கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் பெருமழையால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அனைத்து அணைகளும் நிரம்பி விட்டன. உபரி நீரை திறந்துவிட வேண்டிய நிலைமை அங்கு ஏற்பட்டதால் இலட்சக்கணக்கான கன அடி தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது.
மேட்டூருக்கு வந்து சேர்ந்த காவிரி நீரை சேமிக்கும் வகையில் மேட்டூர் அணை பராமரிக்கப்படாததால், முழு கொள்ளளவான 93.47 டி.எம்.சி. நீர் தேக்க முடியாமல் சுமார் 60 டி.எம்.சி. நீரை மட்டுமே சேமிக்க முடிகிறது. அணையில் குவிந்திருக்கும் மணல், களிமண், கற்கள் ஆகியவற்றை அகற்றவோ, தூர் வாரி முறையாக பராமரிப்பு மேற்கொள்ளவோ தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தாலும் அதனைத் தேக்கி வைக்க வழியில்லை.
காவிரியிலிருந்து முக்கொம்பு மற்றும் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு சுமார் 1.75 இலட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. ஆனால் கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுக்கும் நீர் நாகை, தஞ்சை மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய், ஏரி, குளங்களுக்குச் சென்று சேரவில்லை. தூர் வாரும் பணிகள் நடப்பதால் நீர் திறக்கப்படவில்லை என்று பொதுப்பணித்துறையினர் பொறுப்பற்ற முறையில் தெரிவிக்கின்றனர்.
உரிய காலத்தில் தூர் வாரி, பாசன வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளையும் பராமரிக்காததால் காவிரி ஆற்றில் நீர் நிரம்பி வழிந்தும் அவை பயனற்றுப் போய் கடலுக்குச் செல்லும் நிலைமை வேதனை அளிக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4200க்கும் மேற்பட்ட குளங்களில் சுமார் 50 விழுக்காடு குளங்களில் மட்டுமே நீர் நிரம்பி உள்ளது. அதேபோல அங்குள்ள 16 ஏரிகளில் ஒன்றுகூட நிரம்பவில்லை.
வடவாறு விரிவாக்க கால்வாய் பாசனப் பகுதிகளை உள்ளடக்கிய வடுவூர் தொடங்கி, உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை பகுதிகளிலும், கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம், இருள்நீக்கி பகுதிகளிலும் வலங்கைமான் பயரி வாய்க்கால், கொரடாச்சேரி 18 வாய்க்கால், கொரடாச்சேரி அத்தி சோழமங்கலம் பகுதி வாய்க்கால்களிலும் தண்ணீர் சென்றடையவில்லை. அதேபோன்று நாகை மாவட்டத்தில் காவிரியின் கிளை ஆறுகளான வீரசோழன் ஆறு, மஞ்சள் ஆறு, மானங்கொண்டான் ஆறு ஆகியவற்றில் இன்னும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேரவில்லை.
வெள்ள நீர் செல்லும் ஆற்றுக்கு அருகில் உள்ள நீர் நிலைகள்கூட தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி நீரை நம்பி சுமார் 25 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்படும் நிலையில், காவிரி நீர் அந்த மாவட்டத்திலும் போதுமான அளவில் வரவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆனால் கொள்ளிடத்திலிருந்து வடவாற்றில் மட்டும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சுமார் 1.5 இலட்சம் கன அடி நீர் கடலுக்குச் சென்று வீணாகிறது.
வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடி ஆகும். இதிலும் தூர் வாரி முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் முழு அளவில் நீரைத் தேக்க முடியாமல், மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து பின்னர் வடவாறு வரியாக வீராணம் ஏரிக்கு வரும் நீர் மட்டம் உயர்ந்ததால் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 இலட்சத்து 90 ஆயிரம் கனஅடி நிர் திறக்கப்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டத்தில் குமராட்சி ஒன்றியம் வல்லம்படுகை ஊராட்சி, பெராம்பட்டு ஊராட்சி, ஜெயங்கொண்டபட்டினம் ஊராட்சி, அக்கரை, வேளக்குடி, எறுக்கன்காட்டு படுகை, அகரநல்லூர், பழையநல்லூர், கண்டியாமேடு உள்ளிட்ட முப்பது கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. 6 அடி உயரத்துக்கு நீர் தேங்கி குடிசை வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மூழ்கிக் கிடக்கின்றன. சுமார் நான்காயிரம் மக்கள் ஊர்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் பாயும் காவிரி நீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுத்து சேமிக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பு அணைகள் கட்டப்படும் என்றும், அதற்காக ரூ.410 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 04.08.2014 இல் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் நான்கு ஆண்டுகளாக தடுப்பு அணைகள் அமைக்கும் பணிகள் சிறு துரும்பைக்கூட ஆட்சியாளர்கள் கிள்ளிப்போடவில்லை. தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பாய்ந்து வரும் காவிரி நீர் வீணாடிக்கப்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது.
ஏரி, குளம், பாசன வாய்க்கால்களில் விவசாயிகள் குடிமராமத்துப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக வண்டல் மண், சவுடு மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நான் கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசு அதற்கு ஆணை பிறப்பித்தது. எனினும் முறையாக அப்பணிகள் நடைபெறவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகள், தூர் வாரி பராமரிக்கும் பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் விரைந்து முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனறு வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 21-08-2018 அன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment