Thursday, September 6, 2018

குட்கா லஞ்ச ஊழலில் சந்தேக நிழல் படிந்துள்ள சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யாதது ஏன்? வைகோ அறிக்கை!

தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.இராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் றஆகியோரின் இல்லங்களில் மத்திய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

சென்னையில் உள்ள காவல்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கின்றனர்.

தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குட்கா நிறுவனம் ஒன்றில் சென்னையில் கடந்த 2016 ஜூலை 8 ஆம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பின்னர் வருமான வரித்துறை சார்பில் 2016 ஆகஸ்டு 11 இல் தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கும், காவல்துறை தலைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் குட்கா நிறுவனத்தில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன. குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவ், வருமான வரித்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு கையூட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததை வருமான வரித்துறை சுட்டிக்காட்டியது.

வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சென்னை காவல் ஆணையர் டி.கே.இராஜேந்திரன் காவல்துறை தலைவராகவும், பதவி உயர்வு பெற்ற அவலம் நடந்தது. ஊழல் கறைபடிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதன் பின்னர் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களும் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்ததும், வருமான வரித்துறை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்லில் அப்போது அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளருக்கு ரூ. 89 கோடி தொகை செலவு செய்யப்பட்டு, இருந்ததாகவும், அது எந்தெந்த வகையில் யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. இதிலும் முதன்மையான குற்றச்சாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுதான் எழுந்தது என்பதை மறுக்க முடியாது.

இதன் பின்னர்தான் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னணியில்தான் சிபிஐ தற்போது சோதனை நடத்தி இருக்கிறது.

குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றி தமிழக முதல்வர் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சந்தேகத்தின் நிழல் படிந்த ஒருவரை அமைச்சர் பொறுப்பில் நீடிக்க விட்டது ஏன் என்பதற்கு முதல்வர் பதில்கூற கடமைப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் சிபிஐ சோதனையில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட முதல்வர் எடப்பாடிபழனிசாமி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக காவல்துறைக்கு தீராத களங்கம் ஏற்படுத்தும் வகையில் லஞ்ச ஊழல் புகாருக்கு உள்ளான காவல்துறை தலைவர் டி.கே.இராஜேந்திரன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். குட்கா ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 06-09-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஏழுபேர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உன்னதமானது - வைகோ அறிக்கை!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் எள் அளவும் தொடர்பு அற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும், 27 ஆண்டுகளாக கொடிய நரக வேதனையை, தாங்க முடியாத மன சித்ரவதைகளை அனுபவித்தனர். அவர்கள் இளமை வாழ்வே இருண்டு சூன்யமானது.

2014 பிப்ரவரி 18 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம் அவர்கள் அமர்வு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பு அளித்தது. மறுநாள் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சிறையில் இருந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு அமைச்சரவையைக் கூட்டி முடிவு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மத்திய அரசு, ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று, நான்கு ஆண்டுகளாக உச்சநீதி மன்றத்தில் முட்டுக்கட்டை போட்டு வந்தது.

இந்தப் பின்னணியில், தங்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு விண்ணப்பம் கொடுத்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனுவைத் தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அமர்வு ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்று அறிவித்து விட்டது.

ஏழு பேரும் துன்ப இருட்சிறையில் இருந்து வெளி உலகத்துக்கு வரப்போகின்றார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, தலைவணங்கி, வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறேன். ஏனெனில் இதுமாதிரியான வழக்குகளில், இந்திய அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவு மாநிலங்களுக்கு வழங்கும் அதிகாரத்தை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திவிட்டது. இனிமேல் மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தில் இத்தகைய பிரச்சினைகளில் குறுக்கிட முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 06-09-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, September 5, 2018

30 லட்சம் மதிப்பீடு நிவாரணம் வழங்கிய வைகோ!

கேரள மாநில வெள்ள நிவாரணமாக 10 இலட்சம் ரூபாய் காசோலை - 20 இலட்சம் மதிப்பிலான பொருட்களை முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பு தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் வைகோ வழங்கினார்

கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ்சென்னிதலா உடன் இருந்தார்.


கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தற்போது முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார்.

20 இலட்சம் மதிப்புள்ள 15 டன் அரிசி, வேட்டிகள், துணிகள், மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்களை ஐந்து லாரிகள், இரண்டு டிரக்குளில் கொண்டுசென்று திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதலா அவர்கள் உடன் இருந்தார்.

வைகோ அவர்களுடன் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் தி.மு.இராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் புதுக்கோட்டை செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு அமல்ராஜ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விநாயகா ரமேஷ், ஆபத்து உதவிகள் அணி இணைச் செயலாளர் கோ.கலையரசன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ராபின்சன் ஜேக்கப், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, நாகர்கோவில் நகரச் செயலாளர் ஜெரோம் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

என்ற செய்தியை மதிமுக தலைமை கழகம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 05-09-2018 தெரிவித்துள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மாணவி சோபியா மீது வழக்குத் தொடுத்த தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்!

இந்திய நாடெங்கும் மதவெறிப் போக்குடன் மனித உரிமைகளை நசுக்கி, சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை படுகொலை செய்யும் இந்துத்துவ சக்திகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து, மதச்சார்பின்மையை வலியுறுத்தும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் மீது பொய் வழக்குப் போடும் போக்கு நீடிக்கின்றது.

இந்திய ஜனநாயகத்துக்கே உலை வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளால், கோடிக்கணக்கான மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தி, மாணவி சோபியா கருத்துத் தெரிவித்தது அவரது ஜனநாயக உரிமை ஆகும். அதற்காக அவர் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது கண்டனத்துக்கு உரியதாகும்.

இந்திய அரசின் மதவெறிப் போக்குக்குத் தமிழக அரசும் உடந்தையாகச் செயல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிக்றது. இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தமிழகத்தில் கல்வி கற்று முன்னேறிய மாணவி சோபியா டெல்லியில் இளநிலை பட்டம் பெற்று, பின்னர் ஜெர்மனியில் எம்.எஸ்.சி., இயற்பியல் பட்டம் பெற்று, கனடாவில் எம்.எஸ்.சி., கணிதம் படித்து முடித்து தற்போது கனடா மாண்ட்டிரியல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகின்றார். அவரை தமிழக அரசின் காவல்துறை கைது செய்ததும், கீழமை நீதிமன்றம் ரிமாண்ட் செய்ததும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது நீதிமன்றம் அவரை பினையில் விடுதலை செய்துள்ளது. ஆனால் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டைக் கைப்பற்றி, முடக்க முயல்வதும், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதும், அவர் கனடாவில் கல்வியைத் தொடரத் தடையாக அமையும்; பெரும் அநீதிக்கு வழிவகுக்கும் என்பதால், தமிழக அரசு உடனடியாக மாணவி சோபியா மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் நான் வழக்கைத் திரும்பப் பெறமாட்டேன் என்று கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மிகுந்த அக்கறையோடு படித்து, மேல் நாட்டில் ஆராய்ச்சிக் கல்வி பயில்கிற ஒரு மாணவியின் எதிர்காலம் பாழாகிவிடும் என்பதை மனிதாபிமானத்தோடு எண்ணிப் பார்த்து, தானாகவே முன்வந்து புகாரைத் திரும்பப் பெறுகிறேன். அரசு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அறிவிப்பதுதான் பெருந்தன்மையும், மனிதநேயமும் கொண்ட அணுகுமுறையாக அமையும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் என 05-09-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, September 4, 2018

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; மத்திய, மாநில அரசுகளின் பகல் கொள்ளை-வைகோ கண்டனம்!

மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசு, தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ 82.41 கhசுகள் டீசல் விலை லிட்டர் ரூ 75.39 கhசுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த 12 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.72 கhசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.31 கhசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று மத்திய அரசு வழக்கமான பல்லவி பாடுகிறது.

பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ 71 ஆக வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. நடப்பு 2018 இல் மட்டும் ரூபாய் மதிப்பு 10 விழுக்கhடு சரிந்துவிட்டது.

உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளைத் தாறுமாறாக உயர்த்தி வரும் மத்திய அரசு, வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 34க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ 37க்கும் ஏற்றுமதி செய்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 கhசும், டீசல் மீது ரூ.15.33 கhசும் உற்பத்தி வரி விதிக்கின்றது. இதனுடன் தமிழக அரசு மதிப்புக் கூட்டு வரியாக பெட்ரோலுக்கு 34 விழுக்கhடு என்றும், டீசலுக்கு 25 விழுக்கhடு என்றும் வரி விதிக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் உற்பத்தி வரி மற்றும் வாட் வரி கhரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் உச்சத்துக்கு போய்க்கொண்டு இருக்கின்றன.

இதன் சங்கிலித் தொடர் விளைவாக விலைவாசி அதிகரித்து வருகிறது. மக்களின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய, மாநில அரசுகள் ‘பகல் கொள்ளை’ போல பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சுரண்டலில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி, வாட் வரி விதிப்புகளை உடனடியாகக் குறைப்பதுடன், ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்து விலை உயர்வையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தனது இன்றைய 04-09-2018 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, September 3, 2018

பேரூர் சாந்தலிங்க அடிகளாருக்கு புகழ் அஞ்சலி-வைகோ அறிக்கை!

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி பேரூர் ஆதீன குருமகா சன்னிதானங்கள் கயிலைக் குருமணி முதுமுனைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் இயற்கை எய்தியது தமிழ்கூறு நல்லுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் நொய்யலாற்றங்கரையில் அமைந்துள்ள பேரூரில் ஆதீனத்தில் குருமுதல்வராக இருந்தவர். தன்னுடைய 15 ஆவது வயதில் சிரவை ஆதினத்தில் தங்கி சைவ சமய இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். 1947 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டம் மயிலம் சிவஞான பாலைய அடிகளார் தமிழ்க் கல்லூரியில் தனித்தமிழ் பயின்று, 1952 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். 1967 ஆம் ஆண்டு பேரூர் ஆதினத்தின் குரு முதல்வராக பட்டமேற்றுக் கொண்டார். மக்களின் வறுமைக்கும் அறியாமைக்கும் காரணம் கல்வி இன்மை என்பதை உணர்ந்து தமிழ்க் கல்லூரியை மிகச் சிறப்பாக செயல்படுத்தினார்.

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம், உலக சைவப் பேரவை, தமிழக துறவியர் பேரவை, சத்வித்ய சன்மார்க்க சங்கம், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் நினைவு அறக்கட்டளை, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்விக்குழு, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்விக்கழகம், ஞானாம்பிகை நுழைவுரிமைப்பள்ளி போன்ற பணிகளில் தலைவராகவும், லண்டன் திருக்கோயில் திருப்பணிக்கு குறள் நெறி பரப்பும் குழு, சேக்கிழார் ஆய்வு மையம், மலேசியா அருள்நெறித் திருக்கூட்டம், மொரீசியஸ் சாந்தலிங்கர் திருத்தொண்டர் கூட்டம், தென்னாப்பிரிக்கா சிவமன்றம் போன்றவற்றில் புரவலராக இருந்து பணியாற்றினார்.

சென்னை, மதுரை, கோவை பல்கலைக்கழகங்களில் கல்விப்பணியில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி முதுமுனைவர் (னு.டுவை)., பட்டம் வழங்கி சிறப்பித்தது.

உலக அளவில் தமிழ்மொழிக்காக நடைபெற்ற பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அடிகளாரின் பெருமுயற்சியால் 5000க்கும் மேற்பட்ட கோவில்களில் தமிழ்வழியில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றுள்ளது. 4000க்கும் மேற்பட்ட புலவர்களை தமிழ்கூறு நல்லுலகிற்கு தந்துள்ளார். இவர் ஆற்றிய சமூக சேவை தமிழ்கூறு நல்லுலகம் உள்ளவரை போற்றப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் 03-09-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, September 2, 2018

மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பெரியார்-அண்ணா பேச்சுப் போட்டி மாணவி அட்சயா ரூபாய் ஒரு இலட்சமும் - தங்கப் பதக்கமும் பெற்றார்!

மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி சார்பில், பெரியார் - அண்ணா என்ற தலைப்பில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

முதல் கட்டமாக மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஜூலை 22 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பெற்றது. இதில் 1500 கல்லூரிகளைச் சேர்ந்த 2200 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

இதில் முறையே மூன்று மாணவ - மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக 6 ஆயிரம், இரண்டாம் பரிசு 4 ஆயிரம், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் வழங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக மண்டல அளவிலான பேச்சுப் போட்டிகள் சென்னை, கடலூர், சேலம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய ஏழு மண்டலங்களில் நடைபெற்றது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூன்று பேர் தேர்வுசெய்யப்பட்டு முறையே 10ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

மண்டல அளவிலான போட்டிகளில் 120 மாணவ - மாணவிகள் பங்கேற்று, மாநிலப் போட்டிக்கு 21 பேர் தகுதி பெற்றனர்.

இன்று (02.09.2018) மாநில அளவிலான பேச்சுப் போட்டி சென்னை - புரசைவாக்கத்தில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் தஞ்சை மாவட்டம் திருவையாறு பான்செக்கர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தி.அட்சயா முதல் பரிசு ஒரு இலட்சமும், 30 ஆயிரம் மதிப்பிலான பெரியார்-அண்ணா முகம் பதித்த தங்கப் பதக்கமும் பெற்றார்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஆ.நாகமுத்துப்பாண்டியன் இரண்டாம் இடம் பிடித்து ரூபாய் 50 ஆயிரமும், பெரியார்-அண்ணா முகம் பதித்த வெள்ளிப்பதக்கமும் பெற்றார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் இ.பிரதீப் மூன்றாம் இடம் பிடித்து ரூபாய் 25 ஆயிரமும், பெரியார் - அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கி, பதக்கம் அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்து, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார்.

பேச்சுப் போட்டி நடத்துவதன் நோக்கங்கள் குறித்து நெல்லை மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் உரையாற்றினார்.

இப்போட்டிக்கு மாணவர் அணி மாநிலச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாநிலத் துணைச் செயலாளர் வி.சேஷன் வரவேற்றார்.

நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் புலவர் செ.செவந்தியப்பன், உயர்நிலைக்குழு உறுப்பினரும், சட்டத்துறைச் செயலாளருமான வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், மாவட்டக் கழகச் செயலாளர்கள் டி.சி.இராஜேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, ஊனை ஆர்.இ.பார்த்திபன், மா.வை.மகேந்திரன், வேலூர் வ.கண்ணதாசன், ஆற்க்காடு பி.என்.உதயகுமார், சேலம் மாநகர் ஆனந்தராஜ், மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள் ப.த.ஆசைத்தம்பி, துரை.மணிவண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் முகவை இரா.சங்கர் நன்றியுரை ஆற்றினார்.

முனைவர் கு.திருமாறன், பேராசிரியை விமலா அண்ணாதுரை, இலக்கியச் சொற்பொழிவாளர் கங்கை மணிமாறன் ஆகியோர் பேச்சுப் போட்டியில் நடுவர்களாக இருந்தனர் என மதிமுக மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் தனது செய்தியறைக்கையில் 02-09-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, August 31, 2018

சென்னையில் செப்டம்பர் 2-ல் கல்லூரி மாணவர்களுக்கான “பெரியார் - அண்ணா” நிறைவுப் பேச்சுப் போட்டி திரளாகப் பங்கேற்க! வைகோ அழைப்பு!

திராவிட இயக்கம் இம்மண்ணில் விதையாக விழுந்து, விருட்சமாக வளர்வதற்கு ஆதார சுருதியாக இருந்து நம்மை வார்ப்பித்தும், வளர்த்தும் வருபவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களுடன் கை கோர்த்து, பல்வேறு களம் கண்டு, அதுவரை சாமானியனுக்கு வாய்க்காத அதிகார அரசியலை எளியவர்க்கு வழங்கி தமிழர் ஏற்றம் பெற மாற்றம் கண்ட வித்தகத் தலைவர் அறிஞர் அண்ணா.
இத்தகைய வியத்தகு மாற்றத்தை மண்ணில் விதைத்து மூட நம்பிக்கை என்னும் முடை நாற்றத்தை மூட்டைக் கட்டி வீசியதும், ஆண்டான் அடிமை, பெண்ணடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் வர்க்க பேதத்தை தகர்த்தெறிவதற்கு தன்மான இயக்கமாய் சுடர் விட்டு வளர்ந்தது திராவிட இயக்கத்தின் சாதனையன்றோ.
திராவிட இயக்கம் என்ன சாதித்துவிட்டது என ஏகடியம் பேசுவதும், பெரியார் சிலைகளை தமிழகம் முழுவதும் அப்புறப்படுத்துவோம் என்ற வெற்றுக்குரல் பிரீட்டு வருவதும், திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக, புத்தியக்கங்கள் எனும் பெயரில் போலிகள் புறப்பட்டு வரும் காலத்தில், அடிமை மோகத்தில் இருந்து தமிழரை மீட்டெடுக்கவும், மானமும், அறிவும் மனிதனுக்குத் தேவை என்று தடி உயர்த்தியவர் தந்தை பெரியார்.
இந்தி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழ் மொழியை மீட்டது மட்டுமின்றி, தாய்த் தமிழரையும் மீட்டெடுத்து கோட்டை முற்றத்தில் திராவிட இயக்கக் கொடி பறப்பதற்கு அகரம் தீட்டிய சிகரமன்றோ அண்ணா.
அத்தகைய தகைமைக்குரிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இவர்தம் வரலாற்றை இளைய தலைமுறை கற்றுத் தெளியவும், நூறாண்டு கண்ட திராவிட இயக்கம் இன்னும் ஆயிரமாண்டு வளர்ந்து செழிக்கவும்.
மறுமலர்ச்சி திமுக ஈரோடு மாநகரத்தில் செப்டம்பர் 15-ல் நடத்த உள்ள பெரியார்-அண்ணா பிறந்த நாள் விழா, கட்சியினரின் தொடர் வலியுறுத்தல் காரணமாக ஒத்துக் கொள்ளப்பட்ட எனது பொதுவாழ்வுப் பொன் விழா, இயக்கத்தின் வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா மாநில மாநாட்டை முன்னிட்டு, கழக மாணவர் அணி முன்னின்று கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கும் வகையில் பெரியார்-அண்ணா பேச்சுப் போட்டியை நடத்துவதாக அறிவித்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் மாணவர் அணியினர் அழைப்புக் கடிதம் அனுப்பி, ஜீலை மாதம் 22-ந் தேதி நாற்பது மாவட்டங்களில் நடந்த மாவட்டப் போட்டிகளில் 1500 கல்லூரிகளைச் சேர்ந்த 2200 மாணவர்கள் பங்கேற்று பெரியார்-அண்ணா பெருமைகள் குறித்து மூரி முழங்கினார்கள்.
மாவட்டத்தில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 6 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் என பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், ஆகஸ்ட் 19-ந் தேதி தமிழகத்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்து 120 மாணவர்கள் பங்கேற்ற மண்டலப் போட்டி நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வென்ற மூவருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை-புரசைவாக்கம், கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு நிறைவுப் போட்டி நடைபெற உள்ளது. இதில், மண்டலப் போட்டியில் வெற்றி பெற்ற 21 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
மாவட்ட, மண்டலப் போட்டிகளில் பின்பற்றிய விதிகளின் அடிப்படையில் கட்சி சாராத நடுவர் பெருமக்களைக் கொண்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.
அன்றைய தினமே முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த தங்கப் பதக்கமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட உள்ளது.
நிறைவுப் போட்டி மற்றும் மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் நானும், கழக முன்னணியினரும் பங்கேற்க உள்ளோம். எழுச்சி சங்கநாதமென இளம் தலைமுறையாம் மாணவக் கண்மணிகள் உரை முழக்கம் செய்யும் பேச்சுப் போட்டி நிகழ்வில் மறுமலர்ச்சி திமுக தோழர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன் என 31-08-2018 அன்று மதிமுக பொதுச் செயலாளர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, August 30, 2018

பேராசிரியர் திரு. கு.ஞானசம்பந்தம் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

பேராசிரியர் திரு. கு.ஞானசம்பந்தம் அவர்களின் இல்லத்திருமணவிழா நேற்று 29-08-2018 மதுரையில் நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

உடன் மதிமுக கழக நிர்வாகிகள் இருந்தார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கும் மோடி அரசின் பாசிசப் போக்கு! வைகோ கடும் கண்டனம்!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பீமாகோரேகான் என்ற ஊரில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும், அப்போதைய முடியாட்சியான பேஷ்வாக்களுக்கும் இடையே, 1818 ஆம் ஆண்டு, உக்கிரமானப் போர் நடைபெற்றது. அந்தப் போரில் ஆங்கிலேயர் ராணுவத்தில் பணிபுரிந்த தாழ்த்தப்பட்ட மகர் வகுப்பினர் ஐநூறு பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு அப்பகுதியில் ஆங்கிலேய அரசு போர் நினைவுத்தூண் ஒன்றை எழுப்பியது. பீமாகோரேகானில் ஆண்டுதோறும் தலித் மக்கள் ஒன்று கூடி போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று 200 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி பீமா கோரேகானில் தாழ்த்தப்பட்ட மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரண்டு மரியாதை செலுத்தினர். அப்போது இந்துத்துவ மதவெறி அமைப்பைச் சேர்ந்தோர் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வன்முறையை தூண்டினார்கள். ஒருவர் உயிர்ப்பலி ஆனார். இதன் எதிரொலியாக மராட்டிய மாநிலம் முழுவதும் தலித் மக்கள் ஒன்று சேர்ந்து வீரியமானப் போராட்டங்கள் வெடித்தன.

தலித் மக்களைத் தூண்டிவிட்டு கலவர விதைகளை தூவினர் என்று குற்றம்சாட்டி, கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று தலித் உரிமை செயற்பாட்டாளர் சுதிர் தவாலே, வழக்கறிஞர் சுரேந்திரா காட்லிங், மகேஷ் ரவுட், ஷோமாசென், ரோனா வில்சன் ஆகிய ஐந்து பேரை மராட்டிய பாரதிய ஜனதா அரசு கைது செய்தது. இவர்கள் அனைவர் மீதும் தடா, பொடா போன்று தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் கொடிய, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நேற்று முன்தினம், ஆகஸ்ட் 28 ஆம் தேதி, பீமா கோரேகான் கலவர வழக்கை காரணமாக கhட்டி, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்களுமான ஐந்து பேரை மராட்டிய மாநில அரசு, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அறிவித்தலின்படி கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக மராட்டிய காவல்துறை டெல்லி, ஐதராபாத், பரிதாபாத், மும்பை, தானே, கோவா, ராஞ்சி போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் கைது மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞரும், எழுத்தாளருமான கவிஞர் வரவரராவ், நலிந்த பிரிவு மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பி போராடி வரும் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான பேராசிரியர் வெர்னான் கோன்சால்வஸ், டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றி வருபவரும், குடியுரிமை சுதந்திரத்துக்கான மக்கள் அமைப்பின் தேசியச் செயலாளருமான, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மனித உரிமைகளுக்காகப் போராடி வரும், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் பெரைரா, மக்கள் ஜனநாயக உரிமை யூனியன் அமைப்பின் உறுப்பினரும், மனித உரிமைப் போராளியுமான ஹரியானாவைச் சேர்ந்த கவுதம் நவ்லகா ஆகியோர் சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டப்படி (உஃபா) கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இவர்கள் மீது மராட்டிய காவல்துறை வழக்கு புனைந்து இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மக்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான இந்துத்துவ சக்திகளை எதிர்ப்பவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கூட்டத்தின் சதி நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டும் சிந்தனையாளர்கள் மீது ‘நக்சல்’ முத்திரைக் குத்தி பிரதமரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக மத்திய புலனாய்வு அமைப்புகளும், மராட்டிய மாநில அரசும் குற்றம்சாட்டி ‘உஃபா’ சட்டத்தின் கீழ் கைது செய்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்க்கும் நிபுணர்கள், அரசு விமர்சகர்கள், இந்துத்துவா மதவெறியை எதிர்க்கும் ஜனநாயகப் போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்துவது மோடி அரசின் பாசிசப் போக்கை அப்பட்டமாக காட்டுகிறது. உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை கண்டித்துள்ளது. மராட்டிய மாநில அரசு உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு நீதி கேட்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் எடுத்துரைத்துவிட்டு நாடு திரும்பிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறது. அவரை தனிமை சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறது. அவர் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகளை தொடுத்துள்ள காவல்துறை, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தையும் (உஃபா) ஏவி உள்ளது.

தீவிரவாதிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும் ‘உஃபா’ சட்டத்தை மத்திய அரசை எதிர்ப்பவர்கள் மீது ஏவி விடுவது அநீதியான அக்கிரமமான நடவடிக்கை ஆகும்.

மோடி அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்து கிடக்கும் எடப்பாடி அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள ‘உஃபா’ உள்ளிட்ட வழக்குகளை உடனடியாக் திரும்பப் பெற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 30-08-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, August 26, 2018

கேரள மாநில அரசுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி!

கேரள மாநில அரசுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி!

கேரள மாநிலத்தில் நூறாண்டு காலத்தில் ஏற்படாத இயற்கைப் பேரிடராக நேர்ந்த பிரளயம் போன்ற வெள்ளப் பெருக்கால் அம்மாநிலமே தண்ணீரில் தத்தளிக்கிறது. கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, அவர்கள் வேண்டுகிற நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கேரள மாநில அரசுக்கு பத்து இலட்சம் ரூபாய் நிதி வழங்குகிறது. மேலும் தேவையான நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்புகிறது என மதிமுக தலைமை கழகம் 26-08-2018 செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, August 24, 2018

தூத்துக்குடி மாவட்ட கழகம் புதிய 2 மாவட்டங்களாக மறுமலர்ச்சி தி.மு.க தலைமைக் கழக அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டக் கழகம் நிர்வாக வசதிக்காக வடக்கு - தெற்கு என மாவட்டங்களாக அமைக்கப்படுகிறது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்:-
அவைத் தலைவர்: டி.எஸ்.எம்.சம்பத்குமார்
மாவட்டப் பொறுப்பாளர்: ஆர்.எஸ்.ரமேஷ் (9443320796)
மாவட்டப் பொருளாளர்: செண்பகப் பெருமாள்
மாவட்டத் துணைச் செயலாளர்கள்: 1. பவுன் மாரியப்பன், 2. வழக்கறிஞர் ஆர்.குருசாமி கிருஷ்ணன், 3. எஸ்.செல்வராஜ்

மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்: வழக்கறிஞர் ஆர்.பரமசிவம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதாகும்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம்:-
மாவட்ட அவைத் தலைவர்: குரு.மத்தேயு ஜெபசிங்
மாவட்டப் பொறுப்பாளர்: வழக்கறிஞர் புதுக்கோட்டை பி.செல்வம் (9791249205)
மாவட்டப் பொருளாளர்: காயல் அமானுல்லா
மாவட்டத் துணைச் செயலாளர்கள்: 1. ஆத்தூர் ஐ.லட்சுமணன், 2. வீரபாண்டி வி.பி.செல்லச்சாமி, 3. பேரூர் சு.சிவஞானவேல்


தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதாகும்.

என மதிமுக தலைமை கழகம் 24-08-2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, August 21, 2018

வீணடிக்கப்படும் காவிரி நீர் - வைகோ கண்டனம்!

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் பெருமழையால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அனைத்து அணைகளும் நிரம்பி விட்டன. உபரி நீரை திறந்துவிட வேண்டிய நிலைமை அங்கு ஏற்பட்டதால் இலட்சக்கணக்கான கன அடி தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது.

மேட்டூருக்கு வந்து சேர்ந்த காவிரி நீரை சேமிக்கும் வகையில் மேட்டூர் அணை பராமரிக்கப்படாததால், முழு கொள்ளளவான 93.47 டி.எம்.சி. நீர் தேக்க முடியாமல் சுமார் 60 டி.எம்.சி. நீரை மட்டுமே சேமிக்க முடிகிறது. அணையில் குவிந்திருக்கும் மணல், களிமண், கற்கள் ஆகியவற்றை அகற்றவோ, தூர் வாரி முறையாக பராமரிப்பு மேற்கொள்ளவோ தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தாலும் அதனைத் தேக்கி வைக்க வழியில்லை.

காவிரியிலிருந்து முக்கொம்பு மற்றும் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு சுமார் 1.75 இலட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. ஆனால் கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுக்கும் நீர் நாகை, தஞ்சை மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய், ஏரி, குளங்களுக்குச் சென்று சேரவில்லை. தூர் வாரும் பணிகள் நடப்பதால் நீர் திறக்கப்படவில்லை என்று பொதுப்பணித்துறையினர் பொறுப்பற்ற முறையில் தெரிவிக்கின்றனர்.

உரிய காலத்தில் தூர் வாரி, பாசன வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளையும் பராமரிக்காததால் காவிரி ஆற்றில் நீர் நிரம்பி வழிந்தும் அவை பயனற்றுப் போய் கடலுக்குச் செல்லும் நிலைமை வேதனை அளிக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4200க்கும் மேற்பட்ட குளங்களில் சுமார் 50 விழுக்காடு குளங்களில் மட்டுமே நீர் நிரம்பி உள்ளது. அதேபோல அங்குள்ள 16 ஏரிகளில் ஒன்றுகூட நிரம்பவில்லை.

வடவாறு விரிவாக்க கால்வாய் பாசனப் பகுதிகளை உள்ளடக்கிய வடுவூர் தொடங்கி, உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை பகுதிகளிலும், கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம், இருள்நீக்கி பகுதிகளிலும் வலங்கைமான் பயரி வாய்க்கால், கொரடாச்சேரி 18 வாய்க்கால், கொரடாச்சேரி அத்தி சோழமங்கலம் பகுதி வாய்க்கால்களிலும் தண்ணீர் சென்றடையவில்லை. அதேபோன்று நாகை மாவட்டத்தில் காவிரியின் கிளை ஆறுகளான வீரசோழன் ஆறு, மஞ்சள் ஆறு, மானங்கொண்டான் ஆறு ஆகியவற்றில் இன்னும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேரவில்லை.

வெள்ள நீர் செல்லும் ஆற்றுக்கு அருகில் உள்ள நீர் நிலைகள்கூட தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி நீரை நம்பி சுமார் 25 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்படும் நிலையில், காவிரி நீர் அந்த மாவட்டத்திலும் போதுமான அளவில் வரவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால் கொள்ளிடத்திலிருந்து வடவாற்றில் மட்டும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சுமார் 1.5 இலட்சம் கன அடி நீர் கடலுக்குச் சென்று வீணாகிறது.

வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடி ஆகும். இதிலும் தூர் வாரி முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் முழு அளவில் நீரைத் தேக்க முடியாமல், மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து பின்னர் வடவாறு வரியாக வீராணம் ஏரிக்கு வரும் நீர் மட்டம் உயர்ந்ததால் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 இலட்சத்து 90 ஆயிரம் கனஅடி நிர் திறக்கப்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டத்தில் குமராட்சி ஒன்றியம் வல்லம்படுகை ஊராட்சி, பெராம்பட்டு ஊராட்சி, ஜெயங்கொண்டபட்டினம் ஊராட்சி, அக்கரை, வேளக்குடி, எறுக்கன்காட்டு படுகை, அகரநல்லூர், பழையநல்லூர், கண்டியாமேடு உள்ளிட்ட முப்பது கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. 6 அடி உயரத்துக்கு நீர் தேங்கி குடிசை வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மூழ்கிக் கிடக்கின்றன. சுமார் நான்காயிரம் மக்கள் ஊர்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் பாயும் காவிரி நீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுத்து சேமிக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பு அணைகள் கட்டப்படும் என்றும், அதற்காக ரூ.410 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 04.08.2014 இல் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் நான்கு ஆண்டுகளாக தடுப்பு அணைகள் அமைக்கும் பணிகள் சிறு துரும்பைக்கூட ஆட்சியாளர்கள் கிள்ளிப்போடவில்லை. தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பாய்ந்து வரும் காவிரி நீர் வீணாடிக்கப்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது.

ஏரி, குளம், பாசன வாய்க்கால்களில் விவசாயிகள் குடிமராமத்துப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக வண்டல் மண், சவுடு மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நான் கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசு அதற்கு ஆணை பிறப்பித்தது. எனினும் முறையாக அப்பணிகள் நடைபெறவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகள், தூர் வாரி பராமரிக்கும் பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் விரைந்து முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனறு வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 21-08-2018 அன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, August 20, 2018

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை குறித்த வழக்கு, டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வில் இன்று (20.08.2018) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரசியல் கட்சிகளின் தூண்டுதலால்தான் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இங்கு வந்துள்ள வைகோ போன்ற அரசியல கட்சித் தலைவர்கள் தொடக்கத்திலிருந்து எதிர்த்து வருகின்றனர் என்று கூறினார்.

அதற்கு வைகோ, 22 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக, சுற்றுச் சூழலைக் காப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வருகிறேன். நான் தொடுத்த ரிட் மனு மீது 2010 ஆண்டு ஆலை மூடப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் ஆலையைத் திறப்பதற்குத் தீர்ப்பளித்தாலும், நீதிபதிகள் என்னுடைய பொதுநல நோக்கத்தையும், பணியையும் அந்தத் தீர்ப்பில் பாராட்டினார்கள். சக்திவாய்ந்த பெரிய நிறுவனங்களை எதிர்த்துப் போராட ஒருசிலர்தான் வருவார்கள். அப்படி ஈடுபடுகிறவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிட்டார்கள் என்று கூறினார்.

2018 மே 22 இரத்தம் தோய்ந்த துக்க கரமான நாளாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் தாங்களாகவே ஸ்டெர்லைட்டை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தினர். ஏராளமான பெண்களும், மாணவ - மாணவிகளும் கலந்துகொண்டனர்.

காவல்துறை திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வெளி மாநிலங்களிலிருந்து போராட்டத்தைத் தூண்ட எவரும் வரவில்லை. தூத்துக்குடியிலும், சுற்றுவட்டாரத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஸ்டெர்லைட் ஆலை நச்சு வாயுவினால் புற்றுநோய், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வைகோ கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்த அனைத்து அம்சங்களையும் விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க தீர்ப்பாயம் முடிவுசெய்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகளில் ஒருவரை நியமிக்கலாம் என்று நீதிபதி கோயல் அவர்கள் கூறியதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நீதிபதியையும் நியமிக்கக் கூடாது. அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய மனோநிலையை பிரதிபலிக்கும் நிலையை எண்ணிப் பயப்படுவார்கள். கேரளா, அல்லது கர்நாடகாவைச் சேர்ந்த நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அதற்கு வைகோ கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் நடுநிலை தவறாத நேர்மையாளர்கள். அவர்கள் நேர்மையைச் சந்தேகப்படும் விதத்தில் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் கூறி இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது; எங்கள் மனதை மிகவும் துன்புறுத்துகிறது. யாரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் முடிவெடுக்கட்டும். ஆலை நிர்வாகம் சொல்லக்கூடாது என்று வைகோ கூறினார்.

முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் இரண்டு வாரத்திற்குள் குழு அமைக்கப்படும் என்றும், நான்கு வாரத்திற்குள் அந்தக் குழு தனது விசாரணை முடிவை தெரிவிக்கும் என்றும் தீர்ப்பாய நீதிபதி கோயல் கூறினார்.

தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் வைகோ அவர்களுடன் கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களும், வழக்கறிஞர் ஆனந்தசெல்வமும் பங்கேற்றார்கள் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 20-08-2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, August 16, 2018

ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது! வைகோ இரங்கல்!


இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளியும் கோடானு கோடி மக்களின் இதயத்தில் இடம்பெற்றவருமான மாபெரும் தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் என்னை தாக்கியது. நிலைகுலைந்தேன்; உள்ளம் உடைந்தேன.

நாற்பது ஆண்டுகளாக அவரிடம் நெருங்கிப் பழகி, என் தகுதிக்கு மீறிய அன்பை அவரிடமிருந்து பெற்றவன் நான்.

இந்தியிலும், ஆங்கிலத்திலும் அற்புதமாக உரையாற்றக் கூடியவர். ஜனசங்கத்தைக் கட்டிக் காத்த தலைவர்களில் ஒருவர். தலைசிறந்த கவிஞர், நகைச்சுவை உணர்வு மிக்கவர். வங்கதேச யுத்த வெற்றிக்குப் பின், பிரதமர் இந்திராகாந்தியை நாடாளுமன்றத்தில் “துர்காதேவியே, வெற்றித் தேவைதையே” என வாழ்த்தியவர்.

இந்தியாவின் அனைத்துத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். பேரறிஞர் அண்ணா அவர்களிடம் மிக்க அன்பு காட்டியவர். டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது, அண்ணன் வீரமணியுடன் சென்று நான் வாதாடியபோது, மீண்டும் பெரியார் மையம் எழுப்ப உன்னதமான ஒரு இடத்தை வழங்கினார்.

நெருக்கடி நிலை காலத்தில் 18 மாதம் பெங்களூர் சிறையில் வாடினார்.

1998, 1999 லிருந்து 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு தலைமையேற்றபோது, அக்கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் மதித்து அரவணைத்து கருத்துக்களைப் பரிமாறி, ஒரு கூட்டணி ஆட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார்.

1998 செப்டம்பர் 15 இல், பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டை சென்னை கடற்கரையில் மதிமுக நடத்தியபோது, என் கோரிக்கையை ஏற்று, “சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும்” என்று பிரகடனம் செய்தார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை மைய அரசு தனியார் மயமாக்க முடிவெடுத்த பின்னர், எளியேனின் வேண்டுகோளை ஏற்று, அந்த முடிவை இரத்து செய்ததை நினைக்கும்போதே என் கண்கள் குளமாகின்றன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு தன் வேதனையையும், எதிர்ப்பையும் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்தார். ஈழத்தமிழர் பிரச்சினையில் மாநிலங்கள் அவையில் நான் உரையாற்றியபோதெல்லாம் என்னை அவர் ஆதரித்துப் பேசியதை மறக்க முடியுமா?

1999 ஆம் ஆண்டில் அனைத்துக் கட்சி நாடாளுமன்றத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் “இலங்கை அரசுக்கு எவ்விதத்திலும் இந்திய அரசு உதவி செய்யாது; ஆயுதங்களை சிங்கள அரசுக்கு ஒருபோதும் விற்பனை செய்யாது” என்று கொள்கை முடிவை அறிவித்தார்.


நானும், சகாக்களும் பொடா கைதிகளாக சிறையில் இருந்தபோது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்பபடி குற்றம் ஆகாது என்று இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு நடவடிக்கை எடுத்தவர் அடல்ஜி என்பதை நன்கு அறிவேன்.

டெல்லியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் என் தகுதிக்கு மீறி மற்றவர்கள் உரையாற்றியதற்குப் பின்னர் என்னை உரையாற்ற வைத்து ரசித்துப் பாராட்டியதை எப்படி மறப்பேன்?

தன் வாழ்வையே நாட்டுக்காக, கோடானு கோடி மக்களுக்காக அர்ப்பணித்து, தனக்கென்று ஒரு இல்லற வாழ்வை அமைத்துக்கொள்ளாத உத்தமத் தியாகி ஆவார்.

அவர் பிரதமராக இருந்தபோது, ஈழத்தமிழர்களுக்கு செய்த பல உதவிகளை நான் நன்கு அறிவேன். ஆண்டன் பாலசிங்கத்தை இந்தியாவுக்கு வரவழைத்து சிகிச்சை தருவதற்கும் தயாரானார். அந்தச் செய்தியை நான் சேர்ப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பாலசிங்கம் கிளிநொச்சியை விட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

அவருடைய முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் டெல்லியில் அவர் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி என் மகள் கண்ணகியின் திருமண வரவேற்பாகும்.

இந்தியா ஒரு அணு ஆயுத வல்லரசு என்பதை பொக்ரான் சோதனையின் மூலம் உலகத்துக்கு நிருபித்தார்.

இந்தியாவின் சாலை கட்டமைப்பை வலுப்படுத்த நாடு முழுக்க தங்க நாற்கரச் சாலைக்கு காரணமானார்.

கடந்த எட்டாண்டு காலமாக அவர் நினைவு குறைந்து படுத்த படுக்கையானபின், நான் டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் அவரது இல்லத்துக்குச் சென்று, அவரது படுக்கையின் அருகில் நின்று, கரம்கூப்பி வணங்கிவிட்டு பொங்கும் விழிநீரைத் துடைத்துக்கொண்டு வருவேன். முதல் இரண்டு ஆண்டுகளில் நான் அருகில் சென்றால் திக்கித் திக்கி என் பெயரை உச்சரிக்க முனைவதும், அவர் முகத்தில் பரவசம் பரவுவதையும் அங்கு இருப்பவர்களே சொல்லி வியந்தார்கள்.

“வைகோவை என் மகனாகவே கருதுகிறேன்” என்று கூறுகிற அளவுக்கு அம்மாமனிதரின் உள்ளத்தில் எனக்கு ஒரு இடம் கிடைத்தது என் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும்.

இந்திய அரசியலில் பேரொளியாய் பிரகாசித்த ஜனநாயச் சுடர் அனைந்துவிட்டது; துக்கம் தாங்கமுடியாமல் தவிக்கிறேன். துயர் சூழ்ந்துள்ள வேளையில் தலைவர் அடல்ஜி அவர்களின் வளர்ப்பு மகள் நமிதா அவர்களுக்கும், அவரது கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யா அவர்களுக்கும், அவர்களின் புதல்விக்கும், உற்றார் உறவினர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி நண்பர்களுக்கும், அத்தலைவரை மதித்து நேசித்த கோடானு கோடி மக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது இரங்கள் அறிக்கையில் 16-08-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, August 13, 2018

ஆளுநர் மாளிகையில் தலைமை நீதியரசி பதவியேற்பு விழாவில் நீதியரசர்கள் முறையாக நடத்தப்படாததற்கு வைகோ கண்டனம்!

நேற்று (12.08.2018 அன்று) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதியரசி தகில் ரமணி அவர்கள் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட நிகழ்ச்சியின் போது, இந்திய அரசு வகுத்துள்ள நெறிமுறை மதிப்பு வரிசைப்படி உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர இடம் ஒதுக்காமல், அமைச்சர்களும், காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல் சீருடையில் இல்லாத காவல்துறை அதிகாரிகளும், முன் வரிசைகளில் அமர்ந்ததும், பின் வரிசைகளில் நீதிபதிகள் உட்கார வைக்கப்பட்டதும் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

இந்தப் பதவியேற்பு விழாவில் நீதியரசர்களுக்கு இடம் ஒதுக்கப்படுவதை நேரில் வந்து பார்க்க சென்னை உயர்நீதிமன்றத்தின் செயலாளர் நாயகம் முயன்றபோது, ஆளுநர் மாளிகை அதற்கு அனுமதி மறுத்தது என்பது நீதித்துறையையே உதாசீனப்படுத்திய செயலாகும்.

இதற்கு முன்னர் மதுரை மாநகரில், மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சியின்போதும் அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இடம் கொடுப்பதற்காக இருக்கைகளில் அமர்ந்திருந்த நீதிபதிகளை அவமானப்படுத்தி அவமதித்த செயலும் நடைபெற்றது இருக்கிறது.

நேற்று ஆளுநர் மாளிகையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளை அவமதிக்கின்ற வகையில் நடைபெற்ற செயலுக்கு ஆளுநர் மாளிகையின் அதிகாரப் பொறுப்பில் உள்ளோர்தான் பொறுப்பாளிகள் ஆவார்கள். இதற்குரிய விளக்கத்தை ஆளுநர் மாளிகை தருவதுடன், இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 13-08-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தலைசிறந்த நாடாளுமன்ற மேதை சோம்நாத் சட்டர்ஜி மறைவு இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பேரிழப்பு-வைகோ இரங்கல்!

இந்திய நாடாளுமன்றத்தில் பத்து முறை மக்களவை உறுப்பினராக அனைவரின் பாராட்டையும் பெறும் விதத்தில் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்று தனது அணித்தரமான வாதத் திறமையால் இந்திய நாடாளுமன்றத்திற்குப் பெருமை சேர்த்தவர் சோம்நாத் சட்டர்ஜி ஆவார்.

2009 முதல் 2014 வரை நாடாளுமன்ற மக்கள் அவையின் சபாநாயகராக நடுநிலை தவறாது சபையை நடத்தி, அந்தப் பதவிக்குப் புகழைச் சேர்த்தார். நாடாளுமன்ற அவைகளின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் அவர்கள் தங்கள் அரசியல் கட்சிகளிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தார்.

அவரது தந்தையார் நிர்மல் சந்திர சட்டர்ஜி உச்சநீதிமன்றத்தில் தலைசிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். அகில பாரதிய இந்து மகா சபையை நிறுவியவர்களில் ஒருவராக இருந்தபோதும், 1948 இல் கம்யூனிஸ்டு கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட்டதையும், கம்யூனிஸ்டு தலைவர்கள் கைது செய்யப்பட்டததையும் எதிர்த்து அகில இந்திய குடிமை உரிமைகள் சங்கத்தைத் தொடங்கி, கம்யூனிஸ்டு தலைவர்களை விடுதலை செய்யப் போராடினார். அரவது மகனான சோம்நாத் சட்டர்ஜி அவர்களும் உச்சநீதிமன்றத்தில் மிகச்சிறந்த வழக்கறிஞராகப் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாபெரும் தலைவரான ஜோதிபாசு அவர்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரிய மிக நெருங்கிய தோழராகத் திகழ்ந்தார்.

2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது, அதனை ஆதரிக்க மறுத்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து அவர் வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் ஐம்பது ஆண்டுகள் ஆற்றிய உன்னத சேவைக்காக சட்டமன்றத்தில் பொன் விழா நடத்தப்பட்டபோது, அந்த விழாவில் பங்கேற்று பெரும் சிறப்பு சேர்த்தார்.

பல ஆண்டுகள் அவரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பை நான் பெற்றேன். சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்கும்போது, அவர்களை ஊக்குவிக்கின்ற அரிய பண்பு மிக்கவர் ஆவார்.

அன்னாரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவரை உளமாற நேசிக்கும் பொதுஉடைமைத் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் இன்று 13-08-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை