Sunday, March 12, 2023

மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் டி.ஹரி மறைவுக்கு நேரில் அஞ்சலி..!

வடசென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த D.கௌரி சங்கர் என்ற D.ஹரி அவர்கள், நமது இயக்கம் தொடங்கிய காலம் முதல் அந்த பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வந்தவர்.

சென்னை மண்டல தளபதிகளில் முதன்மையானவராக இருந்து மறைந்த, ஏழுமலை நாயக்கர் கழகம் வளர்த்த பகுதியான ராயபுரம் பகுதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து பின்னர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், பகுதி கழகச் செயலாளர், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர்.
நேற்று (11.03.2023) மாலை அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தியை மாவட்ட செயலாளர் அண்ணன் சு.ஜீவன் அவர்களின் மூலம் அறிந்து வருத்தமுற்றேன்.
ஓராண்டுக்கு முன்னர் தலைமை கழகம் தாயகத்தில் ஹரி அவர்களை சந்தித்தபோது தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவரிடம் தகுந்த ஆலோசனைகளை வழங்கினேன்.
இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அவர் என்னை சந்தித்தபோது, புற்றுநோய்க்கு இயற்கை வழி மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தார். அதைக் கேட்டவுடன் அவரை கடிந்து கொண்டேன். நான் உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதி வாங்கித் தருகிறேன். அங்கிருந்து சிகிச்சையினை தொடருங்கள் என்று அப்போது அறிவுறுத்தினேன்.
அடுத்தமுறை சந்திக்கும் போது உடல் இளைத்து காணப்பட்ட ஹரி அவர்களிடம் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது குறித்து கண்டித்ததுடன், மாவட்டச் செயலாளர் அண்ணன் சு.ஜீவன் அவர்களிடமும் உங்களைப் போன்றவர்கள் கூட அவருக்கு அறிவுறுத்தாமல் இருக்கிறீர்களே என வருத்தப்பட்டேன். அப்போது அண்ணன் ஜீவன் அவர்கள், இயற்கை வழி மருத்துவம் நன்றாக இருப்பதாக ஹரி சொல்கிறார் என்றார். அதற்கு வாய்ப்பே இல்லை. இப்படியே விட்டுவிட்டால் விபரீத விளைவுகள் தான் எற்படும் என எச்சரித்தேன்.
ஒரு மாதத்திற்கு முன்பு ஹரியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவரது உடல் நலம் பற்றி அவரது தாயார், மனைவி மற்றும் குடும்பத்தினரிடமும் கேட்டறிந்தேன்.
அப்போது, மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
உரிய நேரத்தில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதி பெற்று மருத்துவ சிகிச்சை எடுக்காமல் இவ்வாறு காலம் தாழ்த்தி தற்போது சிகிச்சை எடுத்து வருகிறீர்களே என்று ஹரியிடம் வருத்தப்பட்டு கொண்டேன். சில மருத்துவ ஆலோசனைகளைக் கூறி தைரியமாக இருக்க சொல்லிவிட்டு சிறிய பொருளாதார உதவியையும் செய்துவிட்டு வந்தேன்.
அதன்பிறகு, மாவட்டச் செயலாளர் அண்ணன் சு.ஜீவன் அவர்களிடம், ஹரியின் உடல்நலம் குறித்து அவ்வப்போது கேட்டறிந்தேன்.
ஆனால் சிகிச்சை பலனின்றி தம்பி ஹரி அவர்கள் நம்மை விட்டு நேற்று மறைந்தார். இன்று முற்பகல் 11 மணி அளவில் அவரது இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினரிடம் எனது இரங்கலை தெரிவித்துக் கொண்டேன்.
கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து துடிப்புடன் செயல்பட்டு வந்தவர் தம்பி ஹரி அவர்கள். எப்போதும் புன்னகை மாறாத முகத்துடன் இருப்பார். அவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் இருக்கிறார். ஹரியின் உடன்பிறந்த சகோதரியின் கணவர் அவர்களிடம் உரையாடிக்கொண்டு இருக்கும் போது, குறைந்தபட்சம் அந்த பையனின் கல்விக்கு உறுதுணையாக இருங்கள் என கேட்டுக் கொண்டேன். அவரும் அந்த குடும்பத்திற்கு பல்வேறு சூழல்களில் உதவியாக இருந்து வருபவர். நல்ல மனிதர். நாங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும். பார்த்துக் கொள்கிறேன் என்றார். அண்ணன் சு.ஜீவன் அவர்களிடம் மாவட்டக் கழகத்தின் சார்பில் தோழர்களிடம் நிதி திரட்டி நம்மால் முடிந்த உதவியை ஹரியின் குடும்பத்திற்கு செய்ய வேண்டும் என தெரிவித்து விட்டு அங்கிருந்து விடைபெற்றேன்.
தம்பி ஹரியின் மரணம் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல வடசென்னை கிழக்கு மாவட்டக் கழகத்திற்கும் பெரிய இழப்பாகும்.
தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ப.சுப்பிரமணி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் மா. வை.மகேந்திரன், மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சிக்கந்தர், வடசென்னை கிழக்கு மாவட்ட அவை தலைவர் பூங்கா ராமதாஸ், பகுதி செயலாளர்கள் தென்றல் நிசார், ஜி.ஆர்.பி.ஞானம், பெரம்பூர் பாஸ்கர், கிரி, பாபா ஜெகன், இராம அழகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் துரை மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் தியாகராஜன்,லட்சுமி ஜீவா, சுரேஷ் அப்பன் துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் கோவில்பட்டி ராமச்சந்திரன், அஜ்மல், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரிலுவான் கான், கோபிநாத், இணையதள பொறுப்பாளர் ஆர்.வி. சதீஷ், வழக்கறிஞர் குமார், மாநில ஆபத்து உதவிகள் அணி துணை செயலாளர் ஜானகி ராமன், மாநில வெளியீட்டு அணி துணை செயலாளர் விக்டர், வினோத் குமார், வைகோ யுவராஜ், சாகுல் ஹமீதுமற்றும் வட்ட கழக செயலாளர்கள் அக்கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வருத்தமுடன்..
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.03.2023.

No comments:

Post a Comment