Monday, July 1, 2019

புதுவை ஆளுநர் கிரண் பேடியை நீக்க வேண்டும் - வைகோ அறிக்கை!

தண்ணீர் பிரச்சினையில் தமிழகம் தவித்துக் கொண்டு இருக்கின்ற நிலையில், தமிழக மக்களைக் இழிவுபடுத்துகின்ற வகையில், புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள் கருத்துத் தெரிவித்து இருப்பது வரம்பு மீறியதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதும் ஆகும். 

தமிழக மக்களைப் பொறுப்பு அற்றவர்களாகச் சித்தரிக்க முனைகின்ற கிரண் பேடியின் ஆணவப் போக்குக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தில்லி மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுத் தோல்வி அடைந்த கிரண் பேடி அவர்கள், புதுவை ஆளுநராகப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், தாமே ஆட்சியாளர் போலச் செயல்பட்டு வருகின்றார். 

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசு நிர்வாகத்தை முடக்கியதுடன்,  முதல்வரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் துச்சமாகக் கருதிச் செயல்பட்டு வருகின்றார். மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட அவருக்கு உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் பதவி விலகி இருக்க வேண்டிய கிரண் பேடி அவர்கள், இன்னமும் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது, அவரது பதவிப்பித்தைக் காட்டுகின்றது. 

கடந்த 3 ஆண்டுகளாக, புதுவை அரசைத் திட்டமிட்டு முடக்கி வருகின்ற, மக்களை மதிக்காத கிரண் பேடி உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அல்லது, அவரைப் பதவியில் இருந்து குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் இன்று 01-07-2019 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment