஸ்கிருதமயமாக்கல், இந்தித் திணிப்பு, 
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான திருச்சி பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் போன்றவற்றின் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்கும் திட்டம், 
தமிழர்களின் தொன்மை வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ள கீழடி அகழ்வு ஆராய்ச்சியைப் பாதியிலேயே மூடும் சதித்திட்டம், 
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி, 
முல்லைப்பெரியாறு அணையைத் தகர்த்துவிட்டுப் புதிய அணை;
இவை எல்லாம், தமிழ்நாடு எதிர்நோக்கி இருக்கின்ற பேராபத்துகள்.

நரேந்திர மோடி அரசின் கண்களை உறுத்திக்கொண்டு இருக்கின்றது தமிழ்நாடு. எனவே, தமிழ்நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஊடுருவி, நமது தனித் தன்மையைச் சீர்குலைத்திட, முன்னிலும் பன்மடங்கு வெறியோடு வருவார்கள். அதனை, தமிழ் மக்களின் சக்தியை ஒன்று திரட்டி முற்றாக முறியடிக்க வேண்டிய கடமைதான் என் முன்னால் நிழலாடுகின்றது.
தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு, பாஜக அரசின் மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து கிடப்பதைத் தமிழ்நாடு பார்த்துக் கொண்டு இருக்கின்றது. அந்த அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றுவதற்கு, திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் துணை நிற்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துக் கொள்வது என கழகப் பொதுக்குழுவில் தீர்மானித்த போது, தமிழகத்தில் திராவிட இயக் கத்தைக் காக்கச் சூளுரைத்தோம். அதற்காக, நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் தீவிரமாகக் களப்பணி ஆற்றினோம். நாடு முழுமையும் சென்று தீவிரத் தேர்தல் பரப்புரை மேற் கொண்டேன். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, கழகக் கண்மணிகளாகிய நீங்கள் தேர்தல் களப்பணி ஆற்றியதாக, நமது கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் என்னிடம் சொன்னபோது, உள்ளம் மகிழ்ந்தேன். உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றேன் எனத் தெரியவில்லை.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய 26 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்ற வேளையில், ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்கின்றது. தியாகத் தழும்புகளை ஏற்றுக்கொண்டு, அர்ப் பணிப்புடன் கழகத்தைக் கட்டிக் காக்கும் கண்மணிகள், எதிர்காலத்தில் மகிழ்ச்சி பொங்கிடும் வகையில், வெற்றி கரமாக அரசியல் களத்தில் பீடு நடை போடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவால், தமிழ்நாடு முழுவதும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. தற்போது, தேர்தல் முடிவுகள் வெளிவந்து, அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, கழகத்தின் 26 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவையும், தேர்தல் களத்தில் திராவிட இயக்கம் பெற்றுள்ள அரசியல் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பட்டி தொட்டி பட்டணக் கரை எங்கும், சிற்றூர், பேரூர், நகரங்கள் எங்கும் கழகக் கொடி பட்டொளி வீசிப் பறக்கச் செய்திட, ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, கழகக் கொடி ஏற்றும் விழாக்களை ஏற்பாடு செய்யுங்கள். கழக முன்னணியினர், சொற்பொழிவாளர்கள், கொடியேற்று விழா தெருமுனைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுகிறேன்.
அயர்வும் சோர்வும் இன்றி, சலிப்பு இல்லாமல், தமிழகத்திற்காக உழைத்துக் கொண்டே இருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், வெற்றிப் படிக்கட்டுகளில் இனி ஏறிக் கொண்டே இருக்கும்.
கண்ணின்மணிகளே
எழுச்சி சங்கொலிக்கும்
உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன், 
வைகோ
சங்கொலி, 07.06.2019

No comments:

Post a Comment