Wednesday, July 17, 2019

ரமேஷ் பொக்ரியால், எடப்பாடி பதவி விலக வேண்டும்-வைகோ வலியுறுத்தல்!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“இந்த வழக்கில் என் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று விவரம் வாசிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைப்பதற்குத் திட்டமிட்டதாகவும், எல்.கணேசன், செஞ்சி இராமச்சந்திரன் இரண்டு பேர்தான் அந்த முயற்சியில் சிக்கிக்கொண்டதாகவும், ஆனால் கட்சியை உடைப்பதற்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மூலம் பலரை பொதுக்குழுவுக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்ததாகவும், இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு இருக்கின்றதே? உங்கள் பதில் என்ன? என்று கேட்டார்.
நான் நான் குற்றவாளி அல்ல என்று குற்றச்சாட்டை மறுத்தேன்.
மேலும், இரண்டு செய்திகளை உங்கள் மூலமாக இந்தியா முழுவதும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஒன்று:- அலைபேசிகள் பல குற்றங்களுக்கும், பல கலவரங்களுக்கும், பல பெண்களின் வாழ்வுச் சீரழிவுக்கும் காரணமாகவும் இருந்திருக்கின்றது என்பதால், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் அலைபேசி (மொபைல் போன்) உபயோகிக்கக் கூடாது என்று கல்லூரி முதல்வர்கள் ஆணை பிறப்பித்து இருக்கின்றார்கள்.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission UGC) இந்தியா முழுவதும் ஒரு சுற்று அறிக்கை அனுப்பி வைத்து இருக்கின்றது. நேற்று குரு பூர்ணிமா நாளில், மாணவர்கள், தங்களுடைய பேராசிரியர்களுடன் சேர்ந்து அலைபேசிகளில் செல்~பி படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து பரப்ப வேண்டும் என்றும், இது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் உத்தரவு என்றும் அந்த சுற்று அறிக்கையில் கூறி இருக்கின்றார்கள். அவர் பெயர் ரமேஷ் பொக்ரியாலா அல்லது போக்கிரியாலா? தெரியவில்லை.
சந்திரயானுக்குச் சென்று நிலவின் பரப்பை ஆராய்ச்சி செய்யப் போகின்றோம், 2022 இல் அங்கே மனிதனை இறக்கப் போகிறோம் என்று சொல்கிறீர்கள். ஆனால், சந்திரனைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, புராணங்களில் எழுதிய கதைகளை வைத்துக்கொண்டு, அமாவாசை, பௌர்ணமி என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
மாணவர்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து செல்~பி எடுத்துக்கொள்ள வேண்டுமாம். இதைவிட முட்டாள்தனமான, அயோக்கியத்தனமான யோசனையை யாரும் சொல்ல முடியாது. இந்த சுற்று அறிக்கையை அனுப்பியது பல்கலைக் கழக மானியக் குழுவா? அல்லது Utter Gutter Council - குப்பைத் தொட்டியா?
கல்லூரி முதல்வர்களுக்கு இப்படி சுற்று அறிக்கை அனுப்பி இருப்பதற்கு என்ன காரணம்?
இந்தியைத் திணிப்பது மட்டும் அல்ல, கலாச்சாரத்தையே பாழ்படுத்தி, அறிவியல் சிந்தனைகளையே கூர் மழுங்கச் செய்கின்ற வகையில் இப்படி ஒரு சுற்று அறிக்கை அனுப்பிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது. ராஜினாமா செய்ய வேண்டும்.
இரண்டாவது பிரச்சினை:
நீட் தேர்வு வராது, நாங்கள் தடுத்து வைத்து இருக்கின்றோம், இரண்டு மசோதா நிறைவேற்றி மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி விட்டோம், குடியரசுத் தலைவருக்குச் சென்றுவிட்டது என்றெல்லாம் கூறி மாணவர்களை நம்ப வைத்தார்கள்.
2017 இல் இந்த மசோதாவை அனுப்பி இருக்கின்றார்கள். அப்பொழுதே அவர்கள் நிராகரித்துத் திருப்பி அனுப்பி விட்டார்கள். ஆனால் அதை வெளியில் சொல்லாமல், மசோதாவை நிறுத்தி வைத்து இருக்கின்றார்கள், பரிசீலனையில் இருக்கின்றது என்றெல்லாம் சொல்லி, இரண்டு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள். இதைவிட மோசடி என்ன இருக்க முடியும்? இப்பொழுது உண்மை வெளியே வந்து விட்டது.
நீட் தேர்வு வராது என்று மாணவர்களை நம்பச் செய்து, ஏழரைக் கோடி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி, கடைசியில் நீட் தேர்வு வந்து, மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத ஆறு பேர் தற்கொலை செய்து இறந்து விட்டார்கள்.
இந்த ஆறு பேர் சாவுக்குக் காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்பதால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பதவியில் நீடிக்கத் தகுதி இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 17-07-2019 செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment