Sunday, July 28, 2019

டெல்லி புறப்படும் வைகோ எம்.பி சென்னை விமான நிலையத்தில் பேட்டி!

டெல்லி புறப்படும் முன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி அவர்கள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு இன்று 28-07-2019 மாலை பேட்டியளித்த போது, சமஸ்கிருதம் செத்து போன மொழி என ஆயிரம் முறை சொல்வேன் என்றார்.

தலைசிறந்த பாராளுமன்ற மேதை ஜெயபால் ரெட்டி மறைவுக்கு வைகோ இரங்கல்!

இந்திய நாட்டின் தலைசிறந்த நாடாளுமன்ற மேதைகளில் ஒருவரான ஆந்திரத்தைச் சேர்ந்த என் உயிரான நண்பர் ஜெயபால் ரெட்டி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
மாற்றுத் திறனாளியான ஜெயபால் ரெட்டி அவர்கள், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எண்ணற்ற விவாதங்களில் எடுத்து வைத்த கருத்துகள் ஈடு இணையற்றவை. ஆங்கிலத்தில் அற்புதமாக பேசும் வல்லமை உள்ளவர்.
திருவாசகம் இசை ஒலி நாடா வெளியீட்டு விழாவுக்கு என் அழைப்பின் பேரில் சென்னையில் வந்து பங்கேற்றுச் சிறப்பித்தார்.
ஹைதராபாத்துக்குச் சென்று அவரது இல்லத்தில் உள்ளவர்களுடைய அன்பைப் பெற்றிருக்கிறேன். அவர் மறைந்த செய்தி கேட்டவுடன், அவரது மூத்த மகன் அரவிந்த் ரெட்டி அவர்களோடு அலைபேசியில் பேசினேன். சாதாரண காய்ச்சல் என்றுதான் மருத்துவமனையில் சேர்த்தோம். ஒரே நாளில் அவர் உயிர் நீத்தது பேரிடியாய் எங்கள் குடும்பத்தில் விழுந்துவிட்டது என்றார்.
77 வயதான ஜெயபால் ரெட்டி அவர்கள் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, என்னுடைய கலிங்கப்பட்டி கிராமத்தில் தேசிய கைப்பந்தாட்டப் போட்டியை நான் நடத்தினேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு தொலைக்காட்சிகளில் அந்தப் பந்தயத்தை ஒளிபரப்பச் செய்தார்.
அவருடன் பழகிய நாட்கள் மனதுக்கு மிகவும் ரம்மியமானவை; பசுமையானவை. அவரது மறைவு இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பேரிழப்பாகும். அவரது துணைவியாருக்கும், அவரது இரண்டு புதல்வர்கள், புதல்விக்கும், குடும்பத்தினருக்கும், பேரப் பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை மிகுந்த துக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் இன்று 28-07-2019 தெரிவித்துள்ளார்.

Friday, July 26, 2019

ஒமான் மதிமுக ஆலோசனை கூட்டம்!

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று 26-07-2019 அன்று மாலை 3 மணி அளவில் மஸ்கட் ருசைல் பார்க்கில் நடந்தது.

பாலசுப்ரமணியம் அவர்கள் வரவேற்றார்கள், துணைச் செயலாளர் வரதராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றம் சென்றதற்கு இனிப்பு உண்டு கொண்டாடினார்கள்.

கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய மக்கள் பணிகளான, பல மக்களுக்கு வேலை வாங்கி தந்து அவர்கள் பொருளாதாரம் முன்னேற செய்தது, பல மக்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்தது, பாலம், ரோடு போட்டு தந்தது, NLC உள்ளிட்ட அரசு நிறுவனங்களை காத்தது, மக்களுக்கு எதிரான திட்டங்களை தனி ஆளாக தடுத்து நிறுத்தியது போன்ற ஆக்க பணிகள் விவாதிக்கப்பட்டது. மேலும் ஒமான் கழக அமைப்பை எவ்வாறு வலுப்பெற செய்வது, புதிய வாழ்நாள் உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றியும், சென்னையில் நடைபெறவிருக்கும் அண்ணா பிறந்த நாள் விழா செப் 15 மாநாட்டிற்கு ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை பங்களிப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது.

தீர்மானம்:

1. இந்திய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கு மேலவை உறுப்பினராக பதவியேற்று மக்கள் தொண்டாற்றும் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு வாழ்த்துதலை ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

2. NEET - நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்ற நிறைவேற்றிய சட்ட முன்வரைவு, ஒப்புதலுக்காக குடியரசு தலைவருக்கு அனுப்பி, 2017 ஆம் ஆண்டே, அவர் நிராகரித்த விடயத்தை மக்களுக்கு தெரிவிக்காமல், நீட் ரத்து செய்ய ஆவன செய்யப்படும் என்றே காலம் தாழ்த்தி 2 வருடமாக மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை கண்டனம் தெரிவிக்கிறது.

இந்த ஆலோசனை செயல்வீரர்கள் கூட்டத்திற்கு, செயலாளர் மறுமலர்ச்சி மைக்கேல், பொருளாளர் ராஜகுரு, துணை செயலாளர் வரதராஜ், செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், பாலசுப்ரமணியம், ஆனந்த், ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

ஆனந்த், கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஹைட்ரோ கார்பன் அமல் படுத்தினால் போராட்டம் வெடிக்கும். மாநிலங்கள் அவையில் வைகோ எச்சரிக்கை!

இன்று 26.7.2019 மாநிலங்கள் அவை கூடியதும், பூஜ்ய நேரத்தில் முதல் வாய்ப்பாக, அவைத்தலைவர் வெங்கைய நாயுடு, வைகோ அவர்களைப் பேச அழைத்தார்.

அப்போது வைகோ பேசியதாவது:-

“தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை, விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக் கூடிய பெருங்கேடான, மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எரிகாற்றுக் கிணறுகள் தோண்டும் திட்டத்தை  நடுவண் அரசு செயல்படுத்த முனைகின்றது.

மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு, இத்தகைய அழிவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றது.

ஒவ்வொரு கிணறும் 10,000 அடி ஆழத்திற்குத் தோண்டப் போகின்றார்கள். ஏற்கனவே தூத்துக்குடியைச் சீரழித்த ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் வேதாந்தா நிறுவனம், காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட 276 இடங்களில் உரிமம் வழங்கி இருக்கின்றார்கள். ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 67 கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதில் அவர்கள் தற்போது இரண்டு கிணறுகளைத் தோண்டி கொண்டு இருக்கின்றார்கள்.

கடந்த ஜூலை 17ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் மாதானம், கடலூர் மாவட்டம் புவனகிரி ஆகிய இடங்களில் கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்காக அவர்கள் 20 மில்லியன் லிட்டர் தண்ணீரை அதிக அழுத்தத்தில் நிலத்திற்குள் உட்செலுத்தப் போகின்றார்கள். 

அதுமட்டும் அல்ல, அத்துடன் 636 நச்சு வேதிப் பொருட்களையும் கலந்து நிலத்திற்குள் செலுத்தப் போகின்றார்கள்.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஒட்டு மொத்த பாசன நிலப்பரப்பும் சீரழிந்து விடும். மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

எந்த எதிர்ப்பைப் பற்றியும் கவலை இல்லை என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் மிகுந்த ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கூறி இருக்கின்றார்.  ஹைட்ரோ கார்பன் திட்டங்களை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று, கடந்த 17 ஆம் தேதி பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.

இந்த அழிவுத் திட்டங்களை எதிர்த்து இலட்சக்கணக்கான விவசாயிகள், சாதி மத கட்சி எல்லைகளைக் கடந்து வீதிக்கு வந்து போராடி கொண்டு இருக்கின்றார்கள்.

கடந்த ஜூன் 23ஆம் நாள் இலட்சக்கணக்கான மக்கள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி, புதுவை மாநிலம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாக “ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தொலைவிற்கு, கைகளை ஒன்றாகப் பிணைத்து மனிதச்சங்கிலி உருவாக்கி, அறப் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.

கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லிக்கு வந்து ஜந்தர்மந்தர் வீதிகளில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் பெருமளவில் திரண்டு வந்து பங்கேற்றார்கள்.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் மத்திய அரசுக்குப் பல லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். உங்களுடைய கருவூலம் பொற்காசுகளால் நிரம்பி வழியும். ஆனால் அதேவேளையில், ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் அகதிகளாக பிச்சைப்பாத்திரம் எந்தக் கூடிய நிலைமை உருவாகும்.

எனவே இந்தக் கேடான அழிவுத் திட்டங்களைக் கைவிடுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கின்றேன். இல்லையேல், தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கின்றேன்.”

இவ்வாறு வைகோ பேசினார்.

அப்போது அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் குறுக்கிட்டு, “மின்னல் வேகத்தில் உங்களுடைய கருத்துகளை கூறினீர்கள். அரசுக்கு கோரிக்கை விடுங்கள். ஆனால் எச்சரிக்கை செய்யாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்‌ என‌ மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று 26-07-2019 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 25, 2019

எம்பியாக பதவியேற்ற முதல் நாளே அமைச்சரிடம் ஒரே குடையின் கீழ் பல கேள்விகளை கேட்டு திணறடித்த வைகோ!

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் தமிழில் உளமார உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பின் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ,

கேள்வி நேரத்தின்போது, 25-07-2019 அன்றே, 347 ஆவது கேள்விக்கு இந்தியாவில் மூடப்பட்ட நூற்பு ஆலைகள் குறித்த கேள்வி ஆகும்.

ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வைகோ துணைக்கேள்வி எழுப்பியபோது அவர் பேசியதாவது,

“அவைத்தலைவர் அவர்களே 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேலவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.” 

வைகோ இதைச் சொன்னவுடன் அவையில் அமர்ந்து இருந்து பிரதமர் நரேந்திர மோடி மேசையைத் தட்டி வரவேற்றார்.

வைகோ நூற்பு ஆலைகள் குறித்துப் பேசியதாவது, “பருத்தி விலை பஞ்சு விலை மேலும் கீழுமாய் திடீர் திடீரென மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி ஆகிறது.

மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்று அமைச்சர் பதில் தருவாரா?

தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச்சூழல் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றன. மற்ற மாநிலங்களில் அப்படிப் பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை ஏடுப்பாரா? (அமைச்சர் இதை மறுத்தார்)

சீனாவில் இருந்து ஏராளமான ஆயத்த ஆடைகளை குறைந்த விலையில் வங்கதேசத்திற்கு அனுப்புகின்றார்க. அங்கே அந்த நாட்டு முத்திரை பதித்து  இந்தியாவிற்குள் கொண்டு வந்து குவிக்கின்றார்கள். இதனால் நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தெரிவிப்பாரா?”

அமைச்சர் ஸ்மிருதி இரானி: அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை.

வைகோ: உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை என வைகோ பதிலளித்தார்.

MP ஆக பதவியேற்றார் தலைவர் வைகோ!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இ ந் தி ய ஒன்றிய நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராக 25-02019 பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
ல்

Thursday, July 18, 2019

எதேச்சாதிகாரத்திற்கு வழிவகுக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவை கைவிடுக - மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், 1956 இல் மாற்றம் கொண்டுவந்து, ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் சட்ட முன்வடிவு 2017 இல், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எம்.பி.பி.எஸ்., படிப்பு முடித்தவர்கள் மருத்துவர்களாக பணியாற்ற உரிமம் பெறுவதற்கு தேசிய அளவிலான தேர்வு எழுத வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், சட்ட முன்வடிவு நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, 16 ஆவது மக்களவையுடன் காலாவதி ஆகிவிட்டதால், புதிய மக்களவையில் இச்சட்ட முன்வடிவை தாக்கல் செய்திட மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதில் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் அலுவலகம் வலியுறுத்தி இருக்கிறது.
இதன்படி எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த மாணவர்கள் எம்.டி., எம்.எஸ்., போன்ற மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர, எம்.பி.பி.எஸ், இறுதித் தேர்வு, தேசிய வெளியேறும் தேர்வு (நெக்ஸ்ட்) என்ற பெயரில் (National Exit Test) நாடு முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படும். இந்த இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தனியாக நுழைவுத் தேர்வு ‘நீட்’ எழுத வேண்டிய கட்டாயம் இல்லை என்று புதிய சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டப்படி, பல்கலைக் கழகங்களை உருவாக்கவோ, நிர்வகிக்கவோ மத்திய அரக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட இந்த உரிமையைப் பறிக்கும் வகையில்தான் ‘நிதி ஆயோக்’ பரிந்துரையின்படி பா.ஜ.க. அரசு, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க ஜூலை 17 இல் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்து உள்ளது.
‘நெக்ஸ்ட்’ தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் பயிற்சி மருத்துவராக முடியாது. 6 மாதம் அல்லது ஒரு வருடம் காத்திருந்து தேர்வுக்குத் தயாராக வேண்டும். நீட் பயிற்சி மையங்கள் போல இதற்கான பயிற்சி மையங்களும் புற்றீசலாகக் கிளம்பி கொள்ளை அடிப்பதற்கு வழி வகுக்கும்.
ஏழை எளிய, சாதாரண கிராமப்புற மாணவர்கள், ‘நீட்’ தேர்வை எதிர்கொண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தாலும், இறுதித் தேர்வான ‘நெக்ஸ்ட்’இல் வடிகட்டப்படும் சூழ்ச்சி இதில் ஒளிந்து இருக்கிறது.
பா.ஜ.க. அரசு கொண்டுவரத் துடிக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’ என்பது அரசியல் சாசனத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது ஆகும். 25 பேரை உறுப்பினராகக் கொண்ட தேசிய மருத்துவ ஆணையத்தில் 5 பேர் மட்டுமே மருத்துவர்களாக தேர்வு செய்யப்படுவர். மற்ற 20 பேரும் நியமன உறுப்பினர்கள் ஆவர். ஒரு மாநிலத்துக்குத் தலா ஒரு நியமன உறுப்பினர் வீதம் 29 மாநிலங்கள் மற்றும் 6 ஒன்றியப் பிரதேசங்களிலிருந்து மருத்துவ ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்படுவார்கள். இக்குழுவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இந்த ஆலோசனைக் குழுவிலிருந்து சுழற்சி முறையில் 6 பேர் தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மருத்துவக் கல்லூரிகள் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைக்கும். எனவே மாநிலங்கள் தம் தேவைகள் குறித்தும், நடைமுறைச் சிக்கல்கள் பற்றியும் தேசிய மருத்துவ ஆணையத்தில் விவாதிக்கும் வாய்ப்பே கிடைக்காது.
மேலும், இந்த ஆணையத்தின் சார்பில் நியமன உறுப்பினர்களைக் கொண்ட நான்கு வாரியங்கள் செயல்படும். இதில் ஒரு வாரியம், மருத்துவக் கல்வியின் தரத்தை மதிப்பீடு செய்யும். தனியார் ‘மதிப்பீட்டு (Rating)’ நிறுவனங்களைக் கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளும். அதில் குறைபாடுகள் கண்டறிந்தால், கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும். இதனால் 24 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட அதிகத் தொகையை அபராதமாகக் கட்ட வேண்டிய நிலை உருவாகலாம். மேலும், மாநில அரசுகள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவே தயங்கும் சூழல் ஏற்பட்டுவிடும்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாட்டில் தலையிடவும், முடிவுகளை மாற்றவும், நிராகரிக்கவும் மத்திய அரசுக்கு மித மிஞ்சிய அதிகாரம் வழங்கப்படுகிறது. ஆணையத்தைக் கலைக்கவும், மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் தரப்படுகிறது.
இந்திய மருத்துவக் கவுன்சிலைச் சீரமைத்து, சீரிய முறையில் இயங்கிட முயற்சிக்காமல், அதனை ஒரேயடியாக ஒழித்துவிட்டு, மத்திய அரசின் ஏதேச்சாதிகாரத்தை நிலைநாட்ட ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது. மருத்துவப் படிப்புகளை முழுதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், ‘நெக்ஸ்ட்’ எனப்படும் ‘தேசிய வெளியேறும் தேர்வை’ கட்டாயமாக்கவும் வழிவகை செய்யும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.

Wednesday, July 17, 2019

ரமேஷ் பொக்ரியால், எடப்பாடி பதவி விலக வேண்டும்-வைகோ வலியுறுத்தல்!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“இந்த வழக்கில் என் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று விவரம் வாசிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைப்பதற்குத் திட்டமிட்டதாகவும், எல்.கணேசன், செஞ்சி இராமச்சந்திரன் இரண்டு பேர்தான் அந்த முயற்சியில் சிக்கிக்கொண்டதாகவும், ஆனால் கட்சியை உடைப்பதற்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மூலம் பலரை பொதுக்குழுவுக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்ததாகவும், இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு இருக்கின்றதே? உங்கள் பதில் என்ன? என்று கேட்டார்.
நான் நான் குற்றவாளி அல்ல என்று குற்றச்சாட்டை மறுத்தேன்.
மேலும், இரண்டு செய்திகளை உங்கள் மூலமாக இந்தியா முழுவதும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஒன்று:- அலைபேசிகள் பல குற்றங்களுக்கும், பல கலவரங்களுக்கும், பல பெண்களின் வாழ்வுச் சீரழிவுக்கும் காரணமாகவும் இருந்திருக்கின்றது என்பதால், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் அலைபேசி (மொபைல் போன்) உபயோகிக்கக் கூடாது என்று கல்லூரி முதல்வர்கள் ஆணை பிறப்பித்து இருக்கின்றார்கள்.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission UGC) இந்தியா முழுவதும் ஒரு சுற்று அறிக்கை அனுப்பி வைத்து இருக்கின்றது. நேற்று குரு பூர்ணிமா நாளில், மாணவர்கள், தங்களுடைய பேராசிரியர்களுடன் சேர்ந்து அலைபேசிகளில் செல்~பி படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து பரப்ப வேண்டும் என்றும், இது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் உத்தரவு என்றும் அந்த சுற்று அறிக்கையில் கூறி இருக்கின்றார்கள். அவர் பெயர் ரமேஷ் பொக்ரியாலா அல்லது போக்கிரியாலா? தெரியவில்லை.
சந்திரயானுக்குச் சென்று நிலவின் பரப்பை ஆராய்ச்சி செய்யப் போகின்றோம், 2022 இல் அங்கே மனிதனை இறக்கப் போகிறோம் என்று சொல்கிறீர்கள். ஆனால், சந்திரனைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, புராணங்களில் எழுதிய கதைகளை வைத்துக்கொண்டு, அமாவாசை, பௌர்ணமி என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
மாணவர்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து செல்~பி எடுத்துக்கொள்ள வேண்டுமாம். இதைவிட முட்டாள்தனமான, அயோக்கியத்தனமான யோசனையை யாரும் சொல்ல முடியாது. இந்த சுற்று அறிக்கையை அனுப்பியது பல்கலைக் கழக மானியக் குழுவா? அல்லது Utter Gutter Council - குப்பைத் தொட்டியா?
கல்லூரி முதல்வர்களுக்கு இப்படி சுற்று அறிக்கை அனுப்பி இருப்பதற்கு என்ன காரணம்?
இந்தியைத் திணிப்பது மட்டும் அல்ல, கலாச்சாரத்தையே பாழ்படுத்தி, அறிவியல் சிந்தனைகளையே கூர் மழுங்கச் செய்கின்ற வகையில் இப்படி ஒரு சுற்று அறிக்கை அனுப்பிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது. ராஜினாமா செய்ய வேண்டும்.
இரண்டாவது பிரச்சினை:
நீட் தேர்வு வராது, நாங்கள் தடுத்து வைத்து இருக்கின்றோம், இரண்டு மசோதா நிறைவேற்றி மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி விட்டோம், குடியரசுத் தலைவருக்குச் சென்றுவிட்டது என்றெல்லாம் கூறி மாணவர்களை நம்ப வைத்தார்கள்.
2017 இல் இந்த மசோதாவை அனுப்பி இருக்கின்றார்கள். அப்பொழுதே அவர்கள் நிராகரித்துத் திருப்பி அனுப்பி விட்டார்கள். ஆனால் அதை வெளியில் சொல்லாமல், மசோதாவை நிறுத்தி வைத்து இருக்கின்றார்கள், பரிசீலனையில் இருக்கின்றது என்றெல்லாம் சொல்லி, இரண்டு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள். இதைவிட மோசடி என்ன இருக்க முடியும்? இப்பொழுது உண்மை வெளியே வந்து விட்டது.
நீட் தேர்வு வராது என்று மாணவர்களை நம்பச் செய்து, ஏழரைக் கோடி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி, கடைசியில் நீட் தேர்வு வந்து, மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத ஆறு பேர் தற்கொலை செய்து இறந்து விட்டார்கள்.
இந்த ஆறு பேர் சாவுக்குக் காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்பதால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பதவியில் நீடிக்கத் தகுதி இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 17-07-2019 செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் கேப்டன் கல்லூரி சீட்டுக்காக சென்னை மாநில கல்லூரி சென்ற வைகோ!

தெரு ஓரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கான உலக கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களை நேற்று 16-07-2019 அன்று மதிமுக தலைமை நிலையம் தாயகம் அழைத்து பாராட்டு தெரிவித்தார் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.

அதில் இருவர் சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்து இருப்பதாகவும் இடம் கிடைப்பதில் பிரச்சினை இருப்பதாகவும் தலைவரிடம் சொன்னபோது, தலைவர் வைகோ அவர்கள் நானே நேரில் வந்து முயற்சிக்கிறேன் என்று கூறினார்கள்.

அதன்படி இன்று 17-07-2019 காலை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்பு அந்த இரு வீரர்கள் மற்றும் கருணாலயா அமைப்பின் தலைவர் திரு.பால் மற்றும் தாயகம் சுரேஷ் ஆகியோருடன் மாநிலக் கல்லூரியின் முதல்வர் திரு ராவணன் அவர்களை நேரில் சந்தித்து வீரர்களுக்கு இடம் கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

முதல்வரும் ஆவண செய்வதாக கூறி இரு மாணவர்களுக்கும் மாநிலக் கல்லூரியில் படிப்பதற்கான இடத்தை உறுதி செய்தார். மாணவர்கள் தலைவர் வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

தலைவர் வைகோ தான் படித்த மாநிலக் கல்லூரியில் வெகு நாட்களுக்கு பிறகு வருவதாகவும். தான் பயின்ற போது உள்ள அனுபவங்களை அங்குள்ளவர்களிடம் மகிழ்வோடு உரையாடி மகிழ்ந்தார்கள்.

இந்த கல்லூரியின் முன்னால் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு குரல் கொடுத்தோம் மாணவர்கள் ஒன்றாகத் திரண்டோம் என்று நினைவுகூர்ந்தார் தலைவர் வைகோ அவர்கள்.

சென்னை மாநில கல்லூரியின் முதல் இயக்குனர் மற்றும் முதல்வர் புரத்தன் போவள் சிலை முன்பு தலைவர் வைகோ நின்று படம் எடுத்துக்கொண்டார். அப்போது தான் பயிலும் போது பெறும் வெற்றி கோப்பையை எல்லாம் இங்கு கொண்டு வந்துதான் பார்வைக்கு வைப்பார்கள் என தலைவர் வைகோ அவர்கள் நினைவு கூர்ந்தார்.

Tuesday, July 16, 2019

ஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டங்கள்-முதலமைச்சர் தலையிட வைகோ வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வரத்துத் தடங்ளைத் தூர் வாருவதற்காக, குடிமராமத்துத் திட்டங்கள் துவக்கப்பட்டபோது, விவசாயிகள் இதனை வரவேற்றனர். 

தமிழக அரசு குடிமராமத்துப் பணிகளுக்காக 
2016-17 ஆம் ஆண்டு முதல் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கி, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள 1519 குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர் வாரும் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தது.

2017-18 ஆம் ஆண்டில் 29 மாவட்டங்களில் 331.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 
2 ஆயிரத்து 65 பணிகள் மேற்கொள்ளத் திட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நடப்பு 
2018-19 ஆம் ஆண்டில் 29 மாவட்டங்களில் உள்ள 1829 நீர்நிலைகளை நான்கு மண்டலங்களாகப் பிரித்து, 

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் புனரமைக்க ரூபாய் 499.68 கோடி ஒதுக்கீடு செய்து, 

கடந்த ஜூன் 14 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி சென்னை மண்டலத்தில் உள்ள

 277 நீர்நிலைகளைத் தூர்வார 
ரூ.93 கோடியும், 
திருச்சி மண்டலத்தில் உள்ள
 543 நீர்நிலைகளைப் புனரமைக்க 
109 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 மதுரை மண்டலத்தில் 681 நீர்நிலைகள்
 ரூ.230 கோடி மதிப்பீட்டிலும், 
கோவை மண்டலத்தில் 328 நீர் நிலைகள் 66 கோடியே 80 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் புனரமைக்கத் திட்டமிடப்பட்டு,

 அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசால் நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்கவும், 

நீர்ப்பாசன வழித்தடங்களைப் புனரமைக்கவும்,

 செயல்படுத்தப்படும் குடிமராமத்துத் திட்டம் வரவேற்புக்கும்,

 பாராட்டுக்கும் உரியதாகும்.

ஆனால் குடிமராமத்துத் திட்டத்தின் நோக்கம் பயனின்றி,
 ஊழலும், முறைகேடுகளும் தொடர்வதும், 

அதனை அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்தி வருவதும் வேதனை தருகிறது.

இந்தக் குடிமராமத்துப் பணிகள் நீர்வள ஆதாரத் துறையினரால் திட்டமிடப்பட்டு 

விவசாய சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் சங்கங்கள் மூலமாக செயல்படுத்த வழிகாட்டு நெறிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

இது தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து, 

சங்கங்களை ஏற்படுத்தி குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், 

அதற்கான விதிமுறைகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக வகுக்கப்பட்டு,

 முறையாக பணிகள் நடைபெற வேண்டும் எனவும் அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

குடிமராமத்துப் பணிகள், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம்
 1975 மற்றும் அதன் விதிகளின்படி அசல் ஆயக்கட்டுத்தாரர்களால்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

நேற்று சட்டமன்றத்திலும் இதுகுறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,

 வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தெரிவித்து உள்ளார்.

ஆனால் இந்த விதிமுறைகளை எல்லாம் வீசி எறிந்துவிட்டு, 

உள்ளூர் விவசாயிகள், ஆயக்கட்டுதாரர்கள் இல்லாமல், 

ஆளும் கட்சியினர் தலையீட்டில் பல போலி சங்கங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் குடிமராமத்துத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

 இந்த முறைகேடுகளால் நீர் நிலைகள் முறையாகத் தூர் வாரப்படாமல், 

மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுவதுடன், குடிமராமத்துத் திட்டத்தின் நோக்கமும் சிதைகிறது.

ஆளும் கட்சியினரின் குடிமராமத்து ஊழல்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்தவண்ணம் இருக்கின்றனர்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் - நல்லூர் குட்டப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பன்குளம், 

60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 

இந்தக் குளம் மூலம் 300 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 

கடந்த 2017-18 இல் இந்தக் குளத்தில்

 3 கட்டமாக சீரமைப்புப் பணிகள் நடந்துள்ளதாக அங்கு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

 இதற்கு பல இலட்சங்கள் செலவிடப் பட்டதாகவும் அதில் குறிக்கப்பட்டுள்ளது.

 பாப்பான்குளத்தில் தூர்வாரும் பணி, கரையை பலப்படுத்தும் பணி, மதகுகள் சீரமைப்பு உள்ளிட்ட எந்தப் பணியும் நடைபெறவில்லை.

 ஆனால் தூர் வாரி செப்பனிட்டு விட்டதாக நீர்ப்பாசனத்துறையினர் அறிவிப்பு செய்துள்ளதைக் கண்டித்து 

ஜூலை 15 ஆம் தேதி விவசாயிகள் பாப்பன்குளத்தில் இறங்கி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் - கொண்டங்கி ஏரியைத் தூர்வார ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இதற்கான பணிகளைச் செய்ய ஆளும் கட்சியினர் போலி சங்கத்தைத் தொடங்கி, குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முயற்சிப்பதைத் தடுக்க வேண்டும் என்று

 விவசாயிகளும், பொதுமக்களும் விழுப்புரம் ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அதே போல 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட சங்கராபுரம் ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கி 20 ஏக்கராக ஆகியுள்ள நிலையில், அங்கும் தூர்வாருவதற்கு ஆளும் கட்சியினர் போலி சங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 
ரூ. 8.15 கோடி மதிப்பில் பாசன வாய்க்கால் மற்றும் நான்கு ஏரிகளைத் தூர்வார மாவட்ட ஆட்சியரிடம் ஆளும் கட்சியினர் போலி சங்கத்திற்குப் பணிகள் ஒதுக்கீடு செய்யக் கோரி நிர்பந்திக்கின்றனர்.

 குறிஞ்சிப்பாடி வட்டாரத்தின் பாசன ஆதாரமான பெருமாள் ஏரியும் முறையாகத் தூர்வாரப்படாமல், குடிமராமத்துப் பணிகள் பெயரளவுக்குத்தான் கடந்த ஆண்டு நடந்தன.

வடலூர் ஐயன் ஏரியை சில நிறுவனங்கள் தத்தெடுத்து சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் தூர்வாரி கரையைப் பலப்படுத்தியுள்ளன.

 ஆனால் அதே ஏரியைத் தற்போது சேராக்குப்பம் ஐயன் ஏரி என்று பெயர் மாற்றிக் குறிப்பிட்டு, கரையைப் பலப்படுத்த நிதி ஒதுக்கீடு பெற்று, மக்கள் வரிப்பணத்தை ஏப்பமிட முயற்சி நடக்கிறது.

கடலூர் மாவட்டம் - புவனகிரி தொகுதியில் உள்ள பின்னலூரில் நூற்றாண்டு பழமையான சூடாமணி ஏரி உள்ளது.
 இரண்டு கிலோ மீட்டர் நீளமும், முப்பது ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த ஏரி, சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன ஆதாரமாக இருக்கின்றது. 

இதையும் முறையாக ஆழப்படுத்தி தூர்வாராமல், குடிமராமத்துப் பணி பெயரளவுக்கு நடப்பதாக விவசாய சங்கங்கள் புகார் கூறி உள்ளன.

குடிமராமத்துத் திட்டங்களில் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஆளும் கட்சியினர்,

 உண்மையான ஆயக்கட்டுத்தாரர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கொண்ட சங்கங்கள் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டால் ‘கமிஷன்’ கேட்டுத் தொல்லைப்படுத்துகின்றனர் என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று குடிமராமத்துத் திட்டத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு கடலூர், விழுப்புரம், திருச்சி மாவட்டத்தின் நிலையை படம்பிடித்துக் காட்டி இருக்கின்றேன்.

 தமிழ்நாடு முழுவதும் இதே நிலை இருப்பதால் குடிமராமத்துத் திட்டம் தோல்வியைத் தழுவிவிடும் நிலையும்,

 வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள தமிழகம் அதிலிருந்து மீள முடியாத ஆபத்தும் நேரிடும். 

எனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குடிமராமத்துத் திட்டத்தின் முறைகேடுகளைக் களைந்து,

 செம்மைப்படுத்தி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 16-07-2019 தெரிவித்துள்ளார்.

Monday, July 15, 2019

வாழ்த்து தெரிவித்த லயோலா மாணவர்களுக்கு வைகோ வேண்டுகோள்!

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று 15-07-2019 மதிமுக தலைமை நிலையம் தாயகத்திற்கு வருகை தந்து நாடாளுமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வைகோ அவர்களுக்கு வாழ்த்து சொன்னார்கள்.

தொடர்ந்து மாணவர்களை அழைத்து சென்று கூட்ட அரங்கில் வைத்து தனது மாணவ பருவங்களை எடுத்து கூறி அறிவுரைகளையும் வழங்கினார். 

அப்போது தலைவர் வைகோ அவர்கள் மாணவர்களிடம் கூறியன சில கீழே!

1. அப்பா அம்மாவிடம் பிரியமாக இருங்கள். அவர்கள் உங்கள் பாசத்திற்காக ஏங்குகிறார்கள். உங்கள் பாசம் கிடைக்காததால் அவர் மனதில் ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது என மாணவர்களிடம் வேண்டுகோள்.

2. காதல் விஷயத்தில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பருவகால மாற்றங்கள் சமூக குற்றத்திற்கு காரணமாகி விடுகிறது. கவனம் தேவை.


3. மொழியை பற்றி இனத்தை பற்றிய உணர்வு மாணவர்களிடம் வேண்டும்.


4. புரட்சி வெடிப்பது நம் மரபு அணுக்களில் உள்ளது. அழிவு சக்தி வரும் போது மாணவர்கள் சக்தி எழும்.

Saturday, July 13, 2019

அஞ்சல்துறைத் தேர்வுகள் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்படும்! மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு வைகோ கடும் கண்டனம்!

இந்தியாவை ‘இந்தி’ நாடாக கட்டமைக்கும் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் இந்தி மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற உத்தரவு, மும்மொழிக் கொள்கையைத் திணிக்க ‘புதிய கல்விக் கொள்கை’ போன்றவற்றால் பல்வேறு மொழிகளைக் கொண்ட தேசிய இனங்களின் மொழி உரிமையைத் தகர்த்துவிட்டு, ‘ஒரே மொழி’ எனும் நிலையை நடைமுறைப்படுத்த பா.ஜ.க. அரசு முனைந்திருப்பது, ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் செயலாகும்.
மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதில் பா.ஜ.க. அரசின் நோக்கங்களை வெளிப்படுத்துகிறது.
“ஐக்கிய நாடுகள் சபையில் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. இந்தி மொழியை வெளிநாடுகளில் பரப்பவும், பிரபலப்படுத்தவும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.43 கோடியே 48 இலட்சம் செலவிடப்பட்டு இருக்கிறது. 2018 மார்ச்சில் ஐ.நா. ‘கருத்தாக்கங்களை இந்தியில்’ வெளியிட இரு ஆண்டுகளுக்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது.
அண்மையில் ஐ.நா.வின் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் இந்தி மொழியில் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது” என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. அரசின் ‘இந்திமொழி’ வளர்ச்சித் திட்டங்கள், திணிப்புகள் தொடரும் நிலையில், மாநில மொழிகளின் உரிமைகளை மறுப்பதிலும் முனைப்பாக உள்ளது. இந்தி எதேச்சாதிகாரத்தின் கொடுங்கரங்கள், இந்தியாவில் இந்தி தவிர பிற மொழி பேசும் மக்களின் வேலை வாய்ப்புக்களையும் தட்டிப் பறிக்கின்றன.
இந்திய அஞ்சல்துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள் (Multi Tasking Staff), மெயில் குவார்ட் (Mail Guard), அஞ்சல்காரர் (Post man), அஞ்சலக உதவியாளர் (Postal Assistant), தபால் பிரிப்பு உதவியாளர் (Sorting Assistant) போன்ற பணி இடங்களுக்காக தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடைபெற்று வந்தன.
இந்நிலையில், அஞ்சல்துறைப் பணிகளுக்கான தேர்வுப் பாடத் திட்டங்கள் கடந்த மே 10 ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டன. பின்னர் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு அஞ்சல்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பல்வேறு அஞ்சல்துறை பணி இடங்களுக்கு நாடு முழுதும் இனி ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே இருக்கும். அதன்படி இனி தபால்துறைத் தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே இருக்கும். அந்தந்த மாநில மொழிகள் அதில் இடம்பெறாது என்றும் மத்திய அரசின் சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த அஞ்சலகப் பணியாளர்கள் தேர்வில் அரியானா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தோர் அதிக மதிப்பெண்கள் பெற்றதாகக் கூறி, தமிழ்நாட்டில் அஞ்சல்துறையில் பணி வாய்ப்பு பெற்றனர். இந்தி, ஆங்கிலம் இவற்றோடு, தமிழ் மொழியும் இடம் பெற்றிருக்கும்போதே அஞ்சல்துறையில் வட மாநிலத்தவர்கள் புகுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே அஞ்சல்துறைப் பணியாளர்கள் தேர்வு நடத்தப்பட்டால், இனி முழுக்க முழுக்க ‘இந்திக்காரர்கள் ஆதிக்கம்’தான் அஞ்சல்துறையில் கொடிகட்டிப் பறக்கும். தமிழகத்தில் குக்கிராமங்களில் உள்ள அஞ்சலகங்களில்கூட இனி ‘இந்தி மொழி பேசுவோரை’ப் பணி அமர்த்தும் திட்டம் தடையின்றி நடக்கும். மொழிப் பிரச்சினையால் அஞ்சல் சேவை மற்றும் தகவல் தொடர்புகளும் பெரிதும் பாதிக்கப்படும்.
மத்திய அரசுத் துறைகளில் தமிழர்களின் வேலைவாய்ப்புக்கள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாரி வழங்கும் பா.ஜ.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியதும், நியாயப்படுத்தவே முடியாத அக்கிரமச் செயலும் ஆகும்.
அஞ்சலகப் பணியாளர்கள் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே வினாத்தாள் இருக்கும் என்பதை மாற்றி, தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வினாத்தாள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 13-07-2019 தெரிவித்துள்ளார்.

Saturday, July 6, 2019

NEET நுழைவுத் தேர்வு: தமிழக மக்களை ஏமாற்றிய எடப்பாடி அரசுக்கு வைகோ கண்டனம்!


மருத்துவப் படிப்புகளுக்கு தகுதிகாண் நுழைவுத் தேர்வு (NEET) மத்திய அரசால் கட்டாயம் ஆக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து தமிழகத்தில் கொந்தளிப்பு எழுந்தது. இதனால், நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி 2017 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரு சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைச் சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மேற்படிப்பு மாணவர் சேர்க்கைச் சட்டம் என்று நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இச்சட்ட முன்வடிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று மாண்பமை நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தமிழக அரசின் சட்ட முன்வடிவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றுக்கொண்டு, அவற்றைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாகவும், 2017 செப்டம்பரில் குடியரசுத் தலைவர் சட்ட முன்வடிவுகளை நிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த இரு சட்ட முன்வடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா? என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டபோது, அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக  மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பதில் வந்ததாக மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இரு சட்ட முன்வடிவுகளும் மத்திய அரசால் பெறப்பட்ட தேதி மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு அனுமதி கொடுக்காமல் நிராகரிக்கப்பட்ட தகவல் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்பே தெரிந்திருக்கும். ஆனால் அந்த செய்தியை மறைத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவோம் என்று தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வந்த செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.
நீட் தேர்வால் சமூக நீதிக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது மட்டுமின்றி, சாதாரண ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பைக் கனவில்கூட நினைக்க முடியாத நிலைமையை பா.ஜ.க. அரசு உருவாக்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் மாணவர்கள், பெற்றோர்கள் விருப்பத்திற்கு மாறாக நீட் தேர்வை வலிந்துத் திணித்ததால், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அரியலூர் மாவட்டம் - குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா 2017 செப்டம்பரில் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த ஆண்டு 2018 இல் செஞ்சி அருகில் உள்ள பெருவளூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி மகள் பிரதீபா நஞ்சு அருந்தி மாண்டுபோனார். மேலும், திருச்சியில் மாணவி சுபஸ்ரீ, சென்னை சேலையூரில் ஏஞ்சலின் ஸ்ருதி போன்ற மாணவிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த ஆண்டு 2019 இல் நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன், திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, மரக்காணம் மோனிசா போன்ற மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி  அரசின் பொய்யான வாக்குறுதியால் இந்த மாணவிகள் உயிரைப் போக்கிக் கொண்ட சோகம் நிகழ்ந்தது.
மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கல்வித் துறையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதற்குப் புதியக் கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதுடன், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்ப்பதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் இன்று 06-07-2019  தெரிவித்துள்ளார்.

Friday, July 5, 2019

நிதிநிலை அறிக்கையில், மாற்றத்திற்கான அறிகுறிகள் இல்லை-வைகோ!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2019-2020-க்கான வரவு செலவுத் திட்டம், புதிய இந்தியாவுக்கான துவக்கம்; நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 இலட்சம் கோடி டாலராக உயரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கான அறிகுறிகள் வரவு செலவுத் திட்டத்தில் காணப்படவில்லை. பொருளாதார ஆய்வு அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி ஐந்து ட்ரில்லியன் டாலர் என்று குறிக்கோள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அந்த இலக்கை அடைய, ஆண்டுக்கு 10 விழுக்காடு வளர்ச்சித் தேவை. தற்போது ஜனவர் - மார்ச் காலாண்டுக் காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 விழுக்காடு மட்டுமே.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூபாய் 3,000 ஓய்வு ஊதியம், வருமான வரி உச்சவரம்பு ரூபாய் ஐந்து இலட்சம் போன்றவை தொடரும் என்பது வரவேற்கத்தக்கது.

இந்தியக் கைவினைக் கலைஞர்களின் படைப்புகளை, உலகச் சந்தையில் விற்க நடவடிக்கை, பனை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரிவிலக்கு, மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு ரூபாய் 1.5 இலட்சம் வரை வரிவிலக்கு மற்றும் ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பு போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, விலைவாசியை அதிகரிக்கும். 0 பட்ஜெட் விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப திட்டங்கள் எதுவும் இல்லை. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% லிருந்து 12.5% அதிகரிப்பதால், தங்கத்தின் விலை கடுமையாக உயரும். சில்லரை வணிகத்தில் அயல்நாடுகளின் நேரடி முதலீட்டை 100% அதிகரித்துவிட்டு, சிறு, குறு வணிகர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டம் எவ்விதத்திலும் பயன் அளிக்காது.

ஊடகம், விமானம், காப்பீட்டுத் துறைகளில் 100% அயல்நாடுகளின் நேரடி முதலீடு என்ற அறிவிப்பும், பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ரூபாய் 1.05 இலட்சம் கோடி நிதி திரட்டப்படும் என்ற திட்டமும், நாட்டின் தற்சார்பை வீழ்த்தி விடும்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லை. நடைமுறையில் இருக்கும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு பிரிவுகளாக மாற்றி முறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பல கோடிக்கணக்கான தொழிலாளர்களின் உரிமைக்கு எதிரானதாகும்.

சமூக நலத்திட்டங்களை தனியார் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்துவதால், அரசின் பங்களிப்பு குறைவதுடன், முற்றாக மத்திய அரசு பொறுப்பில் இருந்து விலகும் நிலை உருவாக்கப்படுகின்றது.

வங்கிகளின் வாராக் கடன் 11 இலட்சம் கோடியை வசூலிக்கத் திட்டங்கள் இல்லை. ஆனால், பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த ரூபாய் 70,000 கோடி முதலீட்டு மூலதனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் பயன் ஏதும் இல்லை.

2030 ஆம் ஆண்டுக்குள் இரயில்வே கட்டுமானத்திற்கு ரூபாய் 50 இலட்சம் கோடி தேவை என்பதால், மக்கள்-தனியார் கூட்டு ஒத்துழைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதையே காரணமாக்கி, இரயில்வே துறையை தனியார்மயமாக்க பா.ஜ.க. அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்த வரவு செலவுத் திட்டம் அதை உறுதி செய்கின்றது.

தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள இரயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாததும், பாதியில் நிற்கும் திட்டங்களைச் செயல்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததும் ஏமாற்றம் அளிக்கின்றது.

காவிரிப் பாசனப் பகுதிகளில் மத்திய அரசு மூர்க்கத்தனமாகச் செயல்படுத்தி வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் கடுமையாக போராடி வருகின்றார்கள். ஆனால், நிதிநிலை அறிக்கையில் இதுபோன்ற எரிவாயுத் திட்டங்கள் மூலம் இந்திய அரசுக்கு வருவாய் திரட்ட முடியும் என்று கூறுவது தமிழ்நாட்டுக்குப் பெரும் கேடு ஆகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 05-07-2019 அன்று தெரிவித்துள்ளார்.

குற்றம்‌ சாட்டுகிறேன் நூல் குறித்து பேசியதால் ஓராண்டு தண்டனை குறித்து வைகோ செய்தியாளர்களிடம் பேட்டி!

அன்று பெரியார் சொன்னதை, இன்று பேரன் வைகோ சொன்னேன்; ஆயுள் தண்டனை என்றாலும் கவலை இல்லை!

சென்னை சிறப்பு நீதிமன்ற வாயிலில்
செய்தியாளர்களிடம் வைகோ

என் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான நாள்.

ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்துப் பேசியதற்காகவும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை தொடர்ந்து ஆதரித்து வருவதற்காகவும், சிறப்பு நீதிமன்றம் எனக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து இருப்பதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றேன்.

இந்திய அரசு ஆயுத உதவியும், பண உதவியும் செய்ததால், உலக நாடுகளிடம் ஆயுதம் வாங்கி, சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது என்பதை, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் நேரடியாகச் சென்று, கோரிக்கை மனு கொடுத்தேன். 17 முறை சந்தித்து இருக்கின்றேன். கடிதங்கள் எழுதி இருக்கின்றேன்.

அந்தக் கடிதங்களைத் தொகுத்து, ‘I Accuse’  என்ற தலைப்பில், இராஜா அண்ணாமலை மன்றத்தில் நூலாக வெளியிட்டோம். அந்த விழாவில் பேசியதற்காக, என் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

ஆமாம்; நான் அப்படித்தான் பேசினேன்; இளைஞர்களைத் திரட்டிக் கொண்டு, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தால் நாதி இல்லை என்று ஆகி விடாது; இளைஞர்கள், இங்கிருந்து ஆயுதம் ஏந்திச் சென்று போராடவும் ஆயத்தமாக இருப்பார்கள்; நான் அதற்குத் தலைமை ஏற்றுச் செல்வேன்;

அன்று அந்த வழக்கை  கூடுதல் அமர்வு நீதிமன்றம் (மூன்றாவது செசன்ஸ் கோர்ட்) விசாரித்தது.

‘நீங்கள் இப்படிப் பேசினீர்களா?’ என்று நீதிபதி கேட்டார்.

‘ஆமாம் பேசினேன். ஈழத்தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என்று பேசினேன். அவர்கள் நாதி அற்றுப் போக மாட்டார்கள்’ என்று சொன்னேன்.
இங்கிருந்து இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு போவேன் என்று சொன்னீர்களா? 
ஆமாம்.
ஆயுதம் ஏந்திச் செல்வோம் என்று பேசினீர்களா?
ஆமாம்.
என்று சொன்னேன்.

அந்த வழக்கில் இருந்து நான் விடுதலை செய்யப்பட்டேன்.

அதன்பிறகு அந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பில், 2009 ஜூலை 15 ஆம் நாள் இராணி சீதை அரங்கில் வெளியிட்டோம்.

அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள் வெளியிட, மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

நான் இராஜா அண்ணாமலை மன்றத்தில் பேசிய அதே விதத்தில்தான் இந்த விழாவிலும்  பேசினேன். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும், நான் பிரதமரிடம் நேரடியாகக் கொடுத்தவை. அதன் தொகுப்புதான், குற்றம் சாட்டுகிறேன் என்ற இந்த நூல். இது எல்லோருக்கும் தெரியும்.  அதற்காக என் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இப்படிப் பேசினீர்களா? என்று நீதிபதி கேட்டார்.

ஆமாம்; நான் பேசினேன். நான் பேசிய எதையும் நான் மறுக்கவில்லை.

இந்திய ஒருமைப்பாடு சிதைந்து விடக் கூடாது; இந்திய இறையாண்மை சிதைந்து விடக் கூடாது; இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பேசினேன். அரசின் போக்கு இப்படியே நீடித்தால்,  ஒருமைப்பாடு நீடிக்காது. இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் பேசினேன்.

ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை, அவர்களுக்காகப் போராடுகின்ற விடுதலைப்புலிகளைப் பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் பேசினேன். விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன் என்று சொன்னேன். அதற்காக, பொடா சட்டத்தின் கீழ், 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியது குற்றமா? என்று கேட்டு, வேலூர் சிறையில் இருந்தவாறே, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தேன்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது மட்டுமே குற்றம் ஆகிவிடாது என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

25 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் எங்கள் கட்சியைப் பாதுகாத்து வருகின்ற, அடுக்கடுக்கான வழக்குகளின் தாக்குதலில் இருந்து தடுத்து எங்களைக் காத்து வருகின்ற எங்கள் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், இந்த வழக்கையும் நடத்தினார்.

இன்றைக்குத் தீர்ப்பு நாள்.

சிறப்பு நீதிபதி அவர்கள், ‘நீங்கள் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கின்றேன். தண்டனை  குறித்து எதுவும் சொல்ல விரும்புகின்றீர்களா? என்று கேட்டார்.

‘தண்டனையை இன்றே அறிவித்து விட்டால் நல்லது’ என்று சொன்னேன்.

ஓராண்டு சிறைத்தண்டனை; 10000 ரூபாய் அபராதம் என்று சொன்னார்.

தீர்ப்பை வாங்கி வாசித்துப் பார்த்தோம். வழக்கறிஞர் நன்மாறன் அவர்களும், வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களும், Accused sought for lienient punishment என்று நீதிபதி எழுதி இருந்தார். அதாவது குறைந்த தண்டனை கொடுக்க வேண்டும என்று குற்றம் சாட்டப்பட்ட வைகோ கேட்டுக்கொண்டதாக எழுதி இருந்தார்.

அதைக் கேட்டு, என் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.

நான் நீதிபதியைப் பார்த்துக் கேட்டேன்.

தண்டனையைக் குறைக்கச் சொல்லி நான் ஒருபோதும் கேட்கவில்லை., அதிகபட்சம் ஆயுள் தண்டனை கொடுங்கள் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், நான் சொல்லாத வார்த்தையை, குறைந்தபட்ச தண்டனை வேண்டும் என்று நான் கேட்காததை, இந்தத் தீர்ப்பில் எழுத வேண்டும் என்றால், நீதிபதியின் உள்ளத்தில் விசம் இருக்கின்றது. unless there is venom in the mind of the judge, such an atrocious sentence would not have been included in the judgment என இரண்டு தடவை சொன்னேன். நீதிபதியின் உள்ளத்தில் நஞ்சும், விஷமும் இல்லாவிட்டால், இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. எவ்வளவு தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்; ஏற்றுக் கொள்கின்றேன்; ஆயுள் தண்டனையா? ஏற்றுக் கொள்கின்றேன்.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்ற எண்ணத்தைத் தொடர்ந்து இளைஞர்களிடம் விதைத்துக் கொண்டு இருப்பதனால், இந்தத் தண்டனை அளிப்பதாகத் தீர்ப்பில் நீதிபதி எழுதி இருக்கின்றார்.

ஆம்; விதைப்பேன்; விதைத்துக் கொண்டே இருப்பேன். பேசுவேன்; ஆயுள் தண்டனை என்றாலும், மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன். நான் தந்தை பெரியார் வழியில் வந்தவன். 1938 ஆம் ஆண்டு, இதே சென்னை நீதிமன்றத்தில், தந்தை பெரியாருக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு முன்பு அவர் நீதிபதியைப் பார்த்து, ‘அதிகபட்ச தண்டனை எதுவோ, அதைக் கொடுங்கள் என்று கேட்டார். தீர்ப்பைக் கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு, மூன்று வருடம், மூன்று வருடம் என்று சத்தம் போட்டுக்கொண்டே சென்றார் என நான் படித்து இருக்கின்றேன்.

நான் அந்த வழியில் வந்தவன். ஆயுள் தண்டனை என்றாலும், மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றேன். 38 இல் தந்தை பெரியார் சொன்னார்; அதைத்தான், பெரியாரின் பேரன் வைகோ இன்றைக்கு நீதிமன்றத்தில் சொல்லி இருக்கின்றேன். நான் பேசியது தேசத்துரோகம் அல்ல; இது தேசத்துரோகம் என்றால், இதை நான் தொடர்ந்து செய்துகொண்டு இருப்பேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது பேட்டியில் 5-7-2019 தெரிவித்தார்.

Monday, July 1, 2019

புதுவை ஆளுநர் கிரண் பேடியை நீக்க வேண்டும் - வைகோ அறிக்கை!

தண்ணீர் பிரச்சினையில் தமிழகம் தவித்துக் கொண்டு இருக்கின்ற நிலையில், தமிழக மக்களைக் இழிவுபடுத்துகின்ற வகையில், புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள் கருத்துத் தெரிவித்து இருப்பது வரம்பு மீறியதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதும் ஆகும். 

தமிழக மக்களைப் பொறுப்பு அற்றவர்களாகச் சித்தரிக்க முனைகின்ற கிரண் பேடியின் ஆணவப் போக்குக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தில்லி மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுத் தோல்வி அடைந்த கிரண் பேடி அவர்கள், புதுவை ஆளுநராகப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், தாமே ஆட்சியாளர் போலச் செயல்பட்டு வருகின்றார். 

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசு நிர்வாகத்தை முடக்கியதுடன்,  முதல்வரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் துச்சமாகக் கருதிச் செயல்பட்டு வருகின்றார். மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட அவருக்கு உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் பதவி விலகி இருக்க வேண்டிய கிரண் பேடி அவர்கள், இன்னமும் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது, அவரது பதவிப்பித்தைக் காட்டுகின்றது. 

கடந்த 3 ஆண்டுகளாக, புதுவை அரசைத் திட்டமிட்டு முடக்கி வருகின்ற, மக்களை மதிக்காத கிரண் பேடி உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அல்லது, அவரைப் பதவியில் இருந்து குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் இன்று 01-07-2019 தெரிவித்துள்ளார்.