Tuesday, March 22, 2022

தமிழக மின்வாரியத்தில் விடுபட்ட 5493 கேங்மேன் பணியாளர்களை பணிநியமனம் செய்திட ஆய்வுக்குழு அமைத்துள்ள தமிழக அரசுக்கு துரை வைகோ நன்றி!

தமிழக மின்வாரியத்தில் கடந்த 2019ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கேங்மேன் என்ற பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடல்தகுதித் தேர்வில் 90000 பேர் கலந்துகொண்டதில் 14956 பேர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. பல வழக்குகளைக் கடந்து நமது தொழிற்சங்கம் எடுத்த முயற்சி, பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் அரசுக்கு வைத்த வேண்டுகோள் அடிப்படையில் கடந்த 22.02.2021 அன்று 9613 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

அதில் பணிநியமனம் செய்யப்படாமல் விடுபட்ட 5493 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என நமது தொழிற்சங்கம் தொடர்ச்சியாக முயற்சி எடுத்து, மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்களை பலமுறை சந்தித்து முறையிட்டது. பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களும் மின்துறை அமைச்சருக்கு கோரிக்கையை பரிசீலிக்கும்படி கடிதம் அனுப்பினார்கள். சட்டமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், நமது சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து பேசினார்கள். மின்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள். அதன் பயனாக கடந்த 07.09.2021 அன்று மின்துறை மானியக்கோரிக்கைக்கு பதிலுரை வழங்கிய மின்துறை அமைச்சர் அவர்கள், விடுபட்ட கேங்மேன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என்ற மகத்தான அறிவிப்பை வெளியிட்டார்கள். நமது தொழிற்சங்கம் இதற்காக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 10.19.2021 அன்று நன்றி அறிவிப்புக்கூட்டத்தை நடத்தியது.
தொடர்ந்து காலதாமதமாகி வந்த நிலையில். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் கடந்த 07.01.2022 அன்று சென்னை வாரிய தலைமையகம் முன்பு மாபெரும் கவனஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் நமது சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் கடந்த 19.03.22 அன்று மாநில நிர்வாகிகள் மற்றும், விடுபட்ட கேங்மேன் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள
மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சங்க தலைவர் ஆவடி அந்திரிதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு தொழிலாளர்களது உணர்வுகளை புரிந்துகொண்டு, நானும் அவர்களுக்கு நமது தொழிற்சங்கமும் கட்சியும் துணைநிற்கும் என்று உறுதி அளித்த நிலையில், விடுபட்ட கேங்மேன் குறித்து ஆய்வு செய்து ஒருமாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க. தமிழக மின்வாரியம். அதன் செயலாளர் தலைமையில், மேலும் மூன்று தலைமைபொறியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை வாரிய ஆணை எண்: 56 நாள் 19.03.2022 அன்று அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நமது தொழிற்சங்கம் எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இதற்கான உத்தரவை பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த வாரியத் தலைவர் மற்றும் இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றிகளைதத் தெரிவித்துக்கொள்கிறேன். விடுபட்ட கேங்மேன் தொழிலாளர்கள் அனைவரும் தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற் சங்கத்தின் பின்னால் ஓரணியில் திரண்டு வெற்றிபெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதோடு. இந்தப்பணிகளை ஒருங்கிணைத்த நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
துரை வைகோ
தலைமை கழக செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
"தாயகம்"
சென்னை
21.03.2022

No comments:

Post a Comment