Wednesday, August 5, 2020

கலிங்கப்பட்டி வெங்கட்ராமன் அவர்கள், கொரொனா கோவிட் 19 தொற்றால், ஒமான் புரைமியில் மறைவு! மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இந்திய வெளியுறவு துறைக்கு தகவல் தெரிவித்து, வைகோ அவர்களின் கண்காணிப்பில், வெங்கட்ராமன் அவர்களின் உடல் ஒமான் சோஹாரில் தகனம்!

03-08-2020 திங்கள் கிழமை காலை ஒமான் நேரப்படி 10.15 மணி அளவில் பேராசிரியர் Dr.இளங்குமரன் அவர்கள் எனக்கு முகநூலில் கலிங்கப்பட்டி வெங்கட்ராமன் அவர்கள் கோவிட் 19 பாதிப்பால் மறைந்தார் என்ற செய்தி சொல்லி அர்ஜூன் என்பவர் அலைபேசி எண்ணையும் கொடுத்தார். இறந்த செய்தியை அண்ணன் கலிங்கப்பட்டி ராதாகிருஷ்ணன் அவர்களிடத்தில் உறுதி செய்தேன்.

விபரம் கேட்க, அர்ஜூன் என்பவரிடத்தில் உடனே தொடர்பு கொண்டேன். அர்ஜூன் என்பவர் வெங்கட்ராமன் அவர்கள் இபோது வேலை செய்வதற்கு முன் வேலை செய்த கம்பெனி ஓணர் மகன். அவரிடத்தில் பேசிய போது, அண்ணன் வெங்கட்ராமன் இறந்த செய்தியை தற்போதைய கம்பெனி ஓமானி ஓணர், பழைய ஓணரான அர்ஜூனின் அப்பாவிற்கு பழக்கமானவர் என்பதால் அவரிடத்தில் சொல்லி குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்க சொல்லியிருக்கிறார். பழைய ஒணருக்கு பழக்கமான பேராசிரியர் Dr.இளங்குமரன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ராதாகிருஷ்ணன் பற்றி பழைய ஓணருக்கும் தெரியுமாதலால், அவரது அலைபேசி எண் வாட்சப் குழு மூலம் எடுத்து ராதாகிருஷ்ணனுக்கும் தகவல் சொல்லியிருக்கிறோம் என்றார்.

வெங்கட்ராமன் அவர்கள் 11 நாட்களாக கொரொனா கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார். கடைசி 7 நாட்கள் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெற்றிருக்கிறார் அதில் கடைசி 3 நாட்கள் இரவு நேரத்தில் மூச்சு திணறல் இருந்திருக்கிறது காலையில் சரியாகியிருக்கிறது என்றும், மூச்சு திணறலால் மறைந்திருக்கிறார் என்றும் புதிய ஓணர் சொன்னதாக செய்தியை சொன்னார்.

இந்த செய்தியை அண்ணன் பாலன் அவர்களுக்கு அலைபேசி அழைத்து தகவல் தெரிவித்தேன். அப்போது அந்த தகவல் அன்பு தலைவர் வைகோ அவர்களுக்கு தெரியும், தலைவர் வருந்தியதாக அண்ணன் பாலன் சொன்னார். அண்ணன் அருணகிருக்கும் தகவல் சொல்லியிருந்தேன். அவருக்கும் தகவல் தெரிந்திருந்தது.

அவசர அவசரமாக இறந்த தகவல் சேகரித்து, தலைவருக்கு தகவல் சொல்லி முடிக்கவும், மதிமுக வளைகுடா அமைப்பாளர் அண்ணன் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் எனக்கு அழைத்தார். அண்ணனுக்கு முழு விபரம் கொடுத்தேன். பின்னர் சிறுது நேரம் கழித்து மீண்டும் அழைத்து உடல் கொண்டு வர சாத்திய கூறுகளை தேட சொன்னார். அர்ஜூன் அவர்களிடத்தில் பேச இயலுமா என்று கேட்டு, நான் அர்ஜூன் அலைபேசி எண் கொடுத்ததும், ஒமானிலிருக்கும் அர்ஜூனிடத்திலும் நேரடியாக பேசி விளக்கம் பெற்றார்.

அடுத்த வேலையாக அவர் மறைந்த பிறகு இறப்பு சான்றிதழ் விண்ணப்பித்து, இறப்பு சான்றிதழில் கொரொனோ கோவிட் 19 தொற்று இருந்ததால் மரணம் என்று சான்றிதழ் கிடைக்கப்பெற்றோம். உடனே அண்ணனுக்கு அனுப்பினோம். மருத்துவமனையினர், கொரொனா பாதித்த இறந்த உடலை இங்கு அடக்கம் செய்ய முனிசிபாலிட்டியிடம் ஒப்படைப்போம் என்றார்கள். உடலை ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறோம் என்று பேசியிருந்தோம்.

அவரது உடலை தாயகம் கலிங்கப்பட்டி அனுப்பி வைத்துவிட வேண்டுமென்று, நாள் முழுதும் முயன்றோம். ஒமானில் இருக்கிற பெரிய ட்ராவல்ஸ் முதல் சிறிய ட்ராவல்ஸ் வரையிலும், மற்றும் நேரடியாக ஏர்லைன்ஸிடமும் முயற்சி செய்தும் கொரொனா கோவிட் 19 தொற்று பாதித்த இறந்த உடல் அனுப்புவதில்லை என்ற பதிலே அனைத்து ட்ராவல்ஸ் மற்றும் ஏர்லைன்ஸிடமிருந்து கிடைத்தது. உடனே அந்த தகவல்களை அண்ணன் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டேயிருந்தேன்.

முனிசிபாலிட்டியும் இங்கு இறுதி சடங்கு செய்யுங்கள், இந்தியா கொண்டு செல்ல இயலாது என்றிருக்கும் வேளையில், உடல் ஊருக்கு கொண்டு வர இயலவில்லையென்றால், அங்கு தகனம் செய்ய குடும்பத்தாரிடம் பேசுகிறேன் என்றார்.

அண்ணன் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் காலையில் 2 மணி நேரம் தொடர்ச்சியாக குடும்பத்தாரிடம் பேசியும், குடும்பத்தார், பாடியை நாங்கள் பார்த்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தாலும், ஒமான் அரசு அனுமதி கிடைக்காது என்று அதிகம் எடுத்துக்கூறியும், ஒமானில் வெங்கட்ராமன் அவர்கள் உடலை தகனம் செய்ய, குடும்பத்தார் சம்மதிக்காததாலும், அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, தனி விமானம் ஏற்பாடு செய்தாவது இறந்த உடலை கலிங்கப்பட்டி கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய ஆயத்தமானோம்.

கொரொனா காலத்தில் சாட்டர் விமான ஏற்பாடு செய்து இந்தியர்களை அனுப்பிக்கொண்டிருக்கிற கிம்ஜி ட்ராவல்ஸ் நிர்வாகிகளிடம் பேசியபோது மொத்த தொகை இந்திய ரூபாய் 3600000-4000000 ஆகும், இந்தியாவிலும் அனுமதி கிடைக்காது என்றார்கள். இந்தியாவில் தலைவர் வைகோ அவர்கள் மூலம் அனுமதி வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில், ஒமான அரசு அனுமதி பெறுங்கள், இந்தியாவில் அனுமதி சிக்கல் ஏற்ப்பட்டால் நாங்கள் வைகோ எம்பி அவர்கள் மூலம் அனுமதி கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்றோம். அவர்கள் அவ்வளவு முக்கியமான ஆளா என்று வியந்தார்கள். ஆம் அவர் வைகோ எம்பி அவர்களுக்கு மிக நெருக்கமானவர் என்று சொன்னதுமே நான் அன்பு தலைவர் வைகோ அவர்களுக்கு தெரிந்த நபர் என்று புரிந்துகொண்டார்கள், அச்சமயம் என்னுடைய மதிப்பே வேறு லெவலில் இருந்ததை அவர்களது பேச்சிலே உணர்ந்தேன். தலைவர் விசாரித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்துகொண்ட கிம்ஜி ட்ராவல்ஸ் நிர்வாகம் (இந்தியர்கள்) எவ்வளவோ முயன்றும், கிம்ஜி ட்ராவல்ஸ் க்கும் ஒமான் அரசே அனுமதி வழங்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

ஒவ்வொரு ட்ராவல்ஸ் தரும் பதிலையும், பதில் தராவிட்டால் அவ்வப்போது ட்ராவல்ஸ்க்கு அழைத்து, தகவல்களை அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கும் சொல்லிக்கொண்டே இருந்தோம்.

அண்ணன் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் பல முறை அண்ணன் வெங்கட்ராமன அவர்கள் குடும்பத்தாரிடம் ஒமானில் இறுதி சடங்கு செய்வோம் என்று பேசியும் சம்மதிக்காத நிலையில், வெங்கட்ராமன் அவர்கள் மகனிடமும் விளக்கமாக பேசி, உடலை இங்கு கொண்டு வர லட்சங்கள் செலவு செய்தும், தாயகம் கொண்டு வந்தாலும், தமிழக அரசு கொரொனா பிரச்சினையால், அவரது முகம் திறக்க அனுமதிக்காது, உடல் பக்கத்தில் கூட செல்ல முடியாமலும் போய்விடும், தாயகம் கொண்டு வர அனுமதியும் கிடைக்கவில்லை என்ற ஒமான் அரசின் அனுமதி கிடைக்காததை எடுத்து கூறிய பின் சம்மதம் தெரிவித்தனர். அன்பு தலைவர் வைகோ அவர்களும், ரவி அண்ணாச்சி அவர்களும் குடும்ப உறுப்பினர்களிடம் பேசியிருந்ததால் சம்மதம் தெரிவித்தார்கள் அன்று சாயங்காலம்.

அந்த தகவலை அர்ஜூன் அவர்களுக்கு தெரிவித்து, ஒமானில் இறுதி சடங்கு செய்ய ஒப்புதல் கடிதத்திற்கான பார்மேட் பெற்றோம். இந்து மஹாஜன சபாவிற்கும் இறந்த ஆவணங்களை அனுப்பி, அன்று சாயங்காலமே ஸ்டாலின் அண்ணனுக்கு பார்மேட் அனுப்பி, இறந்த உடலை, சோஹார் இந்து மஹாஜன சபா மூலம் தகனம் செய்யவேண்டும் என்ற வாக்கியம் இணைத்து இந்திய ரூ 100 பத்திரத்தில் கடிதம் தயாரித்து இரண்டாம் நாள் காலையில் ஸ்டாலின் அண்ணன் ஒமானில் தகனம் செய்ய குடும்பத்தார் எழுதிய ஒப்புதல் கடிதத்தை அர்ஜூன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அந்த கடிதம் இந்து மகாஜன சபை மூலம் இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்டு ஒமான் விதிமுறைகளுக்குட்பட்டு மத நெறிமுறைகளின் படி தகனம் செய்வதற்கான தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டது. மேலும் அன்றைய தினம் முடிவதற்குள் ஒமானில் அடக்கம் செய்ய ராயல் ஒமான் போலீஸ் (ROP) அனுமதியும் பெறப்பட்டது.

இன்று 05-08-2020 காலை உடல் வைக்கப்பட்டிருந்த புரைமி மருத்துவமனையிலிருந்து அனுமதி பெற்று, லோக்கல் முனிசிபாலிட்டி மூலம் இந்து மஹாஜன சபா மூலம் தகனம் செய்ய அனுமதியும் பெறப்பட்டது.

இறந்த வெங்கட்ராமன் அவர்கள் உடல், ஆம்புலன்ஸ் மூலமாக ஒமான் புரைமையிலிருந்து 120 கிமீ தொலைவிலுள்ள சோஹார் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்து மஹாஜன சபா தகனம் செய்யும் இடத்தில் இந்து முறைபடி மலர் வளையம், புது வேட்டை, சட்டை, சந்தண கட்டை, தங்க காசு மற்றும் சில பொருட்கள் வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இறந்த வெங்கட்ராமன் அவர்களை கடைசி நேரத்தில் காண முடியாத சோகத்தில் இருந்த குடும்பத்தாருக்கு, எப்போதுமே செல்பி எடுக்கும் பழக்கமுள்ள வெங்கட்ராமன் அவர்கள் முகப்படம் எடுத்து வைத்திருப்பார் என்ற நம்பிக்கையில் மருத்துவமனையிலிருந்து அவரது அலைபேசி கிடைக்கப்பெற்றால் அவரது முகப்படத்தை குடும்பத்தாருக்கு அனுப்பி அவகளை ஆறுதல் அடைய செய்யலாம் என்று அர்ஜூன் அவர்கள் மூலம் எவ்வளவோ முயன்றும் மருத்துவமனை நிர்வாகம் அவரது பொருட்களை தர இயலாத சூழல் ஏற்பட்டது.

ஆகவே அவரின் இறுதி நிகழ்வான தகனம் செய்யும் நிகழ்வையாவது அவரது குடும்பத்தாருக்கு காண்பித்துவிட வேண்டுமென்று, வளைகுடா அமைப்பாளர் அண்ணன் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் ஏற்படுத்தி கொடுத்த zoom இணைய செயலி மூலம் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு குடும்பத்தார், உறவினர்கள் அனைவருக்கும் லிங் பகிரப்பட்டது. தகனம் செய்த நிகழ்ச்சியை நேரலையில் குடும்பத்தார், உறவினர்கள் உட்பட ஏராளமானோர் பார்த்து அழுத காட்சி கண்கலங்க வைத்தது.

அந்த இறுதி நிகழ்வின் முடிவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கழக துணை நிலை அமைப்பான, ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்ய உதவியாயிருந்த இந்து மகாஜன சபா நிர்வாகிகள், நண்பர்கள், ஒமான் அரசு நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மறைந்த வெங்கட்ராமன் அவர்களது உடைமைகள் புரைமி மருத்துவமனையிலே இருக்கிறது. அதை பெற்றுக்கொள்ள ஒப்புதல் கடிதம் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் பெறப்பட்டுள்ளது. கலிங்கப்பட்டி ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது முழு அடைப்பு ஒமானில் நிலவுவதால், வருகிற ஞாயிறு முதல் சகஜ நிலைக்கு வரும்போது மஸ்கட்டிலிருந்து புரைமி சென்று உடமைகளை பெற்றுக்கொள்வார்.

இறுதி சடங்கு முடிந்ததும், குவைத்திலிருந்து பாஸ்கரன் (வெங்கட்ராமன் அவர்களின் மனைவியின் சகோதரர்) என்பவர் வாட்சப் வீடியோ காலில் அழைத்து zoom meeting மற்றும் ஏனைய ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்தார். அன்பு தலைவர் வைகோ அவர்கள்தான், வெங்கட்ராமன் அவர்கள் இறந்த நாள் முதல் சற்று முன் வரை தகுந்த நடவடிக்கை மேற்க்கொள்ளுங்கள் என்று சொல்லி ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் மூலம் கேட்டுக்கொண்டேயிருந்தார் என்ற தகவலையும் சொன்னேன். நன்றி தெரிவித்தார்.

நமது கழகத்தின் இதய துடிப்பு, கழகத்தின் கண்மனிகளுக்கு துயரம் என்றால் ஓடோடி வந்து தோள் கொடுக்கும், மனிதாபிமானத்தின் மணி மகுடம் குரலற்றவர்களுக்கான குரல் மதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ MP அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
05-08-2020

No comments:

Post a Comment