Sunday, December 29, 2019

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகக் கோலம் போட்ட பெண்கள் கைது! வைகோ கடும் கண்டனம்!

மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், மேலும் கொண்டுவர இருக்கின்ற தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை எதிர்த்தும் நாடு முழுவதும் தன்னெழுச்சியான பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அரசியல் கட்சி எல்லைகளைத் தாண்டி மோடி அரசின் ஜனநாயக விரோத சட்டங்களை எதிர்த்து வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை சென்னை - பெசன்ட் நகரில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தங்கள் வீட்டு முற்றத்தில் கோலமிட்டு எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்திய ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றார்கள்.
பெசன்ட் நகர் கடற்கரைக்கு எதிரே இருக்கும் பகுதியில், சாஸ்திரி நகர் காவல் நிலையத்திலிருந்து வாகனத்தில் சென்ற காவல்துறையினர் கோலமிட்ட பெண்களை தரக்குறைவாக பேசி மிரட்டியுள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக பொங்கி எழும் கோபாவேச அலைகளை காவல்துறை மூலம் அடக்கு முறையை ஏவி ஒடுக்கிவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுகிறது. ஜனநாயகத்தில் மக்கள் எழுச்சியை ஆட்சியாளர்கள் அவ்வளவு எளிதில் நசுக்கிவிட முடியாது என்பதை வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
தங்கள் வீட்டு வாசலில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துக் கோலமிட்ட பெண்களை எடப்பாடி அரசின் ஏவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது; உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் 29-12-2019 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment